Friday, 28 September 2007

மீசையில் மண்படாத தமிழன்!- enb

இப்போது தப்பிப் பிழைத்தாலும் எப்போதும் தப்பிவிட முடியாது

ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் தற்போதைய ஆறாவது கூட்டத் தொடர் பெரும் பாலும் இறுதிக் கட்டத்தை
நெருங்கி விட்டது.இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை நிலைவரங்களை நேரில் கண்காணித்து,
விசாரித்து, ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கக் கூடியதாக ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஒன்றை நிரந்தரமாக இலங்கையில் நிறுத்த
வேண்டும் என்ற பிரேரணையை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றி வைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், இறுதிக்
கட்டத்தில் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டி ருக் கின்றன. கைவிடப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கிலும் தற்காலிகமாக
ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடு வதே பொருத்தமானது.இந்தக் கூட்டத் தொடரில் மோசமான மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை மீது கடும் அழுத்தம் மட்டுமே பிரயோகிக் கப்படும் என்பதையும் இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று கொண்டு வரப்படுவதற்காக ஆரவார ஏற்பாடுகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும் அந்த எத்தனம்
இறுதி நேரத்தில் அடுத்த கூட்டத் தொடருக்கு ஒத்திவைக்கப்படும் என்பதையும் இதே பத்தியில் சில தினங்களுக்கு முன்னர் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் கோடிகாட்டியிருந்தோம். அதுவே இப்போது எதிர்பார்க்கப்பட்டபடி
நடந்தேறுகின்றது.மனித உரிமை மீறல்களுக்காக இலங்கைக்கு எதிராகப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதில் ஐரோப்பிய ஒன்றியமே முழு மூச்சாக
ஈடுபட்டிருந்தது. ஒன்றியத்தின் தலைமைப் பதவி இப்போது போர்த்துக்கல் வசம் உள்ளது.இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரஸல்ஸ் கூட்டத் தொடரிலும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் தற்போதைய கூட்டத் தொடரிலும்
பிரேரணை கொண்டுவருவதே ஒன்றியத்தின் முன்னைய திட்டமாக இருந்தது.ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் (முன்னர் "ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு' என அழைக்கப்பட்ட அமைப்பின்)கூட்டத் தொடர்களில்
இத்தகைய பிரேரணை ஒன்றை இலங்கைக்கு எதிராகக் கொண்டு வருவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மொத்தம் மூன்று கூட்டத்
தொடர்களின்போது இத்தகைய முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து எடுப்பதும், கடைசி நேரத்தில் அதைத் தள்ளிப்போடுவதுமாக
இடம்பெறும் செயற்பாடு இப்போது நான்காவது முறையாகவும் இடம்பெற்றிருக்கின்றது.ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம். இந்த விவகாரத்தில் தீர்மானம் எடுப்பதை பிரேரணை ஒன்றை ஐ. நா. மனித உரிமைக் கவுன்ஸிலில்
நிறைவேற்றி இந்த விவகாரத்தை ஐ. நா. பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வருவதா என்று முடிவு செய்வதை ஐ. நா. மனித உரிமைக்
கவுன்ஸிலின் அடுத்த கூட்டத் தொடர்வரை ஒத்திவைப்பதைத் தவிர்க்கும்படி கோரப்பட்டிருக்கின்றது. இந்தக் கோரிக்கையை மனித உரிமைகள்
தொடர்பான முக்கிய சர்வதேச அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபை முன்வைத்திருக்கின்றது.கடந்த முறை இதேபோன்ற பிரேரணை ஒன்று இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் வரவிருந்தபோது அதைச் சமாளிப்பதற்காக
இலங்கை அரசு திடீர் அறிக்கை ஒன்றை அப்போது விடுத்தது.இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் மோச மான மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய விசேட ஜனா திபதி ஆணைக்குழு ஒன்று
நியமிக்கப்படும், அதன் விசாரணை களைக் கண்காணிக்க பிரபலமான சர்வதேசப் பிரமுகர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்படும் என்றெல்லாம்
அரசு அறி வித்தது. அதை நம்பி இலங்கை அரசுக்கு எதிராகப் பிரேரணை கொண்டுவரும் முயற்சியைச் சர்வதேச சமூகம் அப்போது தள் ளிப்போட்டது.அறிவிக்கப்பட்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் அதற்கு அப் பால் எதுவும் நடக்கவில்லை.
எல்லாமே புஸ்வாணமாகிவிட் டன. சர்வதேசப் பிரபலங்களைக் கண்காணிப்பாளர்களாகக் கொண்ட பிரமுகர்கள் குழுவே அந்நிலைமையை
அம்பலப்படுத்தி விட்டது.இந்நிலையில் மீண்டும் இந்தக் கூட்டத் தொடரில் அதே போன்ற பிரேரணைக்கு மீண்டும் முயற்சி எடுக்கப்பட்டது.அதையும் சமாளிக்கும் விதத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை நேரில் வந்து பாருங்கள், அதன் பின்னர் முடிவு செய்யுங்கள் என்று மனித
உரிமைகளுக்கான ஐ.நா. தூதுவர் லுயிஸ் ஆர்பர் அம்மையாருக்கு இலங்கை அரசு அழைப்பு ஒன்றை விடுத்தது. அரசின் தந்திரம் பலித்தது.ஒரு நாட்டுக்கு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் அதி காரி ஒருவர் நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட முன் னர், அந்த நாடு குறித்து ஒரு
தீர்மானம் எடுப்பானேன், அதை ஒத்திப் போடலாமே என்ற கருத்து சர்வதேச சமூகத்தின் மத்தி யில் வலுப்பட, இம்முறை ஐ.நா. மனித உரிமை
கவுன்ஸில் கூட் டத்தில் கண்டனத் தீர்மானத்துக்கு இலக்காகும் நெருக்கடியி லிருந்து இலங்கை தப்பிப் பிழைத்திருக்கின்றது.ஆனால் ஆர்பர் அம்மையார் இலங்கைக்கு வந்து நேரடியாக நிலைமைகளைக் கண்டறிந்து திரும்பிய கையோடு இலங்கை நிலைவரம் குறித்து ஐ.நா.
மனித உரிமைகள் கவுன்ஸில் விசேட மாக இதற்காக கூடி ஆராய்ந்து, இலங்கை குறித்து ஒரு முடி வெடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்
சபை உட்பட பல சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளினதும் சர்வதேச சமூகத்தினதும் பிரதிநிதிகள் வற்புறுத்தியிருக்கின்றனர்.ஆக, ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் தற்போதைய கூட்டத் தொடரில் இலங்கையில் ஐ.நா. கண்காணிப்பாளர்களை நிறுத்தக்கோரியோ அல்லது
இலங்கைக்கு எதிராக அதன் மனித உரிமை மீறல்களுக்காகக் கண்டனம் தெரிவித்தோ ஒரு பிரேரணை முன்னெடுக்காமல் இடைநிறுத்தப்பட்டமை
இலங்கை அரசுக்குத் தற்காலிகமாக மூச்சு விடக் கிடைத்த ஒரு வாய்ப்பு மட்டுமே. தனது நாட்டில் மோசமான மனித உரிமை மீறல் களுக்கு
இடமளித்து, அவற்றைத் தூண்டி, வழிநடத்திப் பெரும் தவறிழைத்து வரும் அரசுத் தலைமை, அதிலிருந்து மீளும் வரை சர்வதேச சமூகத்தின் கத்தி
அதன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டுதான் இருக்கும் எப்போதும் தலைமேல் விழலாம் என்ற ஆபத்தோடு.அதிலிருந்து மீண்டு அரசுத் தலைமை நிம்மதிப் பெருமூச்சு விடுவதாயின், அது மனித உரிமைகள் விடயத்தில் தன்னைத் தானே முற்றாகத் திருத்திக்
கொள்ள வேண்டும். ஆனால் அந்தக் குட்டைக்குள் முற்றாக மூழ்கிக் கொண்டுள்ள அரசுத் தலைமை அதிலிருந்து மீளுவதற்கான வாய்ப்புகள் மிகமிகக்
குறைவு என்பதே யதார்த்தம்; மெய்மைநிலைமை.


இணக்கம் ஏற்படாவிட்டால் சர்வகட்சி குழு கலைப்பு
[28 - September - 2007]

* அரசாங்கம் அறிவிப்பு; `மாற்று வழிமூலம் அரசியல் தீர்வு' -எம்.ஏ.எம்.நிலாம்-
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவால் தீர்வுத் திட்டத்துக்கான இணக்கப்பாடு காணப்படாவிடில் சர்வகட்சி குழுவை கலைத்துவிட்டு மாற்று வழியொன்றின்
மூலம் அரசியல் தீர்வுத் திட்டத்தைக் கொண்டு வரும் முயற்சிகள் முன்னெடுக்கப்படலாமெனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் கட்சிகளுக்கிடையே
இணைக்கப்பாட்டை எட்டுவதில் அரசு தொடர்ந்தும் முனைப்புக் காட்டி வருவதாகவும் அரசியல் தீர்வை எட்டுவதிலிருந்து அரசு ஒரு போதும் விலகிச்
செல்லாது எனவும் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக
விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
அமைச்சர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியிலிருந்து அரசு ஒரு போதும் விடுபடப் போவதில்லை. யுத்தம் செய்வதென்பது மிக இலகுவான
காரியமாகும். ஆனால், சமாதானத் தீர்வை எட்டுவது மிகக் கடினமான பணியாகும். சமாதானத் தீர்வுக்கு சகல தரப்புக்களையும், சகல சமூகங்களையும்
உடன்பட வைக்க வேண்டும். அதனைச் செய்வதில் தாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாது. இதன் காரணமாகவே சர்வகட்சிக் குழு தீர்வு திட்டத்தை
எட்டுவதில் தாமதம் தொடர்கிறது.
அரசியல் கட்சிகளுக்கிடையே இணக்கப்பாட்டை எட்டுவது மிகக் கடினமான காரியமாக உள்ளது. முரண்பாடுகளை களைவதென்பது இலகுவானதாகத்
தென்படவில்லை. சில வேளை சர்வகட்சிக் குழுவால் அதன் இலக்கை எட்ட முடியாது போனால், அதனைக் கலைத்து விட்டு வேறு வழியொன்றின்
மூலம் அரசு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டி ஏற்படலாம். காலவோட்டத்துக்கமைய அமைப்பு ரீதியில் வேறுபட்டேனும் அரசியல் தீர்வைக்
கொண்டு வருவதில் அரசு தீவிர ஈடுபாடு காட்டி வருகின்றது.
அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வைக் காணும் நிலைப்பாட்டிலிருந்து அரசு விடுபடவேயில்லை. அரசு யுத்தத்தில் முனைப்புக் காட்டுவதாகக்
கூறப்படுவதை முற்றாக நிராகரிக்கின்றோம். பயங்கரவாதத்தை அடக்குவதற்கே யுத்தம். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கல்ல. பிரச்சினைக்குத்
தீர்வு அரசியல் ரீதியிலானதாகவே இருக்கும். வேறு எந்த வழியிலும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு சாத்தியப்படப் போவதில்லை என்பதே அரசின்
உறுதியான நிலைப்பாடாகும்" எனவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். =========

No comments: