Saturday 11 April, 2009

பிரித்தானியாவில் தமிழர் புதிய வரலாற்றுப் பேரணி!


பிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் அதிகமான தமிழர்கள் அலையெனத் திரண்டு பேரெழுச்சி [சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009, 09:47 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]
சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையையும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தையும் கண்டித்து பிரித்தானியாவில் இன்று மாபெரும் மக்கள் பேரெழுச்சி நடைபெறுகின்றது. பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் அலையெனத் திரண்டு இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழீழ தேசியக் கொடியையும் தமிழீழ தேசியத் தலைவரின் படங்களையும் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளோர் உணர்வுபூர்வமாக முழக்கமிட்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் எம்பார்க்மென்ட் எனும் இடத்தில் இன்று சனிக்கிழமை பிற்கல் 1:00 மணிக்கு தொடங்கிய இந்த பேரணி ஹைட் பார்க் கோனர் என்ற இடத்தினை சென்றடைய உள்ளது.
எனினும் பேரணி தொடங்கி 4 மணிநேரம் கழிந்த பின்னரும் பேரணி செல்லும் வீதியில் மக்கள் பெருவெள்ளமாக குவிந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக பேரணி தொடங்கிய இடம் தொடக்கம் அது முடிவடையும் இடம் வரை வீதிகளில் மக்கள் நிரம்பி வழிவதால் பேரணி மெதுவாகவே நகர்ந்து வருகின்றது.
"எமது தேவை தமிழீழமே!"
"போர் நிறுத்தத்தினை உடன் நடைமுறைப்படுத்து!"
"சிறிலங்கா அரசுக்கான உதவிகளை உடன் நிறுத்த வேண்டும்"
"பிரபாகரனே எங்கள் தலைவன்"
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மருந்து மற்றும் உணவுப்பொருட்கள் சென்றடைய வேண்டும்"
" பிரித்தானிய அரசே புலிகள் மீதான தடையை நீக்கு"
" புலிகளே தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள்"
"பொதுநலவாய நாடுகளில் இருந்து சிறிலங்காவை உடனடியாக நீக்கு"
"புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல; அவர்கள் ஒரு விடுதலை இயக்கம்"
"உலக வங்கியே சிறிலங்காவுக்கு பண உதவி செய்யாதே!"
"பிரித்தானியாவே சிறிலங்கா பொருட்களை வாங்கி, உன் கைகளில் இரத்தத்தை வாங்காதே!"
போன்ற முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளோர் உரத்து எழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறும் சென்று கொண்டிருக்கின்றனர்.

No comments: