Wednesday, 16 May 2007

தாயகச் செய்திகள்

கட்சிகளின் தீர்வு யோசனைகளுக்கு காத்திருக்கிறது பிரதிநிதிகள் குழு
ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

இன நெருக்கடிக்கு தீர்வு காணும் யோசனைகளை அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்கும் பொருட்டு தாம் தொடர்ந்தும் காத்திருப்பதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தவிசாளரும் அமைச்சருமான போராசிரியர் விஸ்வ வர்ணபால தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு அரசியல் கட்சிகளின் தீர்வு யோசனைகளுக்காக தொடர்ந்தும் காத்திருக்கிறது. இக்காத்திருப்பு எவ்வளவு காலம் நீடிக்கப்போகிறது எனக்கூற முடியாது.
அரசியல் கட்சிகளின் தீர்வு யோசனைகள் கிடைக்கப்பெற்ற பின்னரே சர்வகட்சிப் பிரதிநிதிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்ய முடியும். அரசியல் கட்சிகளின் இன நெருக்கடிக்கு தீர்வு யோசனைகளை ஆராய்வதே எமது பணி. இதற்கு மாறாக கட்சிகளின் தீர்வு யோசனைகள் குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை.
இதேவேளை, சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற காலதாமதம் ஏற்பட்டுள்ளமை காரணமாக இனநெருக்கடிக்கு தீர்வு காணும் இறுதி யோசனைகளைத் தயாரித்து சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவிற்கு கையளிக்கவும் கால தாமதம் ஏற்படும்.
இதேசமயம் சுதந்திரக் கட்சி தயாரித்துள்ள தீர்வு யோசனைகளை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் கையளிக்கும் வரை ஹெல உறுமய மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன காத்திராமல் தமது யோசனைகளை சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் கையளிப்பதே சிறந்ததெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


கொழும்பு மாநகரசபை கலைக்கப்படுமென எச்சரிக்கை
ப.பன்னீர்செல்வம்

கொழும்பு மாநகர சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பாக குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதோடு இது தொடர்பாக 14 நாட்களுக்குள் விளக்கமளிக்கப்படாவிட்டால் மாநகரசபை கலைக்கப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ள மேல்மாகாண சபை முதலமைச்சர் றெஜினோல்ட் குரே, 8 குற்றச்சாட்டுகள் அடங்கிய அவசர கடிதமொன்றை மாநகர முதல்வர் உவைஸ் மொஹமட்டுக்கு அனுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே மேல்மாகாணசபை முதலமைச்சர் குரே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்;
கொழும்பு மாநகரசபையில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப் படும் கூரைத்தகடுகள், தையல் மெஷின்கள் கொள்வனவு செய்தலில் 20 மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது.
மாநகர சபை வேலிக்கு வர்ணம் பூசுதல், விளம்பரப்பலகைகள் வாடகைக்கு வழங்கல், குப்பைகளை அகற்றும் தனியார் நிறுவனத்திற்கு மீண்டும் அப்பணியை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கேள்விகோரலின்றி வழங்கியதோடு பணத்தை லஞ்சமாக பெற்றமை மற்றும் கேள்விக்கோரல் கட்டளைகளை மீறிச்செயற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முதல்வர் 14 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால் சபை கலைக்கப்படும் அல்லது சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்படும்.
அத்தோடு இக் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் குற்றவாளியாகக் காணப்பட்டால் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்படுவார். இக் குற்றச்சாட்டுக்களுக்கு மேலும் பலர் குற்றவாளிகளாக காணப்பட்டால் சபை கலைக்கப்படுமென்றும் முதலமைச்சர் றெஜினோல்ட் ருரே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் அதன் எதிர்காலம் தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா, அமைச்சர்களான கரு ஜயசூரிய, ஜனக பண்டார தென்னகோன் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் அமைச்சர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இப்பேச்சுவார்த்தைகளின் பின்பே ஊழல் மோசடிகள் தொடர்பான அறிக்கை முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மாநகர முதல்வர், பிரதி முதல்வர் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதி பூண்டிருப்பதாக மகாநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
எம்.ஏ.எம்.நிலாம்

எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை தமக்கிருப்பதாகவும் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்கு தான் உறுதிபூண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை கண்டியில் மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் வலியுறுத்தித் தெரிவித்திருக்கின்றார்.
விமர்சனங்கள், சேறுபூசும் நடவடிக்கைகளைக்கண்டு தான் சோர்வடையப் போவதில்லையெனவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையென்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றுக்காலை கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ முதலில் மல்வத்தை பீடாதிபதி திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரோவை மல்வத்தை பீடத்திலும் அடுத்து அஸ்கிரிய பீடத்துக்குச் சென்று பீடாதிபதி உடுகம் ஸ்ரீ புத்தரகித்த தேரோவையும் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், தொடர்பாக ஜனாதிபதி பீடாதிபதிகளுக்கு விளக்கிக்கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எவர் விமர்சித்த போதிலும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தவும் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும் மேற் கொள்ளும் முயற்சிகளைத் தொடருமாறு பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இரண்டு பீடாதிபதிகளிடமும் நாட்டு நிலைமைகளை விளக்கிக் கூறுகையில், தனது அரசாங்கம் சமாதான முயற்சிகளிலிருந்து விலகவில்லையெனவும் நிலையான சமாதானத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதேவேளை, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளையும் பாதுகாப்புத் தரப்பு மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. சில தீய அரசியல் சக்திகள் நாட்டு மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிட முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு கோணங்களிலும் அரசு பல சவால்களை எதிர் கொண்ட நிலையிலும் அபிவிருத்திப் பணிகளை முறையாக மேற்கொண்டு வருவதாகவும் தெற்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் போன்றே வடக்கு - கிழக்கிலும் முன்னெடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
பீடாதிபதிகளை சந்தித்த பின்னர் ஜனாதிபதி கண்டி தலதா மாளிகைக்கும் கெட்டம்பை விகாரைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்த விகாரைகளுக்கு வருகை தந்திருந்த மக்களுடனும் ஜனாதிபதி சிறிது நேரம் கலந்துரையாடினார்.
ஜனாதிபதியுடன் தியவதன நிலமே நிலங்கா தேலபண்டார, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் பங்கேற்றனர்.


ஜூன் முதல் பஸ் கட்டணம் 20% அதிகரிப்பு பஸ் உரிமையாளர் சங்கம் உறுதியாக தெரிவிப்பு
கே.பி.மோகன்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எத்தகைய தீர்மானங்களை எடுத்தாலும் ஜூன் முதலாம் திகதி முதல் தனியார் பஸ் கட்டணங்கள் 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள பெண்கள் ஆய்வு நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகவே தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டியுள்ளது. நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் பஸ் சேவையை மேம்படுத்த அரசாங்கம் எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாத நிலையில் இப் பிரச்சினை தனியார் பஸ் சேவையையும் பொது மக்களையும் பாரிய தாக்கத்திற்குள்ளாக்கியுள்ளது.
அதனால் தேசிய போக்குவரத்து கொள்கைக்கு ஏற்ப பஸ் கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்.
அன்மைக் காலத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் எரிபொருளின் விலையை திடீர் திடீரென அதிகரிப்பு செய்ததுடன் சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியது.
முதலில் 7 ரூபாவினாலும் இரண்டாவது தடவை 2 ரூபாவினாலும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள் டீசல் லீற்றரின் விலை 9 ரூபாவினால் அதிகரித்தது.
இதன் காரணமாகவே, தனியார் பஸ் கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றியுள்ளது.
நாம் எதிர்பார்க்கும் பஸ் கட்டண அதிகரிப்பு இலாபம் அடையும் நோக்கத்துடன் தீர்மானிக்கப்படவில்லை. ஏற்படும் நட்டத்தை ஓரளவாவது குறைத்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே கணிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அரசாங்கத்தை சிரமத்தில் ஆழ்த்தவோ அல்லது பயணிகளுக்கு சிரமத்தை கொடுக்கவோ நாம் ஒருபோதும் சிந்திக்கவில்லை. நிலைமைகளை சமாளித்துக் கொண்டு தொடர்ந்து பஸ் சேவையை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடனேயே நாம் செயற்பட்டு வருகின்றோம்.
தனியார் பஸ் சேவையில் கப்பம் பெறும் நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ள கும்பல்கள் நேர அட்டவனை பார்ப்பவர்கள் என்று கூறும் பிரிவினர் ஆகியோரின் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளை தடுக்க அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் பட்சத்திலும் முறைப்படி டிக்கட் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு தவறிழைப்பவர்களுக்கு உரிய தண்டனைகளை பெற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பத்திலும் தனியார் பஸ் சேவை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் முயற்சிகள் மூலம் எரிபொருள் விலை அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் பஸ் கட்டண அதிகரிப்பொன்றுக்கு செல்லாமல் எம்மை தடுக்க முடியும்.
இவ்வாறான பிரச்சினைகளை ஆராய்ந்து பார்க்க தவறியுள்ள இந்த அரசாங்கம் பஸ் கட்டண அதிகரிப்பிற்கு இடமளிக்க முடியாது என்று கூறுவதில் எந்தவித பயனும் இல்லை.
போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண எம்முடன் மிகவும் புரிந்துணர்வுடன் பேசி வருகின்றார். இம் மாதம் 20 ஆம் திகதி பேச்சுவார்த்தையொன்றுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். அவருக்கு எமது அடிப்படை பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் ஆற்றல் அபாரமாகவுளளது. அவர் முன்னைய போக்குவரத்து அமைச்சர்கள் போல் விதண்டாவாதமாகவோ பிடிவாத போக்குடனோ நடந்து கொள்ளவில்லை. அதனால் எமது இந்த நியாயமான கோரிக்கைக்கு அவர் 20 ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஊடாக பஸ் கட்டன அதிகரிப்புக்கு உத்தரவாதம் பெற்றுத்தருவார்.
தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதென்ற செய்தி பரவியதும் மக்கள் இனி நடந்தாபோவது என்று கலரியில் நின்று கூக்குரலிடும் ஜே.வி.பி.யினர் எண்ணெய் விலை அதிகரிப்பின் போது சத்தமின்றி இருப்பது போல் அமைச்சர் அழகியவண்ண எமது இந்த பிரச்சினைக்கு மௌனமாக இருக்காமல் நியாயமான தீர்வை கட்டாயம் பெற்றுத் தருவார் என்றும் அவர் தெரிவித்தார்.
தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எதிர்பார்த்துள்ள 20 சத வீத பஸ் கட்டண அதிகரிப்பின் படி 5 ரூபா பஸ்கட்டணம் 6 ரூபாவாக உயரும்.


மன்னாரில் எரிபொருள் விற்பனைக்கு நேற்று முதல் புதிய நடைமுறை

மன்னார் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்களைப் பெறுபவர்களின் பெயர் விபரங்களும் அவர்களின் வாகனங்களின் விபரங்களும் பதியும் நடைமுறை நேற்றுக்காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படைத்தரப்பு மற்றும் பொலிஸாரின் உத்தரவுகளையடுத்தே எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் வாகனங்களின் விபரம், சாரதி அனுமதிப்பத்திரத்தின் இலக்கம் மற்றும் வாகன சாரதியின் பெயர், வாகன உரிமையாளரின் பெயர் விபரங்களையும் மேற்படி வாகனங்கள் பெற்றுக்கொண்ட எரிபொருட்களின் அளவையும் பதிவுசெய்தனர்.
அத்துடன், சமையல் தேவைகளுக்காக மண்ணெண்ணெயை பிளாஸ்ரிக் கொள்கலன்களில் பெறவந்த பொதுமக்கள் பெயர் விபரங்கள், அவர்கள் பெற்றுக்கொண்ட மண்ணெண்ணெயின் அளவு ஆகியனவும் பதிவு செய்யப்பட்டது.
மன்னார் நுழைவாயிலில் உள்ள மாந்தை மேற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று படைத்தரப்பு அறிமுகப்படுத்திய புதிய எரிபொருள் விநியோக முறையினால் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்களும் வாகனச் சாரதிகளும் தமக்குத் தேவையான எரிபொருட்களை பெற்றுச்சென்றனர்.
மன்னாரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமது வாகனங்கள் மூலம் பெற்றோல், டீசல் ஆகிய எரிபொருட்களை பெறுவோர் பின்னர் அதனை சேகரித்து அதிக விலைக்கு புலிகளின் பிரதேசத்துக்கு அனுப்புவதாகத் தெரிவித்தே படையினரும் பொலிஸாரும் புதிய எரிபொருட்களை மட்டுப்படுத்தி விநியோகிக்க வேண்டும் என்னும் நோக்கிலேயே புதிய நடைமுறையை அமுல்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.


படுவான்கரையில் கண்ணகியம்மன் ஆலயங்களில் பூசை, வழிபாட்டுக்கு அனுமதி வழங்கக்கோரிக்கை

படுவான்கரையிலுள்ள கண்ணகி அம்மன் ஆலயங்களில் சடங்கு செய்ய அனுமதி வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவர் எஸ்.யோகேஸ்வரன் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கடந்த இரண்டரை மாதமாக படுவான்கரைப் பகுதியிலிருந்து ஒன்றரை இலட்சம் வரையான மக்கள் இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆலயங்கள் பூசை வழிபாடின்றி பூட்டப்பட்டுள்ளன.
எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை கண்ணகிக்கு சடங்கு நடைபெறும் காலமாகும்.
படுவான்கரை பகுதியில் கண்ணகிக்கு மிகவும் சிறப்பாக சடங்கு செய்து குளிர்த்தி நடாத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த மக்கள் கண்ணகிக்கு சடங்கு நடாத்த முடியாததை இட்டு மிகுந்த வேதனை அடைகின்றனர்.
ஆலயங்களில் பூசை வழிபாடும் சடங்குகளும் திரு விழாக்களும் நடைபெறுவது மக்களதும் நாட்டினதும் அரசினதும் நன்மை கருதியே ஆகும். இவ்வாறு பூசை வழிபாடு சடங்குகள் திருவிழாக்களின்றி ஆலயங்கள் பூட்டப்பட்டிருப்பது நாட்டுக்கே தீமை விளைவிக்கும். இவ்வாறான நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
கண்ணகிக்கு சடங்கு நடாத்தி குளிர்த்தி நடாத்த, இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இதற்காக அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களை மீள்குடியமர்த்தி உதவுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள் மீள்குடியேற்ற அமைச்சர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், இந்து கலாசார திணைக்களம், மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் போன்றோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


பயங்கரவாதிகளுக்கு இறுதி எச்சரிக்கை குடாநாட்டில் மற்றொரு துண்டுப் பிரசுரம்

பயங்கரவாதிகளுக்கு இறுதி எச்சரிக்கை எனத் தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு யாழ்.குடாநாட்டிலுள்ள ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. `நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு- யாழ்.மாவட்டம்' என அடிக்குறிப்பிடப்பட்டு அமைப்பொன்றினால் விடுக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அப்பாவி பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை நாசம் செய்யும் விதத்தில் எமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தை நாம் கண்டிக்கின்றோம்.
உண்மையான பயங்கரவாதிகளின் விபரங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
பல்கலைக்கழக விடுதியில் தங்குமிட வசதிகளைச் செய்துகொடுத்து அப்பாவிப் பல்லைக்கழக மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி பாடசாலை மாணவர்களை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் ஆயுதங்களை மறைத்து வைத்தல், பகிஷ்கரிப்புப் போராட்டத்தை நடத்துதல் போன்ற தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளீர்கள்.
அப்பாவிப் பல்கலைக்கழக மாணவர்களினதும், பாடசாலை மாணவர்களினது கல்வியை சீரழித்தும் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்தை நாசமாக்கிய உங்களுக்கு மரண தண்டனையை தவிர வேறு தண்டனையில்லை.
மாணவர்களே! நீங்கள் எங்கள் தேசத்துக்கும், எங்கள் இனத்துக்கும் பெருமை சேர்க்கும் பிரஜைகளாக மிளிருவீர்கள் என எதிர்பார்க்கின்றோம். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு உங்கள் வாழ்க்கையை அழிக்காதீர்கள். கல்விச் சமூகம் என்ற வகையில் சரியான வழிகாட்டிகளாக செயற்படுங்கள் எனவும்குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி தினக்குரல் இலங்கை

No comments: