Thursday, 4 October 2007

ENB: யுத்த நிறுத்தத்துடன் ஆயுதக் கையளிப்பு, ஆயுதங்களை கைவிடல் என்பன மேற்கொள்ளப்படவேண்டும்

அரசியல் தீர்வை முன்வைக்குமாறு இலங்கைக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கமுடியாது
[04 - October - 2007- தினக்குரல்]

வாஷிங்டனில் வெளிவிவகார செயலாளர் ஹோகண

இலங்கையின் நீண்டகால மோதலுக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு சர்வதேச சமூகத்தால் கொழும்புக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்று வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோகண தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை காண்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கும் அதேசமயம் வன்முறைகளைக் கைவிட்டு ஜனநாயக நடவடிக்கைகளில் பிரவேசிக்குமாறு விடுதலைப் புலிகளை தொடர்ந்து தூண்டி வருவதாகவும் பாலித ஹோகண தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திகள் தெரிவித்தன.
இந்த அணுகுமுறைக்கு ஆதரவு வழங்குமாறு அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அதேசமயம் துரிதமாக தீர்வொன்றைக் கொண்டுவர முடியாதென் பதை சர்வதேச சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் ஹோகண கூறியுள்ளார். வாஷிங்டனில் ஜோர்ஜ்ரவுண் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
ஜனநாயகவரையறைக்குள் காணப்படும் அரசியல் இணக்கப்பாடானது சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் மிகக் கவனமாகவும் பொறுமையுடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு காணப்படவேண்டும். இலங்கை மோதலுக்கு அரசாங்கம் இராணுவத்தீர்வை முன்னெடுப்பதாக கூறுவோர் கண்களை மூடிக்கொண்டு விமர்சிப்பவர்களாகும். இது உண்மைக்கு வெகுதூரம் புறம்பானதொன்று. அதேசமயம் அரசியல் தீர்வுக்கான கொழும்பின் ஈடுபாடு என்பது பயங்கரவாதத்தை திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கை அல்ல என்றும் பாலித ஹோகண தெரிவித்திருக்கின்றார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை அரசாங்கம் அதிகரித்துள்ளதுடன் இந்த நடவடிக்கைகள் பாதுகாப்புக்காகவும் மனிதாபிமான நோக்கத்துடனும் மேற்கொள்ளப்படுவதாக கூறுகிறது. ஆனால் இராணுவத் தீர்வை நடைமுறைப்படுத்தவேண்டாமென்று சர்வதேச சமூகம் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் யுத்தத்துக்கு அதிகளவு அனுதாபம் காட்டிவரும் அமெரிக்காவும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாமென கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் முழு அளவிலான இராணுவ நடவடிக்கைக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதேவேளை, யுத்த நிறுத்த உடன்படிக்கையை புலிகள் வேண்டுமென்றே துஷ்பிரயோகம் செய்ததாக ஹோகண குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார்.
வட அயர்லாந்து நிலைவரத்தை முன்னுதாரணம் காட்டிய ஹோகண யுத்த நிறுத்தத்துடன் ஆயுதக் கையளிப்பு, ஆயுதங்களை கைவிடல் என்பன மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒழுங்கான மேற்பார்வையில் படிப்படியாக இந்நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments: