Wednesday, 11 June 2008

ஈழச்செய்திகள்:110608


சிறிலங்காவின் இரு மாகாண சபைகள் ஓரே நேரத்தில் கலைப்பு [செவ்வாய்க்கிழமை, 10 யூன் 2008, 03:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்கா அரசாங்கம் நேற்று நள்ளிரவு இரண்டு மாகாண சபைகளை ஒரே நேரத்தில் கலைத்துள்ளது. வட மத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளையே நேற்று நள்ளிரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கலைக்கும் உத்தரவை அரசுத் தலைமை வெளியிட்டுள்ளது.
மேற்படி இரண்டு மாகாண சபைகளையும் கலைக்குமாறு அந்தந்த மாகாண சபை ஆளுநர்களுக்கு அரச தலைமை அறிவித்ததையடுத்தே மாகாண
சபைகள் கலைக்கப்பட்டதாக மேற்படி மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இரண்டு மாகாண சபைகள் கலைக்கப்பட்டமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் கலைக்கப்பட்ட இந்த மாகாண சபைகளுக்கு எதிர்வரும் 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும்.
மேற்படி இரண்டு மாகாண சபைகளும் கலைக்கப்பட்டதையடுத்து அவற்றின் முதலமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவிகள் இரத்துச்
செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை மேற்படி இரண்டு மாகாண சபைகளினதும் காலம் அடுத்த வருடமே முடிவடையும் நிலையில் சுமார் ஒரு வட்டத்திற்கு முன்னதாக
அவை கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு முறியடிப்பு: 20 படையினர் பலி- 40 பேர் காயம்
[திங்கட்கிழமை, 09 யூன் 2008, 08:29 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20
படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா
இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் "புதினம்" இணையத்தளத்திற்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:
மன்னார் ஆலங்குளத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் வட்டக்கண்டல் நோக்கி
சிறிலங்காப் படையினர் பாரியளவில் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர்.
இம் முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் விடுதலைப் புலிகளால் தீவிரமாக நடத்தப்பட்டது.
முற்பகல் 10:00 மணிவரை நடைபெற்ற தீவிர முறியடிப்புத் தாக்குதலில் படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர்.
இதில் 20 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40 படையினர் காயமடைந்துள்ளனர். ஆயுதங்களும் மற்றும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டன என்றார் அவர்.
மணலாறில் முன்நகரும் படையினருக்கு எதிராக புலிகள் தொடர் தாக்குதல்
திங்கட்கிழமை, 09 யூன் 2008, 08:15 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
மணலாறுப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்
தாக்குதலை தீவிரமாக நடத்திக்கொண்டிருக்கின்றனர். இந்த எதிர்த்தாக்குதலில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர்.
படையினரிடம் இருந்து படைக்கலங்கள் மற்றும் வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்றைய மோதலில் கைப்பற்றப்பட்ட ஆயுத விபரம்:
ஆர்பிஜி - 01, ஆர்பிஜிக்குரிய எறிகணைகள் - 15, புறப்பலர்கள் - 15, ஏகே ரவைகள் - 5,500, பிகே ரவைகள் இணைப்பிகளுடன் - 2,075
பிகே ரவைகள் - 375, பைகள் - 03, ரவைத்தடுப்பு அணிகள் - 05, தலைக்கவசங்கள் - 04, ஏகே ரவைக்கூடுகள் 17
உட்பட்ட படைப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.-
மணலாறில் நான்கு முனை முன்நகர்வுகளுக்கு எதிராக புலிகள் எதிர்த்தாக்குதல்: 15 படையினர் பலி- 25 பேர் படுகாயம்
[திங்கட்கிழமை, 09 யூன் 2008, 07:18 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
மணலாறுப் பகுதியில் நான்கு முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர எதிர்தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 25-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மணலாறில் இருந்து கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை, நித்தியகுளம் உள்ளிட்ட நான்கு முனைகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி
தொடக்கம் படையினர் பாரிய முன்நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படையினருக்கு பின்தளங்களில் இருந்து பல்குழல் வெடிகணை மற்றும் ஆட்லெறி எறிகணைத் தாக்குதல் சூட்டாதரவு வழங்கிக்கொண்டிருக்க,
படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
கொட்டும் மழைக்கும் மத்தியில் விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுவரை 15-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் படையினரின் படைப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொட்டும் மழைக்கும் மத்தியில் படையினரின் படை நகர்வுக்கு எதிராக இன்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றது.
வவுனியாவில் படையினரின் மும்முனை நகர்வுகள் முறியடிப்பு [சனிக்கிழமை, 07 யூன் 2008, 08:06 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
வவுனியா வடமேற்கு குஞ்சுக்குளத்தில் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் மும்முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:
வவுனியாவின் வடமேற்கில் உள்ள குஞ்சுக்குளம் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு சிறிலங்காப் படையினர் செறிவான
எறிகணைச்சூட்டாதரவுடன் மும்முனைகளில் முன்நகர்வுத் தாக்குதல்களை நடத்தினர்.
இம் முன்நகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.
இன்று மாலை 5:00 மணிக்கு படையினரின் முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கி
ஓடிவிட்டனர்.
இதில் 4 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர் என்றார் அவர்.
மதவாச்சி ஊடாக தமிழர்கள் செல்வதற்கு அனுமதி மறுப்பு
[சனிக்கிழமை, 07 யூன் 2008, 08:49 பி.ப ஈழம்] [வவுனியா நிருபர்]
வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து தமிழ் மக்கள் மதவாச்சி ஊடாக சிறிலங்காவிற்குச் செல்வதற்கு சிறிலங்காப் படைத்தரப்பினால் அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியில் இருந்து இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, மன்னார் பிரதேசங்களில் இருந்து சிறிலங்காவின் தென்பகுதி நோக்கிச் செல்பவர்களின் பாதுகாப்பு கருதியே இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிறிலங்காப் படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் பிரதேசங்களில் இருந்து தெற்கு நோக்கி பேருந்துகளிலோ அல்லது தொடருந்திலோ தமிழ் மக்கள் செல்லமுடியாது எனவும், இது தற்காலிக நடவடிக்கையே என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலைமையை அடுத்து, வவுனியாவில் இருந்து மதவாச்சிக்கான போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக வவுனியா மக்கள்
போக்குவரத்துச் சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கழிவு எண்ணெய் ஊற்றி, கல்லெறிந்து ஜே.வி.பி.யினர் மீது தாக்குதல்; சிலர் காயம் [10 - June - 2008]
சிலாபம் ஆராச்சிக்கட்டுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை ஜே.வி.பி.யினர் நடத்திய ஆர்ப்பாட்டம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதில் சிலர்
காயமடைந்துள்ளனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் மற்றும் ஊழல் மோசடிகளைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை காலை ஆராய்ச்சிக்கட்டு நகரில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
இதன் போது அங்கு வந்த அரச ஆதரவாளர்கள் நடத்திய மிக மோசமான தாக்குதலில் ஜே.வி.பி. மாகாண சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 11 பேர்
படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அரசின் இந்த அராஜகத்தைக் கண்டித்து நேற்றுக் காலை ஜே.வி.பி.யினர் ஆராச்சிக்கட்டு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜே.வி.பி.யின் அநுராதபுர மாவட்ட எம்.பி. லால்காந்த தலைமையில் நேற்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு
கோஷ்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
கழிவு எண்ணெய்களை ஊற்றியும் கற்களை வீசியும் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இதில் ஜே.வி.பி. உறுப்பினர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற போது அப்பகுதியில் பொலிஸார் கடமையிலிருந்த போதும் அவர்கள் எதுவும் செய்யவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: