உள்நாட்டு கொள்கைகளில் இந்தியா தலையிடக்கூடாது
[18 - June - 2008]
* புதுடில்லியில் அமைச்சர் ரோகித இலங்கையின் உள்நாட்டுக் கொள்கைகளில் இந்தியா தலையிடக்கூடாதென வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம கூறியுள்ளார்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) உச்சிமாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை
அழைப்பதற்காக டில்லிக்கு சென்றுள்ள போகொல்லாகம இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே இதனைத்
தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இந்தியாவின் அதிகளவிலான பங்களிப்புக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்த
சில மணித்தியாலங்களின் பின்பே இலங்கையின் உள்நாட்டுக் கொள்கைகளில் இந்தியா தலையிடக்கூடாதென "ரைம்ஸ் நௌ'விற்கு
அமைச்சர் போகொல்லாகம கூறியுள்ளார்.
இலங்கை தொடர்பாக தனது தலையிடாக் கொள்கையை இந்தியா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பே அமைச்சர்
போகொல்லாகமவிடமிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது.
"ஏற்கனவே செய்துகொண்டிருப்பதையே இந்தியா தொடர்ந்தும் மேற்கொள்ளும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்' என்றும் போகொல்லாகம
கூறியுள்ளார்.
இலங்கையின் சிவில் யுத்தத்தில் இந்தியா தன்னை தூர விலத்தி வைத்திருக்கும் கொள்கையையே கடைப்பிடித்து வருகிறது. அதேசமயம்,
இலங்கையின் இனநெருக்கடிக்கு இராணுவத் தீர்வு சாத்தியப்படுமென தான் நம்பிவில்லையென கூறிவருவதுடன் ஒன்றுபட்ட
இலங்கைக்குள் மோதலில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காணுமாறும் தெரிவித்துவருகிறது.
அரசியல் விடயங்களுக்கு அரசியல் தீர்வு காண வேண்டுமென்றே இலங்கை அரசாங்கம் நம்புவதாகவும் அரசியல் பிரச்சினைக்கு
இராணுவத் தீர்வு காண முடியாதெனவும் போகொல்லாகம கூறியுள்ளார். அதேசமயம், இலங்கைப் படையினர் வடமாகாணத்தில் இராணுவ
நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.
இரண்டரை மாவட்டங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவற்றை விடுவிக்க எவ்வளவு காலம் எடுக்குமென்ற
கால வரையறை அரசாங்கத்திடம் இல்லையெனவும் போகொல்லாகம கூறியுள்ளார். "அதற்கு பின்பே விளைவு தெரியும்' என்றும் அவர்
கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடனோ உயிரின்றியோ கைப்பற்றுவதற்கான உத்தரவு இலங்கை இராணுவத்திற்கு
பிறப்பிக்கப்பட்டிருப்பதை அவர் நிராகரித்துள்ளார். ஆனால், சிவில் யுத்தத்துக்கான தீர்வானது தனிப்பட்ட ஒருவரை மையப்படுத்தியது
அல்ல என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். அதேசயம், இராணுவம் பிரபாகரனை நெருங்கிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
விடுதலைப் புலிகளை தேர்தல் மூலம் எதிர்ப்பதற்கான அதிகாரம் தமிழ் மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர்
தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பதிவுகளையும் அவர் நியாயப்படுத்தியுள்ளார். பயங்கரவாதத்துடன் சக
இருப்பை மேற்கொண்டிருக்கும் சிறப்பான ஜனநாயகமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினராக முடியாமல் இலங்கை தோல்வி கண்டிருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த அவர்,
இது முன்னேற்றம் தொடர்பான தீர்ப்பு அல்ல என்றும் எண் கணித அடிப்படையிலான விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, கொழும்பில் இடம்பெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில் உணவு, சக்தி பாதுகாப்பும் பயங்கரவாதமுமே முக்கியமான
விடயங்களாக முன்னுரிமை கொடுத்து ஆராயப்படவிருப்பதாக அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்திருக்கிறார்.
சார்க் அபிவிருத்தி செயல்திட்டங்கள் தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடனும் வெளிவிவகார அமைச்சர் பிரணாப்
முகர்ஜியுடனும் விரிவான கலந்துரையாடல்களை தான் டில்லி விஜயத்தின்போது மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு உலக நெருக்கடியாக உருவெடுத்திருப்பதால் சார்க் உச்சிமாநாட்டில் இது தொடர்பாக
முன்னுரிமை கொடுத்து ஆராயப்படுமெனவும் சார்க் உணவு வங்கியை துரிதமாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்
அவர் தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாககுதல்கள் இடம்பெறுவதால் சார்க் உச்சிமாநாட்டிற்கான
பாதுகாப்பு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், எந்தவொரு பாதுகாப்பு பிரச்சினைகளும் இல்லாமலேயே
சர்வதேச நிகழ்வுகளை இலங்கை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக கூறியதுடன் அண்மையில் 52 பொதுநலவாய அமைப்பு நாடுகள்
பங்கேற்ற இளைஞர் விவகார அமைச்சர்களின் மாநாடு கொழும்பில் இடம்பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு வன்முறைகளுக்கு பிள்ளையான் குழுவே காரணம்
முஸ்லிம் அமைச்சர்களும் இதற்கு ஆதரவு
[18 - June - 2008]
மு.கா. எம்.பி. பைசல் ஹாசிம் குற்றச்சாட்டு ""கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் வன்முறைகளுக்கு பிள்ளையான் குழுவினரே முழுக்காரண'மென குற்றம் சாட்டியுள்ள ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் ஹாசிம், இதற்கு முஸ்லிம் அமைச்சர்களும் ஆதரவு வழங்குவதாகவும்
தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் கூறியதாவது;
""இன்று கிழக்கு மாகாணம்,மாகாண சபைத் தேர்தலின் பின் மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையுடன் காணப்படுகின்றது. அங்குள்ள
முஸ்லிம் மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாதவாறும் போக்குவரத்து செய்ய முடியாதவாறும்,
தத்தமது வியாபார, விவசாய, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியாமலும் அரச ஊழியர்கள் அச்சமின்றி அவர்களது
காரியாலயங்களுக்கு சென்றுவர முடியாதவாறு அவதியான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் இன்று நடப்பது என்ன? நாம் இந்த கேள்விக்கு விடை காண முற்பட்டால் கிடைக்கும் பதில் என்னவென்றால்,
அங்கு ஜனநாயகம் என்பது நாளுக்கு நாள் குழிதோண்டி புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு அங்கு புதிதாக அமைக்கப்பட்ட
கிழக்கு மாகாண சபை அரச சார்பான உறுப்பினர்களின், அணியினர் துணைபோய்க் கொண்டிருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாண மக்கள் விரும்பாமல் இம்மாகாண சபைத் தேர்தல் அவர்கள் மேல் திணிக்கப்பட்டது. ஒரு புறம் ஸ்ரீலங்கா சுதந்திர
கட்சியோடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேர்ந்து
போட்டியிட்டது. தேர்தலுக்கு முன்பு பல வன்முறைகள், அடாவடித்தனங்கள் என்பன அரசாங்க அமைச்சர்களின் ஆதரவோடு ஆயுதக்
குழுக்களினால் எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்பகுதி அப்பாவிப் பொதுமக்கள் மீது தேர்தல் வன்முறைகள்
ஏவிவிடப்பட்டன.
தேர்தல் காலத்தில் எமது ஆதரவாளர்கள் ஆயுத முனையில் தாக்கப்பட்டார்கள் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டார்கள்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஆப்தீன் கை வெட்டப்பட்ட நிலையில் இன்றும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
காத்தான்குடி காங்கேயன் ஓடையில் அசிட் வீசி தாக்கப்பட்டார்கள்.
தேர்தல் நடைபெற்ற தினம் ஐ.தே.கட்சிக்கு கூடுதலாக வாக்களிக்கும் முஸ்லிம் பிரதேசங்களில் படைகளும் பொலிஸாரும்
குவிக்கப்பட்டு அங்கு ஜனநாயக ரீதியாக மக்கள் சென்று வாக்களிக்க முடியாமல் வேண்டுமென்று பீதியான சூழ்நிலை
உருவாக்கப்பட்டது. அமைச்சர்களின் துணையுடன் அடாவடித்தனங்கள் நடந்தன. எங்களது கட்சியின் வாக்களிப்பு நிலைய முகவர்கள்
நிலையங்களுக்குச் சென்று இருக்க அனுமதிக்கவில்லை. அவர்கள் எச்சரிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். குறிப்பாக அக்கரைப்பற்று,
காத்தான்குடி, ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களில் இவைகள் இடம் பெற்றன. இத்தகைய நடவடிக்கையினையே பிள்ளையான்
குழுவினரும் தமிழ் பகுதியில் செய்தார்கள்.
கடந்த இருபது வருடங்களாக தேர்தல் முறை மறுக்கப்பட்டு வந்த கிழக்கு மாகாண மக்களுக்கு அரசாங்கம் செய்த ஜனநாயக தர்மம்
இதுதானா? ஒரு புறம் ஆயுதங்களுடன் பிள்ளையான் அணியினரும் மறுபுறம் அரச அமைச்சர்களின் உதவியுடன் அவர்களது
அடியாட்களும் வன்முறைகள் செய்துதான் இத்தேர்தலில் அவர்களால் வெல்ல முடிந்தது. நேர்மையான நீதியான தேர்தல்
நடைபெற்றிருந்தால் ஜனநாயக ரீதியாக நாங்கள் வென்றிருப்போம் என்பதை இச்சபைக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.
இன்று கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு நடப்பது என்ன? மூன்று தசாப்த காலங்களாக நடைபெற்று வந்த யுத்தத்தினால் கிழக்கு
மாகாண முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளினால் பாதிக்கப்பட்டார்கள். பள்ளிவாசல்களில் வைத்து சுடப்பட்டார்கள். பிரயாணத்தின்
போது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். தமது வியாபார நடவடிக்கைகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். விவசாய
நிலங்களை இழந்தார்கள். இத்தனைக்கும் மேலாக கடல்கோளால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்
மக்களேயாவர்.
இப்படியான வாழ்வாதார சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தேர்தல் முறையாக நடைபெற்று ஜனநாயகம் தோன்றி சமாதானம்
மலரும், அத்துடன் இம்மண்ணில் அபிவிருத்தி இடம்பெறும் என எதிர்பார்த்த மக்களுக்கு இம்மாகாண சபைத் தேர்தலின் பின்னர்
நடக்கும் வன்முறைகள் ஏன் இடம்பெறுகின்றன எனக் கேட்கின்றேன். இன்று அரசுடன் கிழக்கு மாகாண சபையில் பங்காளியாக
இருக்கும் பிள்ளையான் குழுவின் துணையுடன் தான் இத்தனை அர?ஜக வன்முறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கிழக்கு
மாகாணத்தில் அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் குழுவினரே அத்தனை பிரச்சினைகளுக்கும் மூல காரணமாக
இருந்திருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாண தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கடந்த பல வருடங்களாக எதுவித விரோத மனப்பான்மையின்றியும்
அசம்பாவிதங்களுமின்றி சுமுகமாக வாழ்ந்து வந்தார்கள். இரு சமூகங்களும் பழைய பகைமைகளை மறந்து ஒற்றுமையாக கடந்த
காலங்களில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்று அரசாங்கம் தேர்தல் ஒன்றை நடத்தி அதில் இரு சமூகங்களிடையே முதலமைச்சர்
போட்டியொன்றை ஏற்படுத்தி அதில் ஹிஸ்புல்லாஹ் அணியென முஸ்லிம்களையும் பிள்ளையான் அணியென தமிழர்களையும்
மோதவிட்டது.
இத்தகைய இன முரண்பாடுகளுக்கு மத்தியில்தான் ஜனாதிபதியினால் முதலமைச்சர் தெரிவும் இடம்பெற்றது. முதலமைச்சர் தெரிவின்
முரண்பாட்டின் விளைவுகளே இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்தனை சம்பவங்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று
இரு சமூகங்களை மோதவிட்டு பேரினவாதிகள் வேடிக்கை பார்க்கின்றனர். இத்தனைக்கும் முஸ்லிம்களின் ஆதரவுடனும் விட்டுக்
கொடுப்புடனும் முதலமைச்சராக வந்த பிள்ளையானின் குழுவினரே மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக
வன்முறைகள் புரிகின்றனர். இதனை தட்டிக் கேட்காமல் அவர்களுக்கு ஆதரவு புரிந்து அவமானப்பட்டுக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்
அமைச்சர்கள் வாய் மூடி மௌனியாகி இருக்கின்றார்கள்.
கடந்த மே மாதம் 22 ஆம் திகதி பிள்ளையான் குழுவினர் இருவர் காத்தான்குடியில் வைத்து இனம்தெரியாத நபர்களினால் சுடப்பட்டனர்.
இச்சம்பவத்தினை ஆராய்ந்து பார்க்காமல் அதற்கு எதிரொலியாக காத்தான்குடி அப்பாவி முஸ்லிம் மக்கள் மூன்று பேர் சுட்டுக்
கொல்லப்பட்டார்கள்.
இவர்கள் மூன்று பேரும் பிள்ளையான் குழுவின் ஆரையம்பதி முகாமிற்கு அருகாமையில் வைத்து அவ்வியக்கத்தின் உறுப்பினர்களால்
சுடப்பட்டார்கள். மேலும், 7 பேர் படுகாயமடைந்தார்கள்.
அன்றைய தினம் மட்டக்களப்பு நகரத்திலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமான இரு கடைகள் எரிக்கப்பட்டன. மே மாதம் 23
ஆம் திகதி கல்லடியில் வைத்து ஏறாவூர் முஸ்லிம்கள் இருவர் பிள்ளையான் அணியினரால் கடத்தப்பட்டனர் . 25 ஆம் திகதி இரண்டு
முஸ்லிம் நபர்களை வெள்ளை வானில் வந்த பிள்ளையான் குழுவினர் கடத்திச் சென்றனர் . 26 ஆம் திகதி அக்கரைப்பற்றில்
இனம்தெரியாதவர்களினால் முஸ்லிம் நபரொருவர் சுடப்பட்டு படுகாயமடைந்தார்.
அன்றைய தினம் 26 ஆம் திகதி ஏறாவூரில் 51 வயது நிரம்பிய முஸ்லிம் பெண்மணி அதிரடிப்படையின் சூட்டினால் உயிரிழந்தார்.
இம்மாதம் முதலாம் திகதி கல்லடியில் முஸ்லிம் வியாபாரி ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தமைக்காக மீன்பிடித்தொழில் செய்பவர்களுக்கு
மீன்பிடிக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, எனது கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் சார்பாக நான் வைக்கும் நிபந்தனைகள் அதாவது வேண்டுகோள் என்னவென்றால்,
முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு விடயத்தில் உடனடியாக அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும். முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும்
நடவடிக்கைகளை பிள்ளையான் குழுவினர் கைவிட அரசாங்கம் வற்புறுத்த வேண்டும். முஸ்லிம் பாதுகாப்பு விடயத்தில் பிள்ளையான்
குழுவினர் புதிய ஒழுங்கு முறையினையும் அவதானிப்பினையும் செய்ய வேண்டும். இரு சமூகங்களிடையிலான ஒற்றுமையினை
கட்டியெழுப்பக்கூடிய ஒரு சிவில் அமைப்பினை உருவாக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்கள் யாவற்றையும் அரசியலில்
கொண்டு நோக்காமல் தூர நோக்குடன் செயற்பட வேண்டும். பத்திரிகைகளும் ஊடாக நிறுவனங்களும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின்
நிலையினை வெளியுலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
எனவே, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் விடயத்தில் ஜனாதிபதியும் அரசாங்கமும் படையினரும் பொலிஸாரும் பக்கச்சார்பின்றி
அவர்களது மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க உதவி செய்ய வேண்டும்.'
No comments:
Post a Comment