தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை இருநூறு ரூபாவாக உயர்த்துவதற்கு இணக்கம்
வீரகேசரி நாளேடு
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தினை 200 ரூபாவாகவும் மாதாந்த சம்பளத்தினை 5 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிப்பதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனம் நேற்று இணக்கம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று இரவு தோட்ட முதலாளிமார் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்புக்கான ஒப்பந்தத்தில் இன்று முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கக் கூட்டமைப்பும் கைச்சாத்திடவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொழில் அமைச்சர் அத்தாவுட செனவிரட்ன, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும் எம்.பி.யுமான ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம் எம்.பி., உபதலைவர் ஆர்.யோகராஜன், ஹரிச்சந்திர ஆகியோரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கதிரேசன், முகைதீன் ஆகியோரும் ஒன்றிணைந்த கூட்டு தொழிற்சங்கங்களின் சார்பில் ஜே.மல்லியத்த, சந்திரசேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தை 170 ரூபாவிலிருந்து 200 ரூபாவாக அதிகரிப்பதற்கும் மாதாந்த சம்பளத்தை 5 ஆயிரம் ரூபாவாக உயர்த்தவும் பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதனைவிட விலைக்கேற்ற கொடுப்பனவு 20 ரூபாவாகவும் வருகைக்கான கொடுப்பனவு 70 ரூபாவையும் தொடர்ந்து வழங்குவதற்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் சம்மதம் தெரிவித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு தொடர்பான ஒப்பந்தம் இன்று தொழில் அமைச்சில் மேற்கொள்ளப்படவுள்ளது. சம்பள அதிகரிப்புக்கு ஏற்ப நாளொன்றுக்கு தோட்டத் தொழிலாளருக்கு 290 ரூபா சம்பளம் கிடைக்கும். மாதமொன்றுக்கு 7250 ரூபா கிடைக்க வழி ஏற்படும். சம்பள அதிகரிப்பு தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் ஆர்.யோகராஜன் தெரிவித்ததாவது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சம்பள அதிகரிப்புக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது ஜனாதிபதியின் முழுமையான முயற்சியினால் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாதாந்த சம்பளம் 5 ஆயிரம் ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
விலைக்கேற்ற கொடுப்பனவும், வருகைக்கான கொடுப்பனவும் தொடரும். மாதாந்தம் தொழிலாளர்கள் 7250 ரூபா பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தினை உயர்த்த ஜனாதிபதி கடும் முயற்சி எடுத்தார். இதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இ.தொ.கா. நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அரசுக்கு காலக்கெடு பதிலின்றேல் 29, 30ஆம் திகதிகளில் வேலை நிறுத்தம்
வீரகேசரி நாளேடு
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக இடைக்கால யோசனையின் அடிப்படையில் சுற்றறிக்கையினை வெளியிடுவது குறித்து எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் உரிய பதில் அளிக்கப்பட வேண்டும். இல்லையேல் எதிர்வரும் 29, 30 ஆம் திகதிகளில் வடக்கு கிழக்கு உட்பட நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெறும் என்று ஐந்து ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே வேலை நிறுத்த அறிவிப்பும், காலக்கெடுவும் விடுக்கப்பட்டது.
இம்மாநாட்டில் கல்விசார் தொழிற்றுறையினரின் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை மனையியல் விஞ்ஞான மற்றும் விவசாய விஞ்ஞான டிப்ளோமா ஆசிரியர் சங்கம் என்பன கலந்துகொண்டன.
இதில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின்,
கடந்த மாதம் 13 ஆம் திகதி நாம் நடத்திய ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு முன்பும், வினாத்தாள் பகிஷ்கரிப்பின் போதும் கல்வியமைச்சர், தேசிய சம்பள ஆணைக்குழு உட்பட பல்வேறு தரப்பினர் சம்பளப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். ஆனால் இன்று எவருமே அது தொடர்பில் அக்கறை காட்டாமல் மௌனமாக இருக்கின்றனர்.
எனவேதான் கல்வியமைச்சின் இடைக்கால யோசனைகளுக்கமைய சுற்றறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தியும் ஆசிரியர்கள், அதிபர்கள் கடந்த காலங்களில் அச்சுறுத்தப்பட்டதையும் கண்டித்தும் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் ஆசிரியர்கள் அதிபர்கள் இணைந்து 29, 30 ஆம் திகதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதில் ஏனைய சங்கங்களையும் இணைத்துக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.
எமது வேலை நிறுத்தம் தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளோம். அதில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் கல்வியமைச்சின் இடைக்கால யோசனைகளுக்கமைய சம்பள முரண்பாடுகள் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிடுவது தொடர்பில் பதிலளிக்க வேண்டுமென்றும் அறிவித்துள்ளோம்.
எமக்கு பதில் கிடைக்காவிட்டால் 29, 30 ஆம் திகதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவதோடு அதற்கும் மேலான கடுமையான தொழிற்சங்கப் போராட்டங்களை மேற்கொள்ள தயாராகவே உள்ளோம்.
அரசாங்கம் ஆசிரியர்களின் போராட்டத்தை ஒட்டுமொத்தமாக நசுக்கி விட்டதாக எண்ணிக் கொண்டுள்ளது. எனவே, நாம் கூறுகிறோம் இதுபோன்ற தப்புக் கணக்கு போடவேண்டாம்.
ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பெற்றோர் விசனம் தெரிவிக்க முடியும்.
ஆனால் ஆசிரியர் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை முரண்பாடுகள் இன்று நேற்று தோன்றியதல்ல. 10 வருடங்களாக புரையோடிப் போயிருக்கும் பிரச்சினையாகும்.
எனவே, பொறுமை காத்து இயலாத நிலையிலேயே எமது போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்தோம்.
எதனையும் புதிதாக கோரவில்லை. ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக கல்வியமைச்சு முன்வைத்த இடைக்கால யோசனைகளுக்கமைய சுற்றறிக்கையை வெளியிடுமாறே வலியுறுத்துகிறோம் என்றார்.
ஆயுதக் கொள்வனவுக்கு குறைநிரப்பு பிரேரணை
[09 - October - 2007]
* நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
முப்படையினருக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான குறைநிரப்பு ஒதுக்கீட்டு பிரேரணை நாளை புதன்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
முப்படையினருக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், வரவு- செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச்சட்ட மூல விவாத பிரேரணைக்கான முன்னறிவித்தலும் நாளை புதன்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனை சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலுமொரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
நாளை புதன்கிழமை உள்ளூராட்சி சபை திருத்தச் சட்டம் மற்றும் புனர்வாழ்வு அதிகார சபை குறித்த பிரேரணைகளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
வியாழக்கிழமை தபால் சட்ட மூலம் தொடர்பான பிரேரணையும் நடைபெறவுள்ளது.
வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் காலம் சென்ற அன்வர் இஸ்மாயில் மீதான அனுதாப பிரேரணையும் நடைபெறவுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்களின் கூட்டமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Uthayan Posted on : Wed Oct 10 8:45:00 2007
சட்டவிரோதக் குழுக்களுக்கு ஆயுதம் கிடைப்பதை தடுப்பதற்கு அவசரகாலச் சட்டவிதிகள் வரும்
பஸில் ராஜபக் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு
"இலங்கையிலுள்ள சட்டவிரோதக் குழுக்களுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுப்பதற்காக அவசரக்காலச் சட்டத்தில் திருத்த ஏற்பாடுகளைச் செய்வதற்கு அரசு தீர்மானித்திருகின்றது. இதற்கான முன்னேற்பாடுகள் எல்லாம் ூர்த்தியடைந்துவிட்டன. இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் ஜனாதிபதியின் ஆலோசகரும், புதிய நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றிருப்பவருமான பஸில் ராஜபக்ஷ. நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் தனது கன்னி உரையை நேற்று ஆற்றினார் பஸில் எம்.பி. தமது உரையில் தெரிவித்தவை வருமாறு:நாம் இப்போது சர்வதேச நாடுகளுடன் நல்லுறவைப் பேணி வருகின்றோம். இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளோம். ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் எப்போதும் இல்லாத வகையில் இப்போது மிகவும் அதிகளவில் எமக்கு உதவி செய்து வருகின்றன. எமது உறவின் நெருக்கம் காரணமாக 34 நாடுகள் புலிகளைத் தடைசெய்தன. அதேபோல் புலிகளின் நிதி சேகரிப்பு, ஆயுதக் கொள்வனவு போன்றவற்றைத் தடைசெய்யவும் பல நாடுகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளன.அதேவேளை, இலங்கையில் உள்ள எந்தவொரு நபருக்கும் குழுவுக்கும் சர்வதேச நாடுகள் ஆயுதங்களை வழங்க முடியாதவாறு அவசரகாலச்சட்டத்தின் கீழ் சட்ட ஏற்பாடுகள் கொண்டுவர நாம் திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நாம் பூர்த்திசெய்து முடித்துள்ளோம்.அதனை மீறி ஆயுதங்களைக் கொள்வனவு செய்பவர்களுக்குத் தண்டனை வழங்கவும் அச்சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மிக விரைவில் இச்சட்டம் கொண்டுவரப்படும்.மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் அமைதிப் பேச்சைத் தொடங்க கடும் முயற்சி எடுத்தார். புலிகளுக்கு அழைப்பு விடுத்தார்.வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புலிகளை ஒருவாறு பேச்சுக்கு இழுத்தார். ஜெனீவாவில் பேச்சு இடம்பெற்றது. அதன்பிறகு கூட புலிகள் தமது வன்முறை நடவடிக்கையைக் கைவிடவில்லை.
உயர்தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிக்காக கொழும்பு வந்த யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரை காணவில்லை
[09 - October - 2007]
* வெள்ளவத்தை விடுதியிலிருந்து சென்றவர் திரும்பவில்லை
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். மகினன் (60 வயது) கடந்த சனிக்கிழமை முதல் கொழும்பில் காணாமல் போயுள்ளார்.
க.பொ.த. (உயர்தரப்) பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிக்காக கொழும்பு வந்திருந்த இவர் வெள்ளவத்தையில் தனியார் தங்கு விடுதியொன்றில் தங்கியிருந்தார்.
சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வெளியே சென்று வருவதாகக் கூறி அந்த விடுதியிலிருந்து சென்ற சிரேஷ்ட விரிவுரையாளர் பின்னர் காணாமல் போயுள்ளார்.
இதுவரை அவர் விடுதிக்கு திரும்பவில்லையெனவும் நேற்று திங்கட்கிழமை இவர் யாழ்ப்பாணம் திரும்பவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் காணாமல் போனது தொடர்பாக விடுதி உரிமையாளர் உறவினர்களுக்கும் வெள்ளவத்தை பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.
கொக்குவிலைச் சேர்ந்த இவர் கணிதத்துறை சிரேஷ்ட விரிவுரையாளராவார். இவர் கடத்தப்பட்டாரா என்பது குறித்தும் எதுவும் தெரியவில்லை.
No comments:
Post a Comment