கடுமையான முரண்பாடுகளுடன் சர்வகட்சிக் குழு இன்று கூடுகிறது
[21 - August - 2007]
*இ.தொ.கா., மு.கா. சமஷ்டி யோசனைகளையே தொடர்ந்தும் வலியுறுத்தல்
ஏ.ஏ.மொஹமட்
இனநெருக்கடிக்கு சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்கு தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒற்றையாட்சி முறைமைக்குள்ளேயே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டுமென பேராசிரியர் திஸ்ஸ விதாரணவிடம் கடுமையான வலியுறுத்தலை விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான தமது யோசனையில் சமஷ்டி ஆட்சிமுறையின் கீழ் மாகாணங்களுக்கு அதிக பட்ச அதிகாரங்களை வழங்கி அவற்றை மத்தியரசு மீளப்பெறாத வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கிய ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தனர்.
இந்நிலையிலேயே, ஒற்றையாட்சி முறைமை தொடர்ந்து அமுலிலிருக்க வேண்டுமெனவும் அதில் மாற்றத்தை மேற்கொள்ள முடியாதெனவும் திட்டவட்டமாக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவிடம் தெரிவித்துள்ள ஜனாதிபதி இதனைத் தவிர சர்வகட்சிப் பிரதிநிதிகள் இணக்கம் கண்ட ஏனைய விடயங்களுடன் தம்மால் ஓரளவுக்கு இணக்கப்பாடு தெரிவிக்க முடியுமெனவும் கூறியதாக அறியவருகிறது.
இதேவேளை, ஒற்றையாட்சி முறைமையில் இனநெருக்கடிக்கு தீர்வு காண முடியுமா? அவற்றுக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணக்கம் தெரிவிக்குமா? என்று இச்சந்தர்ப்பத்தில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஜனாதிபதியிடம் வினாவெழுப்பியபோது முஸ்லிம் கட்சிகள் ஒற்றையாட்சிக்கு இணக்கம் தெரிவிக்குமென்ற நம்பிக்கையை ஜனாதிபதி வெளியிட்டதாகவும் தெரியவருகிறது.
இது இவ்வாறிருக்க சர்வகட்சிப் பிரதி நிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒற்றையாட்சிக்குள் தீர்வு காணும் திட்டத்திற்கு ஆதரவாக செயற்பட வைப்பதற்கான முயற்சியில் அரச தலைமைத்துவம் வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய ஒற்றையாட்சி முறைக்கே ஆதரவான நிலைப்பாட்டிலேயே அமைச்சர் பேரியல் அஷ்ரப் தலைமையிலான நுஆ , அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியன காணப்படுவதாகவும் அவற்றின் செயற்பாடுகள் அவற்றையே உணர்த்துவதாகவும் மற்றுமொரு சிறுபான்மைக் கட்சியின் பிரநிதி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒற்றையாட்சிக்குள் தீர்வுகாண இணங்கினால் தாமும் அதனடிப்படையிலேயே இணக்கம் காண தயாரா கவிருப்பதாக இடது சாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சியும், கம்யூனிட்ஸ் கட்சியும் தமது நிலைப்பாட்டில் மாற்றிக்கொள்ளத் தயாராகவிருப்பதாகவும் பேராசிரியர் விதாரண தெரிவித்தார்.
ஆனால், சர்வகட்சிப் பிரநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இ.தொ.கா. ஆகியன சமஷ்டி அடிப்படையிலேயே தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.
பதவிகளைக் காப்பாற்றிக்கொள்வதற்காக முஸ்லிம் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுடன் ஒரு தமிழ்க் கட்சியும் சேர்ந்துக்கொண்டு ஒற்றையாட்சி முறைமையிலான யோசனைகளையே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனையாக உள்ளடக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் வரலாற்றுத் துரோகத்திற்கு துணைபோகும் காரியத்திற்கு அனுகூலமாக இருப்பதாக சிறுபான்மைக் கட்சிகள் சிலவற்றின் பிரதிநிதிகள் கவலை தெரிவித்தன.
இந்நிலையில் ஒற்றையாட்சி என்ற பதம் நீக்கப்படாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுவிட முடியாதென்பது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முறைமைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள மு.கா., இ.தொ.கா. ஆகிய கட்சிகளின் நிலைப்பாடுகளும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கெதிராக திரும்புவது யதார்த்தமானதாகும்.
இதேவேளை, மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சர்வகட்சிப் பிரதிநிதிகளின் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இதில் ஜாதிகஹெல உறுமய கலந்துகொள்ளாதெனவும் மேலும் அறிய வருகிறது.
No comments:
Post a Comment