Sunday, 19 August 2007

அமெரிக்காவால் ஆளப்படும் பாகிஸ்தான் -ENB

பெனாஸிர் பூட்டோவுடன் கூட்டணி அமைத்து அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுமாறு முஷாரப்புக்கு அமெரிக்கா யோசனை
[18 - August - 2007]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும்படி பாகிஸ்தான் ஜனாதிபதி
முஷாரப்புக்கு யோசனை தெரிவித்துள்ளது அமெரிக்கா. இந்தத் தகவலை `நியூயோர்க் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஜூலை 27 ஆம் திகதி அபுதாபியில் முஷாரப்பும் பெனாஸிரும் சந்தித்துப் பல்வேறு விவரங்கள் குறித்து விவாதித்தனர். ஆனால், இந்தச் சந்திப்பு
நடந்ததை இரு தலைவருமே வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை.
இராணுவத் தளபதி பதவியில் நீடிக்க முஷாரப் விரும்பினாலும் கூட பூட்டோவுடன் செய்து கொள்ளும் அதிகாரப் பகிர்வு ஏற்பாடு பாகிஸ்தானில்
ஜனநாயக நடைமுறை வலுப்பெற உதவும் என்று அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.
1999 இல் நவாஸ் ஷெரீப் அரசை கவிழ்த்தார் முஷாரப். ஜனாதிபதியாக இருந்துகொண்டே இராணுவத் தளபதி பதவியிலும் நீடிக்கிறார். பூட்டோவுடன்
அதிகாரத்தை முஷாரப் பகிர்ந்து கொள்ளும்போது இயற்கையாகவே அவரது அதிகார வரம்பு குறையும். அதன் மூலம் அமெரிக்கா தலைமையில்
நடக்கும் பயங்கரவாத எதிர்ப்பு போருக்கு பாகிஸ்தானில் ஆதரவு குறையும் என்று அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.
பாகிஸ்தானில் பழங்குடி இனத்தவர் அதிகம் உள்ள பகுதிகளில் அல்-ஹைடா தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக அமெரிக்கா கருதுகிறது.
எனவே பூட்டோ ஆட்சிக்கு வந்தால் அல்-ஹைடா தீவிரவாதிகள் ஒடுக்கப்படாமல் போவார்களோ என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு உள்ளது.
பெனாஸிர் பூட்டோ மீண்டும் பிரதமர் பதவியில் அமர்ந்தால் பாகிஸ்தான் மக்கள் மத்தியில் தேசிய உணர்வு அதிகரித்து அதன் மூலம் வாஷிங்டனை
ஓரங்கட்ட வேண்டும் என்ற குரல் ஓங்குமோ என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு உள்ளது. கடந்த சில வாரங்களில் புஷ் நிர்வாகத்தில் உள்ள
அதிகாரிகளுடன் இரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளார் பெனாஸிர் பூட்டோ.
முஷாரப்புடன் அதிகாரப் பகிர்வு உடன்பாடு செய்து கொண்டால் அதை வெளிப்படையாக செய்யக்கூடாது. இதில் தங்களது பங்கு எதுவும் இல்லாதது
போன்ற கருத்தை உருவாக்க வேண்டும் என்றும் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
இந்நிலையில் அதிகாரப் பகிர்வுத் திட்டம் குறித்து பாகிஸ்தானில் கடந்த வாரம் முஷாரப்பைச் சந்தித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
கொண்டலீசா ரைஸ் விவாதித்துள்ளார். நெருக்கடி நிலையை அமுல்படுத்துவது நல்லதாக இருக்காது என்றும் முஷாரப்பை அவர் எச்சரித்துள்ளார்.
எது எப்படியோ, அதிகாரப் பகிர்வு தொடர்பாக முஷாரப்புடன் பேசி உடன்பாடு ஒன்றை பெனாஸிர் எட்டினாலும் இராணுவத் தளபதி பதவியிலிருந்து
முஷாரப் விலக வேண்டும் என்று பெனாஸிர் வற்புறுத்துவாரோ என்ற ஐயமும் உள்ளது. அப்படி ஏற்பட்டால் அது முஷாரப்புக்கு சிக்கல்தான்.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அப்படியொரு கோரிக்கையை பெனாஸிர் வைக்கமாட்டார் என்றே நம்பப்படுகிறது.
அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. தேர்தல் நடந்தால் கணிசமான வாக்குகளைப் பெற்று பூட்டோ கட்சி வெற்றி பெறக்
கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி வெற்றி பெற்றால் பூட்டோ பிரதமராக வரக்கூடும். ஆனால், ஆட்சியில் தனக்கு எதிராக வரக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்க முஷாரப்பின்
ஆதரவு பூட்டோவுக்கு தேவை. அதேபோல் ஜனாதிபதித் தேர்தலில் பெனாஸிர் ஆதரவு இருந்தால் மட்டுமே முஷாரப் வெற்றிபெற முடியும் என்ற நிலை
உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகம் மலரவும் மக்களாட்சி அமையவும் முஷாரப் தவறினால் அவருக்கு எதிராக ஜனநாயக இயக்கம்
அமைத்துப் போராடுவேன். அதற்காக பாகிஸ்தான் திரும்புவேன் என்று எச்சரித்துள்ளார் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சித்
தலைவருமான பெனாஸிர் பூட்டோ.
கட்சியின் வெளியுறவு மன்றக் கூட்டத்தில் புதன்கிழமை அவர் கூறியதாவது;
இராணுவத் தளபதி பதவியை முஷாரப் கைவிட வேண்டும். மூன்றாவது தடவையாக பிரதமர் பதவிக்கு ஒருவர் வருவதற்கு எதிரான தடையை நீக்க
வேண்டும். நியாயமான முறையில் தேர்தல் நடத்தவேண்டும் என்றெல்லாம் முஷாரப்பிடம் தெரிவித்துள்ளோம். ஆனால், இதை முஷாரப்
பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இப்போது நிலைமை மிக மிக மோசமாக மாறிவிட்டது. சுமுகமான வழியில் ஜனநாயக ஆட்சி முறைக்கு நாடு
மாறவேண்டும். மக்களாட்சி அமைவதை தாமதப்படுத்தப் பார்க்கிறார் முஷாரப். இராணுவத் தளபதி பதவியைத் துறக்கவும் அவர் தயாராக இருப்பதாகத்
தெரியவில்லை.
பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகம் மலர்ந்தால் மட்டுமே அந்நாட்டுக்கு இராணுவ மற்றும் நிதி உதவி என அமெரிக்கா பிணை போட்டால் அது
மிகவும் நல்லதாக இருக்கும் என்றார் பூட்டோ.
இதேவேளை, முஷாரப்புடன் எந்தவித உடன்பாடும் செய்து கொள்ளமாட்டேன். அவருடன் ஆலோசனை நடத்த ஒன்றும் இல்லை என்று
தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவருமான நவாஸ் ஷெரீப்.
என்.டி.டி.விக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு;
பாகிஸ்தானிலிருந்து என்னை வெளியேறச் செய்தவர் முஷாரப். நான் மீண்டும் இஸ்லாமாபாத் திரும்பக்கூடாது என்பதற்காக பல முயற்சிகளை
மேற்கொண்டார்.
அத்தகைய நபரிடம் பேச என்ன உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்தவர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவியிலிருந்து அகற்றியவர்.
அவரிடம் நான் பேச வேண்டுமா? சர்வாதிகாரியிடம் பேசுவது தார்மிக நெறிக்கு உகந்ததல்ல என்றார் நவாஸ் ஷெரீப்.

No comments: