மன்னார் கட்டுக்கரைக்குளம் தொடர்ந்தும் எமது கட்டுப்பாட்டில்
[04 - November - 2007]
*புலிகளின் பேச்சாளர் இளந்திரையன் மன்னார் கட்டுக்கரைக்குளத்தை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை படையினர் கைப்பற்றியுள்ளதாக வெளியான செய்திகளை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலின் போது படையினர் கட்டுக்கரைக்குளம் பகுதியை கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் இதனை விடுதலைப் புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையன் நேற்று சனிக்கிழமை மறுத்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில்;
எமது அரசியல் துறைப் பொறுப்பாளர் விமானத்தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து மன்னார் கட்டுக்கரைகுளத்தை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக அரச ஊடகங்கள் கூறிவருவதில் எதுவித உண்மையுமில்லை.
இது முற்று முழுதான பொய்யாகும். நேற்று முன்தினம் நண்பகல் வரை நான் அந்தப் பகுதியில் நின்றிருந்தேன், போர் நிறுத்த காலத்துக்கு முன்னிருந்த அதே நிலைகளிலேயே எமது போராளிகள் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளனர்.
எனவே, இது போன்ற பொய்யான செய்திகளைக் கேட்டு குழப்பமடையத் தேவையில்லையென்றார்.
இதேநேரம் கடந்த வியாழக்கிழமை மன்னாரில் மும்முனைகளில் படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சியில் படுகாயமடைந்த படையினரின் எண்ணிக்கை 200 வரையிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முறியடிப்புச் சமரில் 25 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாக புலிகள் தெரிவித்தனர்.
முகமாலையில் படை நகர்வுமுறியடிப்பு
என அறிவிப்பு முகமாலையில் படையினர் நேற்றுக் காலை மேற்கொண்ட முன்நகர்வை தாம் வெற்றிகரமாக முறியடித்திருக்கின்றனர் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள் ளனர்.காலை சுமார் 6 மணியளவில் படையி னர் ஆட்லறி ஷெல் மற்றும் மோட்டார் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு நடத்தி யவாறு முன்நகர்வை மேற்கொண்டனர். இதற்கு எதிராக புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். தாக்குதலில் படை யினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏனையோர் காயங்களுடன் பின்வாங்கிச் சென்றனர். இத்தாக்குதலில் புலிகளுக்கு எந்த இழப்புகளும் ஏற்படவில்லை. இவ் வாறு புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
தமிழுலகமே நேசித்த ஒரு அரசியல் தலைவனை இராட்சதக் குண்டுகளை வீசி கொன்றொழித்துள்ளனர்
[04 - November - 2007]
*புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்;
சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்பு விடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.
தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக தலைசிறந்த தானைத் தளபதியாக மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.
தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக,கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.
நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலுக்கு உரிய பதிலடி விரைவில் வழங்கப்படும்
[04 - November - 2007]
*விடுதலைப் புலிகள் அறிவிப்பு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மீதான இலங்கை விமானப்படையின் தாக்குதலுக்கு உரிய பதிலடி மிக விரைவில் வழங்கப்படுமென்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையள் தெரிவித்துள்ளார்.
எமது அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மீது திடீரென்று மேற்கொள்ளப்பட்ட விமானப்படைத் தாக்குதலுக்கு மிக விரைவில் உரிய பதிலடியை இலங்கை அரசுக்கு வழங்குவோம்.
அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலை மிக மோசமாக கண்டித்துள்ள இராசையா இளந்திரையன் இது தொடர்பான பாரிய விளைவுகளை இலங்கை அரசு எதிர் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
விபரீத விளைவுகளை விரைவில்இலங்கை அரசு எதிர்கொள்ளும்!கடற்புலிகளின் தளபதி சூசை எச்சரிக்கை
கிளிநொச்சி,நவ.5எமது அரசியல் பொறுப்பாளர் பிரிகேடி யர் சு.ப.தமிழ்ச்செல்வனைக் கொன்று விட்டோம் எனக் கொக்கரிக்கும் இலங்கை அரசு அதற்கான விபரீத விளைவுகளை விரைவில் உணரும். கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு போராளிகளின் வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.சு.ப.தமிழ்ச்செல்வனைக் கொன்றுவிட் டோம் எனக் கொக்கரிக்கும் இலங்கை அரசு நிச்சயம் அதற்கான விளைவை அனு பவித்தே தீரும்.24 ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்து இன்று மீளாத்துயில் கொள்ளும் உத்தம மாவீரனின் மறைவு தமிழீழத்தில் மட்டு மின்றி உலகப் பரப்பில் வாழும் தமிழ் மக் களுக்கு பேரிடியான செய்தி.இந்த மாவீரனின் விடுதலை வீச்சை அனைத்து தமிழீழ மக்களும் விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பேச்சில் ஈடுபடுமாறு கனடிய அரசு இலங்கைக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் [04 - November - 2007]
கனேடிய தமிழர் பேரவை விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் பல நாடுகளுக்குச் சென்று, இலங்கை அரசின் அடக்குமுறை ஆட்சியில் தமிழ் மக்கள் படும் அல்லல்களை வெளிப்படுத்தினார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் வெளியுலகம் அறிய வெளிக்கொணர்வதற்கு அவர் அயராது பாடுபட்டார். சு.ப. தமிழ்ச்செல்வனினதும் மற்றும் அவரது ஐந்து சக பேராளிகளினதும் மறைவு குறித்து அவர்களின் குடும்பத்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக கனடிய தமிழர் பேரவை விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; இலங்கை அரசின் இத்திட்டமிட்ட கொடூர நடவடிக்கை சமாதானப் பேச்சுவார்த்தைக்கான கதவை அடித்துச் சாத்தியுள்ளது என்றே நாம் கருதுகிறோம்.
தமிழ் மக்களின் விறல் படைத்த அரசியல் தலைவர் ஒருவரின் உயிரைக் குடித்ததன் மூலம் இலங்கை அரசு தனக்குச் சமாதான நாட்டம் இல்லை என்பதையே நிலைநாட்டியுள்ளது.
தமிழ் மக்களின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரைக் கொன்ற இலங்கை அரசின் வலிந்த தாக்குதலைக் கனடிய தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
இலங்தைக அரசின் இந்தச் செயலைக் கண்டிக்கும்படியும், தமிழ் மக்களுக்கு எதிரான அதன் வலிந்த படைபலத்தாக்குதலைக் கைவிடுமாறு அதனை நிர்ப்பந்திக்கும்படியும் கனடிய அரசாங்கத்தையும். நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கனடிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது. இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்து, சமாதான அரசியல் தீர்வு நாடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அதற்கு நிர்ப்பந்தம் கொடுக்கும்படி நாம் கனடிய அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்ச்செல்வனை கொன்ற இலங்கையரசின் படுபாதக செயலை உலக நாடுகள் கண்டிக்க
[04 - November - 2007]
*வைகோ வலியுறுத்தல் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரை விமானக் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தின் படுபாதகச் செயலை அனைத்துலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்தது உள்ளம். தமிழீழ மக்களின் உரிமைக்காக, தாய் மண்ணின் விடுதலைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துப் பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன், சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தோடு, ஈழத்தின் விடுதலைப் போரில் பல போர்க்களங்களில் மரணத்தை எதிர்கொண்டு போராடி உள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்க் காப்பாளர்களுக்குள் ஒருவராக 1980 களில் திகழ்ந்தவர். விடுதலைப் புலிகளின் சாவகச்சேரி படைப்பொறுப்பாளராகவும் பின்னர் யாழ்ப்பாணப்படை பொறுப்பாளராகவும் திறமையாக பணியாற்றி, ஆனையிறவு வெற்றிப் போரில் மரண காயமுற்று மீண்டார். யாழ்தேவியில் நடைபெற்ற யுத்தகளக் காயங்களினால் கால் ஊனமுற்றார்.
1993 முதல் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவராகச் செயல்பட்டார். தமிழீழத்தின் தியாகமும் தீரமும் வீரமும் நிறைந்த விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்கு தலைமை ஏற்று, நோர்வே அரசு முன்னின்று நடத்திய பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். இலங்கையிலும் அயல்நாடுகளிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் பங்கேற்றார். உலக நாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகள், ஐ.நா.மன்றத்தின் பிரதிநிதிகள் இலங்கையில் தமிழர் பகுதிக்கு வரும் போதெல்லாம் அவர்களை புலிகளின் தரப்பில் சந்தித்து வந்தார். இயக்கத் தலைமையிடம் கொண்ட ஈடற்ற விசுவாசமும் பிரச்சினைகளை நுணுக்கமாக அலசி ஆராயும் மதிநுட்பமும் எதிரிகளை திணறடிப்பதோடு கேட்பவர்களைத் தன்பக்கம் ஈர்க்கும் வாதத்திறமையும் பெற்றவர். தியாக வாழ்வை மேற்கொண்டவர் தமிழ்ச்செல்வன்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காட்டுமிராண்டித்தனமான இராணுவத் தாக்குதல்களை நடத்தி, சமாதான பேச்சுவார்த்தையை சமாதிக்கு அனுப்பியது சிங்கள அரசு தான் என்பது தமிழ்ச்செல்வனைப் படுகொலை செய்ததன் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. தமிழ்க் குலத்தின் பிஞ்சுக் குழந்தைகளை செஞ்சோலையில் குண்டு வீசிக்கொன்று ஒழித்த சிங்கள அரச, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தேவாலயத்திலும் நடுவீதியிலும் சுட்டுக்கொன்ற சிங்கள அரசு, தமிழ்ச்செல்வன் இருந்த கட்டிடத்தின் மீது சக்தி வாய்ந்த இராட்சதக் குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்தி இப்படுகொலையைச் செய்துள்ளது.
இப்படி இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு, பாகிஸ்தானும் சீனாவும் ஆயுதம் வழங்கிவரும் சூழ்நிலையில், இந்திய அரசாங்கமும் ராடர்களையும் சக்தி வாய்ந்த இராணுவத் தளபாடங்களையும் ஆயுதங்களையும் வழங்கியது தமிழ் இனத்திற்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இந்த துரோகத்தில் ஈடுபடும் இந்திய அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் இனத்தையே கருவறுக்க முனைந்து திட்டமிட்டு இனப்படுகொலை நடத்திவரும் சிங்கள அரசு, தற்போது தமிழ்ச்செல்வனை கொன்ற படுபாதகச் செயலை உலக நாடுகள் கண்டித்திட முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழீழத்தின் தியாகப் புதல்வன் தமிழ்ச்செல்வன் மறைவினால் கண்ணீரில் தவிக்கும் தமிழீழ மக்களுக்கும் வீரச்சகோதரனைப் பறிகொடுத்துவிட்டு வேதனையில் துடிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ம.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்ச்செல்வனின் படுகொலையின் பின்னராவது தமிழக அரசு தனது நிலையை மாற்ற வேண்டும்
[04 - November - 2007]
கெளத்தோர் மணி வேண்டுகோள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட செய்தி எம்மை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தந்துள்ளது.
1984 இல் போராளியாக அறிமுகமாகி அதன் பின்னர் பிரபாகரனின் தனி உதவியாளராகவும் யாழ்.மாவட்டத் தளபதியாகவும் பின்னர் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் அவரின் பல கட்ட வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்த எம்மை இந்தச் செய்தி பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கை விமானப் படையின் கொடூரமான விமானத் தாக்குதலில் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஐந்து போராளிகளை இழந்து நிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அழகிய புன்னகையுடனும் ஆழமான, தெளிவான, நிதானமான பேச்சுக்களுடனும் உலகத் தமிழரால் பார்த்துவரப்பட்ட அந்தப் பெருமகன் இன்று நம்மோடு இல்லை.
இலங்கை அரசின் இராணுவ, பொருளாதார இலக்குகளை மட்டும் தாக்கும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகக் காட்ட முயல்வோர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு புலிகள் தரப்பில் தலைமை ஏற்றிருந்த அரசியல்துறைத் தலைவரையே குறிவைத்து படுகொலை செய்தமைக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
இப்படிப்பட்ட வெறித்தனமான இலங்கை அரசுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுக்கும் இந்திய அரசும் இதைப் பார்த்துக் கொண்டும் வாய் மூடி மௌனியாக இருக்கும் தமிழக அரசும் தங்கள் நிலைப்பாடுகளை இந்த நிலையிலாவது மறுபரிசீலனை செய்திட வேண்டும்.
பெரியார் திராவிடர் கழகத்தின் கிளைக் கழகங்கள் சார்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு அகவணக்கம் செலுத்தும் கூட்டங்களும் அமைதி ஊர்வலங்களும் நடத்துமாறும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாவட்டத் தலைநகரங்களிலும் திங்கட்கிழமை தலைமைக் கழகத்தின் சார்பில் சென்னை மாநகரிலும் நடத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment