Wednesday, 17 June 2009

சிறீலங்கா அரசின் பாசிச ஈழ அடிமை முகாம்களில் அரச பயங்கரவாதம்


புலிகளை இனம் கண்டு கைது செய்யும் நடவடிக்கை சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட வேண்டும்

சுனிலா ஒபயசேகர:

சுனிலா அபேசேகரா மனித உரிமைச் செயற்பாட்டாளர். சிங்களவர் தமிழர் என இருதரப்பாலும் பெரிதும் மதிக்கப்படுபவர். தனது மனித உரிமைப் பணிகளுக்காக ஐநாவினாலும் மனித உரிமைக் கண்ணகாணிப்பகத்தாலும் கௌரவிக்கப்பட்டவர். இன்போர்ம் (INFORM) என்ற அமைப்பின் பணிப்பாளராகச் செயற்பட்டு வருகிறார்.

சுநயட நேறள இன் சார்பாக ஷாமினி பீரிஸ் சுனிலா அபேசேகராவை நேர்கண்டார். அந்நேர்காணல் முழுமையாக இங்கே தரப்படுகிறது.

ஷாமினி பீரிஸ்: மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பலராலும் இடைத்தங்கல் முகாம் என்று அழைக்கப்படும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய நிலை பற்றி என்ன சொல்கிறீர்கள்?


சுனிலா அபேசேகரா : இந்த மக்கள் இம் முகாம்களுக்குள் தஞ்சமடைந்து ஒரு சில மாதங்களை கடந்த பின்னரும், அவர்களுடைய சுகாதார நிலைமைகளை மேம்படுத்த, போதிய கவனம் எடுக்கப்படவில்லை. முகாம்களில் உள்ள பெரும்பாலோனோர் ஊட்டச்சத்து அற்றவர்களாகவும், காயங்களால் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களாகவும் காணப்படுகின்றனர். மனிதாபிமான
உதவி நிறுவனங்கள் அங்கு செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றன. இதன்காரணமாக பெரும்பாலான மக்கள் தங்களுக்குத் தேவையான எவ்வித உதவிகளையும் பெற முடியாத நிலையில், கவனிப்புக்கு ஆளாகாத நிலையிலேயே காணப்படுகின்றனர். அத்துடன், கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி வவுனியா உயர் நீதிமன்ற நீதிபதி ஒரே நாளில், பட்டினியால் 14 வயோதிபர்கள் மரணமடைந்ததாக அறிக்கையிட்டதோடு இது தொடர்பாக அரசாங்கம்
கவனம் எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இது ஒரு உதாரணம் அங்குள்ள நிலைமைகளைப் புரிந்து கொள்ள.


ஷாமினி பீரிஸ்: சர்வதேச மனிதாபிமான உதவி நிறுவனங்கள் அங்கு செல்லவும் உதவி வழங்கவும் அரசாங்கம் ஏன் தடை விதித்து வருகிறது?
சுனிலா அபேசேகரா : இந்த மூன்று இலட்சம் பேருக்குள்ளும் புலிகள் ஊடுருவியிருக்கலாம் என்று அரசாங்கம் சொல்கிறது. இருக்கலாம். அந்த யதார்த்தத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அரசாங்கத்தின் எண்ணமென்னவென்றால் அவ்வாறான புலிகளை களைந்தெடுத்துவிட்டு இந்த உதவி அமைப்புக்களை அங்கு செல்ல அனுமதிக்கலாம் என்பது தான். ஆனால் நாங்கள் சொல்கிறோம் அவ்வாறு புலிகளை இனம் கண்டு கைது செய்யும் நடவடிக்கை சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று.
இடம் பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் என அழைக்கப்படும் இம் முகாம்கள் இராணுவத்தால் காவல் காக்கப்படுகின்றன. அந்த மக்களின் நடமாட்டம் முற்று முழுதாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக யாரும் இந்த முகாம்களுக்கு விஜயம் செய்ய முடியாது.
துணை இராணுவக் குழுக்கள் இந்த முகாம்களுக்குச் சென்று, அங்கு தகவல் தருபவர்களின் துணையுடன் இளைஞர் யுவதிகளை அடையாளம் கண்டு முகாம்களிலிருந்து அழைத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் 11 வயதுக்கும், 18 வயதுக்கும் இடைப்பட்ட 200க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் மெனிக் பாம் முகாம், நெலுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி முகாம் ஆகியவற்றில் இருந்து துணை இராணுவக் குழுக்களினால் அழைத்துச் செல்லப்பட்டதாக அறிந்தோம். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பற்றிய விபரம் எதுவும் யாரிடமும் இல்லை. இவர்களுடைய பெற்றோர் இதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். எப்போதுமே நாங்கள் இது பற்றிய பட்டியலைக் கேட்கிறோம். இந்த முகாம்களிலிருக்கும் மக்கள் பற்றிய விபரங்களை பட்டியலை வெளியிடுங்கள் என்று கேட்கிறோம். இந்த முகாம்களிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுபவர்கள் பற்றிய விபரங்கள் எவரிடமுமில்லை. இவ்வாறு காணாமல் போபவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக உள்ளது. இதற்கு பொறுப்புக் கூறுவதற்கு யாரும் இல்லை. இது குறித்து நாங்கள் மிகுந்த கவலையடைகிறோம்.
ஷாமினி பீரிஸ்: என்னமாதிரியான காணாமல் போதல்கள் குறித்து நீங்கள் கேள்விப்படுகிறீர்கள்?
சுனிலா அபேசேகரா : முகாம்களிலிருந்து இளைஞர்களும் யுவதிகளும் துணை இராணுவக்குழுக்களால் அழைத்துச் செல்லப்படுவது பற்றி நாங்கள் கேள்விப்படுகிறோம். அவ்வாறு அழைத்துச் செல்லப்படுபவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதனை எங்களால் அறிய முடியவில்லை.

விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறி பத்தாயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று எமக்குத் தெரியாது. அவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் யாரிடமும் இல்லை. விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களின் குடும்பத்தவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. உதாரணமாக சூசையின் மனைவி பிள்ளைகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று நாங்கள் அறிய முற்பட்டோம். அது சாத்தியமில்லாமல் இருக்கிறது.

ஷாமினி பீரிஸ்: தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களில் இவர்கள் சித்திரவதைக்குள்ளாவதான செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அபூகிரேப் போன்று. இதைப்பற்றி நீங்கள் என்ன
கேள்விப்படுகிறீர்கள்?
சுனிலா அபேசேகரா : இலங்கையின் புலனாய்வுத்துறையினர் சித்திரவதையில் கைதேர்ந்தவர்கள் என்பதை உலகறியும். 2007இல் ஐநா பிரதிநிதி இலங்கைக்கு வந்த போதே பயங்கரவாதத்
தடைச்சட்டத்தின் கீழும் அவசரகால நிலைமைகளின் கீழும் மட்டுமல்ல சாதாரண சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையும் மோசமாக இருப்பதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். சித்திரவதை விட்டுவிடுங்கள், ஒரு சிறிய இடத்தில் அதிகளவானவர்களை அடைத்து வைத்தல், மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் அவர்களுக்குக் கிடைக்காதிருத்தல், அடித்தல், துன்புறுத்தல் முகத்தில் துணியை வைத்து வெந்நீர் ஊற்றுதல் என்று அவை ஏராளம் உண்டு. இதன் ஒரு பகுதியாகத் தான் அவர்கள் வெளியில் வந்து அதனை வெளிப்படையாகச் சொன்னதால் தான் கனடா, லண்டன், மற்றும் ஐரோப்பிய நாடுகள் அகதி அந்தஸ்த்து வழங்கவாரம்பித்தன. இவ்வாறன ஏராளமான சான்றுகள் சித்திரவதைகளுக்கு உண்டு.
ஷாமினி பீரிஸ்: இந்நிலையில் எவ்வாறான அழுத்தங்கள் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது? யாரால்?
சுனிலா அபேசேகரா : சர்வதேச சமூகத்தால் தான் இந்நேரத்தில் அழுத்தத்தைக் கொடுக்க முடியும். ஆகக் குறைந்தது மிக அடிப்படையான விடயங்களையாவது – குறிப்பாக இம்முகாம்களில்
இருப்பவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய தரவுகளையாவது வெளியிட வேண்டுமென்று கேட்க வேண்டும். இறுதி யுத்தத்தில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
எவ்வளவு பேர் காயமடைந்தார்கள் என்ற விபரம்கூட சரியாக இல்லை. இருபதாயிரம் பேர் கொல்லபட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால் அரசாங்கம் அதனை மறுக்கிறது. கனடா லண்டன், பிரான்ஸ் ஜேர்மனி போன்ற நாடுகளில் உள்ளவர்களின் சகோதரர்கள், பெற்றார்கள், பேரர்கள், உறவினர்கள் என்று ஏராளமானோர் போர்ப்பிராந்தியத்தில் இருந்தார்கள். ஆகக் குறைந்தது இவர்களுக்காகவாவது இந்த மக்கள் எங்கு இருக்கிறார்கள் முகாம்களிலா, அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா? அல்லது வைத்தியசாலையிலா என்று தெரிவிக்க வேண்டும்.
இதனை மறுப்பது மனிதாபிமானத்திற்கு எதிரானது. அந்தவகையில் சர்வதேச சமூகம் இது பற்றி இலங்கை அரசிடம் கேள்வியெழுப்ப வேண்டும்.
ஷாமினி பீரிஸ்: இலங்கை அரசாங்கத்தை இது குறித்து கேள்வி கேட்கவேண்டியவர்கள் யார்?
சுனிலா அபேசேகரா : சீனர்கள், ஜப்பானியர்கள், தென்னாபிரிக்கர்கள், பிரேசிலியர்கள். மிக அடிப்படையான மனிதாபிமான விடயங்கள் குறித்து இந்த நான்கு நாடுகளும் கேள்வியெழுப்ப வேண்டும். முகாம்களுக்கு செல்வதற்கான உரிமை மற்றும் முகாம்களில் இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் ஆகிய அடிப்படை விடயங்கள் குறித்து முதலில் பேச வேண்டும்.
ஷாமினி பீரிஸ்: ஏன் இந்த நாடுகள் கேள்வியெழுப்ப வேண்டும்?
சுனிலா அபேசேகரா : ஏனென்றால் அரசியல் பொருளாதார இடையீடுகள் இந்த நாடுகளுக்கு இலங்கையுடன் உள்ளன. இலங்கைஅமெரிக்காவிலிருந்தோ கனடாவிலிருந்தோ ஐரோப்பாவிலிருந்தோ வரும் எத்தகைய அழுத்தங்களையும் ஏகாதிபத்திய காலனித்துவ சதியாகக் காட்டி அதனை நிராகரித்து விடுகிறது. ஆனால் இந்த நாடுகள் இலங்கையுடன் இணைந்து
பயணிப்பவர்கள், சீனா பெருமளவில் இலங்கையில் முதலிட்டுள்ள ஒரு நாடு. இலங்கைக்கு பெரியளவிலான கடன்களையும் உதவிகளையும் அது வழங்குவதாக உத்தரவாதமளித்திருக்கிறது. பிரேசில் அணிசேரா நாடுகளில் செல்வாக்குச் செலுத்தக் கூடியது.
தென்னாபிரிக்கா எப்பொழுதும் இலங்கைப்பிரச்சினையை அவதானித்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த நாடுகளுக்கு இலங்கையைக் கேள்வியெழுப்பும் பொறுப்பும் பாத்தியதையும் உண்டு.
நன்றி: ரியல்நியூஸ் updated - 2009-06-14மூலம் - மொழியாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்

No comments: