Wednesday, 12 September 2007

யுத்தத் தளபாடங்களுடன் பயணித்த 3 படகுகள் தீக்கிரை





இலகு ரக விமானங்கள், குண்டு துளைக்காத வாகனம் உட்பட புலிகளுக்கு ஆயுதங்கள் ஏற்றி வந்த 3 கப்பல்களை கடற்படை மூழ்கடிப்பு!
கொழும்பில் அரசு அறிவிப்பு - யாழ் உதயன்

விடுதலைப் புலிகளுக்கு ஆயுத தளபாடங்களை ஏற்றிவந்தவை எனக் கூறப்படும் மூன்று பெரிய கப்பல்களை இலங்கைக் கடற்படை தாக்கி அழித் திருப்பதாக அரசாங்கத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.இலகுரக விமானங்கள் மற்றும் பெருமளவு ஆயுதங்களை ஏற்றிவந்த புலிகளின் கப் பல்களே தகர்க்கப்பட்டன என்றும் இந்தக் கப்பல்கள் தகர்க்கப்பட்டதோடு புலிகளின் கப்பல்களின் அணியே முற்றாக அழிந்து விட்டது என்றும் இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது.திங்கள் இரவு முதல் நேற்று அதிகாலை வரை தெற்குக் கடலில் இடம்பெற்ற தாக்குதல் நடவடிக்கையின் மூலம் புலிகளின் இந்தக் கப்பல்களைக் கடற்படையினர் மூழ்கடித்தனர் என்று இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வஸந்த கரன்னகொட கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.புலிகளிடம் இதுவரை இருந்து வந்த பத்துப் பெரிய கப்பல்களில் ஒன்றைத் தாங்கள் அழித்து விட்டனர் என் றும், அதன்பின் இப்போது புலிகளிடம் ஒரேயொரு கப்பல் மட்டுமே எஞ்சியிருக்கின்றது என்றும் கூறிய அவர், இந்தத் தாக்குதல் புலிகளுக்குப் பேரிடியும், பேரிழப்பும் என்றும் குறிப்பிட்டார்.கடற்படைத் தளபதி செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்ததாவது:இப்போதைய தாக்குதல் இலங்கைத்தீவின் தென்முனையில் உள்ள தேவேந்திரமுனைக்கு தென்கிழக்கே சுமார் ஆயிரத்து 200 கிலோ மீற்றர் (சுமார் 700 கடல்மைல்) தொலைவில் வைத்து நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இக்கப்பல்கள் பெயரிடப்படாமல், கொடி இல்லாமல், எந்தத் துறைமுகத்திலும் பதிவு செய்யாமலும் கடலில் பயணித்தன.அவற்றைக் கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து அவதானித்த பின்னரே படையினர் அவற்றில் ஒன்றை நோக்கி திங்கள் காலை 7 மணியளவில் முதலில் எச்சரிக்கை வேட்டைத் தீர்த்தனர்.அந்தக் கப்பலில் இருந்து திருப்பித் தாக்குதல் நடத்தப்பட்டதால் கடற்சமர் மூண்டது.அந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதுடன் கடற்சமர் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் திங்கள் மாலையில் அடுத்த கப்பலும் செவ்வாய் அதிகாலை 2 மணியளவில் மூன்றாவது கப்பலும் இதே சூழ்நிலையில் மூழ்கடிக்கப்பட்டன.இந்தக் கப்பல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு என பிரத்தியேகமாக குண்டு துளைக்காத வாகனம், பீரங்கிகள், இலகுரக விமானங்கள் மூன்று, மற்றும் அதிவேகத் தாக்குதல் படகுகள், ஆயுதங்கள் போன்றவற்றை புலிகள் எடுத்து வந்தனர் என்றார்.ஒவ்வொன்றும் சுமார் எழுபது மீற்றர் (230 அடி) நீளமான இக்கப்பல்கள் "மயோசி' , "சிஷின்', "கோஷ' எனப் பெயரிடப்பட்டிருந்தன என்று தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டார் என இணையத்தளச் செய்திகள் தெரிவித்தன. அப்பெயர்கள் புனையப்பட்டவையாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

No comments: