Wednesday 10 September, 2008

வென்று வீழ்ந்த வேங்கைகளை என்றும் நின்று தொழுவோம்




வென்று வீழ்ந்த வேங்கைகளை என்றும் நின்று தொழுவோம்.

மதியழகி, ஆனந்தி, கனிமதி, முத்துநகை, அறிவுத்தமிழ், வினோதன், நிலாகரன், எழிலகன்,அகிலன்,நிமலன்
_________________________________________________
வன்னி கூட்டுப் படைத் தளம் மீது புலிகள் இரு முனைத் தாக்குதல்
[10 - September - 2008]

இரு தரப்பிலும் 21 பேர் பலி; 23 இராணுவம், 5 பொது மக்கள் காயம் வவுனியாவில் இராணுவ மற்றும் விமானப் படைத் தளங்கள் மீது நேற்று செவ்வாய்க் கிழமை அதிகாலை விடுதலைப்புலிகள் தரைவழி மற்றும் வான் வழித்தாக்குதலை நடத்திய அதேநேரம், இந்தத் தாக்குதல்களை தாங்கள் முறியடித்ததுடன், புலிகளின் விமானங்களில் ஒன்றைத் தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
வவுனியா "ஏ9' வீதியில் நகருக்குள்ளேயே இவ்விரு படைத்தளங்களும் எதிரெதிராயுள்ளன. வன்னியில் தற்போது நடைபெற்றுவரும் படை நடவடிக்கைகளுக்கான இராணுவக் கட்டளைத் தலைமையகமான ஜோசப் முகாம் மீதும் அதனோடிணைந்த விமானப் படைத்தளம் மீதுமே நேற்று அதிகாலை விடுதலைப்புலிகள் ஒரே நேரத்தில் இந்த இரு முனைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் விமானப் படைத்தளத்தில் பொருத்தப்பட்டிருந்த "இந்திரா 2' ரக ராடார் அழிக்கப்பட்டதாகவும் இரு படைத்தளங்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், 13 படையினர் கொல்லப்பட்டும் 23 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள படைத்தரப்பு, ராடார் நிலையம் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவதை மறுத்துமுள்ளது.
வான் புலிகளும் பீரங்கிப் படையணிகளும் கரும் புலிக் கொமாண்டோ அணியும் இணைந்தே வன்னிப் படைத்தலைமையகத்தினுள் இந்தத் தாக்குதலை நடத்தி பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டதாக புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
நேற்று அதிகாலை 2.50 மணியளவில் இவ்விரு படைத்தளங்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பமானது. முதலில் இரு படைத்தளங்கள் மீதும் புலிகள் வன்னியிலிருந்து தொடர்ச்சியாக கடும் ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சுமார் அரை மணிநேரம் பல ஆட்லறி ஷெல்கள் இரு படைத்தலைமையகங்களினுள்ளும் வந்து விழ அதனை வாய்ப்பாக பயன்படுத்திய கரும்புலி கொமாண்டோப் படையணி, தரைவழித் தாக்குதலை நடத்தியவாறு உள்ளே நுழைந்து கடும் தாக்குதலை நடத்தியுள்ளது.
இவ்வேளையிலேயே வன்னியிலிருந்து வந்த புலிகளின் இரு விமானங்கள் இராணுவத் தலைமையகம் மீதும் விமானப்படைத் தளம் மீதும் இரண்டு இரண்டு குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.
புலிகளின் கடும் ஆட்லறி ஷெல் தாக்குதலாலும் படை முகாம்களிலிருந்து வன்னியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட பதில் ஷெல் தாக்குதலாலும் வவுனியா நகரமே கிடு கிடுத்தது. மக்கள் அனைவரும் பெரும் அச்சத்துடன் எழுந்த போது ஆட்லறி ஷெல்கள் பரஸ்பரம் ஏவப்பட்டுக் கொண்டிருந்தன.
வழமைக்கு மாறாக இராணுவ மற்றும் விமானப் படைத்தளங்களுக்குள் தொடர்ச்சியாக பல ஷெல்கள் வந்து வீழ்ந்து வெடித்ததால் நகரமே அதிர்ந்தது. அந்தநேரத்தில், பலத்த துப்பாக்கிச் சமரும் நடைபெறவே மக்கள் மேலும் அச்சமடைந்தனர்.
இவ்வேளையில், அதிகாலை 3.30 மணியளவில் வவுனியாவுக்குள் ஊடுருவிய புலிகளின் இரு விமானங்களும் வீசிய நான்கு குண்டுகள் வெடித்ததால் நகரே அதிர்ந்து குலுங்கியது.
புலிகளின் விமானங்கள் வந்ததையடுத்து சகல படைமுகாம்களிலிருந்தும் சகல காவலரண்களிலிருந்தும் வானத்தை நோக்கி சுமார் 30 நிமிடங்கள் கடும் துப்பாக்கிச் சூடும் கலிபர் தாக்குதலும் றேசர் தாக்குதலும் நடத்தப்படவே வவுனியா நகரின் வான் பரப்பு ஒளிவெள்ளமாயிருந்தது.
புலிகளின் விமானங்கள் தாக்குதலை நடத்திவிட்டு திரும்பிய சில மணி நேரத்தில் விமானப்படை தாக்குதல் விமானங்கள் பல, வவுனியா வான் பரப்பை ஊடறுத்துக் கொண்டு வன்னிக்குள் நுழைந்தன.
"மிக்' விமானங்களும் எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்களும் கே8 மற்றும் எவ்7 விமானங்களும் வன்னிக்குள் சென்றதுடன், மிக் விமானத்தாக்குதலில் வான் புலிகளின் விமானமொன்று, தரையிறங்குவதற்கு முன்னரே வான்பரப்பில் வைத்து அழிக்கப்பட்டதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் இரு படைத்தளங்கள் மீதும் புலிகள் தொடர்ச்சியாக கடும் ஷெல் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கையில் அவற்றினுள் புகுந்த கரும்புலிக் கமாண்டோக்கள் தாங்கள் தேடிவந்த இலக்குகள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்து அவற்றுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக கடும் ஷெல் தாக்குதலும் நடத்தப்பட்டது. கரும் புலி கமாண்டோ அணியினர் ஒவ்வொருவராக வீழ்ந்து கொண்டிருந்தாலும் கடைசி கரும்புலி அந்தப் படைத்தளப் பகுதியில் இருக்கும்வரை புலிகள் கடும் ஷெல் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சுமார் இரு மணி நேரம் கரும்புலிகள் இவ்விரு முகாம்களினுள்ளும் நின்று தாக்குதலை நடத்தியதாகவும் இந்தத் தாக்குதலாலும் புலிகள் ஏவிய 80ற்கும் மேற்பட்ட ஷெல்கள் படைத் தளங்களுக்குள் வீழ்ந்து வெடித்ததாலும் புலிகளின் விமானத்தாக்குதலாலும் படைத் தளங்களுக்கு பாரிய சேதங்களேற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிகாலை 6.30 மணிவரை புலிகளது ஷெல் தாக்குதல் நடைபெற்ற அதேநேரம், தரை வழித்தாக்குதல் நடத்த வந்த ஐந்து பெண் கரும்புலிக் கமாண்டோக்கள் உட்பட பத்து கரும் புலிகளும் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்தது.
படைத்தளங்களினுள் கடும் ஷெல் தாக்குதலும் விமானத் தாக்குதலும் நடைபெற்ற போது படையினர் தற்காப்பு நிலையை எடுத்துக் கொண்ட நேரத்தில், கரும்புலிக் கமாண்டோக்கள் "திட்டமிட்ட வகையிலான அழிப்பு' நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
கடந்த வருடம் அநுராதபுரம் விமானப் படைத்தளத்திற்குள் கரும்புலி கமாண்டோக்கள் ஊடுருவித் தாக்கியபோன்றதொரு தாக்குதலே இதுவெனவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் விமானப்படையினரின் "இந்திரா 2' ராடார் அழிக்கப்பட்டதாகவும் அங்கிருந்த 3 இந்தியப் படையினரும் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேநேரம், தேக்கவத்த உட்பட சில பகுதிகளில் வீழ்ந்த ஷெல்களால் 5 பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன், ஒரு வீடும் சேதமடைந்துள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து படைத்தரப்பு கூறுகையில்;
வன்னிப் படைத்தலைமையகம் மீது நேற்று அதிகாலை தரைவழி மற்றும் வான்வழித்தாக்குதலை நடத்த விடுதலைப்புலிகள் மேற்கொண்ட முயற்சியை படையினர் முறியடித்துள்ளனர்.
நேற்று அதிகாலை 2.50 மணியளவில் வவுனியா இராணுவத் தளம் மற்றும் விமானப்படைத்தளம் மீது ஒரேநேரத்தில் திடீர் தாக்குதலை நடத்த முற்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கெதிராக படையினர் முறியடிப்புத் தாக்குதலைத் தொடுத்தனர்.
தரைவழியாக இந்த கூட்டுப்படைத்தளங்கள் மீது புலிகள் தாக்குதலை நடத்தியபோது அவர்களுக்கு உதவியாக வன்னியிலிருந்து இவ்விரு படைத்தளங்களை நோக்கியும் ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தினர்.
விமானப் படைத்தளத்திலுள்ள ராடார் நிலையத்தை இலக்கு வைத்தே அவர்கள் தங்கள் ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தினர். எனினும், படையினரின் கடுமையான பதில் தாக்குதல்கள் காரணமாக ராடார் நிலையமும் வேறு முக்கிய படை நிலைகளும் எதுவித பாதிப்புமின்றித் தப்பிவிட்டன.
இவ்வேளையில், புலிகளின் இரு சிறியரக விமானங்கள் கூட்டுப் படைத்தலைமையக வான்பரப்புக்குள் நுழைந்தன. அவற்றில் ஒன்று அதிகாலை 3.30 மணியளவில் இரு குண்டுகளை வீசியது. எனினும், புலிகளது எதிர்பார்ப்புக்கு மாறாக அந்த இரு குண்டுகளும் இராணுவ அதிகாரிகள் உணவருந்தும் பகுதியிலும் இராணுவ தலைமையகக் கட்டிடப் பகுதியிலும் வீழ்ந்துள்ளன.
உஷாரடைந்த தரைப்படையினர் உடனடியாக புலிகளின் விமானங்கள் மீது தாக்குதலைத் தொடுத்தனர். இராணுவத் தலைமையகத்திலிருந்து புலிகளின் இலக்குகளை நோக்கி கடும் ஆட்லறி ஷெல் தாக்குதலும் நடத்தப்பட்டது.
புலிகளின் விமானத் தாக்குதலை முறியடிப்பதற்காக வவுனியா கூட்டுப் படைத் தலைமையகம் மற்றும் படைமுகாம்கள் அனைத்திலுமிருந்து வான் பாதுகாப்பு பொறிமுறைகள் இயக்கப்பட்டன. வான் புலிகள் மேலும் தாக்குதலை தொடுக்காதவாறு விமான எதிர்ப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சுமார் இரு மணிநேரம் படையினரும் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி புலிகளின் தாக்குதல் முயற்சிகளை முறியடித்தனர். இதனால், வன்னியில் புலிகளின் நிலைகளுக்கு பலத்த சேதங்களேற்பட்டுள்ளன.
அதிகாலை 5.45 மணிவரை நடத்தப்பட்ட கடும் ஆட்லறி ஷெல் தாக்குதலையடுத்து புலிகளுக்கு ஏற்பட்ட சேதத்தால் அவர்கள் தங்கள் நிலைகளிலிருந்து பின்வாங்கத் தொடங்கினர்.
இதற்கிடையில், புலிகளின் விமானங்கள் தாக்குதலை நடத்தத் தொடங்கவே விமானப்படையினர் தங்கள் வான் பாதுகாப்பு பொறிமுறையை செயற்படுத்தத் தொடங்கியதுடன், கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திலிருந்து விரைந்து வந்த "ஜெற்' விமானங்கள் புலிகளின் இரு விமானங்களையும் துரத்திச் சென்றதுடன், அவை முல்லைத்தீவு காட்டுப் பகுதிக்குள் தரையிறங்கி மறைவதற்குள் அதிலொன்றை நடு வானிலேயே தாக்கி அழித்துமுள்ளன.
எனினும் மற்ற விமானம் விமானப்படை ஜெற் விமானங்களின் தாக்குதலிலிருந்து தப்பிவிட்டது. இதேநேரம், வவுனியாவில் கூட்டுப் படைத்தலைமையகம் மீது தரைவழித்தாக்குதலை நடத்த வந்த புலிகளின் அணிமீது தரைப்படையினர் தாக்குதலை நடத்தி அவர்களில் பத்துப்பேரைக் கொன்றுள்ளனர். இதில் ஐவர் பெண் புலிகள். அனைவரது உடல்களும் படைத்தளப் பகுதிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிகாலை மோதல்கள் முடிவுக்கு வந்ததையடுத்து அப்பகுதிகளில் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டு அவை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
படைத் தளங்கள் மீதான ஷெல் தாக்குதல்கள் மற்றும் மோதல்களில் 11 இராணுவத்தினரும் விமானப்படையைச் சேர்ந்த ஒருவரும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் கொல்லப்பட்டதுடன், ஏழு விமானப்படையினரும் 9 பொலிஸாரும் பொதுமகன் ஒருவரும் காயமடைந்ததாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
காயமடைந்த படையினரும் பொதுமக்களும் வவுனியா மற்றும் அநுராதபுரம் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பத்து புலிகளதும் உடல்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments: