Thursday, 9 August 2007

ஈழச்செய்திகள்:09-08-07

யாழ் உதயன் செய்திகள்:
Thu Aug 9 6:18:21 EEST 2007

மன்னார் சிலாவத்தையில்* நேற்றுமாலை இடம்பெயர்ந்தோர் குடியிருப்புகள் மீது குண்டு வீச்சு
(*திருத்தம்: சிலாவத்துறையில்-enb)

மன்னார் தெற்கில், சிலாவத்தை மற்றும் கொக்குப்படையான் பகுதிகளில் நேற்றுப் பிற்பகல் 4.30 மணியளவில் "கிபீர்' விமானங் கள் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தின.மன்னார் தெற்குப் பகுதி மீது அண்மை யில் இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களால் இடம் பெயர்ந்து, மக்கள் குடியமர்ந்த இந்தப் பகுதி களை நோக்கியே விமானத் தாக்குதல் நடத் தப்பட்டது.இத் தாக்குதலில் இரு வீடுகள் சேதமடைந் துள்ளன. மக்கள் பாதுகாப்புத் தேடி ஓடியதால் சேதங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.அதேவேளை மன்னார் தெற்குப் பிரதேசத்தில், கொண்டச் சிக்குளம் பகுதியில் அமைந்திருந்த கடற்புலி களின் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட விமா னத் தாக்குதலில் அந்த முகாம் நாசமாக்கப்பட்ட தாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் நிலை யம் அறிவித்தது.இந்த முகாம் ஆயுதங்களை விநியோகிக் கும் பணியை மேற்கொண்டுவந்தது என்றும் அந்த நிலையம் மேலும் தெரிவித்தது. ******************************
முதலாம் ஆண்டு மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்த்துக் கொள்ளும் சுற்று நிருபம் தொடர்பாக சர்ச்சை
வீரகேசரி நாளேடு
ஆளும்தரப்பு எதிர்த்தரப்பு எம்.பி.க்கள் சபையில் வாய்த்தர்க்கம் முதலாம் ஆண்டு மாணவர்களை பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வது தொடர்பான புதிய சுற்று நிருபம் தொடர்பாக சபையில் ஆளுந்தரப்பு எதிர்த்தரப்பு எம்.பி. க்களிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருப அறிக்கையும் அதற்கு சாதகமான உயர் நீதிமன்ற தீர்ப்பும் சுதந்திர கல்வி முறைமைக்கு பாதிப்பு என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விசேட கூற்று ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியதையடுத்தே சபையில் வாய்த்தர்க் கம் ஏற்பட்டது. பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நேற்றுக்காலை 9.30 மணியளவில் கூடியது. எம்.பி.க் களுக்கான வாய்மூல கேள்வி நேரம் முடிவடைந்ததும் ரணில் விக்கிரமசிங்க மேற்படி விசேட கூற்றை சபாநாயகரின் அனுமதியுடன் முன் வைத்தார்.
புதிய நடைமுறையினால் விவசாயிகள், மேசன், தச்சன் மற்றும் கூலித் தொழிலாளர்களுடைய பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுதந்திர கல்விக்கு அரசாங்கம் ஆப்பு வைக்கவில்லையெனவும் மாகாண மட்டத்திலும் தேசிய மட்டங்களிலும் தேசிய பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்ப்பதில் உள்ள நடைமுறை ஒரே மாதிரியானவை எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவரின் மேற்படி கூற்றுக்கு நீண்ட விளக்கம் ஒன்றை பின்னர் இந்த சபையில் முன்வைப்பதாகவும் கூறினார். ஆனால் அமைச்சரின் பதிலில் திருப்தியடையாத ஐ.தே.க. எம்.பி. க்கள் சபாநாயகருடன் தர்க்கப்பட்டனர். சட்டமன்றமான பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமலும் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை பெறாமலும் முதலாம் ஆண்டுக்கான மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதற்கான புதிய சுற்று நிருபம் நடைமுறைக்கு வந்திருப்பது தவறானது என ரவி கருணாநாயக்க எம்.பி. எடுத்துக் கூறினார்.
அதேவேளை குறுக்கிட்ட ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்ப்பதில் நீங்கள் மேற்கொள்ளப் போகின்ற நடவடிக்கை என்ன இந்த பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப் போகின்றீர்கள் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கேள்வி தொடுத்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உயர் நீதிமன்றம் வழங்கிய சிபாரிசுகளுக்கு அமைவாக இன்னமும் சுற்று நிருபம் தயாரிக்கப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறிய பிரச்சினைகள் ஏற்படும் என்பது உண்மை. அதனால் தான் நடைமுறை சாத்தியமான சுற்று நிருபம் ஒன்றை தயாரிக்கும்போது பாராளுமன்றத்தின் ஆலோசனை பெறப்படும் என்றார். தற்போதைய புதிய நடைமுறை 2008 ஆம் ஆண்டுக்கு மாத்திரமே உரியது எனவும் கூறினார்
.
******************************
பாராளுமன்றத்தில் பின்வரிசையில் இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு பூரண ஆதரவு வழங்குவோம்
வீரகேசரி நாளேடு
இ.தொ.கா. திட்டவட்டமாக அறிவிப்பு; ஜனாதிபதி மன்னிப்புக்கோர தேவையில்லை என்றும் தெரிவிப்பு ஜனாதிபதி மீது பூரண நம்பிக்கை ஐ.தே.க. கூட்டணியில் இணையோம்ஆட்சியை கவிழ்க்க அனுமதியோம்அவசரகால சட்டத்துக்கு ஆதரவு பாராளுமன்றத்தில் அரசாங்க தரப்பில் பின்வரிசையில் இருந்துகொண்டு சுயாதீன குழுவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு தொடர்ந்து முழுமையான ஆதரவினை வழங்குவோம். அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இணைந்துகொள்ளவோ வேறு கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரவோ நாம் முயற்சிக்கமாட்டோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் நேற்று திட்டவட்டமாக தெரிவித்தார்..
அவசரகால சட்டம் உட்பட அரசாங்கம் கொண்டுவரும் நல்ல சட்டமூலங்களுக்கு முழுமையான ஆதரவினை வழங்குவோம். தோட்ட மக்களை பாதிக்கின்ற சட்டமூலங்கள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவெடுப்போம். ஜனாதிபதி மீது எங்களுக்கு பூரண நம்பிக்கை உள்ளது. எங்களுக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற கசப்பான சம்பவத்துக்கு ஜனாதிபதி மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவேண்டியதில்லை. அமைச்சுப்பொறுப்புக்களை மீண்டும் பொறுப்பேற்பது குறித்து தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் கட்சியின் நிருவாக குழுவும் தேசிய சபையுமே தீர்மானிக்கவேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்..
கொழும்பில் உள்ள இ.தொ.கா. வின் தலைமையகமான சௌமிய பவனில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். .
இ.தொ.கா.வின் எம்.பி.க்களான எம்.சச்சிதானந்தம், எஸ். ஜெகதீஸ்வரன், எம்.எஸ். செல்லசாமி மற்றும் கட்சியின் பிரதி தலைவர் யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் முத்து சிவலிங்கம் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது : நாங்கள் ஏன் அமைச்சுப்பதவிகளை இராஜினாமா செய்தோம் என்பதனை மக்களுக்கு கூறவேண்டிய கடமை உள்ளது. கொத்மலையில் உள்ள குயின்ஸ்பெரி தோட்டத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இது நான் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருந்தபோது திட்டமிடப்பட்ட விடயமாகும். இந்நிலையில் மின்சாரம் திட்டத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே என்னை குடிகாரன் என்றும் என்னை நம்பவேண்டாம் என்றும ஏதாவது தேவைகள் இருந்தால் தன்னிடம் வரும்படியும் கூறியுள்ளார். .
இந்த பாரதூரமான விடயம் குறித்து நானும் தலைவர் அறுமுகன் தொண்டமானும் உப தலைவர் யோகராஜனும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுநடத்தினோம். ஜனாதிபதி வேலைப்பளு அதிகம் உள்ளவர் என்பதால் நாங்கள் அடிக்கடி அவரின் ஆலோசகரான பசில் ராஜபக்ஷவை சந்திப்பது வழக்கமாகும். .
அதனடிப்படையிலேயே கடந்த வியாழக்கிழமை இச்சந்திப்பும் இடம்பெற்றது. இங்கு நாங்கள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் கருத்து குறித்து கூறியதுடன் எமது வருத்தத்தையும் தெரிவித்தோம். அத்துடன் ஒரே அரசாங்கத்தில் இரண்டு அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிப்பது அவ்வளவு நல்லதல்ல என்றும் கூறினோம். இங்கு திடீரென ஆத்திரமடைந்த பசில், ஆறுமுகன் தொண்டமான் குறித்து சிக்கல் இல்லை என்றும் என்மீது சிக்கல் உள்ளதாகவும் கூறினார். அதாவது நான் அரசாங்கம் செய்யும் சேவைகளை இ.தொ.கா. செய்கின்றது என்று கூறுவதாகவும் மஹிந்த சிந்தனையை மதிப்பதில்லை என்றும் கூறினார். நாங்கள் கட்டாயம் மஹிந்த சிந்தனையை ஏற்றுக்கொள்ளவேண்டும் கூறினார். மஹிந்த சிந்தனைக்கு தமிழில் என்ன பெயர் என்று கூட எனக்கு தெரியாது..
அத்துடன் பசில் மிகவும் கோபமடைந்த சுபாவத்துடன் காணப்பட்டார். இதற்கு முன்னர் இவர் இப்படி நடந்துகொண்டதில்லை. நான் எனது வயதுக்கு மதிப்பு கொடுக்குமாறும் ஜனாதிபதியைவிட ஒரு வயது மூத்தவன் என்றும் கூறினேன். என்னுடன் இருந்த ஆறுமுகன் தொண்டமான் மற்றும் யோகராஜன் ஆகியோரும் இந்த கருத்தை கூறினர். ஆனால் பசில் ஆவேசத்துடன் பேசினார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த நான் எவ்வாறு உங்களுடன் எவ்வாறு வேலை செய்வது ? என்று கேட்டேன். இதன் பின்னர் எவ்வாறு வேலை செய்கின்றீர்கள் என்று நான் பார்த்துக்கொள்கின்றேன் என்று பசில் கூறினார். அவரின் முக பாவம் மாறியதை கண்டேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த வகையில் பசிலின் அழகான முகம் மாறியதனை கண்டேன். அன்று அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதனையடுத்து அப்படியானால் எவ்வாறு தொடர்ந்தும் நாங்கள் சுமுகமாக வேலை செய்வது ? என்று நான் கூறினேன். அதற்கு அவர் ஒரு வெள்ளைத்தாளை நீட்டி இராஜினாமா செய்யும்படி கோரினார். .
எங்கள் அலுவலகத்தில் நிறைய வெள்ளைத்தாள்கள் உள்ளன. இராஜினாமா கடிதத்துக்கு நாங்கள் அவற்றை பயன்படுத்துகின்றோம் என்று கூறிவிட்டு நாங்கள் வந்துவிட்டோம். அதன் பின்னர் எமது நிருவாகக் குழு மற்றும் தேசிய சபை என்பன கூடி அமைச்சுப்பதவிகளை இராஜினாமா செய்வது என்று முடிவெடுத்தோம். கடிதங்களை கையளித்தோம். எங்களுக்கு சுயமரியாதை உண்டு. எங்களை அவமானப்படுத்தும் வகையில் பசில் பேசினார். அந்த அமைச்சரவையில் தொடர்ந்தும் இருக்க நாங்கள் விரும்பவில்லை. பதவியை விட சுய மரியாதை முக்கியம். எம்மை அவமானப்படுத்தியது மலையக சமூகத்தை அவமானப்படுத்தியமைக்கு சமமாகும். இதனை சாதாரணமாக கருத முடியாது. அமைச்சர்களை அவமானப்படுத்தும் அதிகாரத்தை ஜனாதிபதி பசிலுக்கு வழங்கவில்லை. .
ஆனால் நிலைமைகளை ஊடகங்கள் திரிபுபடுத்திவிட்டன. நாங்கள் ஒருபோதும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் என்று கோரவில்லை. நாங்கள் அவ்வாறு கோரிக்கை விடுக்கும் அளவுக்கு முட்டாள்கள் இல்லை. அரச கட்டமைப்பு மற்றும் அரச தலைவரின் மரியாதை குறித்து எங்களுக்கும் தெரியும். எங்களுக்கு அன்று பசில் ராஜபக்ஷவின் நடவடிக்கை பிடிக்கவில்லை. அமைச்சுப்பதவிகளில் தொடர்ந்து இருந்தால் தொடர்ச்சியாக பசிலை சந்திக்கவேண்டும். இது தேவையற்ற பிரச்சினைகளையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தும். எனவே நாங்கள் அமைச்சுப்பதவிகளை இராஜினாமா செய்தோம். மாறாக அரசாங்கத்திலிருந்து விலகவில்லை. .
நாங்கள் சிறுபான்மை இனத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றவர்கள். எங்களுக்கு இந்த நாட்டில் ஜனாதிபதியாகவோ பிரதமராகவே வர ஒருபோதும் முடியாது. அமைச்சரவையை நியமிக்கவும் முடியாது. சட்டத்தில் இடம் இருந்தாலும் எவரும் வாக்களிக்கமாட்டார்கள். எனவே ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்துக்கொண்டு எமது சமூகத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கம். மாறாக ஐக்கிய தேசிய கட்சியுடன இணைந்து ஆட்சியை கவிழ்ப்பதோ அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதோ எமது கடமையல்ல. நாங்கள் அவ்வாறான சதித்திட்டத்தில் ஒருபோதும் ஈடுபடமாட்டோம். அண்மையில் குருணாகலில் இடம்பெற்ற கூட்டத்தில் போகின்றவர்கள் போகட்டும் என்றும் ஜனாதிபதி கூறினார். ஆம் அவர் அவ்வாறு கூறலாம். அதற்கான உரிமை அவருக்கு உண்டு. அவர் இந்த நாட்டின் அரச தலைவர். அவர் எங்களுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்க முடியாது. அவர் அவ்வாறு கூறியதில் எந்த தவறும் கிடையாது. ஜனாதிபதியை நாங்கள் மதிக்கின்றோம். அவர் இந்த நாட்டின் அரச தலைவர். .
அமைச்சுப்பதவிகளை வகிக்காது பாராளுமன்றத்தில் அரசாங்க பக்கத்தில் பின்வரிசையில் இருந்து அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவினை வழங்குவோம். அதற்கு சபாநாயகரிடம் அனுமதி கோரத்தேவையில்லை. அவசரகால சட்டம் உட்பட அரசாங்கம் கொண்டுவரும் நல்ல சட்டமூலங்களுக்கு முழுமையான ஆதரவினை வழங்குவோம். இருப்பினும் தோட்ட மக்களை பாதிக்கின்ற சட்டமூலங்கள்வந்தால் அவை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவெடுப்போம். ஜனாதிபதி மீது எங்களுக்கு பூரண நம்பிக்கை உள்ளது. ஜனாதிபதி மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவேண்டியதில்லை. அத்துடன் பசில் ராஜபக்ஷ கூட மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவேண்டியதில்லை. இருப்பினும் அமைச்சுப்பதவிகளை மீளப்பெறுவதா ? இல்லையா என்பது குறித்து எமது கட்சியின் தலைவர் முடிவெடுப்பார். இன்று (நேற்று) அலரிமாளிகையில் இடம்பெறுகின்ற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலும் கலந்துகொள்வோம். .
தோட்ட மக்களுக்கு சேவை செய்ய அமைச்சுப்பதவி தேவையில்லை. கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக தொழிற்சங்கங்கள் ஊடாகவே மக்களுக்கு சேவை செய்துவந்துள்ளோம். எதிர்காலத்திலும் எம்மால் அவ்வாறு சேவை செய்யமுடியும். இதனை தவிர ஏதோ கண்டெய்னர் விவகாரமே பிரிவுக்கு காரணம் என்று சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். நாங்கள் மலையகத்தில் கிராமங்கள் தோறும் கணனி நிலையங்களை நிறுவி வருகின்றோம். அதற்கு வீ.செட். இயந்திரங்களை இறக்குமதி செய்துள்ளோம். அது அரச முறைப்படி இடம்பெறுகின்றது. இதனால் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. அவை தாமதமாவது வழமையாகும். இருப்பினும் அது குறித்தும் அன்று பசிலுடன் பேசினோம். .
எமது அமைச்சுக்களுக்குரிய வாகனங்களை கையளித்துவிட்டோம். எம். பி. மார்களுக்குரிய பாதுகாப்பு உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனோ மற்றும் மங்கள சமரவீரவுடனோ நாங்கள் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. எதிர்காலத்தில் நடத்த எதிர்பார்க்கவுமில்லை. ஆனால் பாராளுமன்றத்தில் வேறுபல காரணங்களுக்காக எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசலாம். நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியோ சுதந்திரக் கட்சியோ கிடையாது. தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் மற்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் மட்டுமே எந்த கட்சியுடன் இணைவது என்று தீர்மானிப்போம். அரசாங்கம் கொண்டுவரும் அவசர கால சட்டத்துக்கு ஆதரவளிப்போம். ஆனால் மலையக தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுப்போம். இதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆகக்குறைந்த சம்பளமõக 250 ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம். கூட்டு ஒப்பந்த நடவடிக்கையின் போது நாங்கள் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் என்ற அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை மேசையில் அமருவோம். அமைச்சர்களாகவோ பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ அமரமாட்டோம். தனியார் ஊழியர்களுக்கு ஆகக்குறைந்தது 5000 ரூபா சம்பளம் வழங்கப்படவேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

******************************
கிழக்கு 'மறுமலர்ச்சி’த் திட்டம் சர்வதேச சமூகத்திடம் கையளிப்பு.
கருணாவின் நெருப்பு இணைய தளம்

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் கிழக்கு மறுமலர்ச்சி’ உத்தேசத்திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை(07) சர்வதேச சமூகத்திடம் கையளிக்கப்படவுள்ளது. குடும்பிமலை (தொப்பிகல) மீட்கப்பட்டதையடுத்து கிழக்கு மாகாணத்தை புலிகளிடமிருந்து பூரணமாக மீட்டுள்ளதாக அறிவித்த அரசாங்கம் கடந்த மாதம் 19 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடத்திய வெற்றிவிழா நிகழ்வில் கிழக்கு மறுமலர்ச்சி திட்டத்தையும் வெளியிட்டது. இந்நிலையிலேயே கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் உத்தேத் திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசாங்கத்தினால் கையளிக்கப்படவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் கொழும்பிலுள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் உலக வங்கிஇ சர்வதேச நாணய நிதியம் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். கிழக்கு மாகாண உத்தேச மறுமலர்ச்சித் திட்டம் செவ்வாய்க்கிழமை சர்வதேச சமூகத்திடம் கையளிக்கப்படவிருப்பதை மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சரான மகிந்த சமரசிங்க உறுதிப்படுத்தினார்.
அவர் இதுபற்றி மேலும் கூறுகையில்;கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு சர்வதேச சமூகத்தின் உதவி பிரதானமானது. கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் பற்றிய சிறந்த இலக்குகள் அரசாங்கத்திடம் உண்டு. சர்வதேச சமூகத்திடமிருந்து கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக பெறப்படும் நிதி அப்பிரதேச மக்களின் அபிவிருத்திக்கு மாத்திரமே பயன்படுத்தப்படும். செவ்வாய்க்கிழமை பாதுகாப்பமைச்சில் நடைபெறவுள்ள விஷேட நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வர். கிழக்கு மாகாண அபிவிருத்தி குறித்து இதன்போது சர்வதேசப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி முக்கியத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படும். ஐனாதிபதியின் ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ கிழக்கு அபிவிருத்தியில் பிரதான பங்காற்றி வருகிறார். இந்நிகழ்வில் பல உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments: