Thursday, 25 September 2008

ஆயுத ஒப்படைப்பு பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை: ஐ.நாவில் ராஜா!

ஆயுத ஒப்படைப்பு பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை: ஐ.நாவில் ராஜா!
விடுதலைப்புலிகள் தமது எல்லா ஆயுதங்களையும் கீழே வைத்துவிட்டு, அவர்களின் போர்த்திறன்கள் யாவற்றையும் கலைத்துவிட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தால் பிரவேசித்தால் மட்டுமே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். இவ்வாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று ஐக்கியநாடுகள் சபையில் உரையாற்றுகையில் திட்டவட்டமாக வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத் தெரிவித்தார்.
ஐக்கியநாடுகள் சபையில் சபையின் 63 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. அங்கு பேசுகையில் தமது உரையின் ஆரம்பத்தில் சில வசனங்களை தமிழில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பின்னர் சிங்கள உரையில் தெரிவித்ததாவது: அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்திலுள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்தில் இடம் பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: எனது தாய்மொழி சிங்களம், ஆனாலும், சில எண்ணங்களை சகோதர தமிழ் மொழியில் சொல்ல விரும்புகின்றேன். சிங்களமும் தமிழும் இலங்கை மக்களின் இரண்டு மொழிகள். பலநூறு ஆண்டுகளாக பாவனையில் உள்ள இந்த இரண்டு மொழிகளும் இலக்கியவளம் செறிந்தவை. இம்மொழிகள், அரசகருமமெழிகளாக அங்கீகாரம் பெற்று நம்நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஜனநாயகம் மேலும் வியாபிக்கப்படுவதை தொடர்ந்து இலங்கையின் சிங்கள, தமிழ் மக்களுக்கிடையிலான உறவு பலமடையும். எதிர்கால அபிவிருத்திக்கு அது பாரிய சக்தியாக அமையும். ஒரு தேசம் என்ற வகையில் எமக்காகக் காத்திருக்கும் அர்த்தமுள்ள சுதந்திரம் நீடித்த ஐக்கியம் ஆகியவற்றை நோக்கி நாம் அணிவகுத்துச் செல்வோம் என்றார். ஜனாபதி மஹிந்த தமதுரையில் மேலும் கூறியதாவது: இங்கு நாம் கலந்துரையாடவுள்ள தொனிப்பொருள், உலகின் சில மக்கட் பிரிவுகளின் வறுமைநிலை, பசிபட்டினியின் மீது எந்தளவுக்கு உலக உணவு நெருக்கடி தாக்கம் செலுத்தமுடியும் என்பதும் ஐக்கிய நாடுகள் சபையை மிகவும் ஜனநாயமயப்பட்டதாக மாற்றுவது எவ்வாறு என்பதும் உண்மையிலேயே தொலைநோக்குடைய ஒர் அணுகுமுறையாகும். மனித குலத்தின் நாளைய இருப்பின் மீது போலவே, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நிறுவன ரீதியான தேவைகளின் மீதும் அது கவனம் செலுத்துகின்றது.
இன்றைய உலக உணவு நெருக்கடி, துரதிஷ்டவசமாக பெரிதும் அபாயகரமான யதார்த்தமாக மாறியுள்ளது. நாம் அது விடயத்தில்
கூட்டாகவும் அவசரமாகவும் நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் அது இன்றுள்ள நிலையைவிட பாரதூரமானதாக மாறுவதற்கு பெரிதும் வாய்ப்புள்ளது. இது, வளர்முக நாடுகளில் வாழும் கிராமிய மக்களை வலுவூட்டுவதற்கு இன்றியமையாத ஒரு காரணி என்பதை நாம்
மறந்துவிடலாகாது. வளர்முக நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் வாழ்வதும், தமது
வாழ்வாதாரங்களுக்காக அவர்கள் கமத்தொழிலில் தங்கியிருப்பதும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற சார்க் அரசுத் தலைவர்கள் உச்சிமாநாட்டில், உணவு நெருக்கடியை வெற்றிகொள்வதற்காக
பிராந்தியமொன்றாக இணைந்துசெயலாற்றுவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளதாக இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த அமைப்பின் தலைவர் என்ற வகையில் நான் பெருமையுடன் தெரிவிக்கின்றேன். எமது பிராந்தியத்தை உலகின் முன்னணி தானியக் களஞ்சியமாக மாற்றுவது எமதுநோக்கமாகும். அதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கும் இணங்கியுள்ளோம்.
பெரும்பாலான நாடுகளைப் போன்றே, இலங்கையும் பயங்கரவாத அழிவு என்ற உபத்திரவத்திலிருந்து மீள முடியவில்லை. அரசியல் முறைமைகளின் ஊடாக தீர்க்கப்படக்கூடிய ஏராளமானவற்றை,நிராகரித்து உள்நோக்கங்களைக் கொண்ட ஒரு பயங்கரவாதக் குழு, மிகவும் கொடூரமானதும் மூர்க்கத்தனமானதுமான பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது என்பது யாவரும் அறிந்ததே. இந்த எல்.ரி.ரி.ஈ. எனும் பயங்கரவாதக் குழு தற்கொலைக் குண்டுதாரிகளை ஈடுபடுத்தி, தமக்கு வாய்ப்பான ஒரு சூழலை உருவாக்கிக்கொள்வதற்கு எத்தனிப்பது, சட்டரீதியாக செல்லுபடித் தன்மையையும் அரசியல் ரீதியான அங்கீகாரத்தையும் பெறுவதை நோக்காகக்கொண்டே என்பதை நாம் மறந்துவிடலாகாது.
அரசு எல்.ரி.ரி.க்கு ஒரு போதும் அடிபணியாது. எமது அரசு சகல விடயங்களை நன்கு ஆராய்ந்து சகல இனங்களினதும் அபிலாசைகளும் உரிமைகளும் ஈடேறக்கூடிய அரசியல் மற்றும் அரசமைப்புச் சார்ந்த செயற்பாடுகளை முன்னேடுப்பதற்கு என்றும் தயாராக உள்ளது. எம்முடைய ஓர் இனப்பிரிவினராகிய தமிழ் மக்களில் ஒரு சிறு பிரிவினரைப் பயமுறுத்தி, அவர்களை வட மாகாணத்தில் பலவந்தமாகத்தடுத்து வைத்துக்கொண்டு,
அந்த இனப்பிரிவுக்கு ஜனநாயகத்தை இழக்கச் செய்யும் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எமது அரசு ஒருபோதும் அடிபணியாது.
இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலமும் நாம் அதனை நிரூபித்துள்ளோம். பல நூற்றாண்டுகளாகவே இலங்கையில் ஏனைய இனப்பிரிவினருடன் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் மக்களின் ஜனநாயகத்
தலைவர்களுடன் எமது அரசு தொடர்ந்தும் பேச்சில் ஈடுபட்டுள்ளது என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன். தமிழ்த் தலைவர்கள் எமது அரச தொழிற்படு அமைச்சர்களாகவும் உள்ளனர். இலங்கையின் சட்டமா அதிபரொருவராகப் புகழ்பூத்த அதேபோல், யாவரினதும் கௌரவத்திற்குப் பாத்திரமான தமிழ் அரசியல்வாதியான சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள், 1904 செப்டெம்பர் மாதத்தில் தெரிவித்த ஒரு கூற்றை இங்கு நான் மேற்கோள் காட்டுகின்றேன். நான் உலகின் பெரும்பாலான
நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன். எனினும், சிங்கள மக்களைப் போன்ற நட்புணர்வு பாராட்டும் எந்தவோர் இனத்தையும்
அந்தளவு உயர் குணவியல்புகளைப் பேணி ஒழுகும் எந்தவோர் இனத்தையும் உலகில் எந்தவோர் இடத்திலும் நான் கண்ணுற்றதில்லை அன்னாரின் இந்தக் கூற்றிலிருந்து எமக்கு ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவது, தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையே நிலவிய ஒற்றுமையாகும். எனினும், இன்று காழ்ப்புணர்வுடன் இயங்கும் ஒரு குழுவினர் அவை
யாவற்றையும் தலைகீழாக மாற்றியுள்ளனர். சமாதானச் செயற்பாட்டை இழிவாக நோக்கினர் இலங்கையில் ஆட்சிபீடமமர்ந்த எல்லா அரசுகளும் இன்றைய இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கால்நூற்றாண்டு காலமகா
பிரயத்தனம் மேற்கொண்டுள்ளன. இணைத்தலைவர்களின் கண்காணிப்புக்குட்பட்டிருந்த அதேபோல், நோர்வே நாட்டின்
அனுசரணையின் பேரில் இயங்கிய சமாதான செயற்பாடும் இதில் அடங்கும். இந்தச் சமாதானச் செயற்பாட்டையும் கூட
பயங்கரவாதப் புலிகள் மிகவும் இழிவாகவே நோக்கினர். பயங்கரவாதப் புலிகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சமாதானப்
பேச்சுகளிலிருந்து ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கற்பித்து வெளிநடப்புச் செய்தனர். அதனையடுத்து, அவர்கள் மீண்டும்
அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்வது போன்ற மிலேச்சத்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். எல்லா
வேளைகளிலும் இந்த வேலைத்திட்டத்தையே அவர்கள் முன்னெடுத்தனர். நாட்டைக் கூறுபோடுவதற்கு எவ்விதத்திலும் இடமளியோம் இந்தப் பயங்கரவாதக் குழுவுடன் எமது அரசு பேச்சுகளை மேற்கொள்ளமுடியாது. அவர்கள் தமது எல்லா ஆயுதங்களையும் கீழேவைத்து விட்டு அவர்களின் போர்த்திறன்கள் யாவற்றையும் கலைத்துவிட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் பிரவேசித்தால் மாத்திரமே அவர்களுடன் பேச்சுகளில் ஈடுபடமுடியும். சட்டரீதியாக தெரிவுசெய்யப்பட்ட ஓர் அரசு என்ற வகையிலும், ஐக்கிய
நாடுகள் சபையின் நிரந்தர உறுப்புரிமை நாடென்ற வகையிலும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டை மீறி, நாட்டைக்
கூறுபோடுவதற்கு எவ்விதத்திலும் இடமளிக்கப்படமாட்டாது என்பதை எனது அரசு உறுதிபடத் தெரிவிக்கின்றது. எமது மக்களுக்கு ஜனநாயகச் செயற்பாட்டின் பெறுபேறுகளைத் துய்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.
அதேபோல், தற்போது பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களின் மக்களுக்கு இயன்றளவு துரிதமாக அபிவிருத்திச் செயற்பாட்டில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் எமது மற்றுமொரு நோக்கமாகும். தற்போது
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படும் துரித பொருளாதார முன்னேற்றத்திற்கு இணையான ஒரு முன்னேற்றத்தை வடக்கிலும் நாம் ஏற்படுத்த எண்ணியுள்ளோம். முன்னர் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் பயங்கரவாதிகளாக இயங்கிய சிலர் இன்று கிழக்கு மாகாணத்தின் உறுப்பினர்களாக ஜனநாயக வழிமுறையில் தெரிவாகியுள்ளனர். அதேபோல் முன்னர் எல்.ரி.ரி.ஈ சிறுவர் போராளியொருவராக ஈடுபடுத்தப்பட்டிருந்த ஒருவரே, இன்று அதன் முதலமைச்சராக அமர்ந்துள்ளார். இவை
யாவற்றையும் நாம் கிழக்கு மகாணத்தை விடுவித்து ஓர் ஆண்டுக்கும் குறைவான ஒரு காலத்துள் நாம் நிறைவேற்றினோம். எமது அரசு இதுவரையில் மனிதாபிமானக் கொள்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கின்றது. நாம் பெற்றுக்கொடுக்கும்
பொருள்களை உணவுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்வதில்லை. மருந்துவகைகள், வேறு அத்தியாவசியப் பண்டங்கள் போன்றே
பாடசாலைகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் அவசியமானவை. ஆசிரியர்கள், மருத்துவர்கள், தாதியர் மற்றும் வேறு அத்தியாவசியப் பணியாற்தொகுதியும் இதில் அடங்கும். இலங்கையின் சிக்கலார்ந்த நிலைமைகளுக்கு விழிப்பாகவே முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அது ஒரு கோணத்தில் குற்றச்
செயல்களுக்கு வேலியமைக்கும் சட்டத்தையும், ஒழுங்கையும் பேணும் செயற்பாடொன்றின் மூலமும், அதேபோல் பொதுமக்கள்
அபிப்பிராயமொன்றை உருவாக்குவதை நோக்கிய, சகிப்புத் தன்øமையுடன் கூடிய அரசியல் எத்தனமொன்றின் மூலமும் வகுத்தமைக்கப்பட வேண்டியதொன்றாகும். கடினமானதும் இன்றியமையாததுமான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதை நாம் கிழக்கு மாகாணத்தில் நிறைவேற்றியுள்ளோம். அவ்வாறே, எமது நாட்டின் வட மாகாணத்திலும் அதனைச் சாதிக்க முடியும் என நாம் திடமாக நம்புகின்றோம். என்றார்.

No comments: