ரஷ்யா, இஸ்ரேல், செக். ஆகியனவும் அரசின் போருக்கு உதவத் தயாராம்! சக்திமிக்க விமானங்களை வழங்கும்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசின் போர் நடவடிக்கைகளுக்கு ரஷ்யா, இஸ்ரேல், செக்கோஸ்லாவாக்கிய ஆகிய மேற்கு நாடுகளும் உதவ முன்வந்திருக்கின்றன என்றும் ஏற்கனவே இலங்கைக்கு இது விடயத்தில் கைகொடுத்துவரும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தமது உதவிகளை அதிகரிக்கவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.தாக்குதல் நடவடிக்கைகளில் வலிமை கூடிய வான்கலங்களை வழங்குவதற்கு ரஷ்யா உட்பட சில நாடுகள் முன்வந்திருக்கின்றன என்றுதெரிவிக்கப்படுகின்றது.அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதலில் இலங்கை விமானப்படை கடுமையான பாதிப்புக்களைச் சந்தித்துள்ளது என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கையிலேயே, மேற்படி நாடுகள் இலங்கைக்கு உதவத் தயாராக இருக்கின்றன என்ற தகவலைத் தென்னிலங்கை இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது.மேற்படி நாடுகள் இலங்கைக்கு யுத்த விமானங்கள் மற்றும் பயிற்சி வழங்கல் வான்கலங்களை வழங்குவதற்கு இணங்கியிருக்கின்றன என அரசின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன."மிக் 24' வான் கலத்தை விட வலிமையானதும் செயற்பாட்டுத் திறன் கொண்டதுமான "கமோவ் கா60' ரக ஹெலிகளை வழங்குவதற்கான தனது விருப்பத்தை ரஷ்யா வெளிப்படுத்தியிருக்கின்றது."எம்.ஐ.24' யுத்த வான்கலங்கள் உட்பட எட்டு வான்கலங்கள் அழிக்கப்பட்டமையால் இலங்கை விமானப்படையின் வலிமை குன்றிவிட்டதாகப் புலிகளும், புலிகள் சார்பு ஊடகங்களும் கூறுவதை சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் அடியோடு நிராகரித்தார்.""இலங்கைக்கு வான்கலங்களையும் ஆயுதங்களையும் வழங்க நேட்டோ நாடுகள் மறுத்துவிட்டன என்ற வதந்தியைப் புலிகளும், புலிகளுக்குச் சார்பான ஊடகவியலாளர்களும் பரப்பி வருகின்றனர். அது தவறு. ஆனாலும், ரஷ்யா உட்பட நட்பு நாடுகள் இலங்கைக்கு விமானங்களை வழங்குவதற்கான இணக்கத்தைத் தெரியப்படுத்தியுள்ளன. மிக நவீனரக உயர்ந்த தர "ராடர்' கருவிகளை வழங்குவதற்கு செக்கோஸ்லேவாக்கியா முன்வந்துள்ளது'' என்றும் அந்தச் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி கூறினார்.இப்படி அந்த இணையத்தளச் செய்தி மேலும் தெரிவித்தது.
வன்னி, குடாநாட்டு முன்னரங்க காவல் நிலைகளில் தொடர்ந்து மோதல்
[30 - October - 2007]
வடக்கில் வன்னியிலும் யாழ். குடாநாட்டிலும் முன்னரங்க காவல் நிலையங்களில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. வன்னியில் மன்னாரிலும் குடாநாட்டில் முகமாலை மற்றும் நாகர்கோவில் முன்னரங்க நிலைகளிலும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த மோதல்கள் நடைபெற்றுள்ளன.
மன்னாரில் அடம்பனுக்கு மேற்கே நரிக்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழியொன்று படையினரால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஆறு புலிகள் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்ததாக படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் படைத்தரப்புக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், யாழ். குடா நாட்டில் முகமாலைப் பகுதியில் நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் நடைபெற்ற மோதலில் நான்கு புலிகள் கொல்லப்பட்டதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படையினரின் முன்னரங்க காவல் நிலைகளை ஊடறுக்க முற்பட்ட புலிகள் மீது நடத்தப்பட்டதாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டதாக படையினர் கூறுகின்றனர்.
முருங்கன் மோதலில் புலி உறுப்பினர் பலி சடலம் வைத்தியசாலையில் ஒப்படைப்பு
[30 - October - 2007]
முருங்கன் இராணுவ முகாமிற்கு அருகில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் புலிகள் இயக்க உறுப்பினரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 6.50 மணியளவில் முருங்கன் இராணுவ முகாமில் அமைந்துள்ள பகுதிக்குள் ஊடுருவிய நான்கு விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இராணுவத்தினரின் பதில் தாக்குதலில் விடுதலை புலி உறுப்பினர் ஒருவர் பலியானதாகவும் முருங்கன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்தையடுத்து படையினர் நடத்திய தேடுதலில் ரி -56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் இரண்டு கைக்குண்டுகள் ஆகியவற்றை படையினர் மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, முருங்கன் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் பளியவடனையிடம் குறித்த சடலம் மன்னார் பொது வைத்தியாசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
அத்துடன் மன்னார் மாவட்ட நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் நேற்று பிற்பகல் சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனை செய்யுமாறு மன்னார் பொதுவைத்தியசாலை அத்தியட்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு செங்கல்பட்டு முகாமிலிருந்து இலங்கை அகதிகள் மூவர் தப்பியோட்டம்
தமிழகம் செங்கல்பட்டுப் பிரதேசத்திலுள்ள விசேட அகதிகள் முகாமிலிருந்து விடுதலைப் புலிகள் என்று கருதப்படும் மூன்றுபேர் தப்பியோடியதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.செங்கல்பட்டில் இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. அங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் உரிய கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியா வந்தவர்கள், போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த முகாமலிருந்தே நேற்றுமுன்தினம் தவராஜா, குணராஜ் மற்றும் விஜயபாண்டி ஆகிய மூன்றுபேர் தப்பியோடியுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு அங்கு பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனைப் பயன் படுத்தி யாரும் இல்லாத நேரத்தில் முகாமுக்குள் உள்ள மரத்தின் கிளை வழியாக மதில் சுவரைத் தாண்டி குதித்து அவர்கள் தப்பியோடியுள்ளனர். தப்பியோடிய மூவரும் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான இலங்கைத் தமிழர்கள் என்றும் அவர்கள் போதைப்பொருள் வழக்கில் கைதானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றார். இவர்கள் தப்பியோடிய தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட பொலிஸார் முகாமுக்குச் சென்று விசாரணைகளை நடத்தினார்கள். தப்பியோடிய மூன்றுபேரையும் பிடிக்க கியூ பொலிஸார் தேடுதல் நடத்துகின்றனர் எனவும் கூறப்பட்டது.
No comments:
Post a Comment