Thursday, 7 June 2007

இலங்கையில் இனப்பிரச்சனை கிடையாது!?

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றம்
இலங்கையின் தலைநகர் கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான தமிழர்களை, பொலிஸார் பலவந்தமாக வெளியேற்றியுள்ளனர்.
பாதுகாப்புக் காரணங்களை காட்டி அவர்களை பல பேருந்துகளில் ஏற்றிய பொலிஸார் வடக்கு கிழக்கில் உள்ள இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
சரியான காரணமில்லாமல் கொழும்பில் தங்கியிருப்பவர்களை தாம் பேருந்துகளில் ஏற்றி வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிக்கு அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தமது தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியிருந்தவர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அவ்வாறு வெளியேற்றப்பட்ட சிலர் தமிழோசையிடம் தெரிவித்தனர்.
மீண்டும் மோதல்கள் ஆரம்பமாகலாம் என்ற அச்சத்துக்கு மத்தியில் இந்த நடவடிக்கை தேவையானது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கை ஒரு மனித உரிமை மீறல் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கண்டித்துள்ளனர்.
இந்த விவகாரம் இன்று இலங்கை நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது.

வவுனியாவில் இருந்து ட்ரக் வண்டிகளை அனுமதிக்க மறுப்பதால் பலதரப்பினரும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது

வவுனியாவில் இருந்து நாட்டின் தென்பகுதிகளுக்கு ட்ரக் வண்டிகள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது என பொலிசாரினால் கடந்த வாரம் விதிக்கப்பட்ட தடையையடுத்து. வவுனியா நகரில் உள்ள வர்த்தகர்கள், அரிசி ஆலைகள், ட்ரக் வண்டி போக்குவரத்து சேவையாளர்கள் என பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுளளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒரு வார காலமாக கொழும்பில் இருந்து பொருட்கள் வராத காரணத்தினால் வவுனியாவில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை தோன்றியுள்ளதாக வவுனியா வர்த்தகர்கள் பலரும் அச்சம் வெளியிடுகின்றனர். வவுனியா அரசாங்க அதிபரைச் சந்தித்த வர்த்தகர்கள், இந்த நிலைமை குறித்து எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


பி.பி.சி.தமிழோசை

No comments: