
நாம் அனைவரும் நிரபராதிகள் எமக்கு விடுதலை வேண்டும்
பூஸா முகாம் தமிழ்க் கைதிகள் ஜனாதிபதியின் குழுவிடம் உருக்கமான கோரிக்கை
வீரகேசரி நாளேடு
நாம் அனைவரும் குற்றச்சாட்டுக்களின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்! நிரபராதிகளான எம்மை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்!
எமக்கு வேறெõன்றும் வேண்டாம், விடுதலையே வேண்டும்!
என்று பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போதல் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளை கண்காணிக்கும் குழுவினர் பூசா சிறைச்சாலைக்கு நேற்று விஜயம் செய்திருந்தனர். இக்குழுவினரிடமே கைதிகள் பெரும் துயரத்துடன் இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். ஜனாதிபதியின் விசாரணைகளைக் கண்காணிக்கும் குழுவின்
உறுப்பினர்களான அமைச்சர் ராஜித சேனாரட்ன, பிரதி அமைச்சர்களான பெ.இராதாகிருஷ்ணன், கே.ஏ.பாயிஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவனாதன் கிஷோர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் இயக்குநர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரதாப் சிங், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நந்தன முனசிங்க ஆகியோர் நேற்று பூசா தடுப்பு முகாமுக்கு சென்றிருந்தனர்.
இங்கு 118 தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் பெண்களாவர். தடுத்து வைக்கப்பட்ட கைதிகளுடன் உரையாடிய இக்குழுவினர் அவர்களது குறைபாடுகளை கேட்டறிந்தனர்.
நாம் அனைவரும் குற்றமற்றவர்கள். காரணமின்றி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எமக்கு எதுவுமே வேண்டாம். எம்மை விடுதலை செய்தால் அதுவே போதும் என்று கைதிகள் மிகவும் உருக்கமாக கோரிக்கை விடுத்தனர்.
கைது, தடுத்து வைப்புக்கு காரணம் தெரியாது விசாரணை என்ற போர்வையில் நாம் பெரும் அவலங்களை சந்திக்கின்றோம். உறவுகளை பிரிந்திருப்பதென்பது கொடுமையிலும் கொடுமை. எனவே எம்மை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காகவே நாம் இங்கு விஜயம் செய்துள்ளோம். ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அனைவரையும் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என்று குழுவின் அங்கத்தவர்களான அமைச்சர் ராஜித சேனாரட்ன, பிரதியமைச்சர்களான பெ.இராதாகிருஷ்ணன், கே.ஏ.பாயிஸ் ஆகியோர் கைதிகளிடம் உறுதியளித்தனர். விசாரணைகளில் நிரபராதிகளை உடன் விடுதலை செய்யவும், ஏனையவர்களை நீதிமன்ற விசாரணைக்குட்படுத்திய பின்னர் விடுவிக்கவும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இக்குழுவினர் கைதிகளிடம் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு, மலையகத்தை சேர்ந்தோர்
பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 118 தமிழ் இளைஞர், யுவதிகளும் மலையகம், வடக்கு கிழக்கு பகுதிகளை சேர்ந்தவர்களாவர். உணவில் முறைபாடு
முகாமில் வழங்கப்படுகின்ற உணவில் குறைபாடுகள் காணப்படுகின்றன. சிலவேளைகளில் சோற்றுக்குள் கற்கள் காணப்படுகின்றன என்றும் கைதிகள் குழுவினரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். மூன்று சிறையில் தடுத்து வைப்பு முகாமில் மூடிய சிறைக்கூடம் ஒன்றும் திறந்த சிறைக்கூடம் இரண்டும் உள்ளன. விசாரணை பூர்த்தியடையாத கைதிகள் மூன்று, நான்கு பேராக மூடிய சிறைக்கூடத்துக்குள் அடைக்கப்படுகின்றனர். ஏனைய இரு திறந்த சிறைக்கூடங்களிலும் விசாரணை முடிந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த இரு சிறை கூடங்களில் ஒன்றில் 36 கைதிகளும் மற்றையதில் 35 கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்கு அதிகாரிகள் இங்கு விசாரணை நடத்துவதற்கென பயங்கரவாத புலனாய்வு பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் 20 பேர் வரை உள்ளனர். இவர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விசாரணைக்குட்படுத்துகின்றனர். கைதி மீது தாக்குதல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் அதிகாரி ஒருவரினால் நேற்று முன்தினம் தாக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலுக்குள்ளான கைதி ஜனாதிபதியின் குழுவினரிடம் தனக்கு நேர்ந்த அவலத்தினை கூறி முறையிட்டுள்ளார். இதுகுறித்தும் குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தமது குறைபாடுகளையும், கோரிக்கைகளையும் எம்மிடம் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து கைதிகளை விடுவிக்க தாம் நடவடிக்கை எடுப்போம் என்று குழுவின் அங்கத்தவர் பெ.இராதாகிருஷ்ணன் கேசரிக்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment