விடுதலைப் புலிகளின் 42 உடல்களும் பூந்தோட்டம் மயானத்தில் அடக்கம்
[15 - January - 2009]
வவுனியா பொது வைத்தியசாலை சவச் சாலையில் வைக்கப்பட்டிருந்த 42 விடுதலைப் புலிகளின் உடல்கள் நேற்றுப்புதன்கிழமை பிற்பகல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள், மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி, பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையில் இந்த உடல்கள் கனரக இயந்திரத்தினால் குழி தோண்டப்பட்டு ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டன.
கடந்த 9 நாட்களாக இந்தச் சடலங்கள் வவுனியா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தன. வன்னிப் போர் முனையில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உடல்களெனக் கூறி இவை இராணுவத்தினரால் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உடல்களை கையளிக்க சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் முயற்சிகளை எடுத்த போதிலும் பயன் அளிக்கவில்லை. மிகவும் பழுதடைந்த நிலையில் சடலங்கள் காணப்பட்டதினால் வவுனியா மாவட்ட நீதிவானின் அனுமதியுடன் சடலங்கள் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கமே இதற்கான முழு ஏற்பாட்டையும் மேற்கொண்டிருந்தது. இரண்டு செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் எடுத்து வரப்பட்ட இந்தச் சடலங்களை மயானத்தில் இறக்கி அடக்கம் செய்வதற்கு பொது மக்கள் உதவினார்களென பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment