Thursday, 26 July 2007

ஈழச்செய்திகள்:270707

கிழக்கில் சனத்தொகைக் கணக்கெடுப்பு
[26 - July - 2007]

கிழக்கு மாகாணத்தில் அடுத்து வரும் இரு வாரங்களுக்குள் விசேட சனத்தொகைக் கணக்கெடுப்பொன்று நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக கிராம உத்தியோகஸ்தர்கள், கணக்கெடுப்பு அலுவலர்கள் மேற்பார்வை உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2001 ஆம் ஆண்டு இலங்கையில் கடைசியாக சனத்தொகை கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. எனினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதனை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை.
தற்போது கிழக்கு மாகாணம் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த விஷேட கணக்கெடுப்பு இம் மாகாணத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மூதூர் கிழக்குப் பாதுகாப்பு வலயத்துக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு

மூதூர் கிழக்குப் பகுதியை அரசு அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இந்தக் கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பினால் நேற்று வடக்கு, கிழக்கு முற்றாக முடங்கிப்போயிருந்தது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஹர்த்தால் நட வடிக்கை வடக்குப் பிரதேசங்களான வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் முழு அளவில் அனுஷ்டிக்கப்பட்டது.அங்கு வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள், பாடசாலைகள் எவையும் இயங்கவில்லை. போக்குவரத்துச் சேவை களும் இடம்பெறவில்லை. மக்களின் அவசர தேவைகள் தவிர, ஏனைய விடயங்களுக்காக வீதிக்கு வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருந்து அரசின் உயர்பாதுகாப்பு வலயப் பிரகடனத்துக்கு தமது முழு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இதனால் மேற்குறிப்பிட்ட மாவட்டங் களில் பிரதான வீதிகள், சந்தைகள் அனைத் துமே ஆள்கள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடின.மன்னார் மாவட்டப் பொலிஸார், அப் பகுதி வர்த்தக நிலையங்கள் உடனடியா கத் திறக்கப்படாவிட்டால் அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒலிபெருக்கிமூலம் நேற்றுக்காலை அறிவித்தனர். இருப்பினும் அதையும் செவிமடுக்காது மக்கள் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்கியிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.கிழக்குப் பிரதேசங்களான மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் நேற்றைய ஹர்த்தாலால் இயல்புநிலை முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது என்று அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.அப்பிரதேசங்களிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் எவையும் இயங்கவில்லை. போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை.

Posted on : Thu Jul 26 5:50:36 EEST 2007 யாழ் உதயன்

கிழக்கில் நடக்கும் தேர்தல் இரத்தக்களரியில் முடியும்!

விடுதலைப்புலிகள் எச்சரிக்கை ""கிழக்கை ஸ்ரீலங்காப் படைகள் ஆக்கிரமித்திருக்கும்வரை அங்கு அமைதிநிலை தோன்றுவது சாத்தியமே இல்லை. அப்படி யிருக்கும்போது அங்கு தேர்தல் நடத்தினால் அது இரத்தக் களரியிலேயே முடியும்'' இவ்வாறு எச்சரித்திருக்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சா ளர் இராசையா இளந்திரையன். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "புளூம் பேர்க்' என்ற பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரி வித்தார்.""எமது மக்களைப் பாதுகாப்பதற்காக அனைத்து விதமான போரியல் உத்திகளை யும் படைத்துறைத் தளபாடங்களையும் பயன் படுத்தப்போகிறோம்'' என்றும் இளந்திரையன் தமது செவ்வியில் குறிப்பிட்டார்.தென் தமிழீழத்தை ஸ்ரீலங்காப் படை கள் கைப்பற்றியுள்ளன எனத்தெரிவிக்கும் கருத்துகள் முற்றிலும் அரசியல் நலன் சார்ந்தவை என அவர் சுட்டிக்காட்டினார். குடுமிமலையை ஸ்ரீலங்காப் படைகள் ஆக்கிரமித்தபோதும் தென் தமிழீழத்தில் தமது விடுதலை அமைப்பின் தளபதி களும் மற்றும் படையணிகளும் தொடர்ந்து நிலை கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.குடுமிமலை ஒரு கேந்திர முக்கியப் பிரதேசம் அல்ல. நிலப்பகுதிகளிலிருந்து பின்னகர்வது தென் தமிழீழத்தை எமது இயக்கம் கைவிட்டதான அர்த்தம் அல்ல.தென் தமிழீழத்தை ஸ்ரீலங்காப் படை கள் ஆக்கிரமித்திருக்கும்வரை அங்கு அமை திநிலை தோன்றுவது சாத்தியம் இல்லை. அங்கு தேர்தல் ஒன்றை நடத்துவது இரத் தக் களரியில் முடியும் என்றும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந் திரையன் மேலும் தெரிவித்தார்.
Posted on : Thu Jul 26 5:51:04 EEST 2007 யாழ் உதயன்

Posted on : Thu Jul 26 5:50:51 EEST 2007
உயிர் அச்சுறுத்தலால் சரண் அடைபவர்களை தங்கவைக்க நீதிமன்று அருகே புனர்வாழ்வு நிலையம்

பிரதம நீதியரசர் அமைச்சுச் செயலாளருக்கு உத்தரவு குடாநாட்டில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக சரண் அடைபவர்களை தங்க வைத்துப் பராமரிக்க யாழ்.நீதிமன்றத்துக்கு சமீபமாக இடம் ஒன்றைக் கண்டறிந்து அங்கு புனர்வாழ்வு நிலையம் அமைத்து அவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யவும். பிரதம நீதியரசர் சரத் என் சில்வா நீதி அமைச்சின் செயலரும் புனர்வாழ்வு ஆணை யாளருமான கம்லத்துக்கு மேற்கண்ட உத்தரவை விடுத்துள்ளார்.குடாநாட்டில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்றத்தில் சரண் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரு கின்றது. அவர்களை யாழ்.சிறைச்சாலையில் வைத்துப் பராமரிப்பதில் பல நெருக்கடிகள் ஏற்படுகின்றன.அவர்களை தங்கவைத்துப் பராமரிக்க தெல்லிப்பழை புனர்வாழ்வு நிலையத்தைப் பயன்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களால் அந்த யோசனை நிறைவேற்றப்படவில்லை.அதனையடுத்து புதிய ஏற்பாடு ஒன்றின் கீழ் அவர்களைப் பராமரிக்க வசதி செய்ய வேண்டும் என்று யாழ்.நீதிவான் இ.த.விக்னராஜா பிரதம நீதியரசரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். யாழ்.நீதிமன்றத்துக்குச் சமீபமாக கட்டடம் ஒன்றைத் தெரிவு செய்து, சரண் அடை வோரை தங்கவைத்துப் பராமரிக்க ஏற்பாடு செய்யுமாறு பிரதம நீதியரசர், அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Posted on : Thu Jul 26 5:51:04 EEST 2007 யாழ்உதயன்

டில்லியிலிருந்து தூதுவர் கொழும்பு வருகை தமிழ் கூட்டமைப்பினரையும் சந்தித்து பேச்சு
[26 - July - 2007]

இந்தியாவின் விசேட தூதுவராக இலங்கை வந்துள்ள ஜி. பார்த்தசாரதி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்களையும் சந்தித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை கொழும்பு வந்த இவர் அரச தரப்பினரையும் எதிர்க்கட்சியினரையும் சந்தித்த நிலையிலேயே நேற்று முன்தினம் மாலை கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண எம்.பி. க்களை சந்தித்துப் பேசினார்.
முன்னாள் இந்தியப் பிரமதர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய சகாவான இவர் சிறந்த இராஜதந்திரியாகவும் கருதப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் அவசர சந்திப்பொன்றை நடத்த விசேட தூதுவர் பார்த்தசாரதி விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்களான கே. துரைரட்ணசிங்கம், ரி. கனகசபை மற்றும் கே. தங்கேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து இங்கு கூட்டமைப்பினர் கூறுகையில்;
இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றைக் காணுமாறு சர்வதேச சமூகம் கூறிவரும் நிலையில் இலங்கை அரசு இராணுவத் தீர்வுக்கே முனைந்து வருகிறது.
பாரிய இராணுவ நடவடிக்கைகளால் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். இன்று நேற்றல்ல காலாகாலமாக இந்தத் துன்ப துயரங்களை தமிழ் மக்கள் மட்டுமே இந்த நாட்டில் அனுபவிக்கின்றனர்.
இலங்கை- இந்திய அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தையும் இந்த அரசு தூக்கியெறிந்துள்ளது. இரு நாட்டு ஒப்பந்தமெனக் கூட மதிக்காது ஒப்பந்தத்தின் மூலம் இணைந்த வடக்கு- கிழக்கை பிரித்தது மட்டுமல்லாது கிழக்கை இராணுவ ரீதியில் ஆக்கிரமித்து அதற்கப்பால் சென்று கிழக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கும் மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்த முற்படுகிறது. இவையெல்லாம் இந்தியாவுக்கு விடப்பட்ட சவாலாகும்.
யுத்த முனைப்புடனேயே இந்த அரசு செயற்படுகிறது. தமிழர் தரப்பின் பொறுமை குறித்து எவருமே கவலை கொள்ளவில்லை. அந்தப் பொறுமை சீற்றமாக மாறும்போது அதன் விளைவுகள் மிகவும் பாரதூரமாயிருக்குமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது. கூட்டமைப்பினரின் கருத்துகளை கேட்டறிந்த விசேட தூதுவர் பார்த்தசாரதி இவை குறித்து பதிலளிக்கையில்;
தமிழ் மக்களின் சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, இறைமைக்கு குந்தகமாக இந்தியா செயற்படாது. இலங்கை நிலைமை குறித்து இந்தியா அவதானித்து வருவதாகவும் தெரிவித்தார். தனது விஜயத்தின் போது இவர் அரசு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

தினக்குரல்

குற்றவியல் அவதூறுச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த அரசு தீவிர முனைப்பு
*அவசியமென்கிறார் ஜெயராஜ்
[26 - July - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

குற்றவியல் அவதூறுச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது அவசியமென அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பத்தரமுல்லையில் ஆடம்பர வீடொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொள்வனவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷ்ரீபதி சூரியாராச்சி கூறியுள்ளார். இது முற்றிலும் தவறானது. வீட்டின் உரிமையாளர்கள் கூட இது பொய்யென ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஊடகங்கள் இவற்றுக்கு பெரும் முக்கியத்துவம் வழங்கியுள்ளன. பொய்யர்களின் கூற்றுகளை வெளியிடுபவையாக ஊடகங்கள் செயற்படக்கூடாது.
எனவே தான் குற்றவியல் அவதூறுச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். பொய் செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க குற்றவியல் அவதூறுச் சட்டம் பயனுள்ளதாக அமையும்.

இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரளுமாறு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மனோ அழைப்பு
[26 - July - 2007]

கொழும்பில் இன்று நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் ஊர்வலத்திலும் பொதுக் கூட்டத்திலும் தலைநகர் வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு அரச அடக்குமுறைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்குமெதிராக குரல் கொடுக்க வேண்டுமென மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் ஊர்வலத்திலும், பொதுக்கூட்டத்திலும் தலைநகர் வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள் பெருமளவில் கலந்துகொள்ளவேண்டும்.
பொரளை கம்பல் பூங்காவில் நண்பகல் 12 மணிக்கு ஒன்று சேர்வதன் மூலம் ஊர்வலத்தில் கலந்துகொண்டு பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க வேண்டும்.
தலைநகர் வாழ் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகள் தொடர்பில் நாமே எமக்காக குரல் கொடுப்பதற்கு தவறக்கூடாது.
எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர ஆகியோருடன் இணைந்துகொண்டு நாம் மேலக மக்கள் முன்னணியின் கொடியின் கீழ் அணிதிரளவேண்டும்.


வீடுகளுக்குள் `கொங்கிரீட்' பதுங்கு குழிகளை அமைக்க எல்லைக் கிராமமக்களுக்கு 3 கோடி ரூபா அரசு ஒதுக்கீடு
[26 - July - 2007]

*முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது

அநுராதபுர மாவட்டத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் அத்தாவெட்டுனுவெவ மற்றும் கல்யாணபுர கிராமங்களில் வாழும் குடும்பங்களின் பாதுகாப்புக்காக வீடுகளுக்குள்ளேயே கொங்கிரீட்களினாலான பதுங்கு குழிகனை அமைக்க அரசாங்கம் இரண்டு கோடியே எண்பத்து மூன்று இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கிணங்க கடந்த 19 ஆம் திகதி அத்தாவெட்டுனுவெவ கிராமத்துக்கு விஜயம் செய்த தேசத்தைக் கட்டியெழுப்பல் தொடர்பான அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே இக்கிராமங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தலா பத்தாயிரம் ரூபாவுக்கான காசோலைகளை பகிர்ந்தளித்தார். பதுங்கு குழி ஒன்றுக்கு எழுபத்தையாயிரம் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. பதுங்கு குழிகளை வெட்டுவதற்காகவே முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் இக்கிராமங்கள் மீது விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மோட்டார் தாக்குதல்களை இடையிடையே நடாத்தி வருவதுடன் கிராம வாசிகள் இரு தடவைகள் இக்கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்து வெலி ஓயாப் பகுதிக்கு வந்து பாடசாலை ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர். அண்மையில் அவர்கள் அனைவரையும் மீளக்குடியமர்த்திய போதும் மீண்டும் இடையிடையே மோட்டார் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருகின்றதை அடுத்தே அரசினால் பதுங்கு குழிகள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அத்தாவெட்டுனுவெவ கிராமத்தில் வசித்துவரும் 298 குடும்பங்களுக்கும் கல்யாணபுரவில் வசிக்கும் குடும்பங்கள் 93 க்கும் இவ்வாறு தமது வீடுகளில் கொங்கிரீட் பதுங்கு குழிகளை அமைப்பதற்குரிய நிதி பெற்றுக் கொடுக்கப்பட விருப்பதுடன் முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா அன்றைய தினம் தேசத்தைக் கட்டியெழுப்பல் தொடர்பான அமைச்சரினால் அனைத்து குடும்பங்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்பட்டது.


மூலப்பொருட்கள் இல்லாத காரணத்தால் வடகடல் நிறுவனம் மூடப்படும் நிலை
[26 - July - 2007]

மூலப்பொருட்கள் இல்லாத காரணத்தினால் குருநகர் வடகடல் (சீநோர்) நிறுவனம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள அதேவேளை, இந்நிறுவன ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. வடகடல் நிறுவனத்தின் பிரதான செயற்பாடான கடற்றொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் இதுவரை கொண்டு வரப்படவில்லை. வடகடல் நிறுவனத்துக்கு தேவையான மூலப்பொருட்களை மீன்பிடி சமாசமே வழங்கி வருகின்றது. ஆனால், தற்போது தேவையான மூலப்பொருட்கள் கொழும்பில் வாங்கப்பட்டுள்ள போதும் அவற்றை குடாநாட்டுக்கு கொண்டு வருவதற்கு கப்பல் வசதிகளை வழங்க அரசோ அரசசார்பற்ற நிறுவனங்களோ தனியாரோ முன்வரவில்லை.
இதன் காரணமாக மூலப்பொருட்கள் இல்லாத நிலையில், வடகடல் நிறுவனம் தொடர்ந்தும் செயற்பட முடியாத நிலையுள்ளது. இந்நிலை தொடருமானால் நிறுவனத்தை மூட வேண்டியேற்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
வடகடல் நிறுவனத்தை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு தொழில் புரியும் ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லையெனவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.


செய்தித் தொகுப்பு: ENB

No comments: