Tuesday, 12 June 2007

ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றிக்கு வழிவகுக்க புலிகளுக்கு ராஜபக்ச லஞ்சம்! உண்மை அம்பலம்!!

விமானவியல் மற்றும் விமான நிலையத்துறை தலைமை அதிகாரி ரிரான் அலெஸ் புலனாய்வு விசாரணையில் தெரிவித்த சர்ச்சைக்கிடமான தகவல்களைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளுக்கு கைலஞ்சம் வழங்கிய ஏற்பாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி அலுவலக செயலாளர் லலித் வீரத்துங்க, திறைசேரி செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோரை கைது செய்யுமாறு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா கோரியுள்ளார்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையின் போது அலெஸ் அளித்த வாக்குமூலம் தெரிவிப்பதாவது:

'' வடக்கு கிழக்கில் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க விடுதலைப் புலிகளுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தித் தருமாறு அன்றைய பிரதமர் ராஜபக்ச என்னைக் கேட்டார். அத்தகைய நேரடித் தொடர்பு எனக்கில்லாத போதும், வியாபாரத் தொடர்புகள் ஊடாக எமில் காந்தன் என்பவரைத் தொடர்புபடுத்தி விட்டேன். இதற்குப் பின்னால் எமில் காந்தன் ஊடாக புலிகளுடன் தொடர்பைப் பேணியவர், பசில் ராஜபக்சவே அன்றி நான் அல்ல.''

ஆனாலும் புலிகளின் முக்கிய புலனாய்வுத் துறை முக்கியஸ்தருடன் தொடர்பிருந்தது என்ற குற்றச்சாட்டின் பேரில் அலெஸ் ப.பு.பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

எனினும் அலெஸின் அறிக்கையின் பிரகாரம், பசில், லலித், பி.பி.ஜெயசுந்தர ஆகியோர் கலந்து கொண்டது மட்டுமல்ல, புலிகளுக்கு கை லஞ்சம் வழங்குவதற்கான முடிவையும் எடுத்துள்ளனர். ஆகவே அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

மேலும் இவை எதுவும் ராஜபக்சவுக்கு தெரியாமல் நடந்தவை அல்ல:
தனது ஜனாதிபதி தேர்தல் வெற்றி விழாவில் ' உன்னால் வென்றேன் தம்பி' என அவர் அலெக்ஸை பாராட்டியதே இதற்குச் சான்றாகும், எனவும் ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.க. பாராளமன்றக் குழுக் கூட்டத்தில் திங்களன்று தெரிவித்தார்.

Source: Sunday Leader , செய்தியாக்கம் enb

தொடரும்செய்திகள்:
புலிகளுக்கு பெருந்தொகை நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைதான ரிரான் அலெஸ் பிணையில் செல்ல அனுமதி
[14 - June - 2007]

அவரின் அடிப்படை உரிமை மீறல் மனு இன்று பரிசீலனை
த.தர்மேந்திரா

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெருந்தொகை நிதியை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு இருவார காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல தொழிலதிபரும் கோடீஸ்வர வர்த்தகருமான முன்னாள் விமான சேவைகள் தலைவர் ரிரான் அலெஸை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை பிணையில் விடுவித்தது.
கொழும்பு பிரதான நீதிவான் சரோஜினி குசல வீரவர்தன சந்தேக நபரை தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மூவரின் சரீரப் பிணையிலும் ஐந்து இலட்சம் காசுப் பிணையிலும் விடுவிப்பதாக அறிவித்தார்.
அவர் சந்தேக நபர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடாது, ஓவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பயங்கரவாத புலனாய்வு பொலிஸாரின் முன்னிலையில் ஆஜராக வேண்டும், பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும், நீதிமன்றின் வழக்கு தவணைகளுக்கு தவறாது ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்தே இப்பிணை அனுமதியை வழங்கினார்.
ரிரான் அலெஸ் இன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.ஜி.அருட்பிரகாசத்தின் நெறிப்படுத்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி றொமேஸ் டீ சில்வாவுடன் சிரேஷ்ட சட்டத்தரணிகளான சானக ரணசிங்க, சுகத் கல்தேறா உட்பட ஏராளமான சட்டத்தரணிகள் பிணை அனுமதி கோரி மன்றில் ஆஜராகி வாதாடினர். அவர்களுடைய வாதத்தில் முன்வைக்கப்பட்டதாவது;
பொலிஸார் ஒருவரை கைது செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் என்பதற்காக அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.
எமது கட்சிக்காரர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரின் விசாரணைகளுக்கு கடந்த மூன்று மாதங்களுக்குமேலாக அனைத்து வித ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகின்றார். இவர் ஒரு நோயாளியும் ஆவார். இந் நீதிமன்றத்துக்கு எமது கட்சிக்காரரை பிணையில் விடுவிப்பதற்கான நியாயாதிக்கம் உண்டு. எனவே இந்நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்கவேண்டும். ஆனால், பயங்கரவாத புலனாய்வு பிரிவுப் பொலிஸார் சந்தேக நபரை பிணையில் விடுவிப்பதை கடுமையாக ஆட்சேபித்தனர்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவுப் பொலிஸாரின் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி ஜிஹான் குலதுங்க மன்றில் ஆஜராகி வாதாடினார். அவர் பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகள் இன்னமும் முடியவில்லை என்றும் சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டால் பொலிஸ் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் விடுவதுடன், இடையூறும் விளைவித்து விடுவார் எனவும் நீதிமன்றில் ஆட்சேபனைகளை முன்வைத்தார்.
ஆயினும், நீதிமன்றம் பொலிஸ் தரப்பு ஆட்சேபனைகளையும் மீறி இப்பிணை அனுமதியை வழங்கியது.
சந்தேக நபரான ரிரான் அலெஸ் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து அம்புலன்ஸ் வண்டியில் பயங்கரவாத புலனாய்வு பொலிஸாரால் நீதிமன்றுக்கு கொண்டு வரப்பட்டிருந்தார்.
இவ் வழக்கை அவதானிக்க சட்டத்தரணிகள், பொலிஸார், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மன்றில் குழுமியிருந்தனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த ரிரான் அலெஸ், நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோதே கடந்த 30 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இதேநேரம், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டதை ஆட்சேபித்து ரிரான் அலெஸ்ஸால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று வியாழக்கிழமை உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் நெருங்கிய சகா என்பதாலேயே அரசியற் காரணங்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் இம்மனுவில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இம் மனுவின் முதலாவது பிரதிவாதியாக பாதுகாப்பமைச்சு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை குறிப்பிட்டுள்ளார்
.

No comments: