ஜனநாயகத்தை நிலைநாட்டும் அரசாங்கத்தின் முயற்சிக்கு சர்வதேச சமூகம் பூரண ஆதரவு - அமைச்சர் போகொல்லாகம
3/12/2008 8:56:26 PM வீரகேசரி இணையம்
கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு சர்வதேச சமூகம்
தனது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு
தூதுவர்கள் மகிழ்ச்சியையும் திருப்தியையும் வெளியிட்டதாக வெளிவிவகார அமைச்சர் ரேஹித போகொல்லாகம தெரிவித்தார். நடந்து முடிந்த
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று காலை
கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளித்தார்.
அதன் பின்னர் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு
தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நடந்து
முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலானது அரசாங்கத்தின் முயற்சியில் ஒரு மைல் கல்லாகும். இத் தேர்தல் ஜனநாயகத்தின் மீதும் பிரச்சினைக்கு
பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதிலும் அரசாங்கம் கொண்டுள்ள பற்றுறுதியையும் விருப்பத்தையும் சர்வதேச சமூகத்திற்கு
வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டின் ஒரு பகுதியிலுள்ள மக்களுக்கு 14 ஆண்டுகளின் பின்பு சுதந்திரமாக வக்களிக்கக்கூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. இத்
தேர்தலானது விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் முயற்சிப் பாதையில் ஒரு
மைல்கல்லாகும். அத்தோடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு ஜனநாயக நீரோட்டத்தில் காப்பதற்கு இத்தேர்தல் ஒரு சந்தர்ப்பத்தை
வழங்கியுள்ளது.
இத் தேர்தலானது எதிர்வரும் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலுக்கான ஒரு முன்னோடியாகும். மாகாண சபை தேர்தலின்
மூலம் சர்வகட்சி பிரதிநிதிகள் சபையால் இனப்பிரச்சினை தீர்வுக்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை அமுல்படுத்த முடியும். கிழக்கு
மாகாணத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கும் அங்கு ஏற்படும் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களுக்கும் சர்வதேச சமூகம் தனது
உதவிகளையும் அங்கீகாரத்தையும் வழங்குமென்று நாம் நம்புகின்றோம்.
அரசாங்கமானது பாரம்பரிய தொடர்புடைய அயல் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்திவரும் அதேவேளை மேற்குலக நாடுகளுடனான நட்புறவை
புறக்கணிக்கவில்லை. அரசாங்கத்தின் வெளி விவகாரக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இராணுவ உயர் அதிகாரிகள் நட்பு
நாடுகளுக்கு விஜயம் செய்யும் நடைமுறை பாரம்பரியமானது இலங்கை இராணுவ அதிகாரிகளின் இந்திய விஜயத்தையும் அதே
கண்ணோட்டத்தோடுதான் பார்க்க வேண்டும்.
மட்டக்களப்பு உள்ளூராட்சி தேர்தல் ஜனநாயகத்தை அழிக்கும் செயற்பாடு விடுதலைப் புலிகள் தெரிவிப்பு
3/12/2008 9:41:10 PM வீரகேசரி இணையம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜனநாயகத்தை அழிக்கும் ஒரு செயற்பாடு
என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை என்று
குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட இளந்திரையன், நான் மட்டக்களப்பு மண்ணின் மைந்தன். துணை இராணுவக் குழுவின் ஆதரவுடன் இந்த
அரசாங்கத்தால் மட்டக்களப்பு களங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று குறிப்பிட்டார்.
இத்தேர்தலில் பிள்ளையான் குழு பெற்றுள்ள வெற்றியின் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பு மேலும் பலவீனப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று மனித
உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருப்பது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட இளந்திரையன், அது தவறான
கருத்து என்று மறுத்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு நாளை மறுதினம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர் பான அறிவித்தல் ஒன்றை நாளைமறுதினம் 14ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் வெளியிடுவார் என்று
உத்தியோகபூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த தகவலை நேற்று இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபய வர்த்தன வெளியிட்டார்.மேற்படி தேர்தலுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 7ஆம் திகதி தேர்தல் ஆணையாளருக்கு
உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு முன் னர் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கு மாறும் தேர்தல்
ஆணையாளரை ஜனாதிபதி பணித்துள்ளார் என்று ஒரு தகவல் தெரிவித்தது.
No comments:
Post a Comment