Thursday 1 November, 2007

ஈழச்செய்திகள்: 011107

யுத்த செய்திகளுக்கு கொண்டுவரப்பட்ட தணிக்கை அறிவிப்பு சில மணிநேரத்தில் அரசினால் வாபஸ்
வீரகேசரி நாளேடு

யுத்த நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை பிரசுரம் செய்வது மற்றும் ஒலி, ஒளிபரப்புவது என்பன தணிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று வர்த்தமானி மூலம் அறிவித்திருந்த அரசாங்கம், அதனை சில மணி நேரத்திலேயே வாபஸ் பெற்றுள்ளது. இராணுவ நடவடிக்கைகள், திட்டங்கள், யுத்த நிலைவரங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர், பொலிஸார் ஆகியோர் கொள்வனவு செய்யும் ஆயுதத் தளபாடங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் உணர்வுபூர்வமான இராணுவச் செய்திகள் என்பவற்றை பிரசுரம் செய்வதற்கும் ஒலி, ஒளிபரப்புவதற்கும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் ஜனாதிபதி தடைவிதிக்க முடியும் என்ற தணிக்கை அறிவித்தலை அரசாங்கம் விசேட வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த தணிக்கை அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாகவும் நேற்றுமாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் சந்திரபால லியனகே தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டிருந்த இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, எந்தவொரு பத்திரிகை ஆசிரியரோ, பிரசுரிப்பாளர்களோ, வானொலி மற்றும் தொலைக்காட்சி நடத்துபவர்களோ, இலத்திரனியல் ஊடகவோ அல்லது ஏனைய வழிகளினூடாவோ யுத்த நிலைவரங்களை உணர்வுபூர்வமான செய்திகளாக வெளியிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முப்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் மேற்கொள்ளப்படவுள்ள இராணுவ நடவடிக்கைகள் குறித்தோ, படைகளின் நிலைகள் தொடர்பிலோ, விமானங்கள் மற்றும் கடற்படை கலங்கள் உள்ளிட்ட யுத்த ஆயுதத் தளபாடங்கள் குறித்தோ அல்லது அவற்றின் கொள்வனவு தொடர்பிலோ செய்திகள் எதனை வெளியிடவும் பரிமாற்றம் செய்யவும் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை செய்யப்பட்டிருந்தது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஆட்புல ஒருமைப்பாட்டினை மேம்படுத்தவுமே இந்த தணிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தணிக்கை விதிகளை மீறும் பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையும் 50 டொலருக்கு மேற்படாத அபராதமும் விதிக்கப்படும் என்றும் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலில் மேலும் கூறியிருந்தது. எனினும், இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான சில மணிநேரத்திற்குள்ளேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தணிக்கை அறிவித்தலை வாபஸ் பெறுவதற்கு தீர்மானித்துள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் சந்திரபால லியனகே பி.பி.ஸி.க்கு கூறியுள்ளதாவது: கடந்த 29ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் அவை தொடர்பான விடயங்கள் குறித்து செய்தி தணிக்கையை கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.
எனினும், இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுவிட ஜனாதிபதி நேற்று பிற்பகல் தீர்மானித்துள்ளார். இம்மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு கடந்த சில நாட்களாக இடம்பெற்று வந்த பல்வேறு காரணிகள் கருத்தில் எடுக்கப்பட்டிருந்தன.
விசேடமாக இலத்திரணியில் ஊடகங்கள் ஊடாகவும் அச்சு ஊடகங்கள் மூலமாகவும் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான செய்திகளும் படையினரை அவமதிக்கும் வகையிலான செய்திகளும் தவறான செய்திகளும் வெளியிடப்பட்டுவந்தன. இவ்வாறான சில செய்திகளினால் மக்கள் பெரும் கலவரங்களுக்கும் ஆளானார்கள். எனினும், இவ்வாறு தவறான செய்திகளை பொறுப்பில்லாது வெளியிடுவோருக்கு எதிராக நாட்டில் ஏற்கனவே உள்ள சட்ட நடைமுறைகள் ஊடாக நடவடிக்கைகளை எடுக்க போதிய இடம் இருக்கின்றது என்பதால், நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை நீக்கிவிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இதுதொடர்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல பி.பி.ஸி.க்கு தெரிவித்துள்ளதாவது:
இது முற்றிலும் ஏ.பி.ஸி. ஊடக நிறுவனத்தின் நடவடிக்கையுடன் தொடர்புடையது. அந்த நிறுவனம் தவறான செய்திகளை வெளியிட்டு, தென்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியது. அதனால்தான் சில தகவல்களை தடுப்பதற்காக இப்படியான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டிவந்தது.
இந்த நாட்டிலும் வெளிநாடுகளில் இருக்கின்ற மக்களுக்கு தவறான செய்திகள் சென்றடைவதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், ஏ.பி.ஸி. ஊடக நிறுவன ஒலிபரப்புகள் நிறுத்தப்பட்டதையடுத்து, கடந்த ஆறு நாட்களில் தொடர்பூடகங்களின் செயற்பாடுகள் திருப்தியாக மாறியிருக்கின்றன. எமக்கு தொடர்பூடகங்களின் நடவடிக்கைகளில் திருப்தி ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை கொடுப்பது என்றும் இந்த சட்டத்தை தற்போதைக்கு தொடர வேண்டியதில்லை என்றும் முடிவு செய்திருக்கின்றோம். இப்போதைக்கு இந்த முடிவை வாபஸ் பெறுவது என அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை அரசாங்கம் விரைவில் வெளியிடும்.

பொருளாதாரக் கொள்கையிலும் தடம் மாறுகின்றது மஹிந்த அரசு
சாதாரண, அப்பாவிப் பொதுமக்களைப் பாதிக்கும் விதத்தில் வாட்டி வதைக்கும் வகையில் நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை இப்பத்தியில் பல தடவைகள் நாம் சுட்டிக்காட்டியாகிவிட்டது.அடுத்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் புதிய விலை அதிகரிப்புகள், வரி விதிப்புகள் பற்றிய பிரமாணங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் அதேசமயம், அதற்கு முன்னரும், பின்னரும் கூட விலை மற்றும் சேவைக்கட்டண அதிகரிப்புகள் பற்றிய அறிவிப்புகள் புறம்பாக வரும் என்றும் ஊகிக்கப்படுகின்றது. ஏற்கனவே பாண், மா, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானளாவ உயர்ந்து விட்டன. மின் கட்டணம், எரிபொருள், எரிவாயு போன்றவற்றுக்கான விலை மற்றும் சேவைக்கட்டண அதிகரிப்பு இன்னும் வரிசையாகக் காத்திருக்கின்றன என்று தகவல். இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை ஒரு டசின் தடவைகளுக்கும் அதிகமாக எரிபொருள் விலைகள் அதிகரிப்புச் செய்யப்பட்டுவிட்டன. நாளொரு பெறுமதியும், பொழுதொரு பாய்ச்சலுமாக எரிபொருள் கட்டணங்கள் உயர்வதால் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் அது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி நிற்கின்றது.இந்த விலைவாசி உயர்வு குறித்தோ, நாட்டின் பணவீக்கம் மோசமடைந்து வருவது பற்றியோ அரசுத் தலைமை சிந்திப்பதாகத் தெரியவில்லை.மாறாக, விலைவாசி அதிகரிப்பை நியாயப்படுத்துகின்றார் அரசுத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.பால்மா மற்றும் கோதுமை மா விலைகள் அண்மையில் அதிகரிக்கப்பட்டமையை ஒட்டி நேற்று முன்தினம் பொது நிகழ்வு ஒன்றில் பகிரங்கமாகக் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இத்துறை சார்ந்த உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கை இது என்று மெச்சியிருக்கின்றார்.""கோதுமை மா, பாண், பால்மா ஆகியவற்றின் விலை அதிகரிப்புக் குறித்து மக்கள் பேசுகின்றார்கள். ஆனால் உள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் குறித்தோ, நெற்செய்கையாளர்கள் பற்றியோ அவர்கள் பேசுவதேயில்லை. நாம் எமது உள்நாட்டு உற்பத்திகளை அபிவிருத்தி செய்து, ஒரு தேசமாக எழுந்து நிற்க வேண்டுமானால் தியாகங்களைப் புரியவேண்டும். உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு ரகங்களுக்கும் தயாரிப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்கள் எழுபதுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் திறந்த பொருளாதார முறையின் வருகையால் இந்த முயற்சிகள் பின்னடைவு கண்டன. திறந்த பொருளாதாரத்தின் வினையில் சிக்கி எமது எதிர்காலச் சந்ததி அழிய இந்த அரசு இடமளிக்காது.'' என்று குறிப்பிட்டிருக்கின்றார் ஜனாதிபதி.அவரது இந்த உரையின் ஊடாக இரண்டு அம்சங்கள் புலப்படுத்தப்படுகின்றன. ஒன்று யுத்தத் தீவிரப் போக்கால் சீர்கெட்டுள்ள பொருளாதாரத்தைச் சரிக்கட்ட முடியாது தவிக்கும் அரசு, அந்தப் பாதிப்பால் ஏற்பட்டுள்ள மோசமான விலைவாசி உயர்வுச் சிக்கலை, உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான தனது சாதனை நடவடிக்கையாகப் பூசி மெழுகிக் காட்டி சமாளிக்கப் பார்க்கின்றது.அடுத்தது எழுபதுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, பயன்தராமல் நடைமுறையில் தோல்வி கண்டுபோன மூடிய பொருளாதாரக் கொள்கை என்ற பழைய "கந்தல்' கதையை மீண்டும் நாடும் எண்ணம் இந்த அரசுக்கு வந்திருக்கின்றது.எழுபது முதல் எழுபத்தியேழு வரை ஆட்சியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு, அப்போது தனது கூட்டில் இடம்பெற்ற இடதுசாரிக் கட்சிகளின் வலையில் வீழ்ந்து, அந்தப் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்து, நொந்துகெட்டது.அப்போது உள்ளூர் உற்பத்தியாளர்கள் பெரும் பயனடைந்தார்கள் என்பது என்னவோ உண்மையே. மிக இறுக்கமான பொருண்மிய சீர்திருத்த ஒழுங்கு முறைக்குள் சிக்கி, நாட்டு மக்கள் பெரும்பாடுகளை எதிர்கொண்டார்களாயினும், நாட்டை ஒரு பொருளாதார சுபீட்சப் பாதையில் அந்தக் கோட்பாட்டுக் கொள்கைகளினால் வழிநடத்தவே முடியவில்லை.அந்த அரசின் பொருளாதாரக் கெடுபிடிப் போக்குகள் நிதர்சனத்தில் மக்களுக்கு உரிய பயனைத் தராத காரணத்தால்தான் அந்த அரசு 1977 பொதுத் தேர்தலில் இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத படுதோல்வியைச் சந்தித்து ஆட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டது.அத்தோடு, அந்தப் பொருளாதாரக் கொள்கைகளும் இலங்கையைப் பொறுத்தவரை குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசப்பட்டன.இலங்கை மாத்திரம் அல்ல, இதுபோன்ற கொள்கைக் கோட்பாட்டைக் கடைப்பிடித்த சிவப்புச் சிந்தனைப் போக்குடைய பல பெரிய நாடுகள் கூட இப்போது மெல்லமெல்ல அதிலிருந்து தடம் மாறி திறந்த பொருளாதார வலையில் வீழ்ந்துவிட்டன.நிலைமை அப்படியிருக்க, மீண்டும் "பழைய குருடி கதவைத் திறவடி' என்று தோற்றுப்போன பழைய கொள்கைப் போக்கைத் தூசுதட்டி மீளக் கையில் எடுக்கிறார் இலங்கையின் அரசுத் தலைவர்.மதில்மேல் பூனையாக அரசைக் கவிழ்ப்பதா, இல்லையா என்ற இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கும் இடதுசாரிப் போக்குடைய ஜே.வி.பியை இந்த வரவு செலவுத்திட்ட சமயத்தில் மீண்டும் தமது அரசுக்கு ஆதரவாக வளைத்துப் போடுவதற்காக இந்தப் பழைய பல்லவிக் கோட்பாட்டை அவர் கையில் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை." பயங்கரவாதத்தை முற்றாக அழித்த பின்னர் சமாதான முயற்சி!' என்ற சங்கடமான கோட்பாட்டை இனப்பிரச்சினை விவகாரத்தில் கையாளும் இந்த அரசு, பொருளாதார விடயத்திலும் அத்தகைய குழப்பக் கொள்கைக்குள் மூழ்கப் போகின்றது என்பதற்குக் கட்டியம் கூறும் விவகாரமாக ஜனாதிபதியின் இந்தக் கருத்தைக் கருதமுடியும்.

புலிகளுடன் பேசுவதற்கு அரசு தயார் நிபந்தனைக்கு அடிபணிய மாட்டோம்'
[31 - October - 2007]
* சர்வதேச சமூகத்தின் ஆதரவு முக்கியமானதல்ல பசில் ராஜபக்ஷ தினக்குரலுக்கு விசேட செவ்வி ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு தயாரெனவும் ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் புலிகளின் எத்தகைய நிபந்தனைகளுக்கும் அடிபணிய மாட்டாதெனவும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை `தினக்குரல்'க்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
இச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு;

ஜனாதிபதி தேர்தலின்போது புலிகளிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறுவது பொய். நான் ஒருபோதுமே கிளிநொச்சிக்கு சென்றதில்லை. ஆனால், நான் விரைவில் கிளிநொச்சி செல்லவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
நான் கிளிநொச்சி வந்து புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்களுடன் பேச்சு நடத்தியதாக புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் கூறியிருப்பாரென நான் ஒருபோதுமே நம்பவில்லை. ஆனால், நான் சிறு வயதில் யாழ்.குடாநாட்டிற்கு சென்ற அனுபவமுண்டு.
அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதலை நாம் எதிர்பார்த்திருந்தோம். பயங்கரவாத அமைப்பு இவ்வாறானதொரு தாக்குதலை அதிரடியாக மேற்கொள்ளும். ஆனால், அவர்களினால் இறுதி யுத்தத்தில் வெற்றிபெறமுடியாது.
இதற்கு நான் ஹிட்லரை உதாரணமாக குறிப்பிடுகிறேன். அவருக்கேற்பட்ட நிலையே பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஏற்படும்.
அநுராதபுர தாக்குதல் எமக்கு பொருளாதார ரீதியில் நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மையே. எனினும் இந்தத் தாக்குதல் அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான பின்னடைவை ஏற்படுத்தவில்லை. எமது அரசாங்கம் மீதும் முப்படையினர் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
சவாலை சந்திக்க தயாரித்லை
இதன்போது புலிகளின் எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள அரசு தயாராவென கேட்டபோது,
புலிகளின் சவாலை ஏற்க அரசாங்கம் தயாரில்லை. அவர்கள் சமாதான முயற்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தால் அதனை ஏற்கத் தயாராகவுள்ளோம். ஆனால், புலிகளின் எத்தகைய சவால்களுக்கும் அரசாங்கம் பயந்து விடவுமில்லை.
புலிகளை தோற்கடிப்போமென அரசு ஒருபோதும் கூறவில்லை. பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுமென்றே அரசாங்கம் மீண்டும் மீண்டும் அழுத்தமாக கூறுகின்றது.
சமாதானம் நீண்ட தூரத்திலில்லை. அது மிகவும் கிட்டிய தூரத்திலேயே உள்ளது.விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் நிபந்தனையற்ற பேச்சில் ஈடுபட தயாராகவுள்ளது. நாங்கள் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை. ஆனால், புலிகளின் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் அடிபணிந்துவிட மாட்டோம். இதுவே எமது நிலைப்பாடு.
இந்திய அரசு எமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை
இதேநேரம், இந்தியாவின் தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவான அரசியல் சக்திகளின் செயற்பாடு குறித்து நான் எத்தகைய கருத்துகளையும் கூற விரும்பவில்லை. எமக்கு இந்திய மத்தியரசு எத்தகைய அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து இந்தியா அவதானம் செலுத்தி வருகிறது. அதனை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
இந்தியா எத்தகைய உதவிகளையும் வழங்கவேண்டுமென நாம் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், இந்தியா எமக்கு தற்போது சகல உதவிகளையும் வழங்கி வருகிறது. எமக்கு அதுபோதும் என்றார்.
ஜனாதிபதியை சர்வதேசம் புறக்கணிக்கவில்லை
இதேவேளை, இலங்கையையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் சர்வதேச சமூகம் புறக்கணிக்கிறதா? இதுவரை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷைக்கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் சந்திக்க முடியவில்லையே. ஆனால், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது பல தடவை சர்வதேசத் தலைவர்களை அவர் சந்தித்துள்ளாரே எனக் கேட்ட போது;
ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எனது சகோதரருக்கும் நிறைய வேறுபாடுண்டு. நாட்டு மக்களினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புறக்கணிக்கப்படவில்லை. சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைப்பதை அரசாங்கம் முக்கியமானதாகக் கருதவில்லை.
எமது தேவைகளைப் பொறுத்தே சர்வதேச சமூகத்தின் ஆதரவு குறித்து தீர்மானிப்போம். எமக்கு அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் அவசியமாயிருந்தது. எனவே, அவர்களுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம். தற்போதும் சர்வதேச சமூகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளோம்.
சர்வதேச சமூகத்தின் முன்மொழிவுகளுக்கு ஏற்ப செயற்பட நாம் தயாரில்லை. லூயிஸ் ஆர்பர் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஆகியோர் இலங்கையில் மனித உரிமைகள் அலுவலகம் அமைக்கப்படவேண்டுமெனக் கூறலாம். ஆனால், அதனை நாங்களே தீர்மானிப்போம்.
எத்தகைய தீர்மானங்களையும் எவரும் எம் மீது திணிக்கமுடியாது. நாம் இறைமையுள்ள சுயாதீன நாடு. லூயிஸ் ஆர்பர் பிறக்கு முன்னே நாம் மனித உரிமைகளை பின்பற்றி வருகிறோம்.
பிரதமராக மாட்டேன்
பிரதமராகும் எத்தகைய நோக்கமும் என்னிடமில்லை. சுதந்திரக் கட்சியில் பல மூத்த தலைவர்கள் உள்ளனர். தலைவர்களுக்கு இங்கு பற்றாக்குறை இல்லை என்றார்.
சரி. ஜனாதிபதி உங்களுக்கு பிரதமர் பதவியை வழங்கினால் என்ன செய்வீர்கள் எனக்கேட்டபோது,
நிச்சயமாக பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன். ஜனாதிபதி எனக்கு பிரதமர் பதவியை தரவும் மாட்டார். நான் அப்பதவியை எடுக்கவும் மாட்டேன் என்றார்.
மேலும் தனக்கு இ.தொ.கா.வுடன் எத்தகைய முரண்பாடுகளும் இல்லையென குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ முத்துசிவலிங்கம் இ.தொ.கா. தலைவராக பதவியேற்ற பின்னர் தானே அவருக்கு முதலில் வாழ்த்து தெரிவித்ததாகவும் ஆறுமுகன் தொண்டமானின் தந்தையார் இந்தியாவில் மரணமானபோது தானே அங்குசென்று அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் தான் வெளிப்படையாகவே கருத்து தெரிவிப்பவன் என்றும் இ.தொ.கா.வும் அவ்வாறே செயற்பட வேண்டுமென விரும்புவதாகவும் முத்து சிவலிங்கம் மூத்த அரசியல்வாதி தொழிற்சங்க தலைவரென்ற வகையில் அவரை தான் பெரிதும் மதிப்பதாகவும் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்திற்கு அடிக்கடி விஜயம் செய்வதற்கு பின்னணி காரணமேதாவது உண்டாவென அவரிடம் கேட்டபோது,
ஜனாதிபதி உத்தரவிடுகின்றமையாலே நான் அங்கு செல்கிறேன் மக்களுடன் தொடர்பு கொள்கிறேன். கிழக்கு மக்களுடன் எனக்கு உறவு ஏற்பட்டுள்ளது. நான் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு இறுதியாக சென்ற தினம் ஞாபகமில்லை. ஆனால், கிழக்கு மாகாணத்திற்கு சென்று சேவை புரிந்த தினங்களை அப்படியே ஞாபகம் வைத்துள்ளேன்.
தமிழ்க் கூட்டமைப்பு கிழக்கே ஏன் செல்வதில்லை?
கிழக்கு மாகாணத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் செல்ல பாதுகாப்பை கோருகின்றனர். ஏன் பாதுகாப்பு வழங்க மறுக்கிறீர்கள் எனக் கேட்டபோது,
கிழக்கு மாகாணம் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அங்கு யாரும் சென்றுவர முடியும். நானே செல்கிறேன் என்றால் ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களினால் அங்கு செல்ல முடியாதென பதில் கேள்வி எழுப்பிய அவர் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் குழுக்களிடம் நவீன ஆயுதங்கள் இல்லை என்றார்.
காணாமல் போதல், படுகொலைகள் ஊடகச் சுதந்திரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்கள் குறைந்துள்ளன. படுகொலைகளையும் கட்டுப்படுத்தியுள்ளோம். இந்தியாவில் சில ஊடகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் ஊடகச் சுதந்திரம் குறித்தும் உங்களுக்கு தெரியும்.முன்னர் ஒரு காலத்தில் மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டதால் ஒருவர் மரணமடைந்தாரென செய்தி வெளியிட்டமைக்காக ஒரு பத்திரிகைக்கே சீல் வைத்தார்கள். ஆனால், தற்போது பெரும்பாலான அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் அரசுக்கு எதிராகவே செயற்படுகின்றன. ஆனால், நாம் எவற்றுக்கும் சீல் வைக்கவில்லை என்றார்.
தமிழ் மக்களுக்கு ஒரு செய்தி
செவ்வியின் இறுதியில் வட மாகாண தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியை கூற விரும்புவதாகத் தெரிவித்த அவர்;
வட பகுதி தமிழ் மக்கள் குறித்து ஜனாதிபதி மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகிறார். மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் மனிதாபிமான தேவைகள் பற்றியும் ஆர்வம் செலுத்தி வருகின்றோம். எமது ஜனாதிபதி மீதும் அரசாங்கம் மீதும் நம்பிக்கை கொள்ளுமாறு நாம் வடக்கு மக்களை கோருகிறோம். தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் சுதந்திர உரிமையை அவர்களுக்கு விரைவில் பெற்றுக்கொடுப்போம்.
எமது ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஒத்துழைக்குமாறும் அவர்களை கோருகிறோம். சமாதானத்தை அடையும் காலம் வெகு தூரத்தில் இல்லையெனவும் அவர்களுக்கு நம்பிக்கையூட்ட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

No comments: