Friday, 6 June 2008

ஈழச்செய்திகள்:060608

மொறட்டுவவில் பேருந்துக்குள் குண்டுவெடிப்பு: 21 பேர் பலி- 53 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 08:24 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான மொறட்டுவவில் பேருந்துக்குள் இன்று வெள்ளிக்கிழமை காலை 7:35 மணியளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 53 பேர் காயமடைந்துள்ளனர். கல்கிசையில் இருந்து கொட்டாவ நோக்கிச் சென்று கொண்டிருந்த 255 இலக்க வழிப்பாதையைக் கொண்ட பேருந்துக்குள்ளேயே இக்குண்டு வெடித்துள்ளது.
மொறட்டுவ பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தினை அடுத்து அப்பகுதியின் வீதிப் போக்குவரத்தினை படைத்தரப்பினர் மூடியுள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் களுபோவில மற்றும் லுனாவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 13 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்தவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
பேருந்து குண்டுவெடிப்புச் சம்பவமானது தொலை தூரத்தில் இருந்து இயக்கப்படும் கருவி ஊடாகவே நடத்தப்பட்டதாகவும் இது ஒரு கிளைமோர்த் தாக்குதல் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

(இணைப்பு04) வீரகேசரி
மொரட்டுவையில் பஸ் ஒன்றில் குண்டுவெடிப்பு-22பேர் பலி 60 பேர் வரை காயம்
வீரகேசரி இணையம் 6/6/2008 7:47:55 AM - இன்று காலை மொரடுவையில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கட்டுபெத்தசுவர்ண சைல பிம்பாரமைய விகாரைக்கு அருகாமையில் பஸ் ஒன்றினுள் இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மவுண்ட்லேவினியாவிலிருந்து கொட்டாவை நோக்கி சென்ற 255 இலக்க பஸ் வண்டியே இக்குண்டு தாக்குதலுக்கு இகல்லானது. இதில் 22 பேர் வரை பலியாகியுள்ளதாகவும் 60 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதில் உயிரிழந்துள்ளவர்களுல் 8 பேர் பெண்கள் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
காயமமடைந்தவர்கள் கலுபொவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பிலியந்தலை கட்டுபெத்த வீதி மூடப்பட்டுள்ளது.

எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பில்லை என்பது நான் கைது செய்யப்பட்டதாக கூறுவதைப் போன்ற பொய்ச்செய்திதான்: புலித்தேவன் [புதன்கிழமை, 04 யூன் 2008, 10:28 மு.ப ஈழம்] [ப.தயாளினி]
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நோர்வே அனுசரணையாளர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது நான் கைது செய்யப்பட்டதாக கூறுவதைப் போன்ற பொய்தான் என்று புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டுக்கு இன்று புதன்கிழமை (04.06.08)அவர் அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவம்:
நோர்வேயின் அனுசரணையின்றி சிறிலங்கா அரசாங்கத்துடன் எதுவித அமைதிப் பேச்சுக்களும் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை.
நோர்வேயின் சமாதான செயற்பாட்டாளர்களான எரிக் சொல்க்ஹெய்ம் மற்றும் சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஆகியோருடனும் நாம் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளோம். சிறிலங்கா அரசாங்கத்துடனான எதிர்காலப் பேச்சுக்கள் தொடர்பில் குறித்து எம்முடன் நேரில் விவாதிப்பதற்காக நோர்வேத் தரப்பினர் கிளிநொச்சிக்கு செல்வதற்கான சிறிலங்காவின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள்.
சிறிலங்கா அரசாங்கத்துடனான அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னதாக நாம் நோர்வே அனுசரணையாளர்களுடன் பல விடயங்களை விவாதிக்க வேண்டியுள்ளது.
நோர்வேத் தரப்பினரைச் சந்திக்க நாம் விரும்புகிறோம். இருந்தபோதும் அவர்கள் கிளிநொச்சிக்குள் நுழைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை. நோர்வேத் தரப்பினர் கிளிநொச்சி வருவார்களேயானால் அவர்களுக்குரிய பாதுகாப்பை நாம் அளிப்போம்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை பார்வையிட வருகை தந்தால் அங்கு எதுவித பாதுகாப்பு பிரச்சினைகளும் இல்லை. நாளாந்தம் ஐக்கிய நாடுகள் மற்றும் அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகள் எமது பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.
நான் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டதைப் போன்ற பொய்ச் செய்திதான் இதுவும்.
எமது அமைப்புக்குள் எதுவித பிரச்சனையும் இல்லை. எப்போதும் போல் நாம் வழமையாகவே இயங்கி வருகின்றோம் என்றார் சீவரத்தினம் புலித்தேவன்.

எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம்- எறிகணைத்தளம் மீது புலிகள் எறிகணைத் தாக்குதல்
[புதன்கிழமை, 04 யூன் 2008, 04:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
யாழ். தென்மராட்சி எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம் மற்றும் எறிகணை ஏவுதளம் ஆகியவற்றின் மீது இன்று இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பேரழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: முகமாலைக் களத்தின் முதன்மைப் பின்தளமாக உள்ள எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம் மற்றும் மோட்டார் எறிகணைகளை ஏவும் தளம் ஆகியன மீது இன்று புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அத்தளங்களின் மீது குறிவைத்து செறிவாக புலிகள் இத்தாக்குதலை நடத்தினர். சிறிலங்காவின் படைத்தளம், மோட்டார் எறிகணை ஏவுதளம் மற்றும் வெடிபொருட் களஞ்சியம் ஆகியவற்றில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. 2 மணிநேரம் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் வெடிபொருட் களஞ்சியம் தீப்பற்றி வெடித்துச் சிதறி எரிந்தது. இன்று பிற்பகல் வரை வெடிபொருட்கள் வெடித்து எரிந்தன. படைத்தளத்தில் இருந்த பெருமளவிலான படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. பாரிய படை நடவடிக்கை ஒன்றுக்கான தயாரிப்பில் படையினர் ஈடுபட்டுக்கொண்டிந்த நிலையில் இந்த செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளோம் என்றார் இளந்திரையன்.

இந்தியா - புலிகள் இடையேயான உறவின் கீறலை சீர்செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கே உண்டு: க.வே.பாலகுமாரன் [புதன்கிழமை, 04 யூன் 2008, 05:28 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
இந்தியாவின் நலன்களை எமது நலன்களாகப் பார்த்துக்கொண்ட காலம் ஒன்று இருந்தது. என்றைக்கு இந்தியா எம்மைப் பிரித்துப் பார்க்கத் தொடங்கியதோ அன்றைக்கே அதில் கீறல் விழுந்துவிட்டது. அதனைச் சீர்செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியத் தரப்பிற்கு உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகும் "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (03.06.08) அவர் வழங்கிய நேர்காணல்:
கேள்வி: தமிழீழத் தாயகம் என்ற தீர்வுத்திட்டத்திற்கு குறைவான ஒரு தீர்வுத்திட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் நோக்க வேண்டும் என்ற பரப்புரை ஊடகங்களின் ஊடாக வெளியிடப்படுகின்றது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ?
பதில்: தமிழீழக் கோரிக்கை என்பது திடீரென வானத்தில் இருந்து உதித்த ஒரு கோரிக்கை அல்ல.
அது படிப்படியாக வார்த்தெடுக்கப்பட்ட கோரிக்கை. அரசியல் தெரியாதவர்கள், வரலாறு தெரியாதவர்கள்தான் தமிழீழக் கோரிக்கை குறித்து அவ்வாறு சொல்வார்கள்.
தமிழீழக் கோரிக்கை என்பது இன்று- நேற்று உருவானதும் அல்ல.
1948 ஆம் ஆண்டுக்கு முன்னரே உருவானது.
அது தொடர்பான ஆதாரங்கள் அனைத்தும் எம்மிடம் இருக்கின்றது.
சாதாரண ஒரு கோரிக்கையாக இருந்து படிப்படியாக வளர்ந்து 1977 இல் மக்கள் ஆணை பெற்ற கோரிக்கையாக இது வளர்ந்திருந்தது.
அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள்தான் இந்தக் கோரிக்கையை முதலில் முன்வைத்ததாக ஒரு மாய விம்பம் உருவாக்கப்படுகின்றது. அதுவும் பொய். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலையில் வந்து விழுந்தது.
தொடக்க காலங்களில் நாம் சிங்கள இராணுவத்துடன் மூர்க்கமாகப் போரிட்டபோது எமது கொள்கைகளில் விடாப்பிடியாக நின்று அதனை உறுதியாகச் சொல்ல வேண்டிய தேவையிருந்தது. காலக்கிரமத்தில் நாம் முதிர்ச்சி பெற்று, இந்தப் போராட்டமும் முதிர்ச்சி பெற்று அனைத்துலகம் இங்கு வந்து தலையிட்டபோது நாம் அந்தப் பண்புகளுக்கு ஏற்ற மாதிரி ஒரு மாற்று வழிமுறையை எப்போதும் பரிசீலிக்கத் தயார் என்பதனை நாம் தெளிவாகச் சொல்லி வருகின்றோம்.
இதனை எவரும் கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. இது எமக்குப் பெரிய மனத்துன்பம்தான்.
ஒரு மாற்றுக் கோரிக்கையை சரியான முறையில் முன்வைத்தால் நாம் அதனை பரிசீலிப்போம் என்று சொல்லியிருக்கின்றோம். இது தொடர்பாக தெளிவான அறிக்கைகள் எம்மிடம் இருக்கின்றன. அத்தகையதொரு நிலையில் திரும்பவும் இவர்கள் எம்மிடம் இப்படியாகச் சொல்வது ஏன் என்று புரியவில்லை.
சிங்களம் எந்தத் தீர்வையும் முன்வைக்கத் தயாராக இல்லை என்பது மிகத் தெளிவான விடயம். அவர்கள் சொல்கின்ற தீர்வைக்கூட முன்வைக்கத் தயாராக இல்லை என்பதும் தெளிவான விடயம். எனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிப்படையை ஆட்டம் காண வைப்பதற்காகவும், இது தொடர்பான ஒரு கருத்தாடலை உருவாக்கி மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை விளைவிப்பதற்காகவும் மிகப்பெரியதொரு அனைத்துலக சதியாக இது நடைபெறுவதனைப் பார்க்கலாம்.
இந்தியா உட்பட அனைத்துலக சக்திகள் இத்தகைய கருத்தைக் கூறுகின்றன.
இந்த அனைத்துலக சக்திகள் இதனை ஏன் மற்றவர்களுக்குச் சொல்லவில்லை?
பங்களாதேஷ் பிரிந்தபோது இந்தியா ஏன் இதனைச் சொல்லவில்லை?
அல்லது
அமெரிக்கா இப்போது கிழக்குத் தீமோருக்கோ அல்லது கொசோவாவுக்கோ ஏன் சொல்லவில்லை?
அல்லது ரஸ்யாவில் இருந்து பிரிந்து போன குடியரசுகளுக்கோ ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி கூடவே எழுகின்றது.
இவை எல்லாம் அனைத்துலக அரசியலின் ஒரு வெளிப்பாடான தன்மை. இவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரம் இவற்றின் ஆழமான உள் அர்த்தங்களை எமது மக்கள் மிகத் தெளிவான முறையில் மறுதலிக்க வேண்டும் என்றும் நாம் விரும்புகின்றோம்.
கேள்வி: அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ இப்படியான கருத்துக்களை கூறியவுடன் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித தாக்கம் ஏற்படுகின்றது. எனவே இத்தகைய அனைத்துலக நாடுகளின் அரசியல் அபிலாசைகளுக்கு ஏற்ப தமிழீழ விடுதலைப் புலிகள் மாற வேண்டிய தேவை இருக்கின்றதா?
பதில்: நிச்சயமாக இல்லை. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் கூட்டம் என்பது நிச்சயமாக
தனது சொந்தப் புத்தியில்,
தனது சொந்தக்காலில்,
தனது சொந்த உணர்வில்
வாழ்கிற ஒரு தனியான ஒரு தேசிய இனம் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது.
எமது மக்கள் இது தொடர்பான தெளிவான நிலைப்பாட்டில், உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்.
அவர் சொல்கின்றார், இவர் சொல்கின்றார் என்று நாம், எமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்க முடியாது.
வள்ளுவன் கூறியது போன்று "எவர் சொன்னாலும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது".
இந்த நீண்ட விடுதலைப் போராட்ட வரலாற்றின் பின்னால்
எத்தனை சூழ்ச்சிகள், சதிகள், தடைகள், மயக்கங்கள், தயக்கங்கள் என அனைத்தையும் கடந்து இன்றும் ஒரு குருசேத்திரம் என்று சொல்லக்கூடிய ஒரு பெரிய நெருப்பாற்றில் நீந்திக்கொண்டு விடுதலையை நோக்கி முன்னேறுகின்ற வேளையில் இந்த விடயங்களில் நாம் ஒரு முதிர்ச்சி பெற்ற மக்கள் கூட்டமாக இருக்க வேண்டும்.
அவ்வாறு இருக்கிற மக்கள் கூட்டம்தான் விடுதலையைப் பெற முடியும்.
அதனைக் காலம் காலமாக குழப்புவதற்கு இத்தகைய கருத்துக்களை முன்வைப்பார்கள். நாம் அதனைப் புறந்தள்ளி செயற்படுவதற்கான ஒரு ஆன்ம முனைப்பை அடிப்படையில் பெற்றுக்கொள்ள வேண்டும். எதனையும் வெற்றியோடும் தோல்வியோடும் பொருத்திப் பார்க்கமால் அதன், அதன் அடிப்படையில் பொருத்திப் பார்ப்பதற்கான ஒரு பக்குவத்தை எமது மக்கள் எங்கிருந்தாலும் பெறவேண்டும்.
கேள்வி: அனைத்துலக சமூகத்துடன் இணைந்துதான் ஒரு விடுதலையைப் பெறவேண்டும் என்ற கருத்து மக்கள் இடையே உள்ளது. அது எந்தளவுக்குச் சாத்தியமானது அல்லது உண்மையானது என்று கூறமுடியுமா?
பதில்: இது பொதுவான கருத்து. அதனை நாம் மறுக்கவில்லை. பொதுவான அரசியலில் பங்குபற்றி அனைத்துலக நீரோட்டத்தில் நாம் இணைந்து செயற்பட வேண்டும் என்பது உண்மை. அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அந்த இடத்தில்தான் இன்னும் கொஞ்சம் ஆழமான பார்வையை எமது மக்கள் வைக்கவேண்டும்.
அனைத்துலக நாடுகள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான கொள்கைகளை கடைப்பிடிப்பது ஏன் என்பதனைப் புரிந்துகொண்டால் மக்கள் தெளிவடைவார்கள். ஓர் இடத்தில் ஏற்றுக்கொள்வதனை வேறொரு இடத்தில் மறுக்கின்றார்கள். இது ஏன் என்பதனை பார்க்கும்போது அங்கே அவர்களின் சொந்த நலன் என்பது முக்கியம் பெறுகின்றது.
விடுதலைப் போராட்டம் என்பது எப்போதும் தனது தேசிய இனத்தின் நலன்களை முக்கியப்படுத்த வேண்டும். பிறரின் கருத்துக்களை கேட்பது என்பது பலவீனத்தின் வெளிப்பாடுதான்.
கேள்வி: ஒரு விடுதலைப் போராட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அந்த இனத்தின் பலம் எவ்வளவு தூரத்திற்கு முக்கியத்துவமானது?
பதில்: பலம் என்றவுடன் உடனடியாக இராணுவ பலத்தையே பலரும் எண்ணுவார்கள். ஆனால் உண்மையில் அடிப்படைப் பலம் என்பது மக்களின் அந்த மன உறுதியின் வெளிப்பாடுதான்.
"நினைவில் காடுள்ள மிருகத்தை பழக்க முடியாது" என்றொரு பழமொழி இருக்கின்றது. அதேபோன்று நினைவில் விடுதலை உணர்வுள்ள மக்களை எவராலும் எதுவும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட மக்கள் எதனையும் செய்வார்கள். அதற்கு நாம் நல்ல உதாரணம்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது மிகப்பெரிய தற்கொடைக்கு ஒரு உதாரணம். அதன் போராட்ட உத்திகள், அதன் எதிர்பாராத திருப்பங்கள் எல்லாமே வரலாற்றில் நிச்சயமாக முக்கிய பதிவுகளாக இடம்பெறும் என நாம் நம்புகின்றோம்.
ஆகவே இத்தனை பலத்தையும் நாம் வரலாற்றில் நிரூபித்துக் காட்டியிருக்கின்றோம். எப்பொழுதும் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருப்பது என்பதல்ல, வெற்றிகளுக்கு அப்பால், வெற்றிகளை நோக்கி நகர்வதற்கு அப்பால், எந்த இடத்திலும் தொடர்ந்து இடைவிடாது போராடிக்கொண்டு தாக்குப்பிடிப்பது என்பதுதான் வெற்றி.
இந்த ஓட்டத்தில் எவன் முதல் களைக்கின்றான் என்பதுதான் செய்தியாக இருக்கும்.
எனவே விடுதலைப் போராட்டத்தில் மன ஓர்மமும் நம்பிக்கையும் கூடவே இருக்க வேண்டியவை. இந்த விடயத்தில் எமது மக்கள் இதனை நிச்சயமாகப் புரிந்துகொள்வார்கள் என்று நாம் நம்புகின்றோம்.
நாளாந்தம் வரும் தகவல்கள், செய்திகளுக்கு ஊடாக சில குழப்பங்கள் அவர்கள் மனதில் தோன்றினாலும் கூட இவற்றிற்கு ஊடாக நாம் தொடர்ந்தும் நகர வேண்டும் என்றுதான் விரும்புகின்றோம்.
ஆகவே, காலநிலை மாற்றம் போன்று, நாளாந்தம் இரவு- பகல் வருவது போன்று அறிக்கைகள் விடுவார்கள், செய்திகளைச் சொல்வார்கள், பின்னர் அடுத்த நாளே அதனை மாற்றியும் சொல்வார்கள். ஆகவே இது குறித்து நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.
கேள்வி: சிங்களத் தலைமைகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது, ஒரு நிரந்தரத் தீர்வைத் தரும் என எதிர்பார்ப்பது சரியா?
பதில்: ஒருபோதும் அது நடக்காத காரியம் என்பது மிகத் தெளிவாக தெரிவாகி விட்டது. எமது வரலாற்றில் 1948 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்க காலத்தில் இருந்து எமக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. இவருக்கு அடுத்தவர் வந்தால் எமக்கு ஒரு நன்மையச் செய்வார் என்று நம்பிக்கை வைப்போம் நாம்.
டி.எஸ்.சேனநாயக்கவுக்குப் பின்னர் கொத்தலாவ. கொத்தலாவலவைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். அவரும் அந்தக் காலத்தில் வாக்குறுதிகளைத் தந்தவர்தான். கொத்தலாவலக்குப் பின்னர் வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரேமதாச, சந்திரிகா கடைசியாக மகிந்தர் என்று நாளைக்கு இன்னொரு தலைவர் கூட வாக்குறுதிகளைத் தந்து வரக்கூடும்.
இதில் உள்ள செய்தி என்னவெனில் தருவதற்கான மனநிலை அங்கே இருக்கின்றதா, அவர்களின் வரலாற்று மனத்தடம் அவர்களுக்கு பொருத்தமானதாக உள்ளதா என்பது எமக்கு தெளிவாகத் தெரியும்.
இன்று மகிந்தரின் ஆட்சியில் மிகப்பிரதான கொள்கை வகுப்பாளராக சம்பிக்க ரணவக்கவும் அவரின் ஜாதிக ஹெல உறுமயவும்தான் இருக்கின்றது. யூத இனவெறி, ஹிட்லரின் இனவெறி எல்லாவற்றிற்கும் மேலான ஒரு இனவெறியுடன் அவர்கள் இருக்கின்றனர்.
அவர்களின் மனப்பாங்கை மாற்றுவது என்பது முடியாத காரியம். மாற்றுவதற்காகத்தான் நாம் போராடிக்கொண்டு வருகின்றோம். அந்த போக்கிலேயே நாம் புரிந்துகொண்டோம் இவர்களை மாற்றமுடியாது என்று.
ஆகவே, நாம் இப்பொழுது எமது வாழ்வை அமைப்பதற்காக போராடுகின்றோம். நாம் அவநம்பிக்கைவாதிகள் அல்லர். எனவே அத்தகைய தீர்வை முன்வைக்கும் சாத்தியங்கள் அண்மைக்காலத்திலும் இல்லை, நீண்டகாலத்திலும் இல்லை. இருந்தபோதும் நாம் அனைத்துலக நீரோட்டத்தில் இருந்து கொண்டுதான் செயற்பட வேண்டும் என்பதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கேள்வி: அப்படியானால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்பதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனரா?
பதில்: நிச்சயமாக மறுக்கின்றனர். சிங்கள மக்கள் மத்தியில் பலவிதமான நச்சு விதைகள் விதைக்கப்பட்டு விட்டன. அவை இன்றல்ல- நேற்றல்ல- ஆண்டாண்டு காலமாக விதைக்கப்பட்டவை. அவற்றை இலகுவில் கிள்ளி எறியமுடியாது. தமது வாழ் சிக்கலிற்கு எல்லாமே தமிழ் மக்கள்தான் காரணம் என்றதொரு மனநிலை அவர்களுக்கு உருவாகிவிட்டது. சிங்களத்தில் எது நடந்தாலும் அது தமிழர்களின் செயற்பாடு என்றாகிவிட்டது. இது ஒரு மிகப்பெரிய கருத்து வடிவமாக அங்கு விதைக்கப்பட்டு, அதற்கு எல்லோருமே அங்கு இரையாகிவிட்டனர். இதில் இருந்து அவர்கள் மீள்வது என்பது மிகவும் கடினமான பணியாகவுள்ளது.
சிங்கள மக்களின் நடைமுறை உண்மை நிலையை, யதார்த்தத்தை உணர்த்துவதற்கான வேலைகளை நாம் செய்கின்றோம். அது உணர்த்தப்படும்போது சிங்கள மக்கள் திடுக்கிட்டு விழிப்படைவார்கள். அப்பொழுது ஆண்டாண்டு காலமாக இருட்டில் இருந்ததனை அவர்கள் உணர்வார்கள்.
அந்த வகையில் எமது விடுதலைப் போராட்டம் சிங்கள மக்களுக்கும் ஒரு விடிவைப் பெற்றுக்கொடுக்கும். சிங்கள மக்களுக்கு முன்பாக உள்ள மாயத்திரை அகல வேண்டும் எனில் நிச்சயமாக நாம் சிங்கள இராணுவத்தினரை முறியடிக்க வேண்டும்.
சிங்கள இனவெறிக் கோட்டை என்பது இன்று சிங்கள இராணுவத்தின் பாதுகாப்பில்தான் இருக்கின்றது. வேறு எங்கும் இல்லை. ஆகவேதான் நாம் முனைப்போடு சிங்கள இராணுவத்திற்கு எதிராகப் போராட வேண்டிய தேவையிருக்கின்றது.
அந்த வகையில் போராடும்போது அது சிங்கள மக்களுக்கும் உண்மை நிலையை உணர்த்தும். அவர்கள் சொன்னது எல்லாம் பொய் என்பதனை உணர்த்தக்கூடிய வாய்ப்பு எமக்கு அப்போது கிட்டும் என்று நாம் நம்புகின்றோம்.
கேள்வி: இப்படியான மனநிலையுடன் சிங்கள மக்கள் இருக்கும்போது தமிழ் மக்கள் எப்படியான அரசியல் சிந்தனையோடு எமது போராட்டத்தின் பின்னால் இணைந்துக்கொள்ள வேண்டும்?
பதில்: எப்போதும் முதலில் இலக்கை தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும். அந்த இலக்கு தொடர்பான நம்பிக்கைதான் அந்த இலக்கை அடையச் சொல்லி எம்மை நகர்த்தும்.
நாம், குழப்பமாக- தெளிவற்றவர்களாக இருந்தால் நிச்சயமாக இலக்கை அடைய முடியாது. ஆகவே எமது மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
எம்மீது குற்றச்சாட்டுகள் இருக்கலாம், சில தவறுகள் இருக்கலாம், அதற்காக எமது விடுதலைப் போராட்டம் தவறாகி விடாது. எமது இலட்சியம் தவறு என்றாகி விடாது. மனிதர்கள் விடும் தவறுகளை இலட்சியங்கள் மீது ஏற்றிப்பார்க்கக்கூடாது. ஆகவே எமது மக்கள் தமது மன உளைச்சலுக்கு அப்பால் , தமது விருப்பங்களுக்கு அப்பால் இந்த விடயத்தை மேலாகப் பார்க்க வேண்டும்.
ஆகவே, எமது மக்கள் இந்த விடயத்தில் தெளிவாக தமது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
சலசலப்புக்களுக்கு, மாற்றங்களுக்கு எல்லாம் உட்படாமல், இழப்புகளைக் கண்டு மனதைத் தளரவிடாமல் இலக்கு நோக்கி நகரவேண்டிய அவசியத்தை உணர்ந்தாலே இலக்கின் பெரும் பகுதியை நாம் அடைந்து விடுவோம்.
ஆகவே ஊசலாட்டம் இன்றி, தெளிவாக தர்க்க ரீதியாகச் சிந்தித்து பார்க்கும்போது இந்தத் தீர்வை எவ்வாறு அடைய வேண்டும் என்ற நல்ல வடிவம் எமக்கு கிடைக்கும். அதற்காக எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு கண்ணை மூடிக்கொண்டு செயற்பட வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை.
ஆனால் இலக்கு நோக்கிய எமது பிடிமாணத்தை, சிங்கள தேசத்தின் மூர்க்கத்தனமான பிடிமாணத்தின் மறு எதிரொலிப்பை எமது தமிழ் மக்கள் நிச்சயமாக தமது வாழ் நிலைகளில் காட்டவேண்டிய தேவை என்றும் இல்லாதது போன்று இன்றுள்ளது.
இப்பொழுதான் எம்மீது எல்லோரினதும் கவனம் பாய்ந்திருக்கின்றது. எம்மைக் குழப்புவதற்கான பணியும் உச்சம் பெறுகின்றது. ஆகவே அறிக்கைகள் மற்றும் இப்படியான செயற்பாடுகள் நிச்சயம் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் வரும். எம்மை மயக்கம் ஊட்டத்தக்க வகையிலே செயற்படுவார்கள். அதற்காக குற்றம் குறை காட்டுகின்றோம் என்றில்லை, நல்வழிப்படுத்திக் கொண்டு போவதற்கான மன ஓர்மத்தை எமது மக்கள், எம் முன்பாக பிரயோகிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
எனவே, எமது மக்கள் உறுதிபெற்ற மக்கள் கூட்டமான ஒரு தொனிப்பை அனைத்துலக சமூகத்தின் முன்பாக உருவாக்க வேண்டும்.
கேள்வி: பிழையான வழிகாட்டலுக்குள் மக்களை செல்லவிடாமல் தடுக்கும் அதே நேரத்தில் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் இந்த இலக்கை வைத்துக்கொண்டு எந்த வகையில் பணியாற்ற வேண்டும்?
பதில்: நான், மேலே கூறியவற்றிற்கு வடிவத்தைக் கொடுப்பதற்கான ஒரு புறக்கட்டமைப்பை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். எழுந்த மானத்திலும், உணர்ச்சிவசப்பட்டும், கூச்சல் போட்டும் இதனை நாம் செய்ய முடியாது. ஆழமாக உற்றுநோக்கி எதிரிகளையும் அறிந்து, களநிலமைகளையும் புரிந்துகொண்டு, மக்கள் மனங்களையும் நன்றாக அறிந்துகொண்டு அவர்களுக்கு செல்லத்தக்க வகையில் இலக்கு வைத்து ஒரு அற்புதமான வடிவம் ஒன்று ஊடகங்களால் தயாரிக்கப்பட வேண்டும்.
அதேநேரம் அந்த ஊடகங்களின் நம்பகத்தன்மை மிகவும் முக்கியமானது.
உலகம் இன்று சுருங்கி விட்டது. எவரும் எதனையும் மறைக்க முடியாது. ஆகவே நம்பகத்தன்மையோடு செய்திகளைச் சொல்வதற்கும், அந்தச் செய்திகளுக்கு பின்னால் உள்ள செய்திகளை நல்ல முறையில் வடிவமைத்து மக்களுக்கு கொடுப்பதற்கும், அதனை ஆதாரபூர்வமாகச் சொல்வதற்குமான அறிவியல் பூர்வமான ஒரு அணுகுமுறையை ஊடகங்கள் வகுத்துக்கொள்ள வேண்டும்.
மாறாக வெறுமனே தமிழ்த் தேசிய உணர்வு என்பதனை மட்டும் நம்பிக்கையாக வைத்துக்கொண்டு தேசியத்திற்கு வலுச்சேர்க்க முடியாது.
அறிவியல் பூர்வமாக, வரலாற்று ரீதியாக சான்றுகளோடு
மனச்சான்றின் படி ஒரு தகவமைப்பை ஊடகங்கள் ஊடாகச் செய்யவேண்டும். அந்த வகையில் நீங்கள் முன்னோடிகளாக நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.
அதனை இப்போது நீங்கள் செய்கின்றீர்கள். செய்யவில்லை என்று நான் கூறவில்லை. இன்னும் அதனை விரைந்து சிறப்புறச் செய்வதற்கான ஒரு அறிவியல் பக்குவத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே நாம் வேண்டுகின்றோம்.
கேள்வி: உங்களின் தனிப்பட்ட பார்வையில் ஈழத் தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எந்த வகையில் அமையவேண்டும் என்று கருதுகின்றீர்கள் ?
பதில்: தமிழ்நாட்டில் நானும் மிக நீண்டகாலமாக இருந்தேன். இந்திய அரசியலோடு நான் ஈடுபாடு கொண்டிருக்கின்றேன். தமிழீழ அரசியலோடு சேர்த்து இந்திய அரசியலையும் நாம் பார்க்கின்றோம். இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு விடயத்தையும் நாம் உன்னிப்பாகப் பார்க்கின்றோம். இந்தியாவுக்கும் எமக்கும் இடையில் பிணைப்பு இருப்பதாக நாம் எப்பொழுதும் உணர்ந்து கொள்கின்றோம்.
இந்தியா தனது அரசியல் சிக்கலை, அந்த நலன்களை விடுத்து இதனை ஒரு அறிவுபூர்வமான சிக்கலாக உணர்ந்து
எமது மன உணர்வுகளை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் என்றைக்கு ஏற்றுக்கொள்ள முன்வருகின்றார்களோ
அன்றுதான் இந்தியா நல்லதொரு கொள்கையை வகுக்கும்.
இந்தியா தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப இதனையும் ஒரு சடுகுடு அரசியல் ஆட்டத்தில் இருக்கின்ற ஒரு பகடையாகப் பயன்படுத்தி வருகின்றதனை பார்க்கும்போது நாம் மிகுந்த வேதனையடைகின்றோம்.
இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. இது காலம் காலமாக நடந்து வருகின்ற நிகழ்வு.
இந்தியாவின் மத்திய கொள்கை வகுப்பாளர்கள் இடையே உள்ள அந்த காய்ப்பு, அவர்களின் அறியாமை, அவர்களின் அந்த மிதப்புத் தன்மை, மேட்டுக்குடி பெரியண்ணன் நினைப்பு என்பது எல்லாம் இதற்குத் தடையாக இருக்கின்றது.
எம்மை சுண்டைக்காய்கள் என்று அவர்கள் எல்லோரும் நினைக்கின்றார்கள். அவ்வாறு இல்லை என்று நிரூபித்ததற்கு பின்னாலும் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள்.
அது எமக்கு மிகப் பெரியதொரு துயரமாகத்தான் இருக்கின்றது.
அதற்காக நாம் சோர்ந்துவிட முடியாது. இந்தியாவுக்குச் செய்திகளைச் சொல்கின்றோம்.
நாம், என்றைக்குமே இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர். இந்தியாவின் நலன்களை நாம், எமது நலன்களாகப் பார்த்துக்கொண்ட காலம் ஒன்று இருந்தது. என்றைக்கு இந்தியா எம்மைப் பிரித்துப் பார்க்கத் தொடங்கியதோ அன்றைக்கே அதில் கீறல் விழுந்துவிட்டது. அதனைச் சீர்செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியத்தரப்பிற்கு உள்ளது.
நிச்சயமாக இந்தியா தனது இந்த நிலையை மறுபரிசீலனை செய்யும். அவ்வாறு செய்வதற்கான ஒரு நிலையை சிங்கள அரசே ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதில் எமக்கு நல்ல நம்பிக்கை இருக்கின்றது.
இங்கேயுள்ள ஆழமான அரசியலை இந்தியா புரிந்திருந்தாலும் கூட தலையிட்டு, இறங்கி வந்து, நீதியான ஒரு முகத்தைக் காட்டுவதற்கு இந்தியாவால் முடியாது இருப்பது ஏன் என்பது இன்று வரை எம்மால் புரிய முடியவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள எமது ஆர்வலர்கள், எமது அன்புக்குரிய மக்கள் என எல்லோரினதும் நீண்ட அந்த இடைவிடாத பற்றுறுதி நிச்சயமாக இந்திய மத்திய அரசின் கொள்கையை மாற்றியமைக்க துணை செய்யும் என்று நாம் நம்புகின்றோம்.
அவ்வாறு இல்லாவிட்டாலும் நாம் துணிந்து நின்று போராடி, இந்தியாவின் ஒடுக்குமுறைக்கு முன்பாக நாம், எமது வெற்றியைப் பேணினாலும் அன்றைக்கும் நாம் இந்தியாவுடன் நீள் உறவைப் பேணத்தான் விரும்புவோம் என்பதனை சொல்லிக்கொள்ளத்தான் விரும்புகிறேன்.

வெள்ளவத்தை ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு-18 பேர் வரை காயம் வீரகேசரி இணையம் 6/4/2008 7:35:50 AM -
வெள்ளவத்தை ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.இன்று காலை 7.10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களுல் 15 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாக களுபோவிலை வைத்தியசாலை பணிப்பாளர் வில்பட் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இரு சிறுவர்கள் உட்பட 6 பேர் கிளைமோர் தாக்குதலில் பலி
[04 - June - 2008]
நாகதம்பிரான் பொங்களுக்கு சென்றுவிட்டு திரும்பியவேளை ஓட்டுசுட்டானில் அவலம் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் இரு சிறுவர்கள் உட்பட ஆறுபொது மக்கள் கொல்லப்பட்டதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 8.40 மணியளவில், மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் ஒட்டுசுட்டானுக்கு சமீபமாக 19 ஆம் கட்டை பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வரலாற்றுப் புகழ்மிக்க புதூர் நாகதம்பிரான் கோவில் பொங்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தப் பொங்கலுக்கு வந்துவிட்டு காரொன்றில் முல்லைத்தீவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்களே இந்தக் கிளைமோர் தாக்குதலுக்கிலக்காகினர்.
இவர்கள் பயணம் செய்த பழைய மொறிஸ்மைனர் காரே கிளைமோரில் சிக்கியது. இதனால் கார் பலத்த சேதமடைந்ததுடன், காரில் சென்று கொண்டிருந்த இரு சிறுவர்கள் உட்பட ஆறுபேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
ஒரு வயதுக் குழந்தை மற்றும் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம?டந்த நிலையில் அவ்விடத்திலேயே நீண்டநேரம் கிடந்துள்ளனர்.
அதன் பின்னரே, அவ் வழியால் வந்தவர்கள் படுகாயமடைந்த நால்வரையும் முல்லைத்தீவு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அவர்கள் அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளைச் சேர்ந்த பசுபதிப்பிள்ளை முருகதாஸ் (33 வயது), அவரது மகன் தனுஜன் (4 வயது), ஐயாத்துரை வசந்தகுமார் (30 வயது), தர்மலிங்கம் யோகேஸ்வரி (35 வயது), கணேசலிங்கம் கனிஸ்ரா (8வயது), காத்தமுத்து நாகராசா (53 வயது) ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர்.
இத்தாக்குதலில், கொல்லப்பட்ட முருகதாஸின் மகன் ஜெனடி (10வயது), முருகதாஸின் மனைவி சித்திரா (26 வயது), கொல்லப்பட்ட வசந்தகுமாரின் மகன் சுஜிந்தன் (ஒன்றரை வயது), கொல்லப்பட்ட யோகேஸ்வரியின் மகள் ஜினோஜினி (16 வயது) ஆகியோரே படுகாயமடைந்தனர்.
அண்மைக்காலமாக வன்னிக்குள் ஆழ ஊடுருவும் படையணியினரின் தாக்குதல்களில் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

சர்வதேச சமூகம் எங்களை விரைவில் அங்கீகரிக்கும்
புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நம்பிக்கை
வீரகேசரி நாளேடு 6/3/2008 11:03:42 PM -
இலங்கை அரசாங்கத்தினால் மீறப்படுகின்ற மனித உரிமை மீறல்களை நாமும் சுயாதீனமாக இயங்கும் மனித உரிமைகள் அமைப்புகளும் சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறான நிலையில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் எதிர்காலத்தில் எங்கள் மீதான தடையை நீக்கி எங்களை அங்கீகரிக்கும் நிலை வரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்தார்.
லண்டன் பி.பி.சி செய்தி சேவைக்கு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்; இலங்கை அரசாங்கத்தினால் மீறப்படுகின்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் புலிகள் தொடர்பிலான இந்தியாவின் அணுகு மாற்றம்பெற்று எம்மீதான தடை நீக்கப்பட்டு எங்களை அங்கீகரிக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இலங்கை இராணுவம் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும்போது பொய்யான தகவல்களை, வார்த்தைகளையும் சொல்வது வழக்கம். அண்மைக் காலங்களில் இதேபோல பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இராணுவத்தின் ஆழஊடுருவும் படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மேற்கொள்ளும் தாக்குதல் இராணுவத்தின் பலவீனத்தையே எடுத்துக்காட்டுகின்றது. ஒரு நாட்டின் இராணுவம் எங்களுடைய படையணியுடன் நேரடியாக மோத முடியாது தோல்வியை தழுவிக்கொண்டு போகின்றபோது இவ்வாறான அநாகரிகமான தாக்குதல்களை பொது மக்கள் மீது மேற்கொண்டுவருகின்றது.
விடுதலைப்புலிகள் தென்னிலங்கையில் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்று கூறப்படுவது பொய்யான பிரசார நடவடிக்கையாகும். விடுதலை இயக்கமான நாங்கள், மக்களை நேசிப்பவர்கள். அத்துடன் எல்லா உயிர்களையும் நேசிக்கின்றவர்கள். இந்த பிரசாரம் எங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற பொய்ப் பிரசார நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
தென்னிலங்கை சிங்கள மக்கள் கூட அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தினால் கடத்தப்படுகின்றனர். அரசுக்கெதிரான அரசியல் கொள்கையுள்ளவர்கள் கடத்தப்படுகின்றார்கள் என்பதை தென்னிலங்கை ஊடகங்களே தெளிவாக சொல்கின்றன.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது குறித்து இந்திய மத்திய அரசு பாராமுகம் ஏன்?வைக்கோ பிரதமர் மன்மோகனுக்கு கடிதம்
வீரகேசரி இணையம் 6/3/2008 3:22:04 PM -
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை படுகொலை செய்வது குறித்த தமிழகத்தின் முறைப்பாடுகள் தொடர்பில்,இந்திய மத்திய அரசு பாராமுகமாகவும்,இரக்கமற்ற தன்மையோடும் செயற்படுகிறது.இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதும்,கொலை செய்வதும் அன்றாட நிகழ்வுகளாக உள்ளன.
கிட்டத்தட்ட 45 நாட்களுக்குப் பின்பு தமிழக மீனவர்கள் ஜூன் 1 ஆம் நாளில் இருந்துதான் கடலில் மீன்பிடிக்கஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.அனுமதிக்கப்பட்டு மறுநாளே ஜூன் 2 ஆம் நாள் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற 20 வயது மீனவர் படகில் கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருக்கும்போது இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இலங்கையுடனான கச்சதீவு ஒப்பந்தத்தின்படி தமிழக மீனவர்களுக்கு கச்சதீவு அருகே சென்று மீன்பிடிக்க அனைத்து உரிமைகளும் உண்டு.ஆனால் இலங்கை கடற்படை முன்னறிவிப்பு எதுவுமின்றி தமிழக மீனவர்களை தாக்கி வருகிறது என தமிழக மறுமலற்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வைக்கோ பிரதமர் மன்மோகன் சிங்க்குக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் குற்ப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமிழக தமிழர்கள் எழுச்சி கொள்ளும் போதுதமிழினம் இமாலய வெற்றிகளை பெறமுடியும் - புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் வீரகேசரி நாளேடு 5/30/2008 10:00:11 PM -
தமிழகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் எழுச்சி கொள்ளும் போது தமிழினம் இமாலய வெற்றிகளைப் பெற முடியும் என்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்தார். 1958 ஆம் ஆண்டு கலவரத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது: “ தாயகத்தில் வாழும் மக்கள் மட்டுமல்ல, உலகத்தில் வாழும் 8 கோடி தமிழ் மக்களும் ஒன்றாக எழுச்சிகொள்ளவேண்டும்.
“தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. எமக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது மட்டுமல்லாது, எழுச்சி கொள்ள வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல, மலேசியா, சிங்கப்பூர் என உலகெல்லாம் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள், ஈழத்தமிழ் மக்களுக்காக எழுச்சிகொள்ள வேண்டும். உலகில் 8 கோடி தமிழ்மக்கள் உள்ளனர். அனைவரும் எழுச்சி கொள்வோமோனால் இமயத்தையே தூக்கியெறியலாம்.
“தமிழ் மக்கள் சிறிய படையணிகளைக் கொண்டு மரபுவழி படைத் தளங்களை அழித்தொழிக்கின்றோம் என்பது எமது விடுதலைப் போராட்டத்தில் தான் நிகழ்ந்து வருகின்றது. தமிழர்களால் தான் எல்லாம் முடிகின்றது. “வீரத்திற்கு இலக்கணம் வகுத்தது தமிழினம். உலகில் வீரத்திற்கு இலக்கணம் வகுத்தவர்களே தமிழர்கள் தான். இன்றும் வீரம் உள்ளவர்களாகவே இருக்கின்றோம்.
“யாருக்கும் மண்டியிடாமல் எதனையும் விட்டுக் கொடுக்காமல் வீரத்துடன் நாம் வாழ்ந்து வருகின்றோம். தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கின்றது எனில், ஆயுதப்போரட்டம் தொடங்காது விட்டால் இன்று முல்லைத்தீவு, செம்மலை அளம்பில் கரையோரப் பகுதிகள் அனைத்தும் சிங்களப் பகுதிகளாக மாறியிருக்கும். இதுதான் வரலாறு. “குடியேற்றங்கள் மூலம் தமிழர் தாயகத்தைத் துண்டாடுவது என்பது தமிழர் தாயத்தைச் சிதைப்பதே சிங்களத்தின் நோக்காக இருந்து
வருகின்றது. இதற்குப் பின்னால் பல சக்திகள் இருக்கின்றன. இவற்றை நாம் முறியடிக்க வேண்டும். இன்று நாம் பலமான சக்தியாக வளர்ந்து வருகின்றோம். வெகு விரைவில் வரலாறு பதில் சொல்லும். நாம் வெகுவிரைவில் புதிய வரலாறு எழுதுவோம். “அது உலகத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்கும். அடக்கு முறைக்குத் துணை போகின்ற பல வல்லரசுக்கள் எம்மைக் கண்டு பயப்படுகின்றன. மக்கள் எம்முடன் இருக்கின்றனர்.
“தமிழீழத்தில் வாழ்கின்ற மக்கள் என்றாலும் சரி, தமிழகத்தில் வாழ்கின்ற மக்கள் என்றாலும் சரி, புலம் பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் என்றாலும் சரி, எம்முடன் தான் இருக்கின்றனர்.

பாரிய பொருளாதார நெருக்கடியில் நாடு; முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஜனாதிபதி அடுத்தவாரம் அறிவிப்பார்
[30 - May - 2008] எம்.ஏ.எம்.நிலாம்
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குவதாக அறிவித்துள்ள அரசாங்கம் அதனைச் சமாளிப்பதற்கு மேற்கொள்ளப்படவுள்ள முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்தவாரம் அறிவிப்பாரெனத் தெரிவித்தது.
தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போது இதனைத் தெரிவித்த வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தனா, உலகம் பூராவும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையும் இடையூறை எதிர்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை,பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சிக்குண்டிருக்கும் சூழ் நிலையில் சர்வதேச ஒத்துழைப்புடன் உள்ளூர் அரசியல் சக்திகள் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கும் அரசாங்கம், வடக்கில் பின்னடைவைக் கண்டுவரும் விடுதலைப் புலிகளுக்கு மூச்சுவிட வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க இந்த உள்ளூர், சர்வதேச சக்திகள் மறைமுகமாக செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
தெற்கில் அரசியல் ஸ்திரமின்மையைத் தோற்றுவித்து குழப்பச் சூழ்நிலையை உருவாக்கி போர்முனையிலிருக்கும் படையை தெற்குக்கு கொண்டு வருவதன் மூலம் புலிகளை சக்தி பெறச் செய்வதற்கும், பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுவதுமே இந்த அரசியல் சக்திகளின் திட்டமெனவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா, வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் இந்தச் சதித்திட்ட தகவலை அம்பலப்படுத்தினர்.
உலக பொருளாதார நெருக்கடி இன்று சிறிய நாடுகளை பாரியளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. சர்வதேச மட்டத்தில் பொருளாதாரம் ஆட்டம் காணும் போது அதற்கு இலங்கை போன்ற சிறிய, வளர்முக நாடுகள் முகம் கொடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. எரிபொருள் விலை அதிகரிப்பையோ, வாழ்க்கைச் செலவு உயர்வையோ உலகில் எந்த நாடும் கட்டுப்படுத்த முடியாத நெருக்கடி நிலை தோன்றியுள்ளது. இத்தருணத்தில் சில சக்திகள் இதனூடாக அரசியல் இலாபம் தேடமுனைகின்றன. நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி சவால்களை முறியடித்து, யதார்த்தத்தை உணர்ந்து நாட்டு மக்களுக்கு மாற்றுத்தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வர வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
ஆனால் சில தென்னிலங்கை அரசியல் சக்திகளும், சர்வதேச சக்திகளும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு கொஞ்சம் ""மூச்சுவிட' சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முனைகின்றன. தமிழ், சிங்கள புதுவருட காலப் பகுதியில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டது. அச்சதித்திட்டத்தை வகுப்பதில் உள்ளூர்ச் சக்திகளுக்கு சர்வதேச சக்திகள் வியூகங்களை அமைத்துக் கொடுத்துள்ளன. இது தொடர்பான பல தகவல்கள் கிட்டியுள்ளன.
எரிபொருள் விலை அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு நாட்டு மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதனை அரசு மறுக்கவோ, மறைக்கவோ முற்படவில்லை. உலகம் முழுவதுமே இந்த பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இதில் எமது நாடு மட்டும் விதிவிலக்காக முடியாது. வாழ்க்கைச் செலவு உயர்வைக் கட்டுப்படுத்த மாற்றுத் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. வீண் செலவுகளைக் குறைக்க வேண்டும். திட்டமிட்ட பொருளாதார முகாமைத்துவத்தைக் கையாள வேண்டியுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கான வேலைத் திட்டமொன்றைத் தய ாரிப்பதற்காக ஜனாதிபதி அமைச்சரவை உறுப்பினர்களிடம் தனித்தனி யோசனைகளைக் கோரியுள்ளார். அந்த யோசனைகள் அடுத்த வார அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர் வழங்கப்பட வேண்டுமெனவும் அவை அடுத்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டு பொது வேலைத்திட்டத்தைத் தயாரிக்க விருப்பதாகவும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தெற்கில் அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்கும் தீய சக்திகளின் முயற்சி, நாட்டை பாரிய பின்னடைவை நோக்கி இட்டுச் செல்லலாம். அதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. விடுதலைப் புலிகளின் நோக்கத்தை நிறைவேற்றும் தேசத்துரோக முயற்சிகளுக்கு நாட்டு மக்கள் இடமளிக்கக் கூடாது எனவும் அமைச்சர்கள் அநுர பிரயதர்ஷன யாப்பாவும் பந்துல குணவர்தனவும் தெரிவித்தனர்.

No comments: