Saturday, 14 July 2007

ஈழச்செய்திகள்: 140707


புலிகளுடன் பேச்சுக்கு அரசு அவசரப்படவில்லை
[13 - July - 2007]

முழுமையாக தோற்கடித்தபின்பே சாத்தியமென்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர்
-எம்.ஏ.எம். நிலாம்-

தொப்பிகலவை வெற்றிகொண்டதை வைத்துக்கொண்டு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல அவசரம் காட்டவில்லையெனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் புலிகளை முழுமையாக பலமிழக்கச் செய்து முழுமையான பலத்துடனேயே பேச்சு குறித்து சிந்திக்க முடியுமெனக் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் அரசு உறுதியாகவே இருக்கின்றது. புலிகளுடன் பேசவேண்டுமென்ற அவசரம் கிடையாதெனவும் அரசு சுட்டிக்காட்டியது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது, கிழக்கு மாகாணத்தை அரசபடையினர் முழுமையாக தம் வசப்படுத்தியிருப்பதால் அரசாங்கம் சமாதானப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிக்குமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அமைச்சரவைப் பேச்சாளர் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் யாப்பா மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

விடுதலைப் புலிகளின் உயிர் நாடியான கிழக்கின் பிரதானமான கேந்திரஸ்தானம் தொப்பிகலவாகும். அதனை அரச படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளனர். அத்துடன் கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுவிட்டது. அடுத்த கட்டமாக கிழக்கில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

கிழக்கு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பாதுகாப்புத் தரப்பு அங்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவண்ணமிருப்பர். கிழக்கை மீட்டதன் மூலம் அரசாங்கம் கூடுதல் பலமடைந்துள்ளது. கிழக்கை மீட்டுவிட்டு சும்மா இருந்துவிட முடியாது. விடுதலைப் புலிகளை முழுமையாகத் தோற்கடிக்கச் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

அரசாங்கம் முழுமையான பலம் கொண்ட நிலையிலேயே அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்லமுடியும். விடுதலைப் புலிகளுடன் உடனடியாக பேச வேண்டுமென்ற அவசரம் அரசுக்குக் கிடையாது. புலிகளை முழுமையாக பலவீனப்படுத்தியதன் பின்னர் காத்திரமான ஒரு நிலையிலேயே பேச்சுவார்த்தை குறித்து அரசு தீர்மானிக்கும்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் விடுபடப்போவதில்லை .

வடக்கு, கிழக்கு இனப்பிரச்சினையையும் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளையும் அரசு இருவேறுபட்ட விடயங்களாகவே அரசு நோக்குகின்றது.

புலிகளை முற்று முழுதாகத் தோற்கடிக்கும் வரை அவர்களுடன் பேசுவது சாத்தியப்பட முடியாது என்பதே அரசின் நிலைப்பாடாகும்.

மீண்டுமொரு பேச்சுவார்த்தை குறித்து எப்பக்கத்திலிருந்தும் அழைப்புகள் விடுக்கப்படவில்லை. அப்படி அழைப்பு விடுக்கப்பட்டாலும் அரசு பலமடைந்த நிலையில் அதற்கேற்ற விதத்திலேயே எதிர்காலத்தில் செயற்பட முடியும். புலிகளுடன் பேச வேண்டுமென்ற அவசரமோ அவசியமோ அரசுக்கு ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தொப்பிகல கைப்பற்றப்பட்டதை பாடசாலைகளில் தேசிய விழாவாக கொண்டாடுமாறு பணிப்பு

[13 - July - 2007]

* பாற்சோறு, தேநீர் வழங்குமாறும் அறிவுறுத்தல்
ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

தொப்பிகலவை (குடும்பிமலை) விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டதை முன்னிட்டு அதனை பாடசாலைகளில் தேசிய விழாவாகக் கொண்டாடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சுற்றுநிருபங்கள் பாடசாலைகளுக்கு நேற்று வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொப்பிகலவை புலிகளிடமிருந்து இராணுவம் மீட்டதை தேசிய நிகழ்வாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் நடைபெறும் இந்நிகழ்வின் போது யாழ். குடா நாட்டை புலிகளிடமிருந்து இராணுவம் வெற்றி கொண்டதைவிடவும், கடந்த கால இராணுவ வெற்றியை விடவும், தொப்பிகலவெற்றி மேலானதெனவும், போர்நிறுத்த காலத்திலேயே புலிகள் பலம்பெற்றதாக வலியுறுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், புலிகள் இனிமேல் தலைதூக்க இடமில்லை, புலிகளின் இதயம் தகர்க்கப்பட்டது ஆகிய விடயங்களை நிகழ்வின் ஆரம்ப உரையின் போது விளக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வின் போது தேசப்பற்றுள்ள பாடல்களை ஒலிபரப்புமாறும் நிகழ்வை ஒலிபெருக்கிகள் மூலம் பிரதேசம் முழுக்க கேட்குமாறு நடத்துவதுடன் பாற்சோறு மற்றும் தேநீரை பரிமாறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

`தொப்பிகலவை மீட்டோம்' என்ற செய்தியை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கும் போது அமைதியாகவும் சந்தோஷத்தை வெளிப்படுத்துவதுடன், ஜனாதிபதி தலைமையிலான நிகழ்வை பாடசாலைகளில் நேரடியாக ஒளிபரப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய நிகழ்வுக்கு இணையான நிகழ்வுகளை பாடசாலைகளில் ஏற்பாடு செய்வதற்காக 19 கட்டளைகளும் விசேட காரணங்களை பின்பற்றுமாறு 9 அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொப்பிகலவை மீட்டது தொடர்பான தேசிய நிகழ்வு எப்போது நடத்தப்பட வேண்டுமென பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்படவில்லை.

இதேசமயம் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கும் இக்கட்டளைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Posted on : Sat Jul 14 7:06:59 EEST 2007
வவுனியா ரெலோ அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கூட்டமைப்பு கண்டனம்
நேற்றுமுன்தினம் வவுனியா பண்டாரிக்குளம், அம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள தமீழிழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்துக்குள் படைத்தரப்பினர் பிரவேசித்து தேடுதல் நடத்தியதையும் அங்கிருந்த இயக்க உறுப்பினர் ஒருவரைச் சுட்டுக்கொன்றதையும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு, அறிக்கை ஒன்றின் மூலம் மிக வன்மை யாகக் கண்டித்திருக்கின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ இயக்கம் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி. அரசியல் கட்சி அலுவலகத்துக்குள் பிரவேசித்து தேடுதல் என்ற சட்டத்தைத் தமது கையில் எடுத்துக் கொண்டுள்ளனர் படை யினர் என்பது தெட்டத் தெளிவாகின்றது
இந்த நடவடிக்கையில் இரு குழந்தைகளின் தந்தையான இளைஞர் ஒருவரின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியல் விதிக் கட்டுப்பாட்டுக்கும், கொள்கை உறுதிக்கும் விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது என்றுதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

Posted on : Sat Jul 14 7:07:44 EEST 2007
மூன்று மாதத்தில் கிழக்கில் மாகாணசபைத் தேர்தல் கருணா குழு, புலிகளும் கூடப் பங்குபற்றலாம்!


கிழக்கு மாகாணம் புலிகளின் பிடியிலிருந்து முழுமையாக விடுவிடுக்கப்பட்டிருப்பதால், மூன்று மாதங்களில் அங்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அத்தேர்தல்களில் கருணா குழு, புலிகள் ஆகிய தரப்பினரும் விரும்பினால் போட்டியிடலாம்.
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட் டில் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
கிழக்கை தற்போதுமுழுமையõக மீட்டுள்ள நிலையில் அங்கு மாகாண சபைத் தேர்தல் ஒன்றை எதிர்வரும் மூன்று மாதங் களுக்குள் நடத்த அரசு திட்டமிட்டுள் ளது.
அந்தத் தேர்தலில் கருணா அணியினரும் போட்டியிட விரும்பினால் அதற்கு அரசு ஒருபோதும் தடையாக இருக்காது. புலிகளும் ஜனநாயகத் தேர்தலில் இணைய வேண்டும் என்பதே அரசின் விருப்பம். அவர்களும் அரசுடன் சமாதானமாகி, இந்த மாகாணசபைத் தேர்தலில் பங்குகொள்வார்களானால் அது அரசிற்கு மகிழ்ச்சி தரும் விடயம்.
அரசு கிழக்கில் மாகாணசபைத் தேர்தல் ஒன்றை நடத்தி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது .
அங்கு எதுவித அச்சுறுத்தல்களுமின்றி தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவுள்ளன.
கிழக்கில் இடம்பெறும் மீள்குடியேற்றங்களில் எதுவித முறைகேடுகளும் இடம்பெறமாட்டாது. அங்கு வாழ்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களே அவர்களின் விருப்பத்தின் பேரில் அங்கு குடியமர்த்தப்படுவர் என்றார்.

இராணுவத் தளபதி தொப்பிகல விஜயம்


இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று தொப்பி கலவிற்கு விஜயம் செய்து தொப்பிக்கலவைக் கைப்பற்றப் பாடுபட்ட படையினருக்கு நன்றிகளையும் வாழ்த்துக் களையும் தெரிவித்தார். இராணுவத் தளபதியுடன் பிரதம பாதுகாப்பு அதிகாரி எயார் மாஷல் டொனால்ட் பெரேரா வும் மேலும் சில இராணுவ அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
தொப்பிகலவைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை யில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து எதிர் கால நடவடிக்கைகள் குறித்து இராணுவத் தளபதி அறிவு ரைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கையின்போது அதிகாரி களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இராணுவத் தளபதி படைச் சிப்பாய்களையும் சந்தித்து உரையாடினார். அவர்களுக்குப் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்தார்.
தொப்பிகலவில் கைப்பற்றப்பட்ட சில இடங்களை யும் பார்வையிட்ட இராணுவத் தளபதி உள்ளிட்ட குழு வினர் நேற்றே கொழும்பு திரும்பினர்.

Posted on : Sat Jul 14 7:08:31 EEST 2007
நிபந்தனையற்ற பேச்சுக்கு மட்டுமே அரசாங்கம் தயார் என அறிவிப்பு தாம் காத்திருந்த காலம் இது என்கிறார் ஜெயராஜ்

கிழக்கை இராணுவ ரீதியில் வெற்றி கொண்டு மிகவும் பலம் வாய்ந்த நிலையில் அரசு இருக்கின்றது. இந்தப் பின்னணியில் நிபந்தனையற்ற முறையில் புலிகளுடன் பேச்சு நடத்த அரசு தயார்.
மாறாக, புலிகள் அரசுக்கு நிபந்தனைகளை விதித்துப் பேச்சுக்கு வர முயற்சித்தால் அதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது. பலம் பெற்ற நிலையில் இருந்து கொண்டே புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்பதற்காகவே இதுவரை காலமும் அரசு காத்திருந்து. அதற்குக் காலம் கனிந்துவிட்டது.
இவ்வாறு அறிவித்திருக்கின்றார் அரச நாடாளுமன்றக் குழுவின் பிரதம கொரடா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே.
நேற்று கொழும்பில் அரச தகவல் திணைக் களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித் தார். அவர் அங்கு தெரிவித்ததாவது:
தொப்பிகலவைக் கைப்பற்றி வெற்றிவாகை சூடிநிற்கும் அரசு, புலிகளுடன் சமா தானப் பேச்சுக்குச் செல்லத் தயாராகவே உள்ளது.
அரசு வெற்றியடைந்திருக்கும் இந்நிலை யில், புலிகளினால் எதுவித நிபந்தனைகளும் விதிக்கப்படாத சமாதானப் பேச்சுக்கு அரசு இணக்கம் தெரிவிக்கின்றது.
கிழக்கை முழுமையாக கைப்பற்றியதன் மூலம் இதுவரை ஆட்சி செய்த அரசுகளிலே பலம் மிக்க அரசு இதுவே என்பதைத் தற் போதைய அரசு நிரூபித்துள்ளது.
புலிகளின் அரசியல் துறைப் பேச்சா ளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அரசுடனான சமாதானப் பேச்சுக்கு இனி இடமில்லை என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் புலி களுக்கு சமாதான முயற்சிகளில் உடன் பாடில்லை என்பது வெளிப்படுகின்றது என்றார் அவர்.

Posted on : Sat Jul 14 7:18:44 EEST 2007


பாக். அதிபருக்கு எதிராக பாலாவியில்
ஆர்ப்பாட்டம் முஷாரப்பின் கொடும்பாவியும்
எரிப்பு

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரிலுள்ள செம் மசூ தியை பாகிஸ்தான் இராணுவம் முற்றுகையிட்டுப் பின் னர் உள்ளே புகுந்து நடத்திய இராணுவத் தாக்குதல் கொடூ ரத்துக்கு எதிராக, நேற்று வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையின் பின்னர் புத்தளம் பாலாவியில் ஆர்ப்பாட் டம் ஒன்று நடத்தப்பட்டது.
பெரும் எண்ணிக்கையிலான மக்களும் அரபு மதரஸா மாணவர்களும் இதில் கலந்து கொண்டு பாகிஸ்தான் ஜனா திபதி முஷாரப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
வடமாகாண மஜ்லிஸிஸ் உலமா சபை இதனை ஏற் பாடு செய்திருந்தது.
சபையின் தலைவர் மௌலவி எஸ். எச். முபாரக், வட மேல் மாகாண சபையின் உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்தனர்.
ஈற்றில் ஜனாதிபதி முஷாரப்பின் கொடும்பாவி இழுத் துச் செல்லப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.

Posted on : Fri Jul 13 8:10:46 EEST 2007
சிமெந்து மற்றும் பொருள்களுக்குத் தட்டுப்பாடு; கட்டடப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன
குடாநாட்டில் சிமெந்து உட்பட கட் டடப் பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக கட்டடத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த கட்டடப் பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
குடாநாட்டில் கடந்த காலத்தில் அரச நிறுவனங்களுக்குரிய பல்வேறு கட்டடப் பணிகள் கட்டத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஆயினும் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையை அடுத்து, குடாநாட்டில் கட்டடப் பொருள்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து கட்டடத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட கட்டடப் பணிகள் அனைத்தும் இடைநிறுத் தப்பட்டுள்ளன.
சிமெந்து, மணல், கல் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக இந்தப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளதாகக் கட்டடத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது கட்டடப் பொருள்கள் கப்பல் மூலம் குடாநாட்டுக்கு எடுத்து வரப்படுகின்ற போதிலும், அவற்றின் அதிக விலை, நாளாந்த விலைத்தளம்பல் ஆகியவற்றின் காரணமாக திட்டங்களை உரிய முறையில் மதிப்பீடு செய்து செயற்படுத்த முடியாதுள்ளதாகவும் அதே வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏ9 வீதி திறக்கப்பட்டு அதனூடாகப் பொருள்கள் எடுத்துவரப்பட்டால் மட்டுமே இனிமேல் கட்டடப் பணிகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்திலிருந்து இரு தரப்பில் ஒரு தரப்பு விலகும்வரை வெளியேறமாட்டோம்
வீரகேசரி நாளேடு

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இரு தரப்பில் ஒரு தரப்பு அவ்வொப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்கும்வரை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழு தனது பணிகளை கைவிடவோ, அல்லது நாட்டிலிருந்து வெளியேறவோ மாட்டாது என கண்காணிப்பு குழுவின் பேச்சாளர் தொபினூர் ஒமர்சன் தெரிவித்தார்.

பிராந்திய அலுவலகங்களில் கடமையாற்றும் கண்காணிப்பாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அவர்கள் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு மீள அழைக்கப்படுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கண்காணிப்பு குழு தலைவர் சோல்வ் பேர்க் உடனான அண்மைய சந்திப்பின்போது அரசாங்க மற்றும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகங்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் மீதான தமது பற்றுறுதியை வெளிப்படுத்தியிருந்தன.

எனினும் இச்சந்திப்பு இடம்பெற்று ஒரு வாரம் முடிவடைவதற்குள்ளேயே மோதல்கள் தீவிரமடைந்தன. இந்நிலையில் கண்காணிப்பு குழு தமது பணிகளை தொடர்வது தொடர்பில் மீளாய்வு செய்து வருவதாக மேற்குலக ராஜதந்திரிகள் தெரிவித்திருந்தன.

இது தொடர்பாக கேட்டதற்கு பதிலளித்தபோதே கண்காணிப்பு குழுவின் பேச்சாளர் ஒமர்ஸன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

இரு தரப்புக்கிடையிலும் புரிந்துணர்வு ஏற்படாதவரை போர் நிறுத்தம் சாத்தியமற்றது. ஏனெனில் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே கடந்த 2002 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது.

நாம் எமது பணிகளை இயன்றவரை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றோம். போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இதில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பு அறிவிக்கும்வரை எமது பணி தொடரும்.

எமது பணிகள் குறித்து நாம் மீளாய்வு செய்து வருவதாக வெளியான தகவல்கள் தவறானவை. ஆனால் நாம் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.

நோர்வே தூதுவரிடம் புலிகள் தெளிவான செய்தியை வழங்கவில்லை
வீரகேசரி நாளேடு

கிளிநொச்சிக்கு கடந்த புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கரிடம் விடுதலை புலிகள் தெளிவான செய்தியை வழங்கவில்லை. அதாவது சமாதான பேச்சுக்கு தயாரா ? இல்லையா ? என்று புலிகள் தெளிவாக கூறவில்லை என்று அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ராஜிவ் விஜேசிங்க தெரிவித்தார். கிளிநொச்சியில் இருந்து திரும்பிய நோர்வேயின் இலங்øக்கான தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கரை நேற்றுமுன்தினம் மாலை சந்தித்து பேசிய ராஜிவ் விஜேசிங்க அந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதவாது :

கிளிநொச்சிக்கு கடந்த புதன்கிழமை நோர்வேயின் இலங்øக்கான தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கர் விஜயமொன்றை மேற்கொண்டார். பிரஸ்கர் விரைவில் இலங்கை தூதுவருக்கான தனது பதவிக்காலம் முடிவடைந்து நாடு திரும்பவுள்ளதால் இறுதியாக கிளிநொச்சி சென்றார். அரசாங்கம் அவரது விஜயத்துக்கு அனுமதி வழங்கியது.

இருப்பினும் விடுதலை புலிகள் அவரிடம் எந்தவொரு தெளிவான செய்தியையும் கூறவில்லை என்றே தெரிகின்றது. புலிகள் தற்போதைய நிலையில் பேச்சுக்கு தயார் இல்லை என்பதனை புரிந்துகொள்ள முடிந்ததாக பிரஸ்கர் தெரிவித்தார்.

இருப்பினும் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து பேணுவதாகவும் அதனை கடைபிடித்து வருவதாகவும் பிரஸ்கரிடம் தெரிவித்துள்ளனர். அரசாங்கமும் போர்நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழு இன்னும் சில வாரங்களில் இனப்பிரச்சினைக்கான இறுதி தீர்வை வெளியிடும் என்று எதிர்பார்க்கின்றோம். அந்த இறுதி யோசனையின் அடிப்படையில் புலிகளுடன் பேச்சுசார்த்தையை நடத்த முடியும் என்றும் நம்புகின்றோம்.

நாட்டில் ஜனநாயகம் சீர்குலைந்து வருவது குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும்
வீரகேசரி நாளேடு

நாட்டில் ஜனநாயகம் சீர்குலைந்துவருவதுடன் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இவ்விடயம் குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்தவேண்டும். அந்தவகையில் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் நாட்டு நிலைமை குறித்து கவனமெடுக்கவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் முஸ்லிம் மக்களும் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். முஸ்லிம் சமூகத்தினரும் மனித உரிமை மீறல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ரணில் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். . இந்த சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாகவும் சமாதான செயற்பாடுகளின் எதிர்கால நிலைமை குறித்தும் ரணில் தூதுவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

ஈரான் மாலைதீவு கட்டார் உட்பட 11 முஸ்லிம் நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களுடனேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இங்கு ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்

நாட்டில் ஜனநாயம் சீர்குழைந்துவிட்டது. மக்களின் அடிப்படை மனித உரிமை மீறல்கள் அதிகரித்துவருகின்றன. மக்கள் அச்சத்துடனேயே வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. சமாதான செயற்பாடுகளின் எதிர்காலமும் கேள்விகுறியாகியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் நாங்கள் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் பாதுகாப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

எம்முடன் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. இருப்பினும் நாட்டின் தற்போதைய நிலைமை குறி த்து வெளிநாடுகளும் கவனம் செலுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் நாட்டு நிலைமை குறித்து தமது நாடுகளுக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்த தூதுவர்கள்

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிபடுத்த ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கின்றோம். நாட்டின் நிலைமை குறித்து தூதுவர்களாகிய நாங்களும் மிகவும் அவதானத்துடனேயே இருக்கின்றோம். எங்கள் நாடுகள் ஊடாக நாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றனர்.

இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாகல ரத்னாயக்க மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments: