Tuesday, 31 July 2007

ஈழச்செய்திகள்: 310707



கேடி ராஜபக்ச அரசே ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர் உரிமையை பொலிஸ் அராஜகத்தைக் கட்டவிழ்த்து நசுக்காதே! ENB

Posted on : Tue Jul 31 5:49:37 EEST 2007
ஆர்ப்பாட்டப் பேரணி நடத்திய பல்கலை மாணவர் மீது கண்ணீர்ப் புகை

ரஜரட்டைப் பல்கலைக்கழகத்தில் நிலவுகின்ற அடிப் படை வசதிக் குறைபாடுகளை நீக்கித் தருமாறு கோரி நேற்று பல் கலைக்கழக மானிய ஆணைக் குழு வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டப் பேரணியாக நுழைய முற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் விரட்டினர்.ரஜரட்டைப் பல்கலைக்கழகத்தில் விடுதி, தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் மிகக் குறைவாக இருக்கின்றன எனத் தெரிவித்து அவற்றை நிவர்த்தி செய்து தருமாறு கோரி அப்பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுக் காலை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியாக கோஷங்களை எழுப்பி பதாகைகளை ஏந்தியவாறு, வாட் பிளேஸில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வளாகத்திற்குள் நுழைய முற்பட்டனர். அங்கு காவலில் நின்ற பொலிஸார் அவர்களைப் போகவேண்டாம் என்று தடுத்தபோதிலும் மாணவர்கள் அதை மீறி நுழைய முற்பட்டனர். இதனால், அம்மாணவர்களை விரட்டியடிப்பதற்காக பொலிஸார் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். மாணவர்கள் அதற்கு அசையவில்லை. இதனால் பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசினர். அதன் பின்பு அவர்கள் கண் எரிச்சல் தாங்கமுடியாமல் நாலாபக்கமும் சிதறி ஓடினர்.இந்நிலையில் அம்மாணவர்களின் பிரதிநிதிகள் 10 பேர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அதிகாரிகளைச் சந்தித்துப் பேச சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனம் மூதூர் மக்களின் மனு நிராகரிப்பு இனிமேல் தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் தடை

மூதூர் கிழக்குப் பகுதியை அரசுப் படைகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், அப்பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேறவிடாமல் தடுத்திருக்கின்றது இலங்கை அரசு. இதை ஆட்சேபித்து அப்பகுதித் தமிழ் மக்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் நேற்று, விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்தது.இதுபோன்ற விண்ணப்பங்களை எதிர்காலத்தில் சமர்ப்பிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள பிரதம நீதியரசர், அத்தகைய மனுக் கள் வந்தால் ஏற்க வேண்டாம் என உயர் நீதிமன்றப் பதிவாளருக் குத் தாம் உத்தரவிடுவார் என்றும் தெரிவித்திருக்கின்றார்.பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, நீதியரசர்கள் ராஜா பெர்னாண்டோ, ஜெகத் பாலபட்டபெந்தி ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற ஆயமே இத்தீர்ப்பை நேற்று வழங்கியது.மூதூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த நற்சிங்கம் சுந்தரலிங்கம், பொன் னையா இரத்தினசிங்கம், இராமுப்பிள்ளை நடராஜா, செல்லப்பா கோபா லகிருஷ்ணன் ஆகியோர் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவே நேற்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் யஸந்த கோத்தாகொட, இதேபோன்று இதே விவகாரத்துக்காக மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் சார்பில் அதன் நிறைவேற்று அதிகாரி பாக்கியஜோதி சரவணமுத்து தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு ஏற்கனவே உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளமையை நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.ஆனால், அத்தகைய தீர்ப்பின் பிரதி தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றார் மனுதாரர் தரப்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கனகஈஸ்வரன்.""பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காக்கவே அரசு இத்தகைய உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்தைச் செய்திருக்கின்றது.'' என்றார் அரசுத் தரப்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்.""அங்கு (மூதூரில்) புதிதாகக் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி நடக்கின்றது. அது முடிய முன்னர் யாரும் அங்கு போக முடியாது. அதனால்தான் காலதாமதம் நீடிக்கின்றது. நிலைமை சீரானதும் மனுதாரர்கள் தமது இடங்களுக்குத் திரும்பலாம். மக்களை மீளக் குடியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்போது அதில் மனுதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது தொடர்பாக மனுதாரர்கள், பிரதேச கட்டளையிடும் அதிகாரியும், அதிகாரமளிக்கப்பட்ட அலுவலருமான இராணுவப் பொறுப்பாளருடன் தொடர்பு கொண்டு தமது விவரங்களைப் பதிந்து வைத்துக் கொண்டால், மீள் குடியேற்றத்தின்போது அவர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை வழங்கப்படும். மக்களின் பாதுகாப்புக்கும் நலனுக்குமாகவே அரசு இந்த நடவடிக்கைகளை எடுக்கிறது.'' என்றார் அரசுத் தரப்பு வாதி.அதை மனுதாரர் தரப்பு சட்டத்தரணி மறுத்துரைத்தார்.""அங்கு கண்ணிவெடிகள், மிதிவெடிகள் புதைக்கப்படவில்லை. இராணுவ நடவடிக்கைகளையொட்டி மேற்கொள்ளப்பட்ட அகோர பீரங்கி, மோட்டார், ஷெல் தாக்குதல்கள் காரணமாகவே மக்கள் அங்கிருந்து இடம்பெயர வேண்டியதாயிற்று. தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ள வெளியேற்றப்பட்டுள்ள சூழலில் அங்கு மாற்று இனத்தவரைப் பெரும் எடுப்பில் குடியேற்றும் திட்டடங்கள் நடைமுறைப்படுத்தப்படலாம் என மனுதாரர்கள் அஞ்சுகின்றனர். கிழக்கில் அதிகாரமளிக்கப்பட்ட கட்டளைத் தளபதிக்குப் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்கள் திரும்பி விட்டன. அவர் எங்கிருக்கின்றார்? அவருடன் தொடர்புகொள்ள அவரின் விலாசம் என்ன?'' என்று வாதிட்டுக் கேள்வி எழுப்பினார் சட்டத்தரணி கனக ஈஸ்வரன்.""படை அதிகாரியின் விலாசம் உணர்வு பூர்வமான சிக்கலுக்குரிய விவகாரம். அதைத் தரமுடியாது. '' என்றார் அரச சட்டத்தரணி.""அப்படியானால் இந்த அதிகாரி கண்ணால் பார்க்க முடியாத, அரூபமானவரா? அவருக்கான கடிதங்களை இனிமேல் "யஸந்த கோத்தாகொட, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மேல் பார்த்து' என்ற விலாசத்துக்குத்தானா தமிழ் மக்கள் அனுப்ப வேண்டும்?'' என வினாவெழுப்பினார் மனுதாரர் சட்டத்தரணி.இரு தரப்பு வாதங்களைச் செவிமடுத்த பிரதம நீதியரசர், மேற்படி மனுவை விசாரிப்பதில் அர்த்தமில்லை என்று தெரிவித்து அதை நிராகரித்தார்.இதே விவகாரத்துக்காக இது போன்ற வழக்கெதனையும் தாக்கல் செய்யவேண்டாம் என்று கடிந்து கொண்ட பிரதம நீதியரசர், இவ்விடயம் இத்துடன் முடிவுறுத்தப்பட்டு விட்டதால், எதிர்காலத்தில் இது போன்ற இதே அடிப்படையில் அமைந்த மனுக்களை ஏற்க வேண்டாம் என உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் கே. கனக ஈஸ்வரன், எம்.ஏ. சுமத்திரன் ஆகியோர் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அனுசரணையுடன் ஆஜரானார்கள்.

Posted on : Tue Jul 31 5:51:09 EEST 2007
கிழக்கின் உதயத்தோடு சிங்கள மயப்படுத்தல் மும்முரம்
'வேப்பவெட்டுவான் வீதி'யின் பெயர் 'ராஜபத்திரன மாவத்தை' ஆகின்றது

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதுளை செங் கலடி வீதியில் உள்ள இலுப்படிச்சேனை சந்தி யில் தொடங்கிச் செல்லும் 'வேப்பவெட்டுவான்' வீதிக்கு 'ராஜபத்திரன மாவத்தை' என்று சிங்களப் பெயரிடப்பட்டுள்ளது.இம்மாதம் 28 ஆம் திகதி குடுமிமலைக் குச்சென்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்த வீதிக்கான புதிய பெயர்ப் பலகையைத் திரைநீக்கம் செய்துவைத்தார் என்றும் தெரியவருகின் றது.கிழக்கை சிங்களமயமாக்கும் நோக்கிலேயே அரசு இவ்வாறு செயற்பட்டு வருகின் றது என்று தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு இதற்குத் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கூறியதாவது:இந்த வீதியின் ஊடாகச் குடுமிமலைக்கு சிங்களவர்களைக் கொண்டுவந்து, குடுமிமலைப் பகுதிகளில் அவர்களைக் குடியமர்த்தவே அரசு முற்படுகின்றது.ஒரு வீதியின் பெயர் மாற்றப்படவேண்டும் என்றால் அப்பிரதேசசபையினதும் மக்களினதும் அனுமதி பெறப்படவேண்டும் என்பது விதி.ஆனால், தமிழர் தாயகத்தில் அந்த விதியை முற்றாக மீறி அரசு செயற்பட்டிருப்பதன்மூலம் முழுத் தமிழர்களையுமே அரசு கொச்சைப்படுத்தியுள்ளது."கிழக்கின் உதயம்' என்பது தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதற்கும் அங்கு சிங்களவர்களைக் குடியமர்த்துவதற்குமானதொரு பாரிய வேலைத்திட்டம் என்பதை சர்வதேச சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டும்.தமிழர் தாயகத்தில் அத்துமீறி அரசு இவ்வாறு செயற்படுவதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.

Posted on : Mon Jul 30 5:59:15 EEST 2007

கிழக்கின் கிராம மட்ட அபிவிருத்திப் பணிகள் இராணுவ, பொலீஸ் அதிகாரிகள் தலைமையில்!

கட்டளைத் தளபதி பன்னிப்பிட்டிய சுற்றறிக்கை கிழக்கில் மேற்கொள்ளப்படும் சகல அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் செயற் பாடுகள் படை அதிகாரிகளின் கண்காணிப் பிலும் தலைமையிலுமே நடைபெறும்.குறிப்பாக கிராம மட்டத்தில் மேற்கொள் ளப்படும் சகல திட்டங்களும் இராணுவ அல்லது விசேட அதிரடிப்படை அல்லது பொலீஸ் அதிகாரி தலைமையிலான குழு வினாலேயே செயற்படுத்தப்படவேண் டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுக்களில் அந்தந்தப் பிரதேச மக்களின் பிரதிநிதிகளுடன் கிராம சேவ கர், இராணுவ அதிகாரி, பொலீஸ் அதிகாரி ஆகியோர் அங்கத்தவர்களாக இருப்பர்.அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கிராம மட்டப் பணிகளை மேற்பார்வை செய்யும் அமைப்புகள் அல்லது செயற்குழுக்களில் இராணுவ, விசேட அதிரடிப்படை, பொலீஸ் பிரதிநிதிகள் சேர்த்துக்கொள்ளப்படுவது கட்டாயம் என்று கிழக்கின் பாதுகாப்புக் கட் டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பராக் கிரம பன்னிப்பிட்டிய அரசாங்க உயர் அதி காரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்ற றிக்கையில் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட செயற்குழுக்கள் மாதத் தில் இரண்டு தடவைகள் கூடி அந்தந்தப் பகுதிகளின் அடிப்படைத் தேவைகள், அபிவிருத்தி வேலைகள் குறித்து ஆராய வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியில் அவசர மாகத் தேவைப்படும் வேலைகள் அல்லது திட்டங்களின் விவரங்களை அந்தந்தப் பகு திக் கிராம அலுவலர்கள், பிரதேச செயலா ளருக்கும் அவரூடாக மாவட்டச் செயல ருக்கும்(அரச அதிபருக்கும்) சமர்ப்பிக்க வேண்டும். செயற்குழுக்களின் தலைவர்களாக இராணுவ அல்லது பொலீஸ் அதிகாரிகளே கடமையாற்றுவர். சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து ஆராயப்பட்ட கூட்ட அறிக்கையின் பிரதி களை குழுவின் தலைவர், கிழக்கு படைத் தலைமையகத்துக்கு அனுப்பவேண்டும் என்று தமது சுற்றிக்கையில் மேஜர் ஜென ரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.


தினக்குரலின் கவலை! - ENB

ஆசிரியர் தலையங்கம்:
அராஜகத்தை தோற்றுவிக்கக்கூடிய பாரிய பொருளாதார நெருக்கடி
[31 - July - 2007
எரிபொருட்களின் விலைகள் மீண்டும் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. அன்றைய தினத்துடன் முடிவடைந்த 100 நாட்களுக்குள் எரிபொருட்களின் விலைகளை அரசாங்கம் ஐந்து தடவைகள் அதிகரித்திருக்கிறது.
இதற்கு முதற்தடவை ஜூன் 29 இல் விலைகள் அதிகரிக்கப்பட்டபோது பெற்றோலியம் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸியிடமிருந்தும் பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் அசந்த டி மெல்லிடமிருந்தும் முரண்பாடான அறிக்கைகளே வெளியாகின. எரிபொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என்று டி மெல் கூறியிருந்ததை மறுதலித்த அமைச்சர் பௌஸி, தற்போதைக்கு மேலும் விலை அதிகரிப்புகள் செய்யப்படமாட்டாது என்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். ஆனால், பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் கூறியபடி `தவிர்க்கமுடியாத நிகழ்வு' தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 6 ரூபாவாலும் டீசலின் விலை 4 ரூபாவாலும் மண்ணெண்ணெயின் விலை ஒரு ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன் பிரகாரம் ஒரு லீற்றர் பெற்றோல் 117 ரூபாவுக்கும் டீசல் 75 ரூபாவுக்கும் மண்ணெண்ணெய் 68 ரூபாவுக்கும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
வழமைபோன்றே இந்த விலை அதிகரிப்புக்கும் உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் தொடர்ச்சியான விலை உயர்வே காரணமாக கூறப்பட்டிருக்கிறது. உலகச் சந்தையில் தொடர்ந்தும் விலை அதிகரித்துக் கொண்டு செல்லுமானால், இலங்கையில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என்று பெற்றோலியம் அமைச்சு அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருப்பதையும் காணக் கூடியதாக இருக்கிறது. கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட ஒரு வாரத்தில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு சகல பாவனைப் பொருட்களினதும் விலைகளை இயல்பாகவே அதிகரிக்கப்போகிறது. அடுத்துவரும் நாட்களில் இந்த அதிகரிப்புகளின் முழுமையான தாக்கத்தை உணரக் கூடியதாக இருக்கும்.
பொருட்களினதும் சேவைகளினதும் விலை அதிகரிப்புகளுக்கு அப்பால் போக்குவரத்துக் கட்டணங்களும் கடுமையாக அதிகரிக்கப்போகின்றன. தனியார் வாகன சேவைகள் மற்றும் ஓட்டோ கட்டணங்கள் பல இடங்களில் உடனடியாகவே அதிகரிக்கப்பட்டுவிட்டன. தனியார் பஸ் சேவைக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 5 ரூபாவிலிருந்து 6 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உடனடியாகவே கோரிக்கை விடுத்திருக்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய எரிபொருள் விலை அதிகரிப்பு மீண்டும் பயணிகளுக்கு பெரும் சுமையை ஏற்றப்போகிறது. இறுதியாக கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டபோது குறைந்தபட்ச கட்டணத்தை அதிகரிக்காமல் விடுவதற்கு இணங்கிய தனியார் பஸ் உரிமையாளர்கள் தற்போதைய எரிபொருள் விலை அதிகரிப்பை தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி (நீண்ட காலமாக அரசாங்கத்தை இணங்க வைக்க முடியாமல் இருக்கும் விவகாரமான) குறைந்தபட்ச கட்டணத்தையும் அதிகரித்துவிட முயற்சிக்கிறார்கள்.
டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைய அனுமதிக்கின்ற அதேவேளை, அரசாங்கம் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்புக்கு உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை உயர்வை காரணமாகக் கூறிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு அரசாங்கத்தின் தவறான நிதி முகாமைத்துவமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. கூரையைப் பிரித்துக் கொண்டு வானளாவ உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் திணறிக்கொண்டிருக்கும் மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணத்தைத் தானும் அளிப்பதற்கு எந்தவொரு உறுதியான நடவடிக்கையையும் எடுப்பதற்கு அரசாங்கம் அக்கறை காட்டுவதாக இல்லை. எதிரணியில் இருந்தபோது அர சாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்ததோடு மாத்திரமல்லாமல், விலைவாசி அதிகரிப்பை கட்டுப் படுத்துவதற்கான வழிமுறைகள் கைவசம் இருப்பதாக பேசிய பந்துல குணவர்தன இப்போது வர்த்தக, பாவனையாளர் விவகார அமைச்சர். பொருட்களின் விலைகள் அதிகரிப்பதை தடுக்கமுடியாது என்று வெளிப்படையாகவே கூறுகின்ற அவர், பாவனையாளர் நீதிமன்றங்களை அமைக்க வேண்டிய தேவை குறித்து பேசும் விசித்திரத்தை காண்கின்றோம்.
வடக்கு, கிழக்கில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளை முதன்மைப்படுத்துகின்ற அரசியலை முன்னெடுப்பதன் மூலமாக பொருளாதார நெருக்கடிகளிலிருந்து சிங்கள மக்களின் கவனத்தைத் திசை திருப்பி விடமுடியுமென்ற நம்பிக்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. போரைத் தீவிரப்படுத்துவதில் அரசாங்கம் அக்கறை காட்டுவதன் விளைவாக ஏற்படுகின்ற பாரிய இராணுவ செலவினமே இன்றைய பாரதூரமான பொருளாதார நெருக்கடி நிலைக்கு காரணம் என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு எதிரணியும் தயாராயில்லை. போர்ச் சூழ்நிலைக்கு மத்தியிலான படுமோசமான பொருளாதார நெருக்கடி தொடருமேயானால், நாளடைவில் நாட்டில் அராஜகம் தோன்றக்கூடிய பேராபத்து இருக்கிறது.

No comments: