Friday, 7 September 2007

ஈழச்செய்திகள்:070907

கிழக்கில் தேர்தல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு அரசு ஒத்திவைப்பு
மாகாண ஆளுநரின் கீழ் அமைக்கப்படும் குழு மூலம் மக்கள் பங்களிப்பு

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து கிழக்கு மாகாணத்தை முற்றாக விடுவித்துவிட்டதாக அறிவித்துள்ள அரசு, அங்கு மாகாணசபைத் தேர்தல் மற்றும் ஏனைய உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்தப்போவதாகத் தகவல்களை வெளியிட்டு வந்தது. எனினும் அந்தத் திட்டத்தை அரசுத் தலைமை இப்போது தற்காலிகமாக தள்ளிப் போட்டி ருப்பதாக அறியவருகின்றது.தேர்தல்களை நடத்தி, மக்கள் பிரதிநிதிகளிடம் உள்ளூராட்சி அதிகாரங்களை ஒப்படைப்பதற்குப் பதிலாக, மாகாணசபை மட்டத்தில், மாகாண ஆளுநரின் கீழ் பல தரப்பு மக்கள் பிரதிநிதிகளையும் கொண்ட ஓர் உயர் குழுவை அமைத்து அதன் ஆலோசனையோடு மாகாண ஆளுநரின் ஆட்சி முறையைத் தொடர்வதன் மூலம், மாகாண நிர்வாகத்தில் மக்கள் பங்களிப்பை இடம்பெறச் செய்யலாம் என்று அரசுத் தலைமை கருதுவ தாகவும் தெரிகிறது.இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான யோசனைத் திட்டத்தை முன்வைப்பதைத் தாமதப்படுத்திக் கொண்டு, மறுபுறத்தில் கிழக்கைக் கைப்பற்றுதல், வடக்கு கிழக்கு மாகாணங்களைத் துண் டித்தல், கிழக்கில் தேர்தல்களை நடத்துதல் என்று தன்னிஷ்டப்படி காய்களை நகர்த்தி வரும் இலங்கை அரசுத் தலைமையின் போக்கு, இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேசத் தரப்புகளின் கடும் விமர்சனத்துக்கும் விசனத்துக்கும் உள்ளாகி வருவது தெரிந்ததே.அரசுத் தலைமையோடு நெருக்கமாக நிற்கும் தமிழர் தரப்புகளில் கணிசமானவை கூட கிழக்கில் தேர்தல் ஒன்றை இன்றைய கட்டத்தில் நடத்துவதைக் கடுமையாக எதிர்க்கின்றன என்று கூறப்படுகின்றது.கிழக்கு மக்கள் பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்ந்திருக்கையில் தேர்தல் ஒன்றை அரசு அங்கு வலோற்காரமாகத் திணிப்பது வீண் விபரீதங்களுக்கு இடமளிக் கலாம் என்பதையும் சம்பந்தப்பட்ட தரப் புகள் அரசுத் தலைமைக்கு சுட்டிக்காட்டி யிருக்கின்றன என்றும் தெரிகின்றது.இந்தியா அதிருப்திஇதேவேளை, இன்றைய கட்டத்தில் வடக்கு கிழக்கைப் பிரித்துவிட்டு, கிழக் கில் தனியாகத் தேர்தல் ஒன்றை நடத்தும் கொழும்பின் யோசனை, புதுடில்லியின் கடும் அதிருப்திக்கும் உள்ளாகியிருப்பதா கக் கூறப்படுகின்றது.இந்தப் பின்னணியிலேயே, உத்தேச தேர்தல் திட்டத்தின் சாதக, பாதக நிலைகளை சீர்தூக்கிப் பார்த்த அரசுத் தலைமை, அத்திட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்கும் யோசனைக்கு வந்திருப்பதாகவும் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் இருந்து தெரியவந்தது.அதேசமயம், நிலைமை சீரடையும் வரை பார்த்திருக்காமல், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அமைவாக அதில் கூறப்பட்டபடி மாகாண சபைக்குரிய அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆளும் தரப்பின் கூட்டணிக் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தொடர்ந்து அரசுத் தலைமையை வலியுறுத்தி வருகின்றது. அந்த வற்புறுத்தலுக்கு சாதகமாக செயற்பட அரசுத் தலைமை தற்போது இணங்கியிருக்கின்றது என்றும் தெரிகின்றது.கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் பல்வேறு தரப்பினரையும் கொண்ட ஓர் உயர் ஆலோசனைச் சபையை மாகாண ஆளுநரின் கீழ் நிறுவி, அந்த சபையின் வழிகாட்டல்கள் மற்றும் சிபாரிசுக்களுக்கு அமைய மாகாண ஆளுநரின் நிர்வாக முறையை வழிப்படுத்துவதன் மூலம், மேற்படி மாகாண நிர்வாகத்தில் மக்கள் பங்களிப்பை ஏற்படுத்தலாம் என அரசு உயர்மட்டத்துக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.உடனடியாக கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்தாவிட்டாலும், அங்கு மாகாணசபை நிர்வாகத்தை மக்கள் மயப்படுத்த அரசுத் தலைமை தீர்மானித்திருப்பதாகவும் கூறப்பட்டது.


தமிழர் தாயகத்தை துண்டாடி நாடு துண்டாட வழி செய்யாதீர்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் அதிர்ச்சித் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியிருக்கின்றார். பௌத்த சிங்களப் பேரினவாத மனவமைவில் ஊறித் திளைத்த தென்னிலங்கையின் உண்மைச் சொரூபத்தை அந்த அதிர்ச்சித் தகவல் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றது.திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையே அந்த மாவட்டங்களின் சில கிராமங்களை ஒன்றிணைத்து, அவற்றில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி, அப் பிரதேசத்தில் தனிச் சிங்கள வலயம் ஒன்றை உருவாக்கும் திட்டத்துடன் அரசு செயற்படுகின்றது என்பதே சம்பந்தன் போட்டுடைத்த அரசின் குட்டாகும்.இலங்கை அரசின் சார்பில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரிய இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் மறுத்துரைத்தாலும், காலங்காலமாக தென்னிலங்கைச் சிங்கள அரசுகள் கபட நோக்கோடு மேற்கொண்டுவரும் வரலாற்றுக் கொடூரத்தின் மற்றோர் அங்கமே இது என்பது சர்வதேசம் வரை புரிந்த விவகாரம்தான்.சிறுபான்மையினரான தமிழருக்கு விரோதமான காழ்ப்புணர்வைத் தனது மனவமைப்பின் அடி நாதமாகக் கொண்ட பௌத்த சிங்களத் தேசியவாதம், தமிழினத்தின் தனித்துவ அடையாளங்களை சிதைத்து அழிப்பதன் மூலம் திருப்தி கொள்ளும் அநாகரீகக் கொடூரத்தை, கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேல் இந்தத் தீவில் அரங்கேற்றி வருகின்றது என்பதும் உலகறிந்த உண்மையே.தமிழரின் தனித்துவமான இன அடையாளங்களாக இருப்பவை அவர்களின் மொழி, வாழ்க்கை முறையும் பண்பாடும் பழக்க வழக்கங்களும் மற்றும் அவர்களது பாரம்பரிய வாழிடமான தாயக பூமி ஆகியவையாகும்.இவை மூன்றையும் தனித்தனியே இலக்குவைத்து அழித்தொழிக்கும் இனக் கபளீகரப் போக்கு திட்டமிடப்பட்ட அரச செயற்பாடாக கருத்தியலிலும், கொள்கையளவிலும், செயன்முறையிலும் இங்கு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிர்வாக ரீதியில் துண்டாக்கும் செயற்பாடு, இந்த அரசுத் தலைமையால் இப்போதுதான் முன்னெடுக்கப்பட்டது.ஆனால் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழர் தாயகத்தை பூகோள ரீதியாகத் துண்டாடிச் சிதைக்கும் குரூர நடவடிக்கை இலங்கையின் ஆட்சி அதிகாரம் பிரித்தானிய காலனித்துவத்திடமிருந்து நாட்டின் பெரும்பான்மையினரான சிங்களவர்களிடம் கைமாறிய காலம் தொட்டே தீவிரமாக முன்னெடுக்கப்படத் தொடங்கிவிட்டது. தமிழரின் தனித்துவத்தை வெளிப்படுத்தி நிற்கும் அவர்களது பாரம்பரிய பூமியை தனித்துவத் தாயகத்தை அழித்து சிதைப்பதற்கான திட்டமிடப்பட்ட ஒடுக்கு முறையின் குரூர வடிவமாக இந்தக் குடியேற்றங்களைக் குறிப்பிடலாம்.தமிழ்மக்களை அவர்களின் தாயகப் பூமியிலேயே சிறுபான்மையினராக்கி, சனத்தொகை விகிதாசாரத்தைச் சிதைப்பதும் அந்தத் தாயகப் பூமியை சிங்களக் குடியேற்றங்கள் மூலம் துண்டாக்கி தாயக மண் மீதான அவர்களது உரிமையை நிராகரிப்பதும் ஒன்றிணைந்த தமிழர் தாயகம் என்ற வலுவைச் சிதறடித்து அவர்களைப் பலவீனப்படுத்துவதும் எனப் பல் பரிமாண நோக்கோடு இந்தத் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஏற்கனவே கல்ஓயா, மாதுறு ஓயா போன்ற திட்டங்கள் மூலம் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் பௌத்த சிங்கள தேசியத்தால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.அல்லை, கந்தளாய் சிங்களக் குடியேற்றங்களும், யான் ஓயா நதித்திட்டமும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழரின் தாயகப் பூமியைப் பறித்தெடுத்து விழுங்கின.இப்போது அது ஒருபுறம் திருகோணமலை, மூதூர், சம்பூர் பகுதிகளையும் மறுபுறம் திருகோணமலை மாவட்ட எல்லைகளையும் தாண்டி முல்லைத் தீவு மாவட்ட தென்புறப் பிரதேசத்தில் மணலாறு (வெலிஓயா), கொக்கிளாய்ப் பிரதேசங்களையும் இலக்கு வைத்து நகர்வதையே சம்பந்தன் எம். பியின் எச்சரிக்கை வெளிப்படுத்தி நிற்கின்றது.சிங்கள அரசுகளின் ஆசீர்வாதத்துடனும், பின்புல ஆதரவுடனும் தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களே தமிழர், சிங்களவர் ஆகிய இரு தேசியங்கள் இடையே மீண்டும் சீர் செய்து, இணங்க வைக்க முடியாத நிரந்தரப் பிளவை உருவாக்கி அந்தப் பிரிவை நிலைப்படுத்தின; இரு இனங்களுக்கிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தி, தீவிரமுறவைத்து, சமரச சகவாழ்வை அசாத்தியமாக்கின.தமிழர் தாயகத்தைத் துண்டாடும் நோக்கோடு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள், இலங்கைத் தீவைத் துண்டாடி, தமது தாயகத்தைத் தனி இறைமையுள்ள பிரதேசமாக மீள உறுதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே தமக்கும், தமது இனத்துக்கும் மீட்சி கிட்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டைத் தமிழர்கள் மனதில் இறுக்கமாகவும் ஸ்திரமாகவும் ஏற்படுத்தும் என்பதை கொழும்பு புரிந்துகொள்வது நல்லது.ஆனால் அதைப் புரிய மறுத்து,தமிழர் தாயகத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் துண்டாட முனைந்து, அதன் வாயிலாக இலங்கைத் தீவே துண்டாடப்பட வழி சமைக்கிறது இந்த அரசியல் அதிமேதாவித்தனம்.

தெற்காசியாவில் `இஸ்ரேலை' உருவாக்க மேற்குலகு முயற்சி
[07 - September - 2007]

தடுத்து நிறுத்த சீனாவை உதவிக்கு அழைக்கிறார் வீரவன்ஸ மேற்குலகின் தாராள பொருளாதாரக் கொள்கை காரணமாக இலங்கை பாரிய இழப்புகளைச் சந்தித்திருப்பதாகவும் நாட்டின் இறைமைக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் ஜே.வி.பி. பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ எமது நாட்டைத் துண்டாடி தெற்காசியாவில் ஒரு இஸ்ரேலை தோற்றுவிக்க மேற்குலகம் முயன்று வருவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
மேற்குலகச் சக்திகளின் இந்தச் சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு சீனா அதன் பங்களிப்பைச் செய்ய வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜே.வி.பி.யின் பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சீனாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. இக்குழுவின் தலைவரான விமல் வீரவன்ஸ கடந்த திங்கட்கிழமை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகார பிரதியமைச்சர் சென் பென் கிக்ஷியாங்கை பீஜிங் நகரில் சந்தித்த போதே மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஜே.வி.பி. இன்று இலங்கையில் பலம் வாய்ந்த முன்னணி இடதுசாரிக் கட்சியென இங்கு சுட்டிக்காட்டிய விமல் வீரவன்ஸ நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாக ஜே.வி.பி. விளங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன்று மேற்குலகம் அறிமுகப்படுத்திய தாராள பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. மூன்று தசாப்தங்களாக இந்தப் பாதையில் நாடு பயணிப்பதன் காரணமாக நாடு பல்வேறுபட்ட இழப்புகளைச் சந்தித்துள்ளது. ஒரு நாட்டுக்கு முக்கியமாகக் கருதப்படும் இறைமைக்குக் கூட அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கலாசார ரீதியிலும் இலங்கையை மேற்குலகு விழுங்கிக் கொண்டிருக்கின்றது.
உலகின் வளர்முக நாடுகள் எதிர்கொள்ளும் மேற்குலக சதி முயற்சிகளுக்கு இன்று இலங்கையும் இரையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை முறியடிப்பதற்கு சீனா எமக்கு உதவ வேண்டும். மிக நெருக்கமான நட்புறவு நாடான சீனா எமது நாட்டைப் பாதுகாக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. எமது நாட்டைப் பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக எமது கட்சியில் இளைஞர்கள் அணி திரண்டுள்ளனர். மேற்குலகின் ஆதிபத்தியத்துக்கு எமது மண்ணை அடிமைப்படுத்த நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் எனவும் விமல் வீரவன்ஸ இச்சந்திப்பின்போது எடுத்துரைத்துள்ளார்.

பாதுகாப்பு விவகாரங்களை கையாள இலங்கை இந்தியா உயர்மட்ட குழு அமைப்பு
[07 - September - 2007]

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களை கையாள்வதற்காக இரு நாடுகளினதும் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரசிங்க தலைமையில் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே இரு நாடுகளுக்குமிடையில் பாதுகாப்பு விவகாரங்களை கையாள்வதற்காக இந்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி இணையத்தளமொன்று நேற்று வியாழக்கிழமை செய்தி வெளியிட்டிருக்கின்றது.
கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் இலங்கைத் தூதுக்குழுவினர் இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இலங்கை இந்திய உயர்மட்டக் குழுவில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, இந்திய பாதுகாப்புச் செயலாளர் விஜய்சிங், வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கைத் தூதுக்குழுவினர் இந்திய உயர் அதிகாரிகளுடன் நடத்திய இருநாள் சந்திப்புகளின்போது, இலங்கையின் தற்போதைய நிலைவரம், கிழக்கு மாகாண அபிவிருத்தி வடக்கில் இடம்பெறும் நடவடிக்கைகள் என்பன குறித்து கலந்தாராயப்பட்டன.
பயங்கரவாதத்தை ஒழித்து இலங்கையின் மோதலுக்கு முடிவுகட்ட அதிகாரப்பகிர்வை மேற்கொள்வது குறித்தும் டில்லிப் பேச்சுவார்த்தைகளின் போது ஆராயப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது இலங்கையின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு தொடர்பான தமது உறுதியான ஆதரவை இந்தியத் தரப்பினர் மீள வெளிப்படுத்திய அதேசமயம் தமிழ் மக்களின் நியாயபூர்வமான துயரங்களுக்கு அதிகாரப் பகிர்வு மூலம் துரிதமாகத் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு மூலம் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது தொடர்பாக இலங்கைத் தூதுக்குழு இந்தியத் தரப்பிற்கு விபரமாகக் கூறியுள்ளது.

No comments: