Wednesday, 23 July 2008

யுத்தநிறுத்தமும் பேச்சுவார்த்தையும்-230708

"சார்க்' மாநாட்டை முன்னிட்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை புலிகள் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தம் அறிவிப்பு
[22 - July - 2008]
உலக நாடுகளுடனும் பிராந்திய அயல்நாடுகளுடனும் நட்புறவை வளர்க்கும் பொருட்டும் கொழும்பில் சார்க் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கவுள்ளதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு அவர்கள் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவது தடவையாகக் கூடுவதையிட்டு தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்க சிங்கள அதிகாரபீடம் மறுத்து வருகிறது. தமிழருக்கு நீதி வழங்க சிங்களத் தேசம் தயாராக இல்லை. சிங்களத் தேசத்தின் அரசியல் இன்று போராகப் பேய்வடிவம் எடுத்து நிற்கிறது. இனவாதச் சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டு நிற்பதால், போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் பெற்றுவருகிறது.
தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அடிமை கொள்ளவேண்டும் என்பதில் சிங்களத் தேசம் வெறிகொண்டு நிற்கிறது.
சிங்களத் தேசம் ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை இராணுவம் ஒரு தற்காப்புப் போரையே இன்று நடாத்தி வருகிறது. சிங்கள அரசு போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக்கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வருகிறது. ஒட்டுமொத்த தமிழினமும் படிப்படியாக ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவரும் கோரமான உண்மை இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. செய்தித்தடை என்ற பெயரில் தமிழரின் நீதியான போராட்டம் மீது ஒரு இரும்புத்திரை போடப்பட்டிருக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அது நெறித்துள்ள விடுதலைப் பாதையையும் களங்கப்படுத்தும் வகையில் போலியான, பொய்யான பரப்புரை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதனால் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றி உலகில் தவறான மதிப்பீடுகளும் தப்பான அபிப்பிராயங்களும் நிலவி வருகின்றன. இது எமக்கு ஆழ்ந்த கவலையைத் தருகிறது.
உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகிறோம்.
இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தை கட்யெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருக்கிறோம்.
தமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகிறோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 04 ஆம் திகதி வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறியத்தருகிறது.
இதேநேரம், சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் எமது தேசத்தினதும் எமது மக்களினதும் நல்லெண்ண நடவடிக்கையை மதிக்காது,
அத்துமீறி அடாவடியான வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டால், எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையில்
மாத்திரம் ஈடுபட எமது விடுதலை இயக்கம் நிர்ப்பந்திக்கப்படும்.
மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, எமது பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஸ்ரீ லங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு எமது நல்லாதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் விவகாரத்தில் பாரதீய ஜனதாவின் ஈடுபாடு -உதயன்
இந்திய அரசியலில் இன்று முக்கியமான நாள்.மத்தியில் இடதுசாரிகளின் ஆதரவை இழந்துள்ள அல்லது தனது செயற்பாடு மூலம் அந்த ஆதரவை உதறித் தள்ளியுள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, ஏனைய உதிரிக் கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையைத் தக்கவைத்து, அதை
நாடாளுமன்றத்தில் நிரூபித்து, ஆட்சியைத் தொடருமா? அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அந்த அரசு கவிழுமா?
அப்படி அரசு கவிழ்ந்தால் உடனடியாக மாற்று அரசு ஒன்று பதவி ஏற்குமா? அல்லது பொதுத் தேர்தல் ஒன்றுக்கு உடன் அறிவிப்பு
விடுக்கப்படுமா?இவை குறித்தெல்லாம் இன்று மாலைக்குள் முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இன்றைய கண்டத்தில் காங்கிரஸ் அரசு தப்பிப் பிழைத்தாலும், பல்வேறு உதிரிக் கட்சிகளின் தயவில் ஆட்சியைக் கொண்டிழுக்க வேண்டிய அந்த அரசுக்கு அதன் பின்னர் நிலைமை நித்திய கண்டம் என்ற கணக்குத்தான்.அப்படி நித்திய கண்டத்தில் பூரண ஆயுளைக் கொண்டு இழுத்தாலும் அடுத்த ஏப்ரலுடன் தற்போதைய அரசின் ஆட்சிக் காலம் தானாகவே நிறைவு பெற்றுவிடும்.எனவே, எப்படிப் பார்த்தாலும் விரைவில் இந்தியாவில் பொதுத் தேர்தல் என்பது தவிர்க்கப்பட முடியாத யதார்த்தமாகும்.அடுத்த அரசு அமைப்பதற்கான காற்று அலை பாரதீய ஜனதாக் கட்சிக்கு சார்பாக வீசுவதாக அவதானிகள் கூறுகின்றனர். கருத்துக் கணிப்புகள் வெளியிடும் ஆரூடமும் அதுதான்.இந்தப் பின்னணியிலேயே, பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் இல. கணேசன், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இப்போது தெரிவித்துள்ள கருத்துகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.தற்போதைய காங்கிரஸ் அரசுக்கு முன்னரும் ஐந்து ஆண்டுகள் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது இலங்கைப் பிரச்சினையில் எதுவுமே "வெட்டிப் பிளக்காத' அந்தக் கட்சியின் அரசு, இன்னொரு தடவை ஆட்சிக்கு வந்து மட்டும் என்ன செய்து கிழித்து விடப் போகின்றது என்ற கேள்வி இக்கட்டத்தில் எழுவதும் தவிர்க்க முடியாததே.ஆனால் அங்குதான் விடயமே இருக்கின்றது. கடந்த தடவை பாரதீய ஜனதா அரசு ஆட்சியில் இருந்தபோது இலங்கை
விவகாரத்தை ஒட்டிய கொள்கை விடயங்களைத் தீர்மானிப்பதில் சோ. ராமசாமி போன்ற தரப்பினரின் செல்வாக்கு அதிகம் இருந்தது. அதனால் இலங்கை விவகாரத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவான பரிவான போக்கைக் கடைப்பிடிக்க முடியாத கட்டாயத்தில் அந்த அரசு அப்போது இருந்தது.ஆனால் இப்போது நிலைமை முற்றாக மாறிவிட்டது என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள். அடுத்த ஆட்சியைத் தாங்களே அமைக்கப் போகின்ற உறுதிப்பாட்டுடன் இப்போதே அதற்கான பூர்வாங்கக் கட்டமைப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வரும் பாரதீய ஜனதாக் கட்சி, அயல்நாடான இலங்கையின் விவகாரத்தைக் கையாள்வதற்கான உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து இப்போதே செயற்படத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது.அந்தக் குழுவில் சோ.ராமசாமி போன்ற ஈழத் தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தரப்புகளுக்கு எதிரான ஆட்கள் இடம்பெறவே இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.எதிர்கால பாரதீய ஜனதாக் கட்சி அரசில் இலங்கை விவகாரத்தைக் கையாளும் உயர்மட்டக் குழுவுக்கு, கொழும்புக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் நாகேந்திர நாத் ஜா பொறுப்பாக இருக்கின்றார். இல. கணேசன் போன்ற ஈழத் தமிழர்களுக்குப் பரிவான போக்குக்கொண்ட பலருமே அக்குழுவில் இடம்பெறுகின்றார்கள் என்றும் தெரிகின்றது.இக்குழு ஏற்கனவே கூடி பல தீர்மானங்களை எடுத்துவிட்டது என்றும் இலங்கையில் ஈழத் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டி உறுதிப்படுத்துவதற்காகத் தீர்க்கமான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இக்குழு தீர்மானித்து, உத்தேச நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்திருப்பதாகத் தெரிகின்றது.இந்தப் பின்னணியிலேயே ""எதிர்காலத்தில் ஆட்சிப்பீடமேறும் பாரதீய ஜனதாக் கட்சி அரசு ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத்தரக்கூடிய வகையில் இம்முறை காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கும்'' என்று இல. கணேசன் உறுதிபடக் கூறும் கருத்தை நாம் நோக்கவேண்டியிருக்கின்றது.இந்துத்துவப் பின்னணியைக் கொண்டுள்ள பாரதீய ஜனதாக் கட்சி, இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுவது பௌத்த சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்பும், அடக்குமுறையுமே என்ற கோணத்தில் இலங்கை
விவகாரத்தை இப்போது தெளிவான பார்வையுடன் நோக்க முற்பட்டிருப்பதாகவும் இவ்விடயங்களை இலங்கையில் இந்தியாவுக்கான தூதுவராகப் பணியாற்றி நேரடியாக விவரமாக விளக்கமாக அறிந்து
கொண்டவரான என்.என்.ஜாவே, இனி உத்தேச புதிய பாரதீய ஜனதா அரசில் இந்த அம்சத்தைக் கையாள்வார் என்பதால் இந்த பௌத்த மத ஆக்கிரமிப்பும் மேலாண்மையும் அத்தகைய விதத்தில் சரிவரக் கையாளப்படும் எனவும் புதுடில்லித் தரப்புகள் கருத்து வெளியிடுகின்றன. ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை "யார் குற்றியாவது நெல்லாக வேண்டும்' என்ற அவசரமும் அவசியமும்தான் அவர்களுக்கு.
யாரது பங்களிப்போடாவது அவர்களுக்கு நியாயம் கிடைத்தால் நீதி நிலைநாட்டப்பட்டால் சரி !

நோர்வேயின் அனுசரணையை மட்டுமே ஏற்றுக்கொள்வோம்: விடுதலைப் புலிகள் [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 05:34 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்]
இலங்கையில் அமைதி முயற்சிகளை ஆரம்பிக்கும் பொருட்டு தென்னாபிரிக்க மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட
முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும்
ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிக்கும் பொருட்டு தென்னாபிரிக்க
மற்றும் ஜஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.
நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் பேச்சுக்களை மட்டுமே விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்வார்கள் என்று
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் அமைதி முயற்சிகளுக்கான அனுசரணையாளர்களான அமைச்சர் எரிக் சொல்கெய்ம் மற்றும் அமைதி
முயற்சிகளுக்கான அனுசரணையாளர் ஹன்சன் பெளயர் ஆகியோருடன் வன்னியில் சந்திப்புக்களை மேற்கொள்ள நாம் ஆர்வமாக
உள்ளோம், அது விரைவில் நடைபெறும். நோர்வே தவிர்ந்த எந்த நாட்டின் அனுசரணையையும் நாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
2002 ஆம் ஆண்டு இலங்கையில் நோர்வே அமைதி முயற்சிகளை ஆரம்பித்திருந்தது.
இதனிடையே, இலங்கையில் அமைதிப் பேச்சுக்களுக்கு ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் முகமாக தென்னாபிரிக்கா கடந்த
வாரம் ஒரு தகவலை வெளியிட்டிருந்தது.
அதாவது, இந்தியாவின் பின்னணியுடன் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு தென்னாபிரிக்கா அனுசரணை வழங்க முன்வந்திருந்தது.
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் அனுகூலமான சமிக்ஞைகளை தெரிவிக்க வேண்டும்
என சிறிலங்காவின் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனை சந்தித்த போது தென்னாபிரிக்காவின் அனைத்துலக அமைதிக்கான
செயற்பாட்டாளரும், பிரதி அமைச்சருமான இராதகிருஷ்ண படையாச்சி தெரிவித்திருந்தார்.
மேலும், விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் தொடர்பாக ஜஸ்லாந்து குடியரசின் அரச
தலைவர் ஒலாபு ரங்னர் கிறிம்சன் ஆராய்ந்ததுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுக்களில் அனுசரணைகளை
வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் வடபகுதியில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களையும் கிறிம்சன் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: