சார்க் அமைப்பில் தமிழீழமும் ஒரு அங்கம்
என்பதை விளக்கும் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு: சு.ரவி
[செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 07:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
சார்க் அமைப்பில் தமிழீழ தேசமும் ஒரு அங்கத்துவ நாடு என்பதை வெளிப்படுத்தும் முகமாகவே அந்த மாநாடு நடைபெறும்
காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப்
பிரிவுப் பொறுப்பாளர் சு.ரவி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "நினைவழியா பெரு மனிதன்" நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சார்க் மாநாட்டை சாட்டாக வைத்துக்கொண்டு சிறிலங்கா அரசு ஒரு காயை நகர்த்தியது.
அது யாதெனில், "இந்தியத் தலைவருக்கு சிறிலங்காவில் பாதுகாப்பளிக்க முடியாது. புலிகளால் இந்தியத் தலைவருக்கு உயிர்
ஆபத்து உள்ளது. ஆகவே, அவரின் பாதுகாப்பிற்கு இந்தியப்படையை அனுப்புங்கள்" - என்று பொய்யான தகவலை சிறிலங்கா அரசு
இந்தியாவுக்குத் தெரிவித்தது. இதனை தென்னாசிய நாடுகளும் நம்பியிருக்கலாம்.
விடுதலைப் புலிகளையும் இந்திய அரசையும் சிண்டுமுடிந்துவிடும் வேலையில் சிறிலங்கா அரசு இறங்கியுள்ளது.
இந்நிலையில், எமது விடுதலை இயக்கம் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவித்தலை வெளியிட்டு, சார்க் மாநாட்டுக்கான
தனது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளது.
எமது விடுதலைப் போராட்டம் எமது மக்களுக்கானதே. அது தென்னாசியப் பிராந்திய நாடுகள் உட்பட எந்த நாட்டுக்கும்
எதிரானதல்ல என்பதை எமது தேசியத் தலைவர் அவர்கள் கடந்த மாவீரர் நாள் உரையில் தெளிவாக விளக்கியுள்ளார்.
ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சார்க் அமைப்பில் இருக்கின்ற ஆறு நிலையான நாடுகளுடன் அதில் எமது தேசத்தையும்
ஒரு அங்கமாக கருதுவதால்தான் சார்க் அமைப்புக்கான தமது ஆதரவை விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதுடன் சிங்கள அரசின்
பொய்யான பரப்புரைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்றார் அவர்.
"நினைவழியா பெருமனிதன்" நூல் வெளியீட்டு நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர்
சு.ரவி ஏற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார்.
"நினைவழியா பெருமனிதன்" அப்புஜீயின் படத்திற்கு கதிரவேலு, குருகுலம் நிர்வாகி கிரிஜா ஆகியோர் சுடரேற்றி மலர்
மாலைகளைச் சூட்டினர்.
வரவேற்புரையினை ஆசிரியை சுதமஞ்சலி பாலேந்திரராசா, தலைமையுரையினை பசுபதிப்பிள்ளை ஆகியோர் நிகழ்த்தினர்.
வாழ்த்துரைகளை மகாதேவ ஆச்சிரம கணேசானந்த சுவாமிகள், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா ஆகியோர் வழங்கினர்.
வெளியீட்டு உரையினை கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் சி.சிறீதரனும் நினைவுரையினை பரமு மூர்த்தியும் நிகழ்த்தினர்.
"நினைவழியா பெருமனிதன்" நூலினை கிளிநொச்சி அரச அதிபர் நா.வேதநாயகன் வெளியிட்டுவைக்க, குருகுல சிறுவர் இல்ல
நிர்வாகி கிரிஜா பெற்றுக்கொண்டார்.
சிறப்புப் படிகளை இராசரட்ணம் வழங்கினார்.
ஏற்புரையினை கிளிநொச்சி அரச செயல் திட்ட முகாமைத்துவ நிபுணர் அ.கேதீஸ்வரன் நிகழ்த்தினார்.
வே.கதிரவேலு கிளிநொச்சி மக்களினால் "அப்புஜி" என அன்பாக அழைக்கப்படுபவர். இவர் சமூகத் தொண்டுகளில் ஈடுபட்டவர்.
"குருகுலம்" சிறுவர் இல்லத்தைத் தொடக்கியதுடன் கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நடைபெறவிருந்த சிங்களக் குடியேற்றத் தடுத்து
நிறுத்துவதிலும் முன்நின்று செயற்பட்டவர்.
காந்தியின் கொள்கையில் ஈடுபாடு கொண்டு தனது பெயரை "அப்புஜி" என மாற்றிக் கொண்டார்.
இந்தியப்படையால் இவர் யாழ். நகரில் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு நிராகரித்தது
[செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 01:08 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது. வடபோர் முனையில் எதிர்நோக்கி வரும் தொடர்ச்சியான பின்னடைவுகளால் நலிவடைந்துள்ள புலிகளின் தந்திரோபாய நகர்வே இது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வதற்கு அரசு தயாரில்லை என்றும் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டால் வந்தால் மாத்திரமே அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சிறிலங்கா சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க கூறுகையில், விடுதலைப் புலிகளின் இந்த
அறிவிப்பு சமாதான அனுசரணையாளர்களான நோர்வேயின் ஊடாக விடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவ்வாறல்லாமல்
புலிகள் தரப்பிலிருந்து நேரடியாக வந்திருக்கும் இந்த அறிவிப்பை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் இப்படியான அறிவிப்புக்கள் கடந்த காலங்களில் விடுக்கப்பட்டபோதும், அந்த அறிவிப்பை விடுத்த
காலப்பகுதியை தம்மை இராணுவ ரீதியாக தயார்படுத்திக்கொள்ளவே அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். கடந்த முப்பது
வருடங்களாக விடுதலைப் புலிகளிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம் இது. ஆகவே, இப்படியான சந்தர்ப்பங்களில் நாம்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய
ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிப்பு [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 12:01 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு
தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர். இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகம் விடுத்துள்ள
அறிக்கை:
பரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின்
அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவது
தடவையாகக் கூடுவதையிட்டு தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கச் சிங்கள அதிகாரபீடம்
மறுத்து வருகின்றது. தமிழருக்கு நீதி வழங்கச் சிங்களத் தேசம் தயாராக இல்லை.
சிங்களத் தேசத்தின் அரசியல் இன்று போராகப் பேய்வடிவம் எடுத்து நிற்கின்றது. இனவாதச் சிங்கள அரசு இராணுவத்தீர்வில்
நம்பிக்கை கொண்டு நிற்பதால், போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் பெற்றுவருகின்றது.
தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அடிமை கொள்ளவேண்டும் என்பதில் சிங்களத் தேசம் வெறிகொண்டு நிற்கின்றது. சிங்களத்
தேசம் ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை இராணுவம் ஒரு தற்காப்புப் போரையே இன்று
நடாத்தி வருகின்றது.
சிங்கள அரசு போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வருகின்றது. ஒட்டுமொத்தத்
தமிழினமும் படிப்படியாக ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவரும் கோரமான உண்மை இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது.
செய்தித்தடை என்ற பெயரில் தமிழரின் நீதியான போராட்டம் மீது ஒரு இரும்புத்திரை போடப்பட்டிருக்கின்றது. தமிழரின் சுதந்திர
இயக்கத்தையும் அது நெறித்துள்ள விடுதலைப் பாதையையும் களங்கப்படுத்தும் வகையில் போலியான, பொய்யான பரப்புரை
கட்டவிழ்த்து விட்டப்பட்டிருக்கின்றது. இதனால் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றி உலகில் தவறான மதிப்பீடுகளும் தப்பான
அபிப்பிராயங்களும் நிலவிவருகின்றன. இது எமக்கு ஆழந்த கவலையைத் தருகின்றது.
உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றோம்.
இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருக்கின்றோம்.
தமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர்
நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றது.
இதேநேரம், சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் எமது தேசத்தினதும் எமது மக்களினதும் நல்லெண்ண நடவடிக்கையை மதிக்காது,
அத்துமீறி அடாவடியான வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டால், எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையில்
மாத்திரம் ஈடுபட எமது விடுதலை இயக்கம் நிர்ப்பந்திக்கப்படும்.
மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, எமது பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு எமது நல்லாதரவையும்
தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment