Sunday, 26 April 2009

அம்பாறையில் கடற்கண்காணிப்பு நிலையம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்

அம்பாறையில் கடற்கண்காணிப்பு நிலையம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்: கதுவீ, அதிவேக விசைப்படகுகள் முற்றாக அழிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2009, 07:57 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
அம்பாறை மாவட்டம் உகந்தை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் கடற்கண்காணிப்பு நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கதுவீ, அதிவேக விசைப்படகு, வெளியிணைப்பு இயந்திரம் அதனோடு சிறிய ரக விசைப்படகு ஆகியன முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளதாவது:
அம்பாறை மாவட்ட கடலேரரப்பகுதி முகாம்களுக்கான விநியோகப் பணிகள் விடுதலைப் புலிகளால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் அறுகம்பை தொடக்கம் உகந்தை வரையிலான கடலோரப்பகுதி சிறிலங்கா படை முகாம்களுக்கான முக்கிய விநியோகப்பணிகள் கடல் மார்க்கமாகவே நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அந்த விநியோகப் பணிகளுக்கு முக்கியமான கடற்கண்காணிப்பு நிலையமாக இந்நிலையமே செயற்பட்டு வந்தது.
இதன் மீது நேற்று சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் விடுதலைப் புலிகளின் அணி தாக்குதல் நடத்தியது.
சுமார் 30 கடல் மைல் தூரம் கண்காணிப்பு செய்யக்கூடியதாக அமைக்கப்பட்டிருந்த கதுவீ, அதிவேக விசைப்படகு, வெளியிணைப்பு இயந்திரம் அதனோடு சிறிய ரக விசைப்படகு ஆகியன
விடுதலைப் புலிகளால் எரியூட்டப்பட்டன.
இத்தாக்குதலில் சிறிலங்கா ஊர்காவல் படையைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
அத்துடன், சில படைக்கருவிகளையும், உபகரணங்களையும் கைப்பற்றியிருப்பதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
உகந்தை ஆலயப்பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் முகாமில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலேயே இந்த கதூவி நிலையம் அமைந்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: