Tuesday, 11 September 2007

ஈழச்செய்திகள்:100907


தமிழ்க் கூட்டமைப்பினரிடம் இன்னும் ஊக்கம் வேண்டும்
யாழ் உதயன் ஆசிரியர் அபிப்பராயம்.

நாடு மிக முக்கியமானதொரு கால கட்டத்தில் நிற்கின்றது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அரசியல், இராணுவ, சமூக விவகாரங்களில் மிகச் சிக்கலானதொரு நேரத்தைத் தமிழினம் கடக்கும் வேளை இது. இந்தச் சமயத்தில் தேசிய ரீதியில் தமிழரினத்தின் ஜனநாயகப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்களின் செயற்பாடும் போக்கும் சர்ச்சைக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியிருக்கும் நெருக்கடியான சந்தர்ப்பம் இது.நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் 24 பிரதிநிதிகளில் 22 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். மற்றைய இருவரான அரசுடன் இணைந்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவரை ஒத்த தி. மகேஸ்வரன் எம். பியும் தமிழ்த் தேசியத்தைப் பிரதிபலிப்பவர்கள் என்று கூறமுடியாது. அவர்களை விட்டுவிடுவோம்.இந்த 24 பேரையும் விட, முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனைய தமிழ் பேசும் எம்.பிக்களில் மனோ கணேசன் நீங்கலாக இ. தொ. கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் முதல் கொண்டு மலையக மக்கள் முன்னணித் தலைவர் அமைச்சர் பெ. சந்திரசேகரன் வரை அனைவருமே, பேரினவாதத்தில் ஊறித் திளைத்துக் கிடக்கும் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்குக் கூசா தூக்கும் இந்தச் சமயத்தில் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையும் பொறுப்பும் இரட்டிப்பாகின்றன.தமிழினத்தின் இராணுவ, அரசியல் போராட்ட சக்திகளான புலிகள் தங்கள் பொறுப்பை உயிரைத் துச்சமென மதித்து ஆற்றி வரும் வேளையில் மறுபுறத்தில் புலிகளுக்கு பக்கத் துணையாக ஜனநாயக அரசியலில் பெரும் சக்தியாய் எழுச்சிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பொறுப்புணர்ந்து செயலாற்ற வேண்டும்.மட்டக்களப்பில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் தேவாலயத்துக்குள் கிறிஸ்மஸ் ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஜோஸப் பரராஜசிங்கம் எம். பி. சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கொடூரமும் கொழும்பில் பல இராணுவ பொலிஸ் சோதனைச் சாவடிகளுக்கு மத்தியில், பட்டப்பகலில், நட்ட நடு வீதியில் வைத்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என். ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரமும் தமிழர் மனதை ஆழமாகக் குடையும் வேதனைகள்.இத்தகைய ஆபத்துகளுக்கு மத்தியில்தான் பணிபுரிய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம். பிக்கள்.ஒருபுறம் மட்டக்களப்பிலோ, அம்பாறையிலோ, திருகோணமலையிலோ, வவுனியா மன்னாரிலோ, யாழ்ப்பாணத்திலோ தமது சொந்தத் தொகுதிகளுக்குக் கூடச் செல்லமுடியாத பாதுகாப்பு இக்கட்டில் அவர்கள் சிக்கிக் கிடக்கின்றார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னியைத் தவிர பிற எந்த இடங்களுக்கும் அரச கட்டுப்பாட்டில் உள்ள எந்தப் பிரதேசத்துக்கும் சுமுகமாகச் சென்றுவர முடியாத பெரும் சிக்கலிலேயே அவர்கள் உள்ளார்கள் என்பது வெள்ளிடைமலை. கொழும்பில் இருப்பதும் அவர்களுக்குச் சிக்கல்தான். அதனால் கொழும்பில் ஒரு காலும் வெளிநாடுகளில் வாழ்வுமாக அவர்களில் பலர் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்தச் செயற்பாட்டை நியாயப்படுத்துவதற்கு வெளிநாடுகளில் தமிழரின் விடுதலைப் போராட்ட எழுச்சி குறித்து பிரசாரம் செய்கிறோம் என்ற சாக்குப்போக்கு வேறு முன்வைக்கப்படுகின்றது.நாடாளுமன்றத்துக்கு முன் அனுமதியின்றி மூன்று மாதங்கள் தொடர்ந்து சமுகம் தராவிட்டால் எம். பி. பதவி காலியாகிவிடும் என்ற ஒழுங்குவிதி இருப்பதனால் என்னவோ மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நாடாளுமன்றப் புத்தகங்களில் கையெழுத்துப் போடுவதற்காகவேனும், கொழும்பைத் தமது சர்வதேசப் போக்குவரத்துக்கான மைய இடைநிலைத்தளம் (tணூச்ணண்டிt ணீடூச்ஞிஞு) ஆகப் பயன்படுத்தும் விதத்திலேனும் சில கூட்டமைப்பு எம். பிக்கள் அவ்வப்போது கொழும்பைத் தரிசித்துச் செல்லத் தவறவில்லை.இப்படி பிறநாட்டில் தமிழர் போராட்டப் பிரசாரம் என்று பெட்டியைத் தூக்கிக்கொண்டு சதா பயணத்தில் இருக்கும் பல எம். பிமாருக்கு, தமிழர் தாயகத்தில் மக்களின் அவலநிலை தொடர்பான அடிப்படைப் புள்ளி விவரங்கள் கூடத் தெரிவதில்லை. இந்தச் சீத்துவத்தில் ஈழத் தமிழர்கள் சார்பாக இவர்கள் ஆக்கபூர்வமான என்ன பிரசாரத்தை முன்னெடுப்பார்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.போதாக்குறைக்கு நாடாளுமன்றத்தில் அரசுக் கவிழ்ப்பு முயற்சியிலிருந்து, அரசுக்கு சார்பான நிதிச் சட்டங்களை நிறைவேற்றுகின்ற விவகாரம் வரை 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்த 22 பேர் அணியை எந்தத் தரப்புமே ஒரு பொருட்டாக மதிக்காத நிலையும் காணப்படுகின்றது.கைதுசெய்யப்படுவோரை பொலிஸார் 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றில் ஆஜர் செய்யவேண்டும் என்ற குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை அண்மையில் திருத்தப்பட்டது. கைது செய்யப்படுவோரை 48 மணிநேரம் தடுத்து வைக்கும் அதிகாரத்தைப் பொலிஸாருக்கு வழங்கும் விதத்தில் அச்சட்டம் திருத்தப்பட்டது. அந்தத் திருத்தத்தால் அதிகம் பாதிக்கப்படப் போகின்றவர்கள் இன்றைய கட்டத்தில் தமிழரே என்பது தெளிவு. ஆனால் இச்சட்டத்திருத்தம் மீதான வாக்கெடுப்பின்போது அதை ஜே. வி. பி. முதற்கொண்டு ஐ. தே. கட்சிவரை எதிர்த்து வாக்களித்தபோதும் அதை அடையாளத்துக்குத்தன்னும் எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 எம். பிக்களில் ஒருவர் கூட நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை.அரசுக்கு எதிரான விடயங்கள் வாக்கெடுப்புக்கு வரும் சமயங்களில், அதை எதிர்த்து வாக்களிக்கத் தமிழ்க் கூட்டமைப்பு எம். பிக்கள் நாடாளுமன்றில் இருக்கமாட்டார்கள் என்று பகிரங்கமாகக் கூறிக் கணக்குப் போடுகின்றார் அரசுத் தரப்பின் பிரதம கொறடா ஜெயராஜ் பெர்னாண்டோப்புள்ளே.அதேசமயம் அரசைக் கவிழ்க்கும் முயற்சியா, கூட்டமைப்பினரை எங்களுக்கு ஆதரவாக ரிரான் அலஸ் கூட்டிவருவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் கணக்குக் காட்டுகின்றார்.இவ்வாறு ஒவ்வொரு தரப்பினதும் போடுதடி போல கூட்டமைப்பினர் இருக்கின்றனரே தவிர, தமிழரின் அரசியல் போராட்டத்தில் ஓர் ஜனநாயக அதிர்வை (திடிஞணூச்ணt) ஏற்படுத்துகின்ற உந்து சக்தியாக அவர்கள் இல்லை. என்ற பலவீனம் தோற்றுகின்றது.விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த இனத்தின் பிரதிநிதிகள் என்ற ஆவேசம் இவர்களிடம் அடங்கிப்போய்விட்டதா என்று எண்ணும் நிலையைத் தோற்றுவிக்காமல் ஊக்கத்துடன் செயலாற்றும் பொறுப்பு இன்று அவர்களுக்கு உண்டு. வரலாற்றுக் கடமையை ஏற்றவர்கள் பலவீனத்தில் தூங்கிவிட முடியாது. தூங்கிவிடக் கூடாது.

சிலாவத்துறை மீனவர்களின் 200 க்கும் மேற்பட்ட ரோலர்கள் , இயந்திரப் படகுகளை அபகரிக்க முயற்சி
[10 - September - 2007]

*கடற்றொழிலாளர்கள் முறைப்பாடு -பி.ரவிவர்மன்-
சிலாவத்துறை , அரிப்பு பிரதேசங்களிலுள்ள மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 200 க்கும் மேற்பட்ட ரோலர்கள் , இயந்திரப் படகுகள் என்பவற்றை வேறிடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இடம்பெயர்ந்துள்ள அப்பகுதி மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சிலாவத்துறை, அரிப்பு போன்ற பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து நானாட்டான் பிரதேசத்தில் தங்கியுள்ள பொதுமக்கள் இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிஷோர், எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோரிடமும் முறையிட்டுள்ளனர்.
சிலாவத்துறை, அரிப்பு கடற் கரைப் பிரதேசங்களில் அப்பகுதி மீனவர்களுக்குச் சொந்தமான 200 க்கும் மேற்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான ரோலர் படகுகள், இயந்திரப் படகுகள் என்பன கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.
தமது ஜீவனோபாய வாழ்வுக் குரிய இவை நாட்டின் வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டால் அப்பகுதி மக்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடும் என்றும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் அரிப்பிலுள்ள தேவாலயமொன்றின் பிரத்தியேக அறையொன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த லப்டொப் மற்றும் பல பெறுமதியான பொருட்கள் சூறையாடப் பட்டுள்ளதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிடப்பட்டுள்ளது.
அத்துடன்,சிலாவத்துறை, அரிப்பு பிரதேசங்களிலுள்ள பல வீடுகள் உடைக்கப்பட்டு உடைமைகள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் தங்கியுள்ள மக்கள் முறையிட்டுள்ளனர்.
இப்பகுதி மக்கள் தமது சொந்தப் பாவனைக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டிகள் ,மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள், உழவு இயந்திரம், துவிச்சக்கர வண்டி உட்பட பெறுமதியான அனைத்து உடமைகளையும் கைவிட்ட நிலையிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். அப்பொருட்களுக்கு என்ன நடந்திருக்குமென்று தெரியாத நிலையில் இவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சிலாவத்துறை, அரிப்பு பிரதேசங்களில் மோதல்கள் எதுவும் இடம்பெறாத நிலையில் அப்பகுதிக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வழித்துணையுடன் மதகுருமார்கள், கன்னியாஸ்திரிகள், கிராம சேவையாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு வருவதற்கு படைத்தரப்பினரிடம் அனுமதி கோரிய போதிலும் இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி நிலை மட்டுமன்றி அவர்கள் தங்கியுள்ள நானாட்டான் மற்றும் முருங்கன் பிரதேச பாடசாலை மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது இப்பகுதியில் மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் இடம்பெயர்ந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மோதல் சம்பவங்கள் எதுவுமில்லாத நிலையில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள அரச அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் இடம்பெயர்ந்த மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். -


இலங்கை - இந்திய பாதுகாப்பு உயர்மட்டக்குழு தொடர்பான செய்திக்கு அரசு கவலை தெரிவிப்பு [10 - September - 2007]

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக தங்களது தரப்பிலிருந்து வெளியான செய்தி தவறானதென நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கும் இலங்கை அரசாங்கம் இதற்காக வருத்தத்தையும் வெளியிட்டுள்ளது என்று `பி.பி.ஸி.' தமிழோசை தெரிவித்துள்ளது. கடந்தவாரம் புதுடில்லியில் இலங்கை மற்றும் இந்திய உயர் பிரதிநிதிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுகளையடுத்து இரு நாடுகளினதும் பிரதிநிதிகள் அடங்கிய உயர் மட்ட பாதுகாப்பு குழுவொன்று அமைக்கப்பட்டதாக கடந்த வியாழக்கிழமை இலங்கை அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதை இந்திய அரசின் தரப்பு திட்டவட்டமாக மறுத்து விட்டதை அடுத்தே, தங்களது தரப்பில் தவறு இடம்பெற்று விட்டதாகவும் அதற்காக வருந்துவதாகவும் நேற்று இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையில் புதுடில்லி விஜயம் மேற்கொண்ட இலங்கை உயர்மட்ட தூதுக்குழுவினர் நடத்திய பேச்சுகளை அடுத்து இரு நாடுகளுக்குமிடையில் பாதுகாப்பு விவகாரங்களை கையாள்வதற்கென உயர்மட்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் இதில் இலங்கை சார்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்‌ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ, இந்தியா சார்பில் அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் விஜய்சிங், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் அங்கம் வகிப்பதாகவும் இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் கொள்கை ஆய்வு மற்றும் தகவல் அலகு எனும் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருந்தது.
இருப்பினும், இதே கொள்கை ஆய்வு மற்றும் தகவல் அலகு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இலங்கை உயர்மட்டக் குழுவின் இந்திய விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையில் உயர்மட்ட பாதுகாப்புக் குழுவென்று எதுவும் அமைக்கப்படவில்லை எனவும், அவ்வாறான குழுவொன்று அமைக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தியானது, கிடைக்கப்பெற்ற தகவலொன்றைத் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டதால் வந்த விளைவு எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்த தவறான செய்திக்காக வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் இந்த தவறுக்காக இலங்கை உயர்மட்டக் குழுவிடமும் இந்திய உயர்மட்ட குழுவிடமும் ஊடகங்களிடமும் மன்னிப்பு கோருவதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


றோயல் கல்லூரி தமிழ் மாணவனின் சடலம் அடிகாயங்களுடன் மீட்பு
[10 - September - 2007]

கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் மாணவனொருவர் கடந்த வியாழக்கிழமை இரவு அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பம்பலப்பிட்டி சென்.பீற்றர்ஸ் ஒழுங்கையில் வசித்த, க.பொ.த.(சாதாரண) வகுப்பு மாணவனான வைத்தியநாதன் கௌதமன் (16 வயது) என்பவரே கொலை செய்யப்பட்டவரெனத் தெரிவிக்கப்படுகிறது.
வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் அப்பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு இவர் சென்றுள்ளார்.
வழமையாக இந்த தனியார் வகுப்பு இரவு 8 மணிக்கு முடிந்ததும் இவர் வீடு திரும்பிவிடுவார். ஆனால் வியாழக்கிழமை இவர் வீடு திரும்பவில்லை.
வீட்டார் பல பகுதிகளிலும் தேடியதுடன் இவரது சக மாணவர்களிடமும் விசாரித்த போதும் எதுவும் தெரியவரவில்லை.
இந்த நிலையில் இவரது சடலம் சென்.பீற்றர்ஸ் லேனின் முடிவில் கடற்கரை பகுதியில் கிடப்பதாக றோயல் கல்லூரியிலிருந்து இவரது வீட்டிற்கு மறுநாள் மாலை 3.30 மணியளவில் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவ்விடத்திற்கு சென்று பார்த்த போது இவரது சடலம் கிடப்பதை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
உடலில் பலத்த அடிகாயங்களிருப்பதால் இவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகிறது.


மாந்தை மேற்கிலிருந்து 2915பேர் இடம்பெயர்வு
வீரகேசரி நாளேடு

மன்னார், மாந்தை மேற்குப் பகுதியில் இடம்பெற்ற ஷெல் வீச்சின் காரணமாக மாந்தை மேற்குப்பகுதியிலிருந்து 709 குடும்பங்களைச் சேர்ந்த 2915 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வருவதனால் இத்தொகை இன்னமும் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடத்தல் தீவு, இலுவைக்கடவை, பெரியமடு, பாலியாறு, வெள்ளங்குளம், முழங்காவில் பகுதிகளை நோக்கிய இம்மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதேவேளை குறுவாலி நலன்புரி நிலையப்பகுதியில் ஷெல்கள் வீழ்ந்து வெடித்தமையினால் அங்கு தங்கியிருந்த 135 குடும்பங்களைச் சேர்ந்த 530 பேர் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
மாந்தை மேற்கிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தமையினால் மாந்தை மேற்கில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோகம் கவனிப்பாரற்று அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
1000ஏக்கர் நிலப்பரப்பில் இங்கு சிறுபோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: