Monday 23 April, 2007

முக்கிய இலங்கைச் செய்திகள்

ஸ்ரீ லங்காவிற்கு ஆயுத வழங்கல்- தமிழக சட்ட சபையில் அமளி
நிஷாந்தி

தமிழர்களை வதைக்க இலங்கையில் உள்ள சிங்கள இராணுவத்தினருக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி உதவிடக்கூடாது, தமிழர்களை வதைப்பதற்காக அது பயன்படும் ஆகவே அந்தச் செயலைக் கண்டிப்பாக நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கின்ற உரிமை எமக்கு இருக்கின்றது, பொறுப்பும் எமக்கு இருக்கின்றது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

இராணுவத் தளபாடங்களை சிறிலங்காவுக்கு மத்திய அரசு கொடுப்பதாக வந்துள்ள செய்தி நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அங்குள்ள தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் சமரச தீர்வு வரவேண்டும் என்று போப் ஆண்டவர் உட்பட பலர் சொல்கின்றார்கள். இந்த சூழ்நிலையில் சிறிலங்காவுக்கு இராணுவ உதவியை மத்திய அரசு வழங்காமல் இருக்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் கோ.க. மணி கோரிக்கை விடுத்துள்ளார்.

பத்திரிகையிலே வந்த இந்த கருத்துக்கள், செய்திகள் உண்மையானவைதானா என்பதனை அறிந்துகொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். என்ன செய்தி வந்திருக்கின்றதென்றால் இலங்கைக்கு போர்க் கருவிகளை வழங்குவதில்லை என்ற முடிவுக்கு மாறாக இந்திய அரசு தற்போது ஆயுதங்களை வழங்கியுள்ளது என்று செய்தி வந்திருக்கின்றது. ஆனால் இது உண்மைதானா என்பதனை அறிந்து கொள்ள வேண்டிய அந்த வாய்ப்பை நாம் உருவாக்கிகொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அந்த வாய்ப்பு நமக்குக் கிடைத்தது உண்மைதான் என்றால் நாம் மத்திய அரசுக்கு, இதிலே இன்னும் ஒற்றுமையோடு இருந்து நம்முடைய அழுத்தமான வேண்டுகோளை விடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என தமிழக முதலமைச்சர் சபையில் தெரிவித்துள்ளார்.
நன்றி: வீரகேசரி 04-23-2007

அழுத்தம்: ENB

நோர்வே தூதுவரின் கிளிநொச்சி விஜயம் இரத்து
நிஷாந்தி

நோர்வே தூதுவரின் இன்றைய கிளிநொச்சி விஜயம் இரது செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களிற்க்காகவே நோர்வே தூதுவர் ஹென்ஸ் பிரஸ்கர் கிளிநொச்சி செல்வதை இரத்து செய்யுமாறு அரசாங்கம் கோரியதையடுத்து விஜயம் இரத்து செய்யப்பட்டதாக தூதரக பேச்சாளர் எரிக் நுர்கன் பேர்க் தெரிவித்துள்ளார்.

நன்றி: வீரகேசரி :4/23/2007 :: 4:08:28 AM

பொலிஸாருக்குரிய சிவில் அதிகாரங்கள் அனைத்தும் அரசால் முப்படையினருக்கும் வழங்கப்பட்டது
[23 - April - 2007] -கே.பி.மோகன்-

சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொலிஸ் அதிகாரங்களை அரசாங்கம் முப்படையினருக்கும் வழங்கியுள்ளது.
2007.04.06 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 1491/18 இலக்க அதி விசேட வர்த்தமானியின் மூலம் பொது மக்கள் பாதுகாப்பு சட்டவாக்க 40 ஆம் அதிகாரத்தின் கீழேயே பொலிஸ் அதிகாரங்கள் முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இச்சட்டத்திற்கு அமைய இனிமேல் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினரும் பொலிஸாரின் கடமைகளை செய்ய அரசாங்கம் உத்தியோகபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்திற்கு அமைவாக படையினர் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை பேணும் பொலிஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இச்சட்ட அதிகாரம் முதலில் நடைமுறைக்கு வருகிறது.
பின்னர் ஏனைய மாவட்டங்களுக்கும் படையினரின் இந்த அதிகாரம் விஸ்தரிக்கப்படவுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் உத்தியோக பூர்வமாக இந்த நடவடிக்கைகளில் படையினர் ஈடுபடவுள்ளனர்.

சகலவிதமான கைதுகள், கலகம் அடக்குதல், சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் கூட்டங்கள், பேரணிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்தல், சட்டம் ஒழுங்கைப் பேணுதல் போன்ற சகல சிவில் நடவடிக்கைகளிலும் படையினர் ஈடுபடுவர்.

சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அனைத்து பொதுமக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, அமைதியை நிலைநாட்டுவது, சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போன்ற பொலிஸ் நடவடிக்கைகளை மேலும் இலகு படுத்தும் நோக்குடனேயே அரசாங்கம் பொலிஸாருக்குள்ள அதிகாரங்களை படையினருக்கும் வழங்கியுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நிறைவேற்று அதிகாரம் மூலம் பொலிஸ் அதிகாரங்கள் படையினருக்கும் ஜனாதிபதியினால் வழங்கும் உத்தரவு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பொலிஸ் அதிகாரங்கள் முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

நன்றி: தினக்குரல்

பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம்
[23 - April - 2007]

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட தமிழ், சிங்கள அரசியல்கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை நீதிமன்றில் ஆஜர்செய்து விடுவிக்க வேண்டுமெனக்கோரியே இவர்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில்வே தொழிற்சங்க ஒன்றிய சம்மேளனத் தலைவர் சரத்குமார பொன்சேகா கடந்த மூன்று தினங்களாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் நிலையிலேயே ஏனைய அரசியல்கைதிகளும் அவருடன் இணைந்து இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பூஸா தடுப்பு முகாமில் 6 பெண்கள் உட்பட 81 தமிழ், சிங்கள அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினக்குரல்

ஐ.நா. வின் மனிதாபிமான உதவி அமைப்பின் இணைப்பு அமைப்பை வெளியேறுமாறு பணிப்பு
[23 - April - 2007]

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவி அமைப்புகளின் இணைப்பு அமைப்பை வடக்கு, கிழக்கு மாகாணங்களை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த அமைப்பு அதன் தேவைக்குரிய காலப்பகுதியை விட அதிக காலம் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பானது ஆழிப்பேரலை நிவாரண உதவிகளை வழங்குவதற்காக வந்திருந்தது. எனினும், வேறு பல தேவைகளுக்காக இங்கு அது தொடர்ந்து தங்கி சேவைகளை ஆற்றி வருகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவி அமைப்புகளின் இணைப்பு அமைப்பானது மனித உரிமைகள் விவகாரத்தில் கண்காணிப்பை மேற்கொள்வதாக அரசாங்கம் கோபமடைந்துள்ளது.

வேறு பல அமைப்புகள் மனித உரிமை கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்துள்ளது.
ஆழிப்பேரலை நிவாரண உதவிகளுக்காக இலங்கைக்கு தமது அமைப்பு வந்திருந்தது எனவும் எனினும், அது மோதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிப் பணிகளை ஆற்றி வந்திருக்கின்றது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவி அமைப்புகளின் இணைப்பு அமைப்பின் பேச்சாளர் ரீபென் பங்கர் நியூயோர்க்கில் தெரிவித்துள்ளார்.
தமது அமைப்பு மனித உரிமைகள் விவகாரத்தை கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த அமைப்பின் தலைவர் வலன்ரின் ஹற்சின்ஸகி தற்போது கிளிநொச்சியில் தங்கியுள்ளதுடன், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினக்குரல்

தோட்டத்தில் தமிழ்ப் பாடசாலை இல்லை; பிள்ளைகள் சிங்களப் பாடசாலைகளில் கற்க வேண்டிய நிலைமை
[23 - April - 2007]

மில்லவான தோட்டத்தில் தமிழ்ப் பாடசாலை ஒன்று இல்லாததன் காரணமாக அத்தோட்டத்தில் வாழும் தமிழ்த் தொழிலாளர்களின் முப்பது பிள்ளைகள் சிங்களப் பாடசாலையில் சிங்கள மொழிமூலம் பாடங்களை கற்கின்றனர். இப்பிள்ளைகள் தமிழ் மொழியை எழுதவோ, படிக்கவோ அல்லது தமிழில் பேசவோ முடியாதுள்ளதுடன் தமது பெற்றோர்களுடன் சிங்கள மொழியிலேயே உரையாடுவதையும் காண முடிகிறது.
பெற்றோர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் அதற்கு சிங்களத்திலேயே பதிலும் அளிக்கின்றனர்.
அதுமட்டுமன்றி, இப்பிள்ளைகள் இந்துக்களாக இருந்தும் இந்து சமய கலாசார பண்பாடுகளை அறியாதவர்களாக உள்ளனர்.

சிங்கள மொழியைக் கற்பதால் சிங்கள மக்களின் கலை, கலாசார, பண்பாடு பாரம்பரியங்களையே கடைப்பிடித்து வருகின்றனர்.

தமிழ்ப்பிள்ளைகளான இவர்கள் எதிர்காலத்தில் தமிழர்களாகவே வாழுவார்களா? அல்லது தங்களை அறியாமல் மதம் மாறிவிடுவார்களா என்பதே கேள்வியாக உள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினை தொடர்பாக இப்பிள்ளைகளின் பெற்றோர்களிடம் கேட்டபோது தமது பிள்ளைகள் தமிழ் மொழியிலேயே கல்வி கற்று வரவேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் அதனால் தோட்டத்தில் தமிழ்ப்பாடசாலை ஒன்றை அமைத்து தரும்படி தோட்டத் துறை சார்ந்த அரசியல்வாதிகளிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், எவருமே உரிய நடவடிக்கை எடுக்காததால் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதாலேயே சிங்கள பாடசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே, இனிமேலாவது சம்பந்தப்பட்டவர்கள் தமிழ்ப் பாடசாலை ஒன்றை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், தவறினால் எமது பிள்ளைகள் வருங்காலத்தில் சிங்கள மொழியிலேயே கற்று வரவேண்டும் எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


நன்றி: தினக்குரல்

3 comments:

arulmooli said...

nalla mayrchi

arulmooli said...

eelam cheithipalagai is

arulmooli said...

naadu patiya makkal patiya oru arrivupoorvamana villakankal ihtu oru vivada medaiyaga mara annivarum munvaraveendum