Thursday, 13 March 2008
ஈழவிடுதலைப் புரட்சியில் கொசோவோப் பிரச்சனை.
ஈழவிடுதலைப் புரட்சியில் கொசொவோப் பிரச்சனை.
உலகைக்குலுக்கிய முதல் உலகப் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரப் புரட்சியின் பெரும்பேறாய் அமைந்த சோவியத் ஒன்றியத்தின் கீழ், சொசலிஸ சமஸ்டிக் குடியரசு யுகோசிலாவியாவின் ஒரு சுயாட்சிப்பிரதேசமாக கொசோவோ அமைந்திருந்தது . தேசிய இனப்பிரச்சனைக்கு முதலாளித்துவத்தின் உதயகாலம் தீர்வுகண்ட 'முதலாளித்துவ தேசிய ஜனநாயகவழிமுறை' (நோர்வே- சுவீடன்)யின் பாற்பட்டு, ஏகாதிபத்தியத்தினதும் சோசலிசப் புரட்சிகளினதுமான புதிய சகாப்தத்தின் தோற்றத்தில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் முரணற்ற தேசிய ஜனநாயகக் கோரிக்கையான -பிரிந்து செல்லும் உரிமை- சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின், மூலம் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டன பாட்டாளி வர்க்க சர்வாதிகார சோசலிஸ அரசுகள். இக்கோட்பாட்டு அடிப்படையில், சுயாட்சி உரிமை பெற்ற கொசொவொ, உள்நாட்டில் இன சமத்துவத்தையும், சுதந்திரத்தையும் ,பொருளாதார சுபீட்சத்தையும் அநுபவித்தது.
அது மட்டுமல்ல இந்த மாபெரும் மக்கள் ஜனநாயக
சோசலிஸ சோவியத் ஒன்றியம், உலக ஏகாதிபத்திய வாதிகளுக்கு ஒரு சிவப்புப் பயங்கரமாக விளங்கியபோது அந்தச் சிவப்புப் பேரரசின் ஒரு சிறு துரும்பாக இருந்தது இந்தக் கொசோவோ.இந்தச்சிறு சுயாட்சிபிரதேசத்துக்கு மாபெரும் அரணாக இருந்தன சோசலிச ஒன்றியங்கள்.
இந்தச் சிவப்புப் பயங்கரம் உலகைக் குலுக்குவதைக்கண்டு ஏகாதிபத்திய, முதலாளித்துவ,அரைக்காலனித்துவ ஆளும்கும்பல்கள் குலை நடுங்கினர்.தமது சிம்மாசனங்களைக் காக்கும் தனிச்சொத்துரிமை தம் கண்முன்னாலேயே தகர்ந்துபோவதை அவர்கள் கண்டார்கள். சோவியத்துக்களினதும்,நவ சீனத்தினதும் பிறப்பில் தெறித்த பொறிகள் உலகின் நாலாபுறமும் பறந்து பற்றி எரிந்த தீயில் தாம் பஸ்பமாகிப் போய்விடுவோமென தங்கள் உயிருக்கும் மேலான உடமைகளுக்காக அஞ்சினார்கள்.
சோவியத் ஒன்றியம் ஒரு சோசலிசக்குஞ்சு.அல்லது குஞ்சுச் சோசலிசம்! மனிதகுல வரலாற்றில் இது தான் -இங்கேதான்- ஆண்டாண்டுகாலமாக முழு அடிமைகளாக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் முதல் முதலாக அரசியல் அதிகாரத்தை தம் கையில் எடுத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவினார்கள். மாமேதை லெனினின் தத்துவார்த்த அரசியல் ஸ்தாபனக் கோட்பாட்டு வழிகாட்டுதலிலும் ,தோழர் ஸ்ராலினின் மகத்தான இராணுவ தேசிய நிர்மாணிப்பிலும் சுதந்திரத்தை உணர்ந்து அநுபவித்தார்கள். புரட்சிகர சர்வாதிகாரத்தின் மூலம் அரசியல் அதிகாரம் கைப்பற்றப் பட்டிருந்தாலும்,
1)பாட்டாளி வர்க்க சர்வாதிகாரஅரசு நிர்மாணம்,புதிய சோசலிஸ பொருளாதார நிர்மாணம்,சந்தித்த சவால்களை கையாள்வதில் உளள முன்
அநுபவக்குறைவாலும்,
2)திரிபுவாதமும் பாசிசமும் மூர்க்கத்தனமாக ஏவப்பட்டதாலும்,
3)உள்ளிருந்தே கொன்ற ரொட்ஸ்கிய திரிபுவாதத்தை வெல்ல நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததாலும்,
4)உலக ஏகாதிபத்திய எதிரிகள் எல்லா முனைகளிலும் சூழ்ந்து தாக்கியதாலும், 5)ஜேர்மானிய பாசிசத்தின் அபாயத்தில் இருந்து மனித குலத்தைக் காப்பாற்ற இரண்டாம் உலகப் போரில் நிறைவேற்றிய மாபெரும் தேசபக்த சோசலிஸ
ஜனநாயகக் கடைமையின் பாற்பட்ட பங்களிப்பினாலும்,
6)எதிரிகள் மீது காலங்காலமாகக்கொண்ட மக்களின் நியாயமான மூர்க்க கோபத்தாலும்,
7)இவையனைத்தினதும் ஒட்டுமொத்த விளைவாக, மார்ஸல் டிட்டோ, குருச்சேவ் கும்பல்களின் திரிபுவாதத் தலைமையில் முதலாளித்துவ மீட்சி
ஏற்பட்டது.
எனினும் மனித சமுதாய வரலாற்றில் பச்சிளம் குழந்தையான முதல் சோசலிச அரசு தான் வாக்களித்த படி ஏகாதிபத்தியத்தின் மீது தனது
மூர்க்கத்தனமான எதிர்ப்பின் முத்திரையைப் பதித்துவிட்டுத்தான் சென்றது.
இதன் இறுதி விளைவாக 'பெரெஸ்ரோரிக்காவும் கிளாஸ்னொட்டும்' தலைவிரித்தாட முயன்ற போதும், அவையும் மக்கள் போராட்டத்தீயில் வெந்து சாம்பராகின. திரிபுவாத சோவியத் சமூக ஏகாதிபத்தியம், படைத்தவர்களைப் பழிவாங்கிய குற்றத்துக்காக அவர்கள் கண்முன்னாலேயே வீழ்ந்து நொருங்கியது. இதுவரையும், தான் அணிந்திருந்த சிவப்பு முகமூடியை தான்குடித்த இரத்த வெள்ளத்தில் வீசி எறிந்து நிறம் மங்கி மறைந்து மக்கள்
காலடியில் மண்டியிட்டது.
இச்சித்தாந்த நடைமுறைப்போரில்,எஞ்சி இருந்தவர்களும் இறுதியாக இந்த வெந்தீர்ப்பில் வெந்துகருகி சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டார்கள். இனி வரும் சோசலிச புதிய ஜனயாக புரட்சிகளைக் கவிழ்க்க சதியாலோசனை செய்வதற்காக, கோர்ப்பச்சேவ் 'அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின்' விரிவுரையாளர் பதவி பெற்றார்.வத்திக்கான் போப்-ஆண்டவரின் ஆசீர்வாதத்தைப் பெற்று குடியரசைக் கவிழ்த்த குடிவெறியன் ஜெல்சின் குரல் இழந்துபோனான்.
மனிதகுல வரலாற்றை திருத்தியெழுதிய மாபெரும் தேசம் தேடுவாரற்றுத் தெருவில்கிடந்தது.அடித்து வீழ்த்தப்பட்ட இந்தத் தேசத்தின் அனைத்து
வளங்களையும் வாரிச் சுருட்டிக்கொள்ள அந்நிய நிதி மூலதனம்-IMF, WB- படையெடுத்தது. அதற்கு ஏதுவாக சிவப்புப்பயங்கரத்தை தோற்கடித்த
ஏகாதிபத்தியவாதிகள், முதலாளித்து மீட்சியால் ரசியாவைக் கொள்ளையடித்துக் கொழுத்துப் போயிருந்த// (மிகையில் கொர்ப்பச்சேவ் தனது பெரெஸ்ரோறிக்கா நூலில்,சோசலிசத்தின் மீது அவதூறு பொழிவாதக நினைத்துக்கொண்டு பின்வருமாறு வர்ணித்த)-''அவர்கள் சமுதாயத்துக்கு
சிறிதளவே கொடுக்கிறார்கள்; ஆனால் அதனிடமிருந்து சாத்தியமான அனைத்தையும், இன்னும் சொல்லப்போனால் சாத்தியமற்றவையாகத்
தோன்றுபவற்றையும் பெறுகிறார்கள்.ஈட்டப்பெறாத வருமானங்களில் வாழ்ந்து ருசி கண்டவர்கள்''!! //ஈட்டப்பெறாத வருமானங்களில் வாழ்ந்து ருசி கண்ட'கறுப்புப் பயங்கரத்தை' ஆட்சியில் அமர்த்தியிருந்தார்கள்.
இவ்வாறு எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தியான தருணத்தில் கபளீகரம் திரும்பத் தொடங்கியது.ஒற்றைத்துருவ அமெரிக்க உலக ஒழுங்கமைப்பில், வீழ்ந்த ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் அனைத்து சந்தை வாய்ப்புக்களையும் அபகரித்துக்கொள்ள-கொல்ல- ''குன்றின் உச்சியில் உள்ள பிரகாசமான நகரம்''-அமெரிக்கா 'அம்பும் வில்லும் ஏந்தி' வெறிகொண்ட ''சந்தைக் கைப்பற்றல் வேட்டையில்'' இறங்கியது.
அமெரிக்காவின் தூண்டுதலாலும்-பொதுவான ஏகாதிபத்திய நலனாலும் ஜேர்மனி யுகோசிலாவியாவை துண்டாடியது;செர்பியா பிறந்தது-மிலோசவிச் ஹிட்லர் என்று சித்தரிக்கப்பட்டார்., ஐ.நா.சபையை அச்சுறுத்தி ஆப்கான் அபகரிக்கப்பட்டது-பின் லாடன் பயங்கரவாதி என்று சித்தரிக்கப்பட்டார், ஐ.நா.வுக்கும் அஞ்சாத நெஞ்சத்துடன் செச்னியின் வீர பரம்பரை ஈராக்கை ஆக்கிரமித்தது-சதாம் உலகத்தை அழிக்கப் போகிறார்என்று சித்தரித்தார்கள்,அடுத்து ஈரானுக்கு செல்லப் போகிறார்கள்-ஈரானிய அரசுத் தலைவரை உலக அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவர் என சித்தரிக்கிறார்கள்- இஸ்ரேல் துணை இருக்கிறது.ஆனால் இது ஒரு வழிப்பாதை.ரசியாவையும்
ஈரானையும் ஏககாலத்தில் வீழ்த்துவதற்கு கிழக்கைரோப்பாவில் இன்னொரு இஸ்ரேல் அமெரிக்காவின் மிக நீண்டகாலத்தேவை.அதனால் செர்பியாவை
அமெரிக்கா துண்டாடியது கொசொவோ பிறந்தது.அமெரிக்காவின் அடுத்த இஸ்ரேல்-ஐரோப்பாவில் பிறந்தது.ரசியாவின் காலடியில் ஒரு கண்ணிவெடியாக!.
இந்த இடைக்காலத்தில் பூட்டினின் தலைமையில் -முதலாளித்துவ சர்வாதிகார பிராந்திய மேலாதிக்க வல்லரசாக தன்னைத் தலை நிமிர்த்திக்கொண்ட ரசியா, கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்று சொல்லி, திடீரெனக் கருத்தரித்து தனக்கு மூன்று தேசங்கள்-Georgia's regions of Abkhazia and South Ossetia, and Moldova's Transdniester.-பிறக்கப் போவதாக அறிவித்துள்ளது.அப்போதும் செர்ச்னியாவைக் கருக்கலைப்பேன் என்கிறது.
மருத்துவச்சிகள் மாரடைத்துப்போய் நிற்கிறார்கள்.
அயர்லாந்துக்கு 300ஆண்டுகளாக சுதந்திரம் இல்லை, வேல்சிலும் ஸ்கொட்லந்திலும் சொந்த மொழி, மக்கள் கலாச்சாரத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட்டு விட்டது.பிரித்தானிய ஐக்கிய ராச்சியத்தில் -நான்கு தேசங்களின் கட்டாய இணைப்புக் கூட்டரசில்-ஆங்கிலமே அரசோச்சுகிறது. அமெரிக்காவில் ஆபிரிக்க இன மக்கள் இப்போதும் கூலி அடிமைகள்; பிரான்சில்- ஆபிரிக்காவின் முழு இரத்தத்தையும் உறிஞ்சிக்குடித்து வளர்ந்த முதலாளித்துவம் தனது மூன்றாவது தலைமுறைக் குழந்தைகளை பாரிஸ்நகர் எங்கும் கலைத்துக் கலைத்து வேட்டை நாய்களைப் போல் சுட்டு வீழ்த்துகிறது. ஜேர்மனி, ஆப்கான் ஈராக் கொலையாளிகளுக்கு வைத்தியசாலை அளித்து மருத்துவம் பார்த்து தனது சுதந்திர உணர்வை நீருபித்துள்ளது.. தனது நாஜிப்படைகளின் பாசிசப் படுகொலைகளுக்கு 70 ஆண்டுகள் கழித்து .... மன்னிப்புத் தெரிவித்துள்ளது!.
ஆனால் திடீரென இந்தக் கும்பல் அனைத்தும் ஒரு சேர 'ஸ்பாட்டகஸ்டுக்கள்' ஆகி கொசோவோவுக்கு சுதந்திரம் அளித்துக் கொண்டாடி மகிழ்கிறார்கள். இதன் மர்மம் என்ன என்று கேட்டால் அது கன்னி மேரிக்கு யேசு பிறந்ததைப்போல மாசில்லாமல் பிறந்ததாகச் சொல்லுகிறார்கள்.
அரசியல் தர்க்கம், நியாயம் செய்ய வேண்டிய விடயம் என்னவென்றால், திடீரேனப் புற்றீசல் போல இத் தேசங்கள் எவ்வாறு பிறக்கின்றன? ஏன் பிறக்கின்றன?காலம் காலமாக சுதந்திர தேசங்களை கருவறுத்த கசாப்புக்கடைக்காரர்கள் திடீரெனெ கன்னிகழியா மங்கைகளாகி -குடும்பக் கட்டுப்பாடுகளையும் மீறி- சர மாரியாக தேசங்களைப் பெற்றுத்தள்ளுவதின் சூக்குமம் என்ன?
அடிப்படையான கேள்வி இதுதான்:
ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட இத்தேசங்கள்-தேர்ந்தேடுக்கப்பட்ட சில மட்டும்-சுதந்திரம் அடைகின்றனவா? அல்லது மூன்றாவது உலக யுத்தத்தை நோக்கிய உலக மறு பங்கீட்டில் இவை பிரதேசக் கைப்பற்றுதலுக்கு பலியாகின்றனவா?
இச்சூக்குமத்தை விளங்கிக்கொள்ள கொசோவோவை ஆய்வுக்கெடுத்துக்கொள்வோம்.
1) இந்தப் பக்கத்தின் தலைப்பில் நான்கு படங்கள் உள்ளன.
அ) CAMP BONDSTEEL:
வியட்நாம் யுத்தத்தை அடுத்து அமெரிக்காவுக்கு வெளியே ஐரோப்பாவில் அமெரிக்கா நிறுவியிருக்கும் பிரமாண்டமான இராணுவ முகாம் கொசோவோவில் அமைக்கப்பட்டுள்ளது.(Camp Bondsteel [CBS] is quite large: 955 acres or 360,000 square meters. If you were to run the outer perimeter, it is about 7 miles. Bondsteel is located on rollinghills and farmland near the city of Ferizaj/Urosevac)
ஆ) இரண்டாவது படம்
சோசலிச யுகோசிலாவியாவின் கீழ் இதர தேசிய இனங்களோடு கொசொவோ கூட்டாட்சிக்குட்பட்டிருந்ததைக் காட்டுகிறது.
இ)மூன்றாவது படம்
சோவியத் ஒன்றியத்தின் கீழ் கூட்டாட்சி நாடுகளாய் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சந்தையை அபகரித்துக்கொள்ள அப்பிராந்தியங்களில்அமெரிக்கா குவித்திருக்கும் படைபலத்தையும்,படைக்கலத்தையும் காட்டுகிறது. இதன் ஒரு பகுதியே கொசொவோவின் 'முகாம் பொண்ட் ஸ்டீல்'.
ஈ)நான்காவது படம்
கிழக்கைரோப்பிய நாடுகளின்- போல்கன் நாடுகளின்- எண்ணெய் வளத்தை கஸ்பீயன் கடல் ஊடாக மைய ஐரோப்பாவுக்கு கடத்திச் செல்லும்
அமெரிக்காவின் நிலத்தடி எண்ணைக்குழாய்த் திட்டத்தை-AMBO விளக்குகிறது.
2) நாம் எடுத்துக்கொண்ட ஆய்வுப் பொருள் கொசொவோவோடு, தொடர்பு படுத்தி அந்த முழுச்சுற்றாடலையும் - இந்த மெய் விபரங்களோடு-
உற்றுக்கவனித்தால்;
*சிவப்புப் பயங்கரத்தை வீழ்த்த தாம் உருவாக்கிய கறுப்புப் பயங்கரத்தோடு இப்போது சண்டையிடத்தொடங்கியுள்ளார்கள் என்பது தெளிவாகும்.
3) எனவே கிழக்கைரோப்பாவின் மூலவள ஆதாரங்களைக் கொள்ளையிடுவதும், அதன் மீது பூட்டினின் ரசியா, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கு சவாலாக இருப்பதை ஒழித்துக்கட்டுவதும் இதன் முதன் நிலை நோக்கம் என்பது தெளிவாகிறது
4) 'துரதிஸ்டவசமாக' விவகாரம் இந்தளவோடு நிற்கவிலை ''இஸ்லாமிய'' ஈரானும், ''கம்யூனிச'' ரசியாவும் ஒன்றுசேர்ந்து கொண்டன-கற்பழிப்புக்கு
இணையான ஒரு பாவத்தைசெய்ய எம்மை அநுமதியுங்கள்- வர்க்க நலம் காரணமாக.இனிமேல் ஒரு இஸ்ரேல் போதாது பல இஸ்ரேல்கள்
தேவை.இரண்டாவது ஐரோப்பாவில் பிறந்திருகிறது ரசியாவின் காலடியில், கொசொவோ என்கிற பெயரில்.
5)மூன்றாவது இஸ்ரேலுக்கு 'மூத்த தமிழ்க்குடி' போட்டி போடுகிறது.
தர்க்கம் இதுதான்:
*Camp bond steel இக்கு ஈடாக திருகோணமலை இருக்கிறது-இருந்தது!.
*Trans Balkan Pipeline இக்கு பதிலாக மன்னார் எண்ணெய்வளம் இருக்கிறது, மேலும் சேது சமுத்திரத்திட்டதின் காவலர்களாக இருப்போம்.
இந்தியாவைப் பகைக்க மாட்டோம்.சிலவேளைகளில் இருதரப்பும் தவறுகள் செய்யக் கூடும். ஆனால் நாங்கள் மட்டும் மன்னிப்புக் கேட்போம்!
*ஆசியாவில் சீனாவுக்கு எதிராக உங்கள் மேலாதிக்கத்தை நிறுவும் அணிசேர்க்கையில் எப்போதும் உம் உயிர்த்தோழன் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம்.அமெரிக்க சுதந்திர தேவிக்கு இந்தியமாதா ஆற்றும் அனைத்துப்பணிகளுக்கும் அவளின் பிள்ளையாய் இருந்து சேவகம் செய்வோம்!
*யூதர்களுக்கு ஒரு தேசத்தை நீங்கள் அங்கீகரித்தது போல எம்மையும் அங்கீகரியுங்கள்.
6) இதுதான் விடுதலைப் புலிகளின் வெளிவிவகாரக் கொள்கை-Foreign Policy.இதை அடைகிறவரைக்கும் தாங்குகிற வேடம் தான் தமிழ் ஈழம். இந்தக் கொள்கைகள் தமிழீழத்தை ஏற்கெனவே இரண்டு மாவட்டங்களுக்குள் சுருக்கி விட்டன. வன்னிப் பெருநிலப் பரப்பைக்காப்பற்ற ஜீவமரணப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.இனிமேலும் இவைதான் கொள்-ல்-கைகள் என்றால்,கொள்கை வீரர்களான மாவீரர் துயிலும் மயானங்களை
அழித்துவிட்டு,மாமனிதர்களின் நினைவாக கோதுமை விளைவிப்பது நல்லது. வயல் வரம்புகளில் உங்களைப் பார்த்து மக்கள் இப்படிப் பாடுவார்கள்: ''புலிகளின் தாகம் தமிழீழ வியாபாரம்''.
30 ஆண்டுகாலம் தமிழீழ சுதந்திரப்போரை எதிரிகளிடமிருந்து காத்து போற்றி பாதுகாத்து வளர்த்த நீங்கள் இத்தகைய ஒரு இழி நிலைக்கு ஆளாகாதீர்.
இப்போதும் ஏற்பட்டுள்ளது பின்னடைவு மட்டும் தான்.ஆனால் ஏகாதிபத்திய சமரசவாதத்தோடும், அரசியல் சந்தர்ப்பவாதத்தோடும் திட்டவட்டமாக முறித்துக்கொள்ளாதவரையில் இனிமேல் ஒரு அடி தானும் முன்னேற முடியாது.இது எமது தோழமையான விமர்சனம்.
7) மேற்கண்ட இவ் ஆய்விலிருந்து நாம் கொசோவோ சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளவில்லையென்றும், மூன்றாவது உலகப் போரை நோக்கிய
பிராந்திய யுத்தங்களின் தேவைக்காக அமெரிக்காவின் இராணுவக் காலனி ஆக்கப்படிருக்கிறது என்றும் பிரகடனம் செய்கிறோம்.
8)மேலும் இது கொசோவோ மக்கள் இடையேயான சுதந்திர வாக்கெடுப்பின் மூலமாக அல்லாமல், அமெரிக்கா சதித்தனமாக ஐ.நா.சபையை
பயன்படுத்தி கபளீகரம் செய்ததால் முற்றிலும் ஜனநாயக விரோதமானது எனவும் அறிவிக்கிறோம்.
9)அமெரிக்காவின் இந்த காட்டுமிராண்டித்தனமான பிரதேசக் கைப்பற்றலானது அப்பிராந்தியத்தில் அமைதியின்மையைத் தோற்றுவித்து இன
மோதல்களுக்கும், யுத்தங்களுக்கும் வித்திட்டுள்ளதனால் இதனை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.
10) உலகெங்கும் வாழும் புரட்சிகர உழைக்கும் மக்களையும், முற்போக்கு ஜனநாயக சக்திகளையும், தேசியவிடுதலைப்புரட்சியாளர்களையும் பின்வரும்
முழக்கங்களுடன் ஒன்றிணைந்து போராட முன் வருமாறு அறைகூவல் விடுக்கிறோம்.
அமெரிக்க ஏகாதிபத்தியமே;
*மூன்றாவது உலகப் போர் அபாயத்தை தோற்றுவிக்கும் உனது, மேலாதிக்க பிரதேசக் கைப்பற்றலுக்கான அனைத்துப் பிராந்திய யுத்தங்களையும் உடனே நிறுத்து!
*ஈராக்கிலிருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் உனது ஆக்கிரமிப்புத் துருப்புக்களை உடனே திரும்பப் பெறு!
*கொசொவோ மக்களின் சுயாட்சி உரிமையை கொசோவோ மக்களிடம் வழங்கு!
*கொசொவோப் பிரதேசத்தில் நிர்மாணித்துள்ள 'காம்ப் பொண்ட் ஸ்டீல்' முகாமை உடனடியாக திரும்பப்பெறு!
*போல்கன் நாடுகளின் எண்ணெய் வளத்தில் கை வைக்காதே!அகண்ட போல்கன் எண்ணெய்க் குழாய்த்திட்டத்தைக் கைவிடு!
*ஈழதேசிய விடுதலை, 'நமக்காக நம்மால் நாமே' நடத்தும் புரட்சி-அதில் தலை இடாதே; தூர விலகு!
*இந்திய விஸ்தரிப்பு வாத அரசைக் கொண்டும், பக்ஸபாசிட்டுக்களைக்கொண்டும் கிழக்குமாகாணத்திலும் திருகோணமலைத் துறைமுகத்திலும்,உனது பிரதேச கைப்பற்றுதல்களுக்காக தளம் அமைக்கும் அனைத்துத் திட்டங்களையும் கைவிடு!
ஈழமக்களே;உழைக்கும் விவசாயத் தொழிலாளர்களே, இளைஞர்களே,மாணவர்களே:
*ஏகாதிபத்திய சமரசவாத, அரசியல் சந்தர்ப்பவாத 'அகசுய நிர்ணயப் பாதையை' நிராகரிப்போம்!
*ஈழமக்கள் ஜனநாயகக் குடியரசமைக்க புதிய ஜனநாயகப்புரட்சிப்பாதையில் அணிதிரள்வோம்!!
*பக்ஸ பாசிஸ்டுக்களின் வடக்குப்படையெடுப்பைத் தோற்கடிப்போம்!*விடுதலை யுத்தத்தில் ஊன்றிநிற்போம்! மாகாணசபைத் தேர்தல்களைப் புறக்கணிப்போம்!!!
இறுதி வெற்றி ஈழமக்களுக்கே!
======================================
**Kosovo Tamil Eelam
links:LTTE Statement 22 February 2007Ceasefire Agreement completes its fifth year
======================================
குறிப்பு: இக்கட்டுரையில் கருத்துருவாக்கத்துக்கும் நேரடியாகப் பயன் படுத்தப்பட்ட விபரங்களுக்கும் எண்ணற்ற விசயாதானங்கள் உலகெங்கும்
முற்போக்கு ஜனநாயக எண்ணம் கொண்ட எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்,கல்விமான்களின் ஆக்கங்களில் இருந்து பெறப்பட்டவை. அவ் ஆக்கதாரிகளுக்கும் அவற்றை வெளியிட்ட நிறுவனங்களுக்கும் எமது நன்றி.இவற்றில் சிலவற்றை அவற்றின் பிரதிகளில் படிக்க பின்வரும்
இணைப்பை அணுகவும்.ENB KOSOVO
========================================
தகவல் ஆதாரங்கள்:
Breakaway regions’ independence dream a step closer?http://enbkosovo.blogspot.com/2008/03/breakaway-regions-independence-dream.html
Campbondsteel It's not just a camp
http://enbkosovo.blogspot.com/2008/03/camp-bondsteel-pictures.html
Camp Bondsteel and America’s plans to control Caspian oil
http://enbkosovo.blogspot.com/2008/03/camp-bondsteel-and-americas-plans-to.html
Abkhazia does not need to use Kosovo as a precedent for its own claim for independence,
http://enbkosovo.blogspot.com/2008/03/abkhazia-does-not-need-to-use-kosovo-as.html
Moscow warns Nato on Georgia
http://enbkosovo.blogspot.com/2008/03/moscow-warns-nato-on-georgia.html
South Ossetia: Russian, Georgian...independent?
http://enbkosovo.blogspot.com/2008/03/south-ossetiarussian.html
US Chides Russia For Lifting Sanctions On Georgian Region
http://enbkosovo.blogspot.com/2008/03/us-chides-russia-for-lifting-sanctions.html
Kosovo walks out
http://enbkosovo.blogspot.com/2008/03/kosovo-walks-out.html
A long road from Kosovo to Kurdistan
http://enbkosovo.blogspot.com/2008/03/long-road-from-kosovo-to-kurdistan.html
US Policy in the Balkans and the Eastern Mediterranean:
http://enbkosovo.blogspot.com/2008/03/us-policy-in-balkans-and-eastern.html
CASPIAN PIPELINES WAR
http://enbkosovo.blogspot.com/2008/03/caspian-pipelines-war.html
The Albania-Macedonia-Bulgaria Oil Pipeline (AMBO)
http://enbkosovo.blogspot.com/2008/03/albania-macedonia-bulgaria-oil-pipeline.html
END.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment