Wednesday, 24 October 2007

சடலங்களுக்கு மதிப்பளிக்கத் தெரியாத சண்டாள அரசு

விடுதலைப் புலிகளின் சடலங்களை மனித தன்மையுடன் எடுத்து சென்றிருக்கலாம்- ஆயர் நோபர்ட்
வீரகேசரி நாளேடு
மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தியவர்களின் சடலங்கள் என்றாலும் அந்த சடலங்களுக்கு நாம் உரிய மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். சடலங்களை நிர்வாண கோலத்தில் எடுத்துச் செல்லாது மனித தன்மையுடன் எடுத்து சென்றிருக்கலாம் என்று அநுராதபுரம் ஆயர் நோபர்ட் தெரிவித்தார். அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதல்களில் பலியான புலிகளின் சடலங்களை படையினர் நிர்வாணக்கோலத்தில் எடுத்து செல்லப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;
தாகுதல்களில் பலியான கரும்புலிகளின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அநுராதபுர நகரத்தின் வழியாக வைத்திய சாலைக்கு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நிர்வாண கோலத்திலேயே கொண்டு செல்லப்பட்டுள்ளன. சடலங்கள் நிர்வாணக்கோலத்தில் டிராக்டரில் எடுத்துச்செல்லப்படுவதாகவும் இந்த நடவடிக்கை முறைக்கேடானது என்றும் அங்கு சென்று திரும்பியவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
நிர்வாண கோலத்தில் எடுத்து செல்கின்ற சடலங்களை பார்ப்பது சரியானது இல்லை என்பதனால் நான் நேரடியாக சென்று பார்க்கவில்லை.
சடலங்கள் யாருடையது என்பது இங்கு முக்கியமில்லை. சடலங்கள் விடுதலைப்புலிகளுடையது என்பதனால் அது தொடர்பாக நாம் பேசவில்லை. எனினும் யாருடைய சடலங்கள் என்பதை கருத்தில் கொள்ளாது சடலங்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். அத்துடன் மனித தன்மையுடன் செயற்படவேண்டும்.
மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தியவர்களின் சடலங்கள் என்றாலும் அவர்களின் சடலங்களுக்கு நாம் உரிய மரியாதை செலுத்தவேண்டும்.
விடுதலைப்புலிகளின் உரிமைகள் பற்றி நாம் பேசவில்லை. அவர்கள் செய்யும் மனித உரிமை மீறல்களை அங்கீகரிக்கவில்லை. எனினும் மனித உடல்களை எவ்வாறு நாகரிகமான முறையில் கையாள வேண்டும் என்பது தொடர்பாகவே நாம் பேசுகின்றோம்.
விடுதலைப்புலிகளின் சடலங்களை நிர்வாண கோலத்தில் பகிரங்கமாக எடுத்துச்செல்லப்பட்டமை தொடர்பாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவிக்கையில் ;
புலிகள் சகலரும் தற்கொலை குண்டு தாரிகள் அணியும் உடையை அணிந்திருந்தனர் என்பதனால் தற்கொலை அங்கிகளை களைந்தோமே தவிர விடுதலைப்புலிகளின் சடலங்களை நாம் வேண்டுமென்றே நிர்வாணமாக்கவில்லை .
தற்கொலை அங்கிகளை களையாமல் அப்படியே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லமுடியாது. அவ்வாறு கொண்டு செல்கின்ற போது குண்டு வெடித்துவிட்டால் வைத்தியசாலையில் இருக்கின்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதனால் தான் அந்த தற்கொலை அங்கிகளை களைந்து சடலங்களை வாகனமொன்றில் ஏற்றிக் கொண்டு சென்றோம் .
முகாமிற்கும் வைத்தியசாலைக்கும் இடையே சிறிது தூரம் இருப்பதனால் அவ்வாறு கொண்டு சென்ற சடலங்களை பொதுமக்கள் பார்வையிட்டிருக்க கூடும். எனினும் சடலங்களை கொண்டு செல்கின்றோம் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு சடலங்களை நாம் எடுத்து செல்லவும் இல்லை, வேண்டுமென்றே காட்டவும் இல்லை என்றார் .
அநுராதபுரம் விமானப்படைத்தளத்திலிருந்து மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் 20 சடலங்களும் பொலிசாரினூடாக அநுராதபுர வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு அங்கு பிரேதப் பரிசோதனைகளும் விசாரணைகளும் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை சம்பவங்களில் காயமடைந்த படையினர் தொடர்ந்தும் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் பலியான படையினரின் சடலங்கள் மரண விசாரணைகளுக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments: