செவ்வாயன்று மீண்டும் கூடுகிறது சர்வகட்சிக் குழு
[19 - August - 2007]
தினக்குரல் ஜனாதிபதியுடன் பேராசிரியர் விதாரணவின் சந்திப்பையடுத்து திடீர் திருப்பம் டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டிருந்த போதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர்
திஸ்ஸ விதாரணவுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற முக்கிய சந்திப்பையடுத்து மீண்டும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை
கூடவுள்ளது.
இன நெருக்கடிக்கு அரசியலமைப்பு மறு சீரமைப்பின் மூலம் தீர்வு காணும் யோசனைகளில் 95 சதவீதமானவற்றில் இணக்கப்பாடு காணப்பட்டதாக
தெரிவிக்கப்பட்ட நிலையில் சர்வ கட்சிக்குழுக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
சிங்கள கடும் போக்காளர்களின் அழுத்தத்துக்கு அடிபணிந்து அரச தலைமைத்துவத்தின் தலையீட்டினால் பிரதிநிதிகள் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாக
சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
இது தொடர்பாக அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளும் கடும் அதிருப்தியடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நேற்று ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பை
நடத்தியதையடுத்து சர்வ கட்சிப்
பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை கூட்டுவதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியான கடும் அழுத்தமே இந்த மாற்றத்திற்கான காரணமாக கருதப்படுகிறது.
நாளை மறுதினமான செவ்வாய்க்கிழமை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளதைக் கட்சிகளின் பிரதிநிதிகள் உறுதிப்படுத்தினர்.
கூட்டத்திற்கான அழைப்பிதழ் சர்வகட்சிப் பிரதிநிதிகளுக்கு அரசாங்க சமாதான செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் திஸ்ஸ விதாரணவுக்குமிடையே அவசர சந்திப்பொன்று
நடைபெற்றுள்ளதை பேராசிரியர் விதாரண உறுதிப்படுத்தினார்.
இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இச்சந்திப்பையடுத்தே காலவரையறையின்றி
ஒத்திவைக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தை மீண்டும் கூட்ட தீர்மானிக்கப்பட்டதாகவும் அறிய வருகின்றது.
இதேசமயம், கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டமொன்று நாளை திங்கட்கிழமை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாகவும் அறிய வருகிறது.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு சிறுபான்மையின சமூகங்களுக்கு ஓரளவுக்கு பாதகமில்லாத விதத்தில் யோசனைகளை தயாரித்திருந்த நிலையில் அவ்
யோசனைகளுக்கு தமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் அங்கீகாரம் வேண்டுமெனக் கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி
ஆகிய கட்சிகளின் பிரநிதிகளான பேராசிரியர்கள் விஸ்வ வர்ணபால, நளின் டி சில்வா ஆகியோர் சர்வகட்சிப் பிரதிநிதிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட
வேண்டுமென பிரேரணையொன்றையும் கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்தே குழுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
சிங்கள கடும்போக்கு கட்சிகளை திருப்திப்படுத்தியதன் பின்னரே ஜனாதிபதி சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தை மீண்டும் கூட்டுவதற்கான
அறிவுரையை வழங்கியிருக்கலாமெனவும் சிறுபான்மை கட்சிப் பிரதிநிதியொருவர் சுட்டிக்காட்டினார்.
செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் இன நெருக்கடிக்கான தீர்வு யோசனையை முழுமையாக நிறைவு
செய்து அதனை இவ்வார இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்
ஊடகவியலாளர் மாநாட்டில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தீர்வு யோசனைகள் இவ்வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென கூறியிருந்தமையும்
இங்கு குறிப்பிடத்தக்கது.
இறுதி தீர்வை வெளியிடும் காலப்பகுதியை கூறமுடியாது சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் தாமதம்
வீரகேசரி நாளேடு
இனப்பிரச்சினைக்கான பொதுவான இறுதித் தீர்வை எப்போது வெளியிடலாம் என்று தற்போதைக்கு உறுதியாக கூறமுடியாது. சர்வகட்சி பிரதிநிதிகள்
குழுவின் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தீர்வு யோசனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதால் மிகவும் அவதானமாக
செயற்படவேண்டியுள்ளது என்று சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
சர்வகட்சி குழுவின் இனப்பிரச்சினை தீர்வை தயாரிக்கும் செயற்பாடுகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை
குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது :
இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஆராயும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் முக்கிய கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது சிறிய சிக்கல்
ஏற்பட்டது. அதாவது ஏற்கனவே நான் தனிப்பட்ட ரீதியில் தயாரித்த தீர்வு யோசனையை அடிப்படையாகக்கொண்டே பொதுவான இறுதி யோசனை
தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இவ்வார இறுதியில் பொதுவான இறுதி யோசனை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இடம்பெற்ற
கூட்டத்தின்போது இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகள் தயாரிக்கப்பட்டுள்ள இறுதி யோசனையை தமது கட்சியின் தலைமையின் பரிசீலனைக்கு
உட்படுத்தவேண்டும் என்று கூறினர். அவர்களின் கோரிக்கை நியாய மானதாக இருந்தது. எனவே அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும்
அந்தக்கட்சிகளின் பரிசீலனை முடிவுறும் வரை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தை நடத்துவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
யாழ் உதயன் Posted on : Sun Aug 19 8:43:54 EEST 2007
மட்டக்களப்பில் நலன்புரி நிலையங்களில் வாழ்வோரில் பலர் மனநோயால் பாதிப்பு!
சொந்த இடத்துக்குப் போகமுடியாத ஏக்கமே பிரதான காரணமாம் சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து, அகதிகளாக இங்குள்ள நலன் புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில் கணிசமான எண்ணிக்கையினர்
மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக மனநோய்க்கு ஆளாகியவர்களாகி உள்ளனர் என்ற திடுக் கிடும் தகவல் வெளியாகி உள்ளது.தங்கள் சொந்த இடத்துக்குத் திரும்பிச் சென்று மீளக்குடியமர முடியவில்லை என்ற ஏக்கமே இந்த நிலைக்குப் பிரதான காரணமெனக்
கண்டறியப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் மனநல வைத்திய நிபுணர் எம். கணேசன் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்.வைத்தியசாலைக்கு நாளாந்தம் சிகிச் சைக்கு வரும் நலன்புரி நிலைய வாசிகளில் பலரும் மிகக் குறிப்பாக வயதானவர்கள் தங்கள் சொந்த இடத்து
வாழ்வை இழந்து போன ஏக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்டி ருப்பது தெரியவந்துள்ளது என்று வைத் திய நிபுணர் செய்தி ஊடகம் ஒன்றுக்குத்
தெரிவித்திருக்கிறார்.வயதானவர்கள் என்று மட்டுமன்றி இளம் வயதினரும் இந்நிலைக்கு ஆளாகி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதிலும் பார்க்க உளவளத் துணைப் பயிற்சி வழங்குவதன் மூலமே அவர்களை பழைய நிலைக்குக்
கொண்டு வரமுடியும். ஆனால் அவர்கள் தற்போது வாழும் சூழலில் உளவளத்துணை ஆலோசனை வழங்குவதற்கு உகந்த வசதிகள் இல்லை. அவர்கள் மனங்களில் எப்போது தமது சொந்த இடங்களுக்கு, சொந்த வீட்டுக்கு போவோம் என்ற ஏக்கமே காணப்படுகின் றது. சுனாமியினால் சொத்துக்களை இழந்து மனம் சோர்வடைந்திருந்த அந்த மக்களை போரினால் உருவாக்கப்படட் இடப்பெயர்வு மிகப் பெரிய அளவில்
உள ரீதியாகப் பாதிப் புக்கு ஆளாக்கி இருக்கிறது.அவர்கள் பழைய நிலைக்கு, மன நிலைக் குத் திரும்புவதற்கு உடனடியாக அவர்களி டம் மாற்றம் ஏற்படவேண்டும். அதற்கு உரிய உகந்த வழி,
பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியமர்த்தப்படவேண்டும்.யுத்தத்தினால் மன நிலை பாதிக்கப் பட்டு, மனநோய்க்கு ஆளாகியவர்களுக்கு அவர்கள் மீள குடியமர்த்தப் பட்டபின் உள வளத்துணைப் பயிற்சி
வழங்கப்படவேண் டும். அப்போதுதான் அவர்களால் பழைய நிலைக்கு திரும்ப ஏதுவாகும்.யுத்தத்தினால் ஒவ்வொருவருக்கும் ஏற் பட்ட பல வகையான இழப்புகள், அவை யூடான பாதிப்புகள், நீண்ட காலம் அவர் கள் மீளக்
குடியமர்த்தப்படாமை, மோதல் களின்போது ஆறுகள், காடுகள் ஊடாக வந் தமை, அகதி முகாம் வாழ்வு போன்றவையே மன நலம் பாதிக்கப்பட
முக்கிய காரணங் கள் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வைத்தியநிபுணர் எம்.கணேசன் மேலும் விவரித்தார்.இந்நிலையை ஓரளவு சீராக்கும் பொருட்டு 15 உளவளத் தொண்டர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முகாம் களில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து
வரு கிறார்கள்.எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்று இருப்பவர்களை ஓரளவு நம்பிக்கையூட் டும் பணியில் இவர்கள் தற்போது ஈடு பட்டுள்ளனர் என்றார் வைத்திய
நிபுணர்.திருகோணமலை மாவட்டத்தில் சம் பூர், மூதூர் கிழக்கு, கட்டைப்பறிச்சான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் மட் டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த
வாகரை, கொக்கட்டிக்சோலை, கிரான், சந்தி வெளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் மட் டக்களப்பு நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருவது
குறிப்பிடத்தக்கது.
யாழ் உதயன் Posted on : Sun Aug 19 8:40:50 EEST 2007
கோதுமை மாவின் விலை கிலோ 60 ரூபா
குடாநாட்டில் கோதுமைமாவின் விலை ஒரு கிலோ 60 ரூபா வாக நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. இத்தகவலை யாழ். அரச அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார். இப்போது ஒரு கிலோ கோதுமை மா 55 ரூபாவாக விற்கப்படு கிறது. புதிய விலை
உடனடியாக நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக் கப்பட்டது.திருகோணமலையில் இருந்து கப்பல் மூலம் எடுத்துவரப்பட்டுள்ள கோதுமை மா இறக்கப்பட்டு வருவதாகவும் அது இறக்கப்பட்டவுடன் ப.நோ.கூ.
சங்கங் களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளைகொழும்பில் ஒரு கிலோ கோதுமை மா 52 ரூபாவாகவும் 450 கிராம் பாண் 30 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
அரபாத் நகர் முஸ்லிம்கள் வெளியேற்றம் வெளிப்படுத்தியிருக்கும் உண்மைகள்
[19 - August - 2007] அஜாதசத்ரு
கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களை பாரிய இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஆக்கிரமித்துள்ள அரச படையினர் அப்பகுதிகளிலிருந்த தமிழ்
மக்களுக்குச் சொந்தமான இருப்பிடங்கள், பாடசாலைகள், அரச கட்டிடங்கள், மதவழிபாட்டுத் தலங்கள் என்பவற்றை அழித்துள்ள நிலையில் கிழக்கின்
உதயம் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் சர்வதேச சமூகத்தையும் தென்னிலங்கை மக்களையும் ஏமாற்றும் மற்றுமொரு அரசியல்
கைங்கரியத்தையே அரசு தற்போது முன்னெடுத்து வருகின்றது.
கடந்த வருடம் 2006 ஏப்ரல் கொழும்பிலுள்ள இலங்கை இராணுவத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தையடுத்து
அதற்கு பழிவாங்கும் நோக்குடன் கிழக்கின் திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்குப் பிரதேசங்களில் தொடர்ச்சியான விமானக் குண்டுவீச்சு மற்றும்
பல்குழல் ரொக்கட் தாக்குதல்களை நடத்தியது.
தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவங்களையடுத்து மூதூர் கிழக்கு, சம்பூர், ஈச்சிலம்பற்று பிரதேசங்களுக்குள் ஊடுருவி ஆக்கிரமிப்பு
நடத்திய அரச படையினரின் தாக்குதல் நடவடிக்கைகளையடுத்து நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.
காயமடைந்த மக்கள் சிகிச்சை பெறுவதற்கு கூட எந்தவொரு மருத்துவ வசதியுமின்றி தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்பு
மாவட்டத்தின் வெருகல் மற்றும் வாகரைப் பிரதேசங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து சென்றனர்.
வாகரை, வெருகல் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து சென்ற மக்கள் பாடசாலைக் கட்டிடங்களிலும் மரநிழல்களுக்கு மத்தியிலும் தமது வாழ்க்கையை
கழித்துக் கொண்டிருந்த போதிலும் அரச நிவாரண உதவிகள் வழங்கப்படாத நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவ முன்வந்த போதிலும் அந்த
முயற்சிகள் அனைத்தும் கொழும்பிலிருந்து விடுக்கப்பட்ட உத்தரவையடுத்து படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனைவிட மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள அதிகாரிகளாலும் வாழைச்சேனை பிரதேச செயலாளர்களாலும் அரச உயர்மட்டத்தின் அனுமதி
பெற்றுக்கொண்டு லொறிகளில் எடுத்துச் செல்லப்பட்ட நிவாரண உதவிப் பொருட்கள் மாங்கேணி இராணுவ முகாமிற்கு அருகில் வைத்து
வழிமறிக்கப்பட்ட ஆயுதபாணிகளால் அபகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் வாகரைப் பிரதேசம் மீதான பாரிய இராணுவ நடவடிக்கைகளை அரச படையினர் மேற்கொண்டனர். விமானக் குண்டுவீச்சு, பல்குழல்
ரொக்கட் தாக்குதல், ஷெல் வீச்சு என்பன காரணமாக சுமார் மூன்று மாதகாலப்பகுதியில் 120 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழக்க நேரிட்டதுடன்
200 இற்கு மேற்பட்டோர் காயமடைய வேண்டிய துன்பகரமான நிலைமையும் ஏற்பட்டது.
அரச படையினர் வாகரைப் பிரதேசத்திற்குள் ஊடுருவியதையடுத்து அங்கிருந்த மக்கள் காட்டுப்பாதைகள் ஊடாகவும் கடல்வழியாகவும் மட்டக்களப்பு
மாவட்டத்தின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு தப்பியோடி வரும் வழியில் பத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபகரமான நிலைமையும்
ஏற்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வந்த மக்கள் 48 நலன்புரி நிலையங்களில் தங்க
வைக்கப்பட்டனர். இவர்களுக்கான அரச நிவாரண உதவிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்கப்பட்டன.
சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களே இடம்பெயர்ந்த மக்களுக்கான கூடாரங்கள், உலருணவுப் பொருட்கள், மருத்துவ வசதிகள்
என்பவற்றை வழங்கின.
மூதூர் கிழக்கு, வாகரைப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்திருந்த மக்களின் பாரிய மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு மத்தியில் மற்றுமொரு பாரிய
மனித அவலத்திற்கு வழிவகுத்தது படுவான்கரைப் பிரதேசம் நோக்கியதான மற்றொரு பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கை.
கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து சுமார் ஒரு மாத காலத்திற்கு மேலாக நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய மட்டக்களப்பு
மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுவீச்சு, பல்குழல் ரொக்கட் தாக்குதல், ஷெல் வீச்சு
என்பன காரணமாக போரினால் சிதறுண்டு போன ஒரு பிரதேசமாகவே அப்பகுதி இன்னமும் அழிந்து போய்க்கிடக்கிறது.
படையினரின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் என்றும் எதிர்கொள்ளப்படாதளவிற்கு சுமார் ஒன்றரை
இலட்சம் மக்கள் தமது வாழ்விடங்களையும் வளமான மண்ணையும் விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலுள்ள
பாடசாலைக் கட்டிடங்கள் பொது இடங்களில் தஞ்சம் புக வேண்டிய துயரமான நிலைமை உருவாக்கப்பட்டது.
இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும், உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படுமென்று அரசாங்கமும் அதற்குப்
பொறுப்பான அமைச்சர்களும் தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு அறிக்கை விட்டபோதிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான உதவிகள் மாத்திரமே
வழங்கப்பட்டன.
இதனைவிட கடந்த காலங்களில் அரசியல் ரீதியான முரண்பாடுகளால் பல்வேறு கசப்பான அனுபவங்களை எதிர்கொண்ட நிலையிலும்
படுவான்கரையிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு அப்பிரதேச முஸ்லிம் மக்கள் வழங்கிய உதவியையும் நேசத்தையும் வரலாற்றில் ஒருபோதும்
தமிழர்கள் மறந்துவிட முடியாது.
படுவான்கரைப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு துயரங்களை எதிர்கொண்ட நிலையில் இரண்டுமாத காலத்திற்கு பின்னர்
படிப்படியாக மீள்குடியேற்றப்பட்ட போதிலும் நிவாரண வசதிகள் எதுவுமற்ற நிலையில் உடைந்து, சிதறுண்டு போன தமது வாழ்விடங்களிலேயே
காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தொழில் என்பவற்றையே பிரதான தொழிலாக கொண்ட படுவான்கரைப் பிரதேச மக்கள் தமது வளமான
வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய எந்தவொரு வசதியுமற்ற அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கின் உதயம் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் படுவான்கரைப் பிரதேசத்தில் புதிய காவலரண்களும், படைமுகாம்களும், பொலிஸ்
நிலையங்களுமே அமைக்கப்பட்டுள்ளன. அழிவுற்ற அந்தப் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான சேதமதிப்பீடுகள் கூட இன்னமும் முழுமையாக
பூர்த்தி செய்யப்படவில்லையென்றே மாவட்ட செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதெல்லாவற்றிற்குமப்பால் படுவான்கரைப் பிரதேசத்தின் மற்றொரு பகுதியான குடும்பிமலைப் பிரதேசத்தை அரச படையினர் ஆக்கிரமித்ததையடுத்து,
சுதந்திரதின தினத்திற்கு ஒப்பான தேசியப் பெருவிழாவாக தலைநகர் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில்
கொண்டாடப்பட்டது.
இவ்வாறே வாகரையை அரச படையினர் ஆக்கிரமித்ததற்கு பின்னர் அங்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீளக்
குடியேறிய மக்கள் பலரை சந்தித்து அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்கும் என்று
உறுதியளித்தார்.
ஆனால், வாகரையிலிருந்து இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் போர் நடவடிக்கைகளால் அழிந்துபோன தமது இருப்பிடங்களில் தொழில்
வாய்ப்பின்றி, நிவாரண வசதிகள் இன்றி அவலங்களுக்கு மத்தியில் அச்சத்துடனேயே தமது வாழ்நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
மூதூர் கிழக்கு பிரதேசத்திலிருந்து வாகரை, வெருகல் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து அங்கிருந்து மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தின் இராணுவ
கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்த மக்கள் கட்டாயத்தின் பேரில் பலவந்தமாக திருகோணமலை மாவட்டத்திற்கு அழைத்துச்
செல்லப்பட்டுள்ள போதிலும் அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீளக்குடியேறுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு வேறு பிரதேசங்களில்
குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
மூதூர் கிழக்கு, சம்பூர் பிரதேசங்கள் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு அப்பகுதித் தமிழ் மக்கள் அங்கு செல்வதற்கு தடை
விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கந்தளாய்க்கு இடம்பெயர்ந்து மீண்டும் மீளக்குடியேறிய அரபாத் நகர் முஸ்லிம்
மக்கள் சில மணி நேர அவகாசம் வழங்கப்பட்டு, அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு அகதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மூதூர் கிழக்கு, சம்பூர், இலங்கைத் துறைமுகத்துவாரம், மூதூர் மூன்றாம் கட்டை மலை உட்பட பல தமிழ்க் கிராமங்களில் பௌத்த ஆலயங்கள்
நிர்மாணிக்கப்பட்டு, பாதுகாப்பு சுற்று மதில்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வேப்பவெட்டுவான் வீதி - சார்ஜன் பத்திரண மாவத்தையென்றும் இலங்கைத் துறைமுகத்துவாரம் - லங்கபட்டுண என்றும்
திருகோணமலை இருதயபுரம் - பன்சலவத்தையென்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளதுடன், குடும்பிமலை பிரதேசத்தை புனித பௌத்த வலயமாக
பிரகடனப்படுத்தவும் அரச தரப்பால் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
கிழக்கின் உதயம் அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக சர்வதேச சமூகத்தை ஏமாற்றி நிதியுதவியைப் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும்
அரசாங்கம் அவ்வாறு கிடைக்கும் நிதியுதவிகள் ஊடாக கிழக்கை நிர்வாக ரீதியாக பிரித்து இன மோதல்களை தூண்டி பெரும்பான்மையினரை
குடியேற்றும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதையே அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றன.
கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய பெரும்பான்மையைப் பெற்று ஏழுமக்கள் பிரதிநிதிகளை கொண்ட தமிழ்த்தேசிய மட்டக்களப்பு பாராளுமன்ற
உறுப்பினர்களுடன் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான எந்தவொரு ஆலோசனையையும் பெறாமல் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையானது
புனிதபூமி பிரதேசம் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றம் ஒன்றுக்கான உள்நோக்கத்தையே தெட்டத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
கிழக்கின் உதயம் அபிவிருத்தி திட்டம் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களையும் வளங்களையும் மட்டுமல்ல முஸ்லிம் மக்களின் எதிர்காலத்திற்கும்
ஆபத்தானது என்பதையே அரபாத் நகர முஸ்லிம்கள் வெளியேற்றம் எல்லோருக்கும் தெளிவுபடுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment