Friday, 27 July 2007

ஈழச்செய்திகள்: 280707

வடக்கு கிழக்கில் 26 உப தபாலகங்களை மீளத் திறப்பதற்கு அமைச்சரவை அனுமதி
வடக்கு கிழக்கில் கடந்த கால வன்செயல்கள் காரணமாக மூடப்பட்ட 26 உப தபால் நிலையங்களையும் மீளத் திறப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச் சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த பத்திரத்தை ஆராய்ந்த அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியது.வன்செயல்கள் காரணமாக மக்கள் இடம் பெயர்ந்ததால் உப தபாலகங்கள் மூடப்பட்டன. தற்போது மக்கள் மீளக் குடியமர்ந்துள்ள தால் மக்களுக்கு தபால் சேவையை வழங்க அந்த உப தபாலகங்கள் திறக்கப்படவேண்டியது அவசியம் என அமைச்சர் தமது பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.26 உப தபாலகங்களின் தபாலதிபர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்காக 57 லட்சம் ரூபாவையும் தபாலகங்களுக்குத் தேவையான உபகரணங்களையும் கொள்வனவு செய்ய 38 லட்சம் ரூபாவையும் வழங் குவதற்கு திறைசேரிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

Posted on : Fri Jul 27 5:48:41 EEST 2007

பாதுகாப்புத் தடைகள், சோதனைகளால் பொருள்கள் தட்டுப்பாடு; விலையேற்றம்

விநியோகம் தாமதமாவதால் வன்னி மக்கள் பாதிப்பு இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வடக்கில் மீண்டும் கடும் மோதல்கள் தொடங்கிவிட்ட சூழ்நிலையில் பாதுகாப்புத் தடைகள், சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களையும் அடக்கிய வன்னியில் எரிபொருள்கள் மற்றும் பாவனைப் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளன. இராணுவ சோதனை நிலையங்களில் பொருள்களை கீழே இறக்கி ஏற்றுவதால் வீண் தாமதங்கள் உண்டாகின்றன. அதனால் பொருள்களின் விநியோகம் காலதாமதமாகின்றது என்று தொண்டர் நிறுவன அதிகாரிகளும் அரச அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.தெற்கில் இருந்த வடக்கே பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் வெடிபொருள்கள் ஏற்றிச் செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகனங்களில் எடுத்துச்செல்லப்படும் பொருள்கள் அனைத்தையும் கீழே இறக்கி, பூரண சோதனையின் பின்னர் ஏற்றும் கடும் நடைமுறை கடந்த ஜூன் மாத நடுப்பகுதியில் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.அவ்வாறு பொருள்களை சோதனை இடுவதால் உண்டாகும் தாமதத்தினால் எரிபொருள் மற்றும் பாவனைப் பொரு ளின் விநியோகத்தில் பெரும் தாமதம் உண்டாகிறது. அதன் காரணமாக முக்கிய பொருள்களுக்கு தட்டுப்பாடும் விலை ஏற்றமும் தோன்றுகின்றது.மதவாச்சியில் உள்ள சோதனை நிலையத்தில் பொருள்களை இறக்கிச் சோதனை இட்டு ஏற்றுவதால் பெரும் காலதாமதம் உண்டாகி விநியோகம் பிந்துகிறது. இது பெரும் பிரச்சிøயாகி உள்ளது என்று உலக உணவுத் திட்டத்தின் இணைப்பாளர் ஜொனாதன் கம்பல் கூறினார்.பொருள்களை ஏற்றி இறக்கும் செலவுகள் அதிகரிப்பதாலும், அவற்றை உரிய மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவுகள் உயர்வதாலும் பொருள்களின் விலைகள் உயர்கின்றன என்று ஐ.ஏ.எஸ்.சியின் ஜூலை மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருள்களை எடுத்து வருவதில் உள்ள தாமதத்தினால் பற்றாக்குறையும் கியுக்களும் தோற்றுவிக்கப்படுகின்றது. மன்னார் பகுதியில் ஒருவருக்கு ஒரு லீற்றர் எரிபொருளே வழங்கப்படுகிறது என சகவாழ்வுக்கான அமைப்பின் இயக்குநர் பிரான்ஸிஸ் டெயுக்ரர் கூறினார். பெற்றோல், டீசல் ஆகிய எரிபொருள்களைப் பொறுத்தவரையில் தட்டுப்பாடு உள்ளது. நாம் எமது தேவைகளை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்து அதன் அனுமதிக்காக காத்தக்கிடக்க வோண்டி உள்ளது. கிடைக்கும் எரிபொருளை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம் என்று கிளிநொச்சி அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொருள்களை ஓமந்தைச் சோதனை நிலையத்துக்கு ஊடாகவே எடுத்து வர வேண்டும். முன்னர் மாதாந்தம் 300 லொறிகளில் எரிபொருள்கள் எடுத்துவரப்பட்டன. இப்போது 120 லொறியில் மட்டுமே கொண்டுவர முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.வன்னி நிலைமை குறித்து விவரித்த உலக உணவுத் திட்ட அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்:வன்னி மாவட்டங்களில் உள்நாட்டு உற்பத்திகள் தாராளமாகக் கிடைப்பதாலே பெரும் உணவுத் தட்டுப் பாட்டைத் தவிர்க்க முடிவதாகக் கூறினார். இதேவேளை விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இராசையா இளந்திரையன் வன்னி நிலைமைகள் பற்றி பின்வருமாறு கூறினார்.அரிசி, மரக்கறிகள், மற்றும் இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் பொறுத்தவரையில் சமாளிக்க முடியும். மாவட்டங்களுக்கு வெளியே இருந்து எடுத்து வரப்படும் பொருள்களுக்கே தட்டுப்பாடும் விலை உயர்வும் உள்ளன. மருந்து வகைகளுக்கும் குழந்தைகள் உணவுகளுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்றார்.

கிழக்கில் மக்கள் மீது கட்டுப்பாடு கருத்து தெரிவிக்கவும் வாய்ப்பில்லை
வீரகேசரி நாளேடு
கிழக்கில் மக்கள் மீது கட்டுபாடுகள் விதிக்கப்படுவதாகவும் தகவல்களை வெளியிடவும் கருத்துக்களை தெரிவிக்கவும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்றும் சுதந்திர ஊடக இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள சகல பகுதிகளிலும் ஜனநாயக முறைப்படி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இந்த அமைப்பு கோரியுள்ளது.
இது குறித்து சுதந்திர ஊடக இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிழக்கு மகாணத்தில் சமீபத்தில் அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பகுதிகளில் அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் குறித்து சுதந்திர ஊடக இயக்கம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது.
மாவட்ட செயலாளரின் அனுமதியைப் பெறாமல் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாமென கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி பராக்கிரம பன்னிப்பிட்டிய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை வாகரைக்கு அழைத்து தெரிவித்துள்ளார் என 26 ஆம் திகதி டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அரச அலுவலகங்களில் அனுமதி பெறாமல் எதுவித திட்டங்களையும் ஆரம்பிக்க இடமளிக்க வேண்டாமெனவும் அவர் பாதுகாப்பு படையினர், பொலிஸார் மற்றும் சிவில் நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகள், நிறுவனங்கள், உள்ளூர் பங்காளிகள் ஆகியோரது ஒத்துழைப்பு ஆதரவுடனேயே உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்தி மற்றும் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
2007 மார்ச் மாதம் வாகரையில் இடம் பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றும் நடவடிக்கை மேற்கொண்டதிலிருந்து சிவில் நிர்வாகம் கிழக்கில் மெதுவாக இராணுவ மயமாக்கப்பட்டு வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். வாகரை மீள் குடியேற்றம் முற்றும் முழுதாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொக்கட்டிச்சோலை, போரதீவு போன்ற பகுதிகளில் மீள் குடியேற்றம் முற்று முழுதாக விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவில் நிர்வாக அதிகாரிகள் அவ்வப்போது உலர் உணவுப் பொருட்களை விநியோகிப்பது போன்ற வேலைகளிலேயே ஈடுபட்டனர்.
2006 ஆம் ஆண்டிலிருந்து உதவி தேவைப்படும் பிரதேசங்களில் நிவாரண வேலைகளை மேற்கொள்வதில் மனிதாபிமான ஏஜன்சிகள் தொடர்ந்தும் பிரச்சினைகளுக்கே முகம் கொடுத்து வந்துள்ளன.
கிழக்கில் மக்கள் மீது இப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தகவல்களை வெளியிடவும் கருத்துக்களை தெரிவிக்கவும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை. அரச கட்டுப்பாட்டிலுள்ள சகல பகுதிகளிலும் ஜனநாயக முறைப்படி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம். இலங்கையில் நிலையான நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டுமென்ற ஆர்வமுள்ள மக்களும் சிவில் அமைப்புகளும் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட எம்முடன் இணையும்படி கேட்டுக் கொள்கின்றோம்.


வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அவதியுறும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்

வீரகேசரி நாளேடு

தேசிய வருமானத்தில் 13 வீதம் பங்களிப்பு செலுத்தும் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நாளாந்த வாழ்க்கையை கொண்டுசெல்ல முடியாது அவர்கள் அவதிப்படுகின்றனர். 180 வருடங்களுக்கு மேலாக கஷ்டங்களை எதிர்நோக்கும் இம்மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும். பட்டினியோடு வாடும் தோட்டத்தொழிலாளர்களுக்கு அத்தியவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளையும் மண்ணெண்ணெய் மானியத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கோரிக்கை விடுத்தார்.
தோட்டத்தொழிலாளர்களே கோதுமை மாவையும் மண்ணெண்ணெய்யையும் கூடுதலாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, இவர்களுக்கு இவ்விரண்டு பொருட்களிலும் நிவாரணம் வழங்கவேண்டியது அவசியம். பொருட்களின் விலையேற்றம், குறைவான சம்பளம் பெறும் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்த வாக்குறுதியை மீறியுள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கொழும்பிலுள்ள தேசிய நூலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் கூறியதாவது:
ஆறு இலட்சம் தோட்டத்தொழிலாளர்களின் வருமானத்தை நம்பி, சுமார் 15 இலட்சம் மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். தேயிலை தொழிலே இம்மக்களுக்குள்ள ஒரே வருமான வழியாகும். தேசிய வருமானத்தில் பாரிய பங்களிப்பு செலுத்தும் இம்மக்களின் வருமானம் மிகக் குறைவு. எனினும், பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்ப இவர்களின் வருமானம் அதிகரிப்பதில்லை.
இதனால், இம்மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதோடு, நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து, தீர்வுகாண்பதற்கென ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார். ஆனால், அந்த உறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
அமைச்சுப்பொறுப்புக்களை வழங்கி, சுகபோகங்களை அளித்து தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்களை அரசின் பக்கம் இழுப்பதிலேயே அரசாங்கம் முனைப்பு காட்டுகின்றது. சாதாரண அரசியல்வாதி போன்று ஜனாதிபதியும் பொய் வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி வருகிறார். 260 ரூபாவை நாளாந்த வருமானமாக பெறும் தோட்டத்தொழிலாளர்கள், அத்தொகையை முழுமையாக பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.


இந்திய அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவின் நலன் பாதிக்காது
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இந்தியா – அமெரிக்கா இடையில் இறுதி செய்யப்பட்டுள்ள சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு காரணமாக இந்தியாவின் நலனை அடகு வைத்துவிடவில்லை என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர் எதிர்காலத்தில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவது குறித்து உடன்பாட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
கடந்த வாரம் வாஷிங்டனில் இந்தியா – அமெரிக்கா இடையிலான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தீர்க்கப்பட்டு உடன்பாட்டுக்கு முழு வடிவம் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வாஷிங்டன் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட எம்.கே. நாராயணன், இந்திய அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் அனில் ககோட்கர், வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோர் வெள்ளிகிழமை மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலிஸா ரைஸ் ஆகியோரது சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை சிவசங்கர்மேனன் வாசித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்கே நாராயணன்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.கே. நாராயணன், நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அளித்த உறுதிமொழிக்கு ஏற்ற வகையில் உடன்பாடு உருவாகியுள்ளது என்று சுட்டிக்காட்டினார். சிறப்பான இந்த உடன்பாடு இரு நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தினால் இந்த உடன்பாட்டின் கதி என்ன ஆகும் என்ற கேள்விக்கு பதிலளித்த நாராயணன் அது பற்றி உடன்பாட்டில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றார்.
அணுசக்தி ஒப்பந்ததைப் பயன்படுத்தி இந்தியா ஆயுதப் பெருக்கத்தில் ஈடுபடும் என்ற எண்ணம் கொண்ட நாடுகள் அந்த எண்ணத்தை கைவிட வேண்டும் என்று நாராயணன் வலியுறுத்தினார்.
ஆரம்பத்தில் இந்த உடன்பாட்டில் இடம் பெற்ற ஷரத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அனில் ககோட்கர் தற்போது ஏற்பட்டுள்ள இறுதி வடிவம் குறித்து திருப்தி தெரிவித்தார்.


No comments: