

சிறிலங்கா அரசால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்குப் பகுதியில் கடந்த 11 மாதங்களில் 295 படுகொலைகளும் 176 ஆட்கடத்தல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதற்கு சிறிலங்கா படைகளும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களுமே காரணம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா அரசு கிழக்கு மண்ணை ஆக்கிரமித்து அங்கே ஜனநாயகத்தை நிலைநாட்டி விட்டதாக பொய்ப் பரப்புரைகளைச் செய்து அனைத்துலகத்தை ஏமாற்றிக் கொண்டு, மறுபுறம் தனது தமிழினப் படுகொலையை தினந்தோறும் மிகவும் அமைதியான முறையில் ஒட்டுக்குழுக்களையும், இராணுவ புலனாய்வுப் பிரிவையும் பயன்படுத்தி நடாத்தி வருகின்றது.
தமிழின அழிப்பின் ஒரு அங்கமாக கடந்த காலங்களில் கிழக்கில் பல்வேறு படுகொலை சம்பவங்களை சிங்களப்படைகள் மேற்கொண்டிருந்தன. குறிப்பாக, கொக்கட்டிச்சோலை, சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை, மகிழடித்தீவுப் படுகொலைகள் எனவும் தென்னமரவாடி, திரியாய், கும்புறுப்பிட்டி படுகொலைகள் என்றும் திராய்க்கேணி, உடும்பன்குளம் படுகொலை
என்றும் இவைகளை பட்டியலிட்டுக்கொண்டு போகலாம். படுகொலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் இவைகள் வரலாற்றில் இடம்பிடித்தாலும், தினம் தோறும் அமைதியாக
நடைபெறும் படுகொலைகள் இறுதியில் பெரிய எண்ணிக்கையாக மாறுகின்றது என்பது நமது பார்வையில் பெரியளவில் தென்படவில்லை.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தினந்தோறும் நடைபெறும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், மற்றும் பாலியல் பலாத்காரங்கள் போன்ற சம்பவங்கள் மூலமாக இங்கே மிகப்பெரிய மனிதப்பேரவலத்தை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது.
எனினும், தமிழர் தாயகப்பகுதியில் சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை அனைத்துலக நாடுகளும், அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும் நன்கு அறிந்திருந்தும் இவற்றை நிறுத்துவதற்கான முயற்சிகளை அவைகள் மேற்கொள்ளாததன் மூலமாக அவர்களின் இரட்டை வேடத்தை எம் மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.
அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும், ஜனநாயக ஆட்சியின் அளவை மதிப்பிட மனித உரிமை நிலைமைகளை அளவுகோலாக கொண்டு செயற்படும் அரசுகளும் மற்றும் அமைப்புகளும் சிங்கள பேரினவாத அரசின் இத்தகைய படுகொலைகளைக்கண்டும் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்காமல் மௌனித்து இருக்கின்றார்கள்.
அதேவேளை, மறைமுகமாக ஆதரவுகளை அவர்களுக்கு வழங்குவதோடு, மறுதரப்பை குற்றம்சாட்டுவதும், அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதும் அவர்களின் நடுநிலைத்தன்மை மட்டில் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
கடந்த தை மாதம் தொடங்கி கார்த்திகை மாதம் வரையிலான 11 மாதங்களில் கிழக்கில் 193-க்கும் அதிகமான படுகொலைகள் மற்றும் 110-க்கும் அதிகமான ஆட்கடத்தல் சம்பவங்களும் நடந்துள்ளன.
அதே காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 102-க்கும் அதிகமான மேற்பட்ட படுகொலைகளும் 66-க்கும் அதிகமான ஆட்கடத்தல் சம்பவங்ளும் நடந்துள்ளன. இவை அனைத்திற்கும் சிறிலங்கா படைகளும் அவர்களோடு சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களுமே முழுக் காரணமாகும்.
இவ்வாறு, தினம்தோறும் சிறு துளி பெருவெள்ளம் என்ற அடிப்படையில் எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டு வருகின்றார்கள். கால ஓட்டத்தில் பல அனுபவங்களைப்பெற்று இன்று நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு எழுச்சி பெற்று நிற்கும் தமிழினத்தின் விடுதலைக்கான போராட்டத்தை இத்தகைய படுகொலைகள் மூலம் நசுக்கிவிடலாம் என சிங்களப் பேரினவாத அரசு கருதுமேயானால் அது தப்புக் கணக்காகிவிடும். மாறாக, அது தமிழர்களின் சுதந்திர தாயகத்துக்கான விடுதலைப் போராட்டத்தை இன்னும் விரைவுபடுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை.
"கிழக்கின் உதயம்" எனும் சிங்களத்தின் கொலைச் சாயம் பூசப்பட்டுள்ள போலியான ஜனநாயக பரப்புரைகள் தொடர்பிலும் அதற்குள் மறைந்திருக்கும் கபடத்தனத்தையும் எமது மக்கள் புரிந்து கொண்டு செயற்படுமாறு வேண்டிக்கொள்வதோடு, சிங்களத்தின் தடைகளை உடைத்து தாயக விடுதலைக்கான போராட்டப் பாதையை பலப்படுத்துமாறும் அன்பாக
கேட்டுக்கொள்ளுகின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment