20 புலிகளினது உடல்களும் தற்காலிகமாகவே புதைக்கப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவிப்பு [29 - October - 2007]
அநுராதபுரம் விமானப் படைத்தளத் தாக்குதலில் பலியான புலிகள் இயக்க உறுப்பினர்கள் 20 பேரினதும் சடலங்கள் தற்காலிகமாகவே அநுராதபுரம் பொது மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அஜித் ஜயசேன தெரிவித்தார். செஞ்சிலுவைச் சங்கமோ, விடுதலைப் புலிகளோ சடலங்களைப் பொறுப்பேற்பதில் முனைப்புக் காட்டாமையினாலும் அநுராதபுரம் வைத்தியசாலையில் சடலங்களைப் பாதுகாத்து வைத்திருக்கக் கூடிய குளிர்ச்சாதன வசதிகள் தேவையானளவு இன்மையாலுமே இருபது சடலங்களையும் பிரேதபரிசோதனையின் பின்னர் தற்காலிகமாக புதைக்க முடிவு செய்யப்பட்டது. வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போதே சடலங்கள் அனைத்தும் பழுதடைந்திருந்ததுடன் அவற்றிலிருந்து துர்நாற்றமும் வீசியதும் இம்முடிவினை எடுக்க மற்றோரு காரணமாகியது.
தற்காலிகமாக புதைக்கப்பட்டுள்ள இச்சடலங்களை விடுதலைப் புலிகள் செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக பொறுப்பெடுக்கும் முயற்சியைச் செய்யுமிடத்து, இச்சடலங்களை தோண்டி எடுத்து ஒப்படைக்க முடியும். தோண்டி எடுக்கக் கூடிய வகையில் பிரத்தியேகமானதொரு பகுதியில் தற்காலிகமாகவே இவை புதைக்கப்பட்டதாக சட்டவைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
புலிகளால் தென்பகுதிகளிலும் களமுனைகளைத் திறக்க முடியும் தளபதி ராம்
""இலங்கை அரசால் கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி யுத்த முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும் என்றால் விடுத லைப் புலிகளால் தென்னிலங்கை நோக்கி களமுனைகளைத் திறக்க முடியும்.''இவ்வாறு அம்பாந்தோட்டைத் தாக்குதலை வழிநடத்திய விடுதலைப் புலிகளின் கிழக்குக் கட்டளைத்தளபதி கேணல் ராம் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:""இலங்கையின் தென்பகுதியான அம்பாந்தோட்டைப் பகுதியில் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலால் அரசுக்கு பலகோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.யால சரணாலயப் பகுதியில் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களால் சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பலகோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இதுவரையில் அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டைப் பகுதிகளில் படையினர் பயணித்த 15 வாகனங்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் படையினருக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.எனினும், இத் தாக்குதல்கள் தொடர்பிலான தகவல்களை படையினர் முற்றாகத் தணிக்கை செய்துள்ளனர். யால சரணாலயப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், திஸ்ஸமகாராம வீரவில பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் அரசு வெளிநாட்டு வருமானங்களை இழந்துள்ளது. சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டுள்ளன. பலர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இதனால் இப்பகுதிகள் முழுவதும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.மஹிந்த ராஜபக்ஷ கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி யுத்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள முடியும் என்றால் புலிகளாலும் தென்னிலங்கை நோக்கிக் களமுனைகளைத் திறக்க முடியும் என்பதற்கு இவை சான்றாகும் என்றார் தளபதி ராம்.
தென்பகுதிக்குள் புலிகள் நகருவதைத் தடுக்க கஞ்சிகுடிச்சாறு காட்டினுள் 3,000 படையினர்
[29 - October - 2007]
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் மூவாயிரம் துருப்புக்கள் அங்கு சென்றடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அம்பாறையை பின்தளமாகக் கொண்டு விடுதலைப் புலிகள் தென்னிலங்கையில் தாக்குதல்களை நடத்திவருவதால் தென்னிலங்கை அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் நகர்வு களைக் கட்டுப்படுத்த மேலதிகமாக மூவாயிரம் துருப்புகளை அரசு களமிறக்கியதோடு அங்கு பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவும் படையினர் திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது.
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பகுதியிலிருந்து சென்ற புலிகளே யால சரணாலய பகுதியில் இராணுவ முகாம் மற்றும் திஸ்ஸமகாராமவில் கடற்படையினர் சென்ற பஸ் மீது தாக்குதலைத் தொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
வரணிபடை முகாம் மீது புலிகள் கடும் மோட்டார் தாக்குதல்; சிப்பாய் பலி
[29 - October - 2007]
*முகமாலையில் பலத்த மோதல்
தென்மராட்சி வரணிப் பகுதியில் இராணுவ முகாமை இலக்கு வைத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை விடுதலைப் புலிகள் நடத்திய கடும் மோட்டார் தாக்குதலில் இராணுவச்சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
சனிக்கிழமை நண்பகல் 11.45 மணியளவிலேயே புலிகள் இந்தத் கடும் மோட்டார் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
முகமாலை மற்றும் பூநகரிப் பகுதிகளிலிருந்து கொடிகாமம் வரணிப் பகுதியிலுள்ள இராணுவ படைத்தளம் மற்றும் இராணுவ நிலைகளை இலக்குவைத்தே இந்த மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் குண்டுகள் படைத்தள பகுதியிலும் அதனை அண்டிய இராணுவ நிலைகளிலும் அடுத்தடுத்து வீழ்ந்து வெடித்துள்ளன.
இத்தாக்குதலால் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து படையினர் முகமாலை, பளை மற்றும் பூநகரி பகுதிகளை நோக்கி கடும் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்த படையினர் பின்னர் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.25 மணியளவில் முகமாலைப் பகுதியில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் மோதல் நடைபெற்றதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
`ஏ9' வீதிக்கு வடக்கே இராணுவ முன்னரங்க காவல் நிலைகளைத் தாக்க முற்பட்ட புலிகள் மீது படையினர் பதில் தாக்குதல் நடத்தவே மோதல் வெடித்ததாக படையினர் கூறுகின்றனர்.
இதில் நான்கிற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டிருக்கலாமெனத் தெரிய வருவதாகவும் படையினருக்கு எதுவித சேதமுமில்லையெனவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
குடாக்கடலில் தொழில் செய்வதற்கு படையினர் நேற்று முதல் அனுமதி ஒரு கிலோ மீற்றர் தூரம் நிபந்தனை!
குருநகர், பாஷையூர், கொழும்புத் துறை மீனவர்கள் யாழ்.குடாக்கடலில் தொழில் செய்வதற்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் ஒரு கிலோ மீற் றர் வரை மட்டுமே மீன்பிடிக்க முடியும் என்ற நிபந்தனையுடனேயே இந்த அனுமதியை படையினர் வழங்கி யிருப்பதாக மீனவர் சங்க வட்டாரங் கள் தெரிவித்தன.குருநகர், பாஷையூர், கொழும்புத் துறை மீனவர் சங்கங்கள் படையதி காரிகளுடன் மேற்கொண்ட கலந்துரை யாடலைத் தொடர்ந்து பின்வரும் நிபந்தனையுடன் இக்கடற்பரப்பில் மீன்பிடிக்க படையினர் அனுமதி வழங் கியதாகவும் இதற்கமைய நேற்று இக் கடற்பரப்பில் சென்று மீனவர்கள் தொழில் செய்து திரும்பியதாகவும் அதே வட்டாரங்கள் தெரிவித்தன.* குருநகர், பாஷையூர், கொழும் புத்துறை மீனவர்கள் தத்தமது மீன்பிடி இறங்குதுறைகளிலிருந்து யாழ்.குடாக் கடலில் ஒரு கிலோ மீற்றர் வரை மட் டுமே சென்று மீன்பிடிக்க முடியும்.இத்தூரம் முன்னர் இரண்டு கிலோ மீற்றராக இருந்து பின்னர் மூன்று கிலோ மீற்றராக அதிகரிக்கப்பட்டு பின்னர் ஒன்றரைக் கிலோ மீற்றராக குறைக்கப்பட்டு தற்போது ஒரு கிலோ மீற்றராகக் குறைக்கப்பட்டுள்ளது.*குருநகர் மீனவர்கள் 200 பேரும், பாஷையூர் மீனவர்கள் 100 பேரும், கொழும்புத்துறை மீனவர்கள் 50 பேரும் என்ற எண்ணிக்கையில் மட்டுமே இக்கடற்பரப்பில் நாளாந்தம் மீன் பிடிக்கமுடியும். முன்னர் சுமார் 700 பேருக்கு தொழில் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.தற்போது அனுமதி வழங்கப்பட் டுள்ள கடல் எல்லை மீன்பிடிக்க போது மானதாக இல்லை எனவும், மீனவர்கள் பலரின் உபகரணங்கள் (வலைகள்) இப்போது அனுமதிக்கப்பட்ட ஒரு கிலோமீற்றர் துரத்துக்கு அப்பால் உள்ளது எனவும் தெரிவித்தனர்.அங்கு போகாதபடி கரையிலிருந்து படையினர் தங்களைக் கண்காணித் துக் கொண்டிருந்ததாகவும் நேற்று மீன்பிடிக்கச் சென்று திரும்பிய குரு நகர் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.குடாக்கடற்பகுதியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற கடற்புலிகள் படையினர் மோதலைத் தொடர்ந்து, மறுதினம் 14ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் இக்கடற்பரப்பில் மீன்பிடிப்பதை படையினர் தடை செய்திருந்தமை தெரிந்ததே
அ'புரத்தில் மொத்தம் 24 வான்கலங்கள் முற்றாக நாசமாகின அல்லது சேதமுற்றன கட்டுநாயக்காவையும் விட அதிக இழப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி அணிகள், 2001 ஜூலையில் கட்டுநாயக்காவில் ஏற்படுத்தியவற்றை விட அதிக அழிவுகளையும் இழப்புகளையும் கடந்த வாரம் அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலில் ஏற்படுத்தியிருக்கின்றன.அநுராதபுரம் விமானத்தளத்தில் அச்சமயம் தரித்திருந்த 27 வான்கலங்களில் மூன்றைத் தவிர எஞ்சியவை ஒன்றில் முற்றாக நாசமாக்கப்பட்டிருக்கின்றன அல்லது பகுதியாகச் சேதமாக்கப்பட்டிருக்கின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரபல பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் இத்தகவல்களை வெளியிட்டிருக்கின்றார்.கட்டுநாயக்கா வான்தளம் மீது 2001 ஜூலை 24ஆம் திகதி கரும்புலிகள் நடத்திய தாக்குதலிலும் இலங்கை விமானப்படை எட்டு விமானங்களை இழந்தது. அநுராதபுரத்திலும் விமானப்படையின் எட்டு வான்கலங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள் ளன.ஆனால், இரண்டிலும் இவ்வாறு முற்றாக அழிக்கப்பட்ட வான்கலங்களின் வகைகள் வித்தியாசமானவை. கட்டுநாயக்காத் தாக்குதலின்போது "ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ்' நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்புகளைக் கழித்து விட்டு இலங்கை விமானப் படைக்கு ஏற்பட்ட இழப்புகளை, இப்போது அநுராதபுரத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகளுடன் ஒப்பிட்டால் உண்மையில் விமானப்படைக்கு அநுராதபுரத்தில்தான் சேதங்கள், இழப்புகள் அதிகம்.கட்டுநாயக்காவில் இடம்பெற்ற தாக்குதலின்போது மிக ஆபத்தான இடமான விமானங்கள் தரிக்கு நிலையத்துக்குள் (Hangar) புலிகளினால் முற்றாக உள்நுழைய முடியவில்லை. அவர்கள் விமான ஓடுதளப் பாதையில் தரித்து நின்றே, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விமானங்களைத் தாக்கியழித்தனர்.ஆனால், அநுராதபுரத்தில் விமானத் தரிப்பு நிலையத்துக்குள் புலிகள் முற்றாக உள்நுழைந்து சேதங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையானது.அநுராதபுரம் தாக்குதலின்போது, அச்சமயம் வான்கலங்கள் தரிப்பு நிலையிலிருந்து எட்டாத தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த "எம்.ஐ.17' ரக ஹெலிக்கொப்டர்கள் மூன்று மட்டுமே அங்கு தப்பிப் பிழைத்திருக்கின்றன.அநுராதபுரம் தாக்குதலில் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு சேதமுற்ற அல்லது அழிந்த வான்கலங்களின் கொள்வனவுப் பெறுமதியின்படி முந்நூறு கோடி ரூபாவுக்கு அதிகமாகும். ஆனாலும் இவற்றுக்காகப் புதியவற்றைப் பெற்றுக்கொள்வது இன்னும் அதிக செலவை ஏற்படுத்தும். ஏற்கனவே, இந்த வான்கலங்களின் விலைகள் உலக சந்தையில் அதிகரித்துள்ளன. அதேசமயம் டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு பெருமளவு வீழ்ச்சிகண்டுள்ளது. ஆகையினால் சேதமுற்ற அல்லது அழிந்த வான்கலங்களை மாற்றீடு செய்வது மேலும் அதிக செலவையே தரும்.அழிவுற்ற வான்கலங்கள் விமானத் தரிப்பு நிலையத்துக்குள் முற்றாக அழிக்கப்பட்ட வான்கலங்கள்:* ஆளில்லா உளவு வானூர்திகள் இரண்டு. (இவை புத்தம் புதியவை. விமானப்படையின் வான்கல அணிக்குள் இனித்தான் உள்வாங்கப்படவிருந்தவை).* மிக் 17 ஹெலி ஒன்று. (முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது).* சீனத் தயாரிப்பு "பி.ரி.6' ரக பயிற்சி வழங்கல் விமானங்கள் நான்கு.விமான ஓடுதளத்துக்கு அண்மையில் (விமானத் தரிப்பு நிலையத்துக்கு வெளியே) முற்றாக அழிக்கப்பட்ட வான்கலங்கள்:* அமெரிக்கத் தயாரிப்பு "பீச் கிறாவ்ட் 200' ஒன்று. (மிக விலையுயர்ந்த நவீன உளவறி கருவிகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அழிந்துள்ளது).* சீனத் தயாரிப்பான "கே8' ரக இடைத் தரப் பயிற்சி வழங்கல் ஜெற் விமானம் 1.* "மிக்24' ரக தாக்குதல் ஹெலிக் கொப்டர் ஒன்று.விமானத் தரிப்பு நிலையத்துக்குள் சேதமடைந்த வான் கலங்கள்.* ஆளில்லா உளவு விமானம் 1.* சீனத் தயாரிப்பு "பி.ரி.6' ரக பயிற்சி வழங்கல் விமானங்கள் மூன்று.* சீனத் தயாரிப்பான "கே8' ரக இடைத்தரப் பயிற்சி வழங்கல் ஜெற் விமானங்கள் ஐந்து.* மீள் சேவைக்கு உட்படுத்த முடியாத சியாமாச் செட்டி குண்டு வீச்சு விமானங்கள் நான்கு.விமான ஓடு பாதையை ஒட்டி சேதமாக்கப்பட்ட வான்கலம்:* "மிக்24' தாக்குதல் ஹெலி ஒன்று.
வடமாகாண முஸ்லிம்கள் சொந்த மண்ணை மறந்துவிட்டு தற்காலிக இடங்களில் தொடர்ந்தும் தங்கிவிடமாட்டார்கள்
[29 - October - 2007]
* ஆண்டான்கேணியில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வடமாகாண முஸ்லிம்கள் தமது சொந்த மண்ணை மறந்துவிட்டதாகவோ, மீளக் குடியேறும் எண்ணமின்றி வாழ்வதாகவோ அல்லது தற்காலிகமாக வாழும் இடங்களில் தொடர்ந்தும் தங்கிவிடுவார்கள் எனே வா எவரும் எண்ணிவிடக்கூடாது என தெரிவித்துள்ள மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான றிஷாத் பதியுதீன் தமது தாயக மண்ணில் வட புல முஸ்லிம்கள் மீள வாழ்வதற்கான அழைப்பை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுக்கவேண்டும் என வேண்டுகோள்விடுத்தார்.
1990 ஆம் ஆண்டு வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 17 ஆவது வருடம் நிறைவுறும் தினத்தை எழுச்சி பூர்வமாக நினைவு கூரும் வகையில் வடபுல முஸ்லிம் சமாதான செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபம் ஆலங்குடா ஆண்டான்கேணி மைதானத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.
அங்கு மேலும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பேசுகையில் கூறியதாவது;
"நூற்றாண்டு காலமாக சமாதானத்தையும் சகவாழ்வையும் வலியுறுத்தி சகோதர சமூகங்களோடு இன ஐக்கியத்தோடு வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட பெரும் அநியாயமாகும்.
இனப் பிரச்சினை ஆயுதப் போராட்டமாக வடிவமெடுத்தபோது போராட்டக் குழுக்களை ஆதரித்து இந்த நாட்டை காட்டிக் கொடுக்கவோ, அரச படைகளை ஆதரித்து தமிழ் மக்களின் போராட்டத்தை மலினப்படுத்தவோ எம் மக்கள் ஒருபோதும் மனதார நினைத்ததுமில்லை.
இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் இந்த சமூகத்திற்கு ஏற்பட்ட அவல நிலை வேறு எந்த சமூகத்திற்கும் ஏற்பட்டதில்லை.
1990 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்த நாட்டின் இனப் பிரச்சினை தீர்வுக்காக நடத்தப்பட்ட மாநாடுகள், கலந்துரையாடல்கள், பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் சமர்ப்பிக்கப்பட்ட முன் மொழிவுகள் எதிலுமே இந்த மக்களைப் பற்றியோ இம் மக்களின் பிரச்சினைகளைப் பற்றியோ, எந்த ஒரு இடத்திலும் பேசப்படவோ, எழுதப்படவோ இல்லை என்பதை மிக்க வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வடபுல முஸ்லிம் சமூகத்திற்காக இணைத் தலைமை நாடுகளோ, நோர்வே அனுசரணையாளரோ, இந்த நாட்டின் மாறிமாறி வரும் அரசாங்கங்களோ, ஐக்கிய நாடுகள் சபையோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ இதுவரை எதையும் பேசவில்லை.
இப்படிப்பட்ட ஒரு சமூகத்துக்கான தமது முழுமையான வளங்களை அரவணைப்பை தந்துதவிய உயர்ந்த பண்புகளைக்கொண்ட புத்தளத்து சமூகத்துக்கு இத் தினத்தில் எமது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
வட புல முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றமே அவர்களுக்கான ஈடேற்றத்தையும் விமோசனத்தையும் தரும் என்ற நம்பிக்கையில் இந்த 17 ஆவது ஆண்டு நினைவுநாளை நினைவு கூருகின்றோம்" என்றார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நஜீப் அப்துல் மஜீது, பிரதி அமைச்சர் ஹுசைன் பைலா, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.தாஹிர், பிரதேச சபை தலைவர்கள், புத்தளம் நகர சபை பிரதி தலைவர் உட்பட நகர, பிரதேச சபை உறுப்பினர்கள், புத்தளம் மாவட்ட ஜமியத்துல் உலமா சபை தலைவர்,பெரிய பள்ளிவாசல் தலைவர், முன்னாள் அமைச்சர் அபூபக்கர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 17 ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
[29 - October - 2007]
வடபுலத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 17 ஆவது ஆண்டு நிறைவுறும் இம் மாதம் 27 ஆம் திகதியான கடந்த சனிக்கிழமை எழுச்சி பூர்வமாக வட புலத்து முஸ்லிம்கள் நினைவு கூரினர். இதனையொட்டி வடபுல முஸ்லிம்களுக்கான சமாதான செயலகம் புத்தளம் ஆலங்குடாவில் மாபெரும் எழுச்சிப் பேரணியினை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.30 மணியளவில் நிறைவு பெற்றது. புத்தளம் மாவட்டத்தில் உள்ள அகதி முகாம்களில் வாழும் மக்கள் இந்த எழுச்சி நிகழ்வில் கலந்து கொண்டனர். சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதில் கலந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.
கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது பெண்களும் ஆண்களும் இளைஞர்களும் யுவதிகளும் நீண்ட நேரம் இந்த எழுச்சி விழாவில் இணைந்திருந்தனர்.
எழுச்சி விழாவில் கலந்து கொண்டவர்கள் `நாரே தக்பீர் அல்லாஹூ அக்பர்' என்ற கோஷத்தை உரக்க முழங்கினர். அதேவேளை, தம்மைத் தாயக மண்ணில் மீள்குடியேற்ற உதவி செய்யுங்கள், அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் போன்ற வாசகங்களைக் கொண்ட பதாதைகளையும் ஏந்தியபடி காணப்பட்டனர்.
அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை மன்னார் மாவட்ட தலைவர் மௌலவி எம்.எம்.ஜுனைட் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், உள்ளூர் மாகாண சபை, நகர சபை, பிரதேச சபை தலைவர்கள் , உறுப்பினர்கள் , உலமாக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இறுதியாக 6 அம்சங்களைக் கொண்ட கீழ்வரும் பிரகடனம் வாசிக்கப்பட்டு அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது.
இந்தப் பிரகடனம் அரசு, விடுதலைப் புலிகள் , சர்வதேசம் உட்பட இலங்கையில் உள்ள அனைத்து தூதுவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட அந்தப் பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
1990 ஆம் ஆண்டு இதே தினத்தில் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பூர்வீக தாயகம் வடமாகாணமே.
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட எங்களை அன்று தொடக்கம் இன்று வரை ஆதரித்து அரவணைத்து அன்பு காட்டி உதவிகள் பல செய்த புத்தளம் வாழ் மக்களுக்கும் எமக்கு உதவிய ஏனைய தென்புல மக்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகளை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பிரச்சினைகள் வந்தபோதெல்லாம் தமிழ் சகோதரர்கள் சாரிசாரியாக அகதி அந்தஸ்துடன் இந்தியாவுக்கு வெளியேறிய போதிலும் நாங்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வேளையில் 18 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இந்தியாவுக்குச் செல்லாது 75 கிலோமீற்றர் தூரத்திலுள்ள புத்தளத்திற்கு கடல் மற்றும் தரை மார்க்கமாக நாட்டுப் பற்றுடன் இந்த நாட்டின் அரசாங்கமும் பெரும்பான்மை சமூகமும் எங்களை அரவணைத்து ஆதரிக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்தோம்.
எனவே, நாங்கள் இங்கு வாழும் வரை எங்களது பாதுகாப்பையும் வாழ்வாதார வசதிகளையும் உறுதிப்படுத்துவதோடு எமது சொந்த மண்ணில் சுதந்திரமானதும் கௌரவமானதுமான மீள்குடியேற்றத்திற்கு உதவுங்கள் என அரசாங்கத்தையும் பெரும்பான்மை சமூகத்தையும் வேண்டிக் கொள்கின்றோம்.
இந்த நாட்டின் சமாதானத்திற்காக முயற்சிக்கும் இணைத்தலைமை நாடுகள், நோர்வே அனுசரணையாளரே , ஐக்கிய நாடுகள் சபையே, சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புகளே, தேசிய, சர்வதேசிய நிறுவனங்களே, உதவி வழங்கும் நாடுகளே எமது பிரச்சினைகளை இதுகாலம் வரை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்த்து வருவதை உடனடியாக நிறுத்தி எம்மக்களின் மனித உரிமை மீறல்களுக்கெதிராக குரல் கொடுப்பதோடு இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் எங்களையும் சம பங்காளியாக அங்கீகரித்து எமது பிரச்சினைகளுக்கான தீர்வினை உடனடியாகப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கும்படி இவ்வேளையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்
விலைவாசி அதிகரிப்பை கண்டித்து நாடு முழுவதும் தொடர்ச்சியான பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு [29 - October - 2007]
*எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் களமிறங்கும்
-எம்.ஏ.எம்.நிலாம்-
பால்மா விலை அதிகரிப்பு உட்பட விலைவாசி உயர்வைக் கண்டித்து அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணிகள் இந்த வாரத்தில் நாடு முழுவதும் நடத்தப்படுவதற்கு அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி., இடதுசாரி அமைப்புகள் தொழிற்சங்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி நாடு பூராவும் பிரதான நகரங்களிலும் கிராமங்களிலும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு நடத்தவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்தார்.
கட்சி பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தனியே நடத்த விருப்பதாகவும் ஏனைய கட்சிகளும் தொழிற்சங்கங்களும் நடத்தும் ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்கு பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஜே.வி.பி.யும் நாடு முழுவதும் ஒரு வாரகாலத்துக்கு மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளையும் மறியல் போராட்டங்களையும் நடத்தவிருப்பதாக அக்கட்சி விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்குமாறும் அரசின் வீண்விரயம், ஊழல் மோசடிகளை நிறுத்தி நாட்டுக்கு ஒத்துவராத திறந்த பொருளாதார கொள்கையிலிருந்து விடுபட்டு தேசிய பொருளாதாரக் கொள்கைப் பாதைக்குள் நாட்டை இட்டுச் செல்லுமாறு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துவதே இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளின் நோக்கமென ஜே.வி.பி. அறிவித்துள்ளது.
நவம்பர் முதலாம் திகதி வியாழக்கிழமை முதல் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நாடு பூராவுமுள்ள பிரதான நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவிருப்பதாகவும் இந்த ஆர்ப்பாட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் ஆர்ப்பாட்டங்களுக்கு சமாந்தரமாக துண்டுப்பிரசுர விநியோகமும் இடம்பெறவிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை ஒருசில சர்வதேச கம்பனிகளால் வழிநடத்துவதற்கு அனுமதிப்பதற்காக நாட்டு மக்கள் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆணை வழங்கவில்லை. இன்றைய அரசாங்கம் மக்கள் படுகின்ற அவலங்கள் குறித்து சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
அரசாங்கம் பொம்மலாட்டம் ஆட நினைத்தால் அதன் பின்விளைவுகள் மிக மோசமாக அமையலாம் என்பதை வலியுறுத்திக் கூறி வைக்க விரும்புவதாகவும் ஜே.வி.பி. விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க எதிர்ப்பு
வாழ்க்கைச் செலவு உயர்வு, பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்கங்களும் கூட்டாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த ஆலோசித்துவருகின்றன.
மலையகத் தோட்டப் பகுதிகளிலும் நகர்ப்புறங்களிலும் அடுத்த வாரத்தில் பரவலாக ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தவிருப்பதாக தொழிற்சங்கங்கள் பலவும் தெரிவித்திருக்கின்றன.
குடாநாட்டில் சமையல் எரிவாயு 5000 ரூபாவுக்கு விற்பனை
[29 - October - 2007]
யாழ்ப்பாணத்தில் சமையல் எரிவாயு (ஷெல்காஸ்) சிலிண்டர் ஒன்று 5 ஆயிரம் ரூபாவுக்கு தற்போது தனியார் வர்த்தக நிறுவனமொன்றினால் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ஷெல் காஸ் சமையல் எரிவாயு விற்பனைக்கு ஷெல்காஸ் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனமொன்றே இதனை இந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.
கொழும்பில் மேற்படி சமையல் எரிவாயுவின் விலை 1430 ரூபாவாக இருக்கையில் யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் ரூபாவுக்கு ஏன் விற்பனை செய்கிறீர்கள் என்று சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது யாழ்ப்பாண மக்களின் தற்போதைய தேவையை அறிந்து ஏ-9 பாதை பூட்டப்பட்டபின் முதன் முறை சமையல் எரிவாயு சிலிண்டர்களைக் கொண்டு வர முற்பட்ட போது கப்பலில் ஏற்றுவதற்காக ஐந்து அல்லது ஆறு தடவைகளுக்கு மேல் கொழும்புத்துறைமுகத்திற்கு சிலிண்டர்களைக் கொண்டு சென்ற போது திருப்பி அனுப்பியதாகவும் அதன்பின் திருகோணமலைத் துறைமுகத்திற்கு லொறி மூலம் அனுப்பி அங்கும் துறைமுகத்தில் நீண்டகாலம் இருந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களை மகிழ்வித்த பின் சமையல் எரிவாயு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததாகவும் இதற்கான செலவுகளுக்கு பல இலட்சம் ரூபாக்களை செலவு செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் தற்போது பலத்த மழை தொடர்ந்தும் பெய்து வருவதினால் 100 கிலோ விறகின் விலை ஆயிரம் ரூபாவில் இருந்து 1400 ரூபா வரை அதிகரித்திருப்பதாகவும் இந்நிலையில் யாழ்.செயலக அதிகாரிகள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்து வர முயற்சிக்க வேண்டுமென்றும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவருக்கு அவற்றை மானிய அடிப்படையில் கப்பலில் எடுத்து வர உதவ வேண்டும் எனவும் இதன் மூலம் சுமார் 2 ஆயிரத்து ஐந்நூறு ரூபாவுக்கு சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய முடியும் என்றும் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment