அதிகாரப்பகிர்வு யோசனையை அமுல்படுத்த விடமாட்டோம்
வீரகேசரி நாளேடு
அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் அமைந்த தீர்வு யோசனையை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு வெளியிட்டால் நாங்கள் வீதியிலிறங்கி போராட்டம் நடத்துவோம். இந்த நாட்டில் ஒருபோதும் அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனையை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று ஜே. வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனை இன்னும் ஆறு வாரங்களில் வெளியிடப்படும் என்று சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது :
அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனையை வெளியிட்டால் அதனை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடுவோம். மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை மேற்கொள்வோம். அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் அமைந்த தீர்வு யோசனை மூலம் ஒருபோதும் நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்க்க முடியாது. இவ்வாறான தீர்வு யோசனைகளை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டின் பிரச்சினை மேலும் உக்கிரமடையுமே தவிர எந்தப்பிரச்சினைக்கு தீர்வை காண முடியாது.
ஜே.வி.பி. என்ற அரசியல் கட்சியை மீறி இந்த நாட்டில் எந்தவொரு அரசியல் தீர்வையும் நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதனை நாங்கள் வரலாற்றில் காட்டியுள்ளோம். சுனாமி மீள்கட்டமைப்பு தொடர்பான பொதுக்கட்டமைப்பை நாங்கள் தடுத்து நிறுத்தியதனை யாரும் மறந்துவிடக்கூடாது. அத்துடன் சட்டரீதியற்ற முறையில் இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு எமது கட்சியின் முயற்சியினாலேயே பிரிக்கப்பட்டது.
அந்தவகையில் எதிர்காலத்தில் எந்தவிதமான பாதகமான அரசியல் செயற்பாடுகளும் இடம்பெறுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். எம்மை மீறி முடியுமானால் அரசாங்கம் அதிகாரப்பகிர்வில் அமைந்த யோசனையை நடைமுறைப்படுத்தட்டும் பார்க்கலாம்.
அதிகாரப்பகிர்வில் அமைந்த யோசனையை அரசாங்கம் முன்வைக்குமிடத்து நாங்கள் சட்டத்தின் உதவியை நாடவும் தயங்கமாட்டோம். நாட்டின் சட்டத்தை மீறி எந்தவொரு தீர்வு யோசனையையும் அமுல்படுத்த முடியாது.
புலிகளுக்கு நிதி வழங்கியவர்களே உண்மையான சிங்கள புலிகளாவர்
வீரகேசரி நாளேடு
விடுதலை புலிகளுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நிதி வழங்கியவர்களே உண்மையான சிங்கள புலிகளாவர். எனவே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் கொழும்பிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவை பிறப்பித்த அதிகாரிகளுக்கு எதிராகவும் உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது :
கொழும்பில் உள்ள லொட்ஜ்களிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவை பிறப்பித்த அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிடின் அரசாங்கம் சர்வதேசத்துக்கு முன்பாக தலைகுனிய வேண்டிய நிலைமை ஏற்படும். தற்போதைக்கும் சர்வதேச ரீதியில் 326 பத்திரிகைகளில் இந்த விவகாரம் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரியவருகின்றது. அதேவேளை ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் இலங்கைக்கு பாதகமான முறையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிகின்றது.
இதேவேளை தமிழர் வெளியேற்றப்பட்ட விவகாரம் குறித்து பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க மக்களிடம் வருத்தம் தெரிவித்தார். ஆனால் அதனை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே எதிர்த்துப் பேசினார். அமைச்சர்களுக்கு அமைச்சரவை பொறுப்பு என்ற ஒன்று உள்ளது. அந்த பொறுப்பை அமைச்சர் ஜெயராஜ் மீறியுள்ளார். எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அரசாங்கம் நேர்மையான முறையில் மக்களிடம் வருத்தம் தெரிவித்ததா? என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள லொட்ஜ்களிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவை பிறப்பித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று சர்வமத தலைவர்கள் அண்மையில் இடம்பெற்ற மாநாட்டில் தெரிவித்துள்ளனர். அதனை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியமை தற்போது உறுதி செய்யப்பட்டுவருகின்றது. ஆனால் அந்த கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புபட்ட ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும்அ நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு தற்போது 100 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் இதுவரை அரசாங்கம் மௌனமாகவே இருக்கின்றது.
அரசாங்கம் அண்மைக்காலமாக சிங்களப் புலிகள் குறித்து கருத்து தெரிவித்துவருகின்றது. ஆனால் உண்மையில் புலிகளுக்கு நிதி வழங்கியவர்களே சிங்கள புலிகளாவர். எனவே கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது புலிகளுக்கு நிதி வழங்கிய சிங்கள புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். உண்மையான சிங்கள புலிகள் யார் என்பதனை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். இது குறித்து தீர்மானிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றோம்.
மகிந்தவை ஜனாதிபதியாக்க புலிகளுக்கு பணம் கொடுத்த பலர் அரசில் அங்கம்
[19 - June - 2007]
ரிரான் அலஸ் கூறுகிறார்
கே.பி.மோகன்
மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக புலிகளுக்கு பணம் கொடுத்து உதவிய பலர் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருவதாக விமான நிலைய விமான சேவைகள் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ரிரான் அலஸ் நேற்று திங்கட்கிழமை மாலை அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது குற்றம்சாட்டினார்.
கடந்த சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததோடு சுகம் பெற்று நேற்று அங்கிருந்து வெளியேறிவந்த பின்னரே பொறளையிலுள்ள அவரது வீட்டில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
என்னை தனது சகோதரராக ஏற்றுக் கொண்டிருந்த ஜனாதிபதி தன்னுடன் இருந்த முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் மங்கள சமரவீரவை அரசியல் ரீதியில் பழிவாங்கியதுடன் நானும் போது மோசமான வகையில் பழிவாங்கப்பட்டேன். ஏன் இவ்வாறு நடந்து கொண்டனர் என்பது சிலருக்கு தெரியும். உயர் மட்டத்தில் இடம் பெற்ற பல சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு தொடர்புபடுத்தி எங்களையும் பங்காளர்களாக்க முயற்சித்தனர். அதற்கு இடமளிக்காத போதே மங்கள சமரவீர, ஷ்ரீபதி சூரியாராச்சி ஆகியோருடன் என்னையும் அரசியல் குற்றம் சுமத்தி பழிவாங்கினர்.
இந்த நடவடிக்கைகளுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர்களை விட்டு ஒதுங்கும் படியும் எனக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. அமைச்சர் மங்களவை விட்டு விலக முடியாதென தெரிவித்த பின்னர் விமானநிலைய விமான சேவைகள் திணைக்கள பதவியிலிருந்து நான் அகற்றப்பட்டேன். பின்னர் புலிகளுக்கு பணம் கொடுத்த விடயத்தை மறைப்பதற்காக சட்ட நடவடிக்கையென பொலிஸாரை விட்டுத் துன்புறுத்தி நோயாளராக்கின்றனர்.
எனது வெளிநாட்டு பயணங்களை தடுத்தனர். சிலர் வீட்டை உடைத்தார்கள். இதுபோன்று மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்கு மூலத்தில் புலிகளுக்கு பணம் கொடுத்து பதவிக்கு வந்தது தொடர்பாக கூறி இருந்தேன்.
மேலும், பல இரகசியங்கள் உள்ளன. அவற்றை புள்ளி விபரங்களுடன் விரைவில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவேன்.
நான் மங்களவை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். அதேபோல் ஷ்ரீபதியுடனான சகவாசத்தையும் விடமாட்டேன். அரசாங்கத்தின் ஊழல் மோசடி நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தாமல் இருக்கமாட்டேன்.
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது. எனது பத்திரிகை நிறுவனத்தை மூடிவிட்டனர். நிறுவன வங்கிக் கணக்கை முடக்கி விட்டனர். இதனால், நான் பாரிய நிதி நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கிறேன் என்றார்.
அரசியல் தீர்வென்ற போர்வையில் தொடரும் நில அபகரிப்பு யுத்தம்?
[19 - June - 2007]
அரசில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் செய்யவேண்டிய காரியம் "அது ஒரு பெரியதவறு. அப்படியான தவறொன்று நடந்திருக்கக் கூடாது. இனிமேல் அது நடவாது" என்று தான் தமிழர் கொழும்பு `லொட்ஜ்"களிலிருந்து வெளியேற்றியது தொடர்பாக வருத்தம் தெரிவிக்கையில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க ஊடகவியலாளர் மாநாட்டில் அண்மையில் கூறிவைத்தார். பின்னர் ஜெனிவா நகரில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO)96 ஆவது வருடாந்த கூட்டத்தில் உரையாற்றியபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அது தொடர்பாக சற்று வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும், தமிழர் விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தும் விதத்திலேயே ஜனாதிபதியின் உரை அமைந்திருந்தது. "நாம் லொட்ஜ்களிலிருந்து ஆட்களை வெளியேற்றியதையிட்டு அண்மையில் அதிக கரிசனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக ஏறத்தாழ 20,000 பேரில் 302 பேர் மட்டுமே இதில் சம்பந்தப்பட்டவர்கள். அவர்களில் பலர் சுயவிருப்பின் பேரிலேயே சென்றனர். இந்த விடுதிகளிலிருந்துதான் அநேகமாக எல்லா தற்கொலைக் குண்டுதாரிகளும் செயற்பட்டு வந்துள்ளனர். எனவே நாம் விசேட கவனம் செலுத்தவேண்டிய நிலையில் உள்ளோம். இலங்கை ஆயுதப்படையினர் மற்றும் காவல் துறையினர் உலகில் மிக ஒழுக்கமான படைகளோடு ஒப்பிடக் கூடியவர்கள். அவர்கள் மனித உரிமைகளை பெரிதும் மதிப்பவர்கள். உலக அரங்கில் எம்மீது பரப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அதிகளவு பெரிதுபடுத்தப்பட்டுள்ளன" என ஜனாதிபதி தனதுரையில் குறிப்பிட்டிருந்தார். "படையினர் எல்லாம் சுத்தமானவர்களல்ல. ஆட்கடத்தல்களில் படையினரிற் சிலர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்" என யாழ்.படைத்தளபதி சந்திரசிறி சென்றவாரம் கூறியதும் ஞாபகத்திற்கு வருகிறது.
மற்றும் பிரதமர் மேற்கூறியவாறு வருத்தம் தெரிவித்தது தவறென அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தனக்கே உரிய பாணியில் கூறியதையிட்டு அலட்டத் தேவையில்லை. ஆனால், பாதுகாப்புச் செயலாளர் `லொட்ஜ்'களிலிருந்து தமிழர் வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளார். அத்தோடு மேற்கு நாடுகள் எம்மை மிரட்டமுடியாது. இங்கு அண்மையில் வருகை தந்திருந்த பிரித்தானிய அமைச்சர் `கிம் ஹவால்ஸ் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வாயைத் திறக்கவேயில்லை, ஐ.நா.அமைப்புகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளனர், என்றெல்லாம் ஆவேசப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ராஜபக்ஷ ஆற்றிய ILO உரையினை நாம் மீண்டும் சற்று நோக்குவோமாயின் நாம் இராணுவத் தீர்வு ஒன்றினை நம்பியிருக்கவில்லை. தனது பல்லின அரசாங்கம் எந்தவொரு இனத்தையும் புறக்கணிக்கவில்லை. சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (APRC) இனப்பிரச்சினைக்கான அரசியல தீர்வுக்குரிய பல்வேறு யோசனைகளை ஆராய்ந்து வருகிறது. அதனூடாக நல்லதொரு முடிவு எட்டப்படும் என தான் திடமாக நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டதைக் காணலாம். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாகவே உண்மை நிலைமை உள்ளதாகவே அககீஇ தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கருத்து வெளியிட்டுள்ளார். அககீஇயில் இணைத் தலைமை நாடுகள் அதிகம் நம்பிக்கை கொண்டிருக்கின்றனவாயினும், சர்வதேச சமூகம் அதில் நம்பிக்கை இழக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.
இணைத்தலைமை நாடுகள் என்னும்போது இன்னொரு விடயம் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த நாடுகளின் கூட்டமொன்று 25.06.2007 ஆம் திகதி ஒஸ்லோ நகரில் ஆரம்பமாகவுள்ளதல்லவா? அவற்றின் மத்தியில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகத் தெரிகிறது. அதாவது இலங்கை அரசுக்கான நிதி உதவிகளை ஒத்திவைக்கும் விடயத்தில் ஜப்பான், இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அறியப்படுகிறது. இதற்குப் பொறுப்பாயிருக்கவல்ல யசூசி அகாஸியின் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமான போக்கினை நாம் ஏற்கனவே விமர்சித்திருந்தோம்.
மனித உரிமைகள்
இலங்கையில் மனித உரிமைகள் முற்றாக மீறப்பட்டு வருவது பற்றியும், சர்வதேச மட்டத்திலான கண்காணிப்புக்கான அவசியம் பற்றியும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஐரீன் கான் ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலைப்பாட்டினை சென்றவாரம் ஜெனிவா நகரில் வைத்து ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் நேரடியாகவே எடுத்துரைத்துள்ளார். குறிப்பாக கடந்த 18 மாத காலத்தில் மிக வேகமடைந்துள்ள மனித உரிமை மீறல்கள் நிலைமையை சீர்திருத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையானது யானைப்பசிக்கு சோளப்பொரி எனும் நிலையில் உள்ளதால் ஜனாதிபதி ராஜபக்ஷ நேரடியாக தலையிட்டு ஆவன செய்யவேண்டும் எனவும், சர்வதேச கண்காணிப்புக் குழுவொன்றினை ஏற்படுத்துவதற்கு, ஐ.நா.வை அணுகுமாறும் ஐரீன் ஆணித்தரமாக வேண்டியிருந்தார். நீதியை நிலைநாட்டி மக்களைப் பாதுகாப்பதற்கு வேண்டிய உள்நாட்டு பொறிமுறைகள் மிக அற்பமாகவிருப்பதாகவும், குற்றமிழைப்பவர்கள் நழுவிச் செல்வதாகவும் ஐரீன் சுட்டிக்காட்டியிருந்தார். அத்தோடு நீதியரசர் உடலகம தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவினது (இ?ஐ) பக்கச்சார்பின்மையும். வெளிப்படைத் தன்மையும் கேள்விக்குறியாயிருப்பதாக சர்வதேச பிரபல்யமானவர்கள் குழு (ஐஐஎஉக) தலைவர் நீதியரசர் என்.பகவதி விலாவாரியாக எடுத்துக்காட்டியுள்ளது தொடர்பாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் கவனத்தினை ஐரீன்கான் ஈர்த்திருந்தார். அவ்வாறாகவே ஐ.நா.மனித உரிமைகள் சபை ஆணையாளர் லூயி ஆபர் அம்மையாரும் - ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார். முற்றிலும் சுதந்திரமான வெளிப்படைத்தன்மை கொண்ட சர்வதேச கண்காணிப்பு ஏற்பாடொன்றின் மூலம் தேசிய மனித உரிமை மையங்களும் பலப்படுத்தப்படுவதற்கு வழிபிறக்கும். இது விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் விஸ்தரிக்கப்படும் எனவும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
திருகோணமலை சிங்கள மயமாக்கப்படல்
இது ஒன்றும் புதிய விடயமல்ல. இதுபற்றி தமிழ், முஸ்லிம் தலைமைகள் கவலை தெரிவித்து வருகின்றவே தவிர, ஒன்றிணைந்து மக்களை அணிதிரட்டி காத்திரமான போராட்டங்கள் நடத்துவது அரிது. திருகோணமலை மாவட்டத்தில் (அம்பாறை மாவட்டத்திலும் தான்) சிங்கள பேரினவாத ஆட்சியாளரின் ஒழிவு மறைவற்ற திட்டமாகவே சிங்கள மயமாக்கல் தொடர்கதையாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது சம்பூர் மற்றும் மூதூர் கிழக்கு உயர்பாதுகாப்பு வலயமாக (HSZ) அத்தோடு விசேட பொருளாதார வலயமாக (குஉஙூ) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் ஈவிரக்கமற்ற இராணுவத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் விரட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை பலவந்தமாக வேறு இடங்களில் மீள் குடியேற்றுவதற்கு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அபிவிருத்தியென்று வரும் போது மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்படுவது சகஜம். இதில் இனரீதியான பாகுபாடு என்று ஒன்றில்லையென பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது வழமையான பாணியில் குறிப்பிட்டுள்ளாரே!
ஆனால், அப்பகுதி மக்கள் தாம் தமது சொந்தக் கிராமங்களையும், நிலபுலங்களையும் விட்டுவெளியேற முடியாது என்பதில் மிக உறுதியாகவுள்ளாரென்பதை அறிய முடிகிறது. அவர்களில் சிலர் பி.பி.சி.செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அது தொனித்திருக்கிறது. எனவே பெரியளவிலான தொரு மக்கள் போராட்டம் வெடிக்கச் செய்வதே அரசியல் தலைமைகளின் அவசரமான பணி என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இச்சந்தர்ப்பத்தில் அண்மையில் குருநாகல் மாவட்டத்தில் வாரியபொல என்னுமிடத்தில் மக்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டம் ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது தெதுறு ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்படும் நிலையில் நீர்ப்பாசனத் திட்டத்தினைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் சமல் ராஜபக்ஷவை (ஜனாதிபதியின் அண்ணன்) மக்கள் சூழ்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்க முற்பட்டபோது அவர்களின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் குறித்த நீர்ப்பாசனத்திட்டம் முன்னெடுக்கப்படுமென ஆக்ரோசமாக அறிவித்தாராம். அதனால் ஆத்திரமடைந்த மக்கள் சரமாரியாக கற்களால் வீசி வாகனங்களுக்கும் பலத்த சேதத்தினை ஏற்படுத்தினர். விசேட அதிரடிப்படையினர், தமது வாகனமும் சேதப்படுத்தப்பட்ட நிலையில் அமைச்சர் ராஜபக்ஷவை பத்திரமாக அனுப்பி வைத்தனர் என அறிக்கைகள் கூறுகின்றன. மக்கள் சக்தி மாபெரும் சக்தி என்பதை யாவரும் அறிவர். இவ்வாறான போராட்டங்கள் இனமத பேதமின்றி ஆதரிக்கப்பட வேண்டியவை ஆகும்.
நிற்க, வடக்கு - கிழக்கு பேரினவாத சக்திகளின் நில அபகரிப்பு கைங்கரியமும், சிங்கள குடியேற்றங்களும் டி.எஸ்.சேனநாயக்க `கல்ஓயா' திட்டத்தை ஆரம்பித்த காலமும் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. போர்ச் சூழலில் வடக்கு, கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயம் (HSZ) என்பது நில அபகரிப்புக்கானதொரு ஊடகமாகவே கையாளப்பட்டு வருகிறது. யாழ். மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் வீடுவாசல்கள்(HSZ) ஆக்கப்பட்டு காடுமண்டி நிற்கின்றன. அவற்றை நிறுவுவதில் தான் யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் செயற்பட்டதாக அன்று யாழ்.மாவட்டத் தளபதியாகவிருந்தவராகிய இன்றைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத்பொன்சேகா அண்மையில் கூறியிருந்தார். சம்பூர், மூதூர் பகுதிகள் அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்டபோது அவை HSZ ஆக மாற்றப்படும் வாய்ப்பு உண்டு என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். இத்தகைய அடிப்படை நோக்கங்கள் கொண்டதாகவே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ராணுவ அணுகுமுறை தொடர்கிறது. அரசியல் தீர்வு, சர்வகட்சி மாநாடு (ASC) சர்வகட்சி மாநாட்டு பிரதிநிதிகள் குழு (APRC) என்ற போர்வையில், யுத்த முனைப்பிலேயே அரசாங்கம் குறியாகியிருக்கிறதென்பது தெளிவானதாகும்.
இந்த நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பட்டம் பதவிகளை உதறித் தள்ளிவிட்டு எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி மக்கள் போராட்டங்களுக்கு வழிசமைக்க வேண்டும். எதிர்த்தால் சந்ததியினர் தம்மைக்காறி உமிழ்வதா இல்லையா எனும் தெரிவு அவர்கள் கைகளிலேயே உள்ளது.
No comments:
Post a Comment