Monday, 29 October 2007

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் விமான தாக்குதல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் விமான தாக்குதல்; இருவர் காயம் வீரகேசரி நாளேடு
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கோம்பாவில் கிராமப் பகுதியில் நேற்றுக் காலை 10 மணியளவில் விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் இரண்டு பொது மக்கள் காயமடைந்துள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களான யோகராசா (வயது 42) சாந்தகுமாரி (வயது 42) ஆகியோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலின்போது பயன்தரும் மரங்கள், வீடுகள் என்பன சேதமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் இருந்த பொது மக்கள், பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்கள் அச்சமடைந்து அல்லோல கல்லோலப்பட்டு பாதுகாப்பு தேடி ஓடியதாகவும் நண்பகல் வரையில் அப்பகுதியில் பதற்றம் நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு இருதரப்பிற்கும் வலியுறுத்துவதற்கு சர்வமத ஆணைக்குழு நடவடிக்கை
தெற்கு சர்வமத தலைவர்கள் குழு விரைவில் வடக்கிற்கு விஜயம்
வீரகேசரி நாளேடு
தடைப்பட்டுள்ள சமாதானப்பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இருதரப்பிற்கும் வலியுறுத்த நடவடிக்கைகளை சர்வமத ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருகட்டமாக சர்வமத தலைவர்கள் அடங்கிய குழுவொன்று தெற்கிலிருந்து வடக்கிற்கு விரைவில் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கும்
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைந்து மோதல்கள் உக்கிரமடைந்து வருகின்ற நிலையிலேயே சர்வ மத தலைவர்கள் குழு இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
சர்வமத தலைவர்கள் குழுவை தெற்கிலிருந்து வடக்கிற்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை கொழும்பிலுள்ள கரிட்டாஸ் செடக் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. வடக்கு பயணத்திற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கிலிருந்து வடக்கிற்கு செல்லும் சர்வமத தலைவர்கள் குழு முதலில் மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொள்வதுடன் அண்மைகாலங்களில் இடம்பெறுகின்ற மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மன்னார் மாவட்ட மக்கள் அகதி முகாம்களில் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயவிருக்கின்றது. இந்த குழுவினர் மன்னாரில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் விஜயத்தை மேற்கொண்டு விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரில் விடுதலைப்புலிகளுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் போது எட்டப்படுகின்ற முடிவுகளை அடுத்தே அந்த குழுவினர் அதற்கு அடுத்த கட்டமாக வன்னிக்கு விஜயத்தை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ்,மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மற்றும் மடுதேவாலயத்தின் பரிபாலகர் வண.பிதா எமிலிஸ்பிள்ளை ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் வைத்து அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
ஜனாதிபதியுடன அன்றைய சந்திப்பில் தடைப்பட்டுள்ள பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக இந்த குழுவினர் வலியுறுத்தியதாகவும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஜனாதிபக்கு தெளிவுபடுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சர்வமத தலைவர்கள் குழு தெற்கிலிருந்து வடக்கிற்கு விஜயமொன்றை மேற்கொள்வது தொடர்பாக கொழும்பிலுள்ள கரிட்டாஸ் செடக் நிறுவனத்தில் மக்கள் தொடர்பாளர் எஸ்.பி அந்தோனி முத்து கருத்து தெரிவிக்கையில்;
சர்வ மத தலைவர்கள் அடங்கிய குழுவொன்று விரைவில் வடக்கிற்கு செல்லவிருக்கின்றது அதற்கான ஏற்பாடுகளை செடக் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது எனினும் பயணத்தை மேற்கொள்வதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இந்த குழு முதலில் மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொள்வதுடன் அதற்கடுத்த கட்டமாக வன்னிக்கும் விஜயத்தை மேற்கொ ள்ளவுள்ளது.
தடைப்பட்டுள்ள சமாதானப் பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பித்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட இருதரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலேயே இந்த விஜயம் அமையவிருக்கின்றது என்றார்.
அழுத்தம்; enb

No comments: