Tuesday, 13 November 2007

பிரபாகரனை இலக்கு வைப்பது கடினமான விடயமல்ல- விமானப்படை தளபதி!

பிரபாகரனை இலக்கு வைப்பது கடினமான விடயமல்ல

விமானப்படை தளபதி!11 November 2007

புலிகளின் தலைவர் பிரபாகரனை விரைவில் கண்டு பிடிப்போம் என்று விமானப்படை தளபதி ஏயர் மார்சல் றோசான் குணதிலாக தெரிவித்துள்ளார். பிரபாகரனை கண்டு பிடிப்பது விமானப்படையினருக்கு கடின காரியமல்ல என்றும், அவர் வன்னியின் குறிக்கப்பட்ட பகுதிக்குள்ளேயே நடமாடி வருகின்றார் என்றும் தெரிவித்துள்ள விமானப்படைத் தளபதி அவரை இலக்கு வைப்பது கடினமான விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தளபதிகளின் நடமாட்டங்கள் என்பவை மட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள்ளேயே இருக்கின்றது என்றும் தமது நடவடிக்கைக்கு வன்னியில் இருந்து போதிய தகவல்கள் கிடைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். எமது இவ் நடவடிக்கைக்கு மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் போதிய ஒத்துழைப்பு நல்கிவருகின்றார். அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிகரமாக வழிநடாத்தி வருகின்றார். எமது நடவடிக்கையை எந்தவித தடங்கலும் இன்றி கூட்டாக மேற்கொள்ள கூடியதாக உள்ளதாகவும் விமானப்படை தளபதி றோசான் குணதிலகா தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுக்கு இலங்கை ராணுவம் குறிவைப்பு
கொழும்பு: விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று இலங்கை விமானப்படை கமாண்டர் ஏர் மார்ஷல் ரோஷன் குணதிலகே கூறியுள்ளார். இதுகுறித்து இலங்கை அரசின், ஷடிவி' சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விரைவில் எங்கள் விமானப்படை வீரர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு இடத்தை கண்டுபிடித்து, அவரை தீர்த்துக் கட்டுவர். பிரபாகரனின் வாழ்நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. வவுனியாவில் மிகச்சிறிய பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகளின் எல்லை சுருக்கப்பட்டு விட்டது. எனவே, பிரபாகரன் எங்கு ஒளிந்திருக்கிறார் என்பதை துல்லியமாகக் கண்டுபிடித்து, தாக்குதல் நடத்துவது எளிதாகி உள்ளது. அவரை கண்டுபிடிப்பது பெரிய சிரமமான காரியமாக தோன்றவில்லை. இம்முறை அவரை பிடித்து விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்காகத்தான் இதுவரை நீண்ட பொறுமை காத்து வந்தோம். இப்போது அந்த நேரம் வந்துவிட்டது. இவ்வாறு ரோஷன் குணதிலகே கூறினார். சமீபத்தில், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்ததாக புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இலங்கை ராணுவம் குறிவைத்துள்ளது.
இலங்கையில் முதல் முறையாக விரைவில் ஆகாய பாதுகாப்பு வலயம்
[13 - November - 2007]

ஷ்ரீலங்காவில் பாராளுமன்றம், அலரிமாளிகை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் பிரதேசம், பாதுகாப்புத்துறை தலைமை நிலையங்கள் உட்பட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்கள் சார்ந்த வான்பரப்பை ஆகாயப் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்துவதற்கு (Air Defence Zone) அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அண்மைக் காலங்களில் புலிகள் இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவற்றுக்கு எதிரான தீவிர பாதுகாப்பு நடவடிக்கையாகவே அரசு இவ்வாறு குறிப்பிட்ட ஆகாயப் பிராந்தியங்களை பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தத் தீர்மானித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச ஆகாயப் பாதுகாப்பு வலயங்களுக்குரிய வான்பரப்பில் எந்தவொரு சந்தேகத்துக்குரிய விமானங்களும் பறப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. இதுபற்றி கடந்த 7 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப, மேற்படி ஆகாயப் பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தப்படுவது பற்றிய அறிவித்தல் ஆகாயப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ளூர் விமான சேவைகள் அதிகாரியால் விசேட அரசாங்க வர்த்தமானி மூலம் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், இவ்வாறு ஆகாயப் பாதுகாப்பு வலயத்திட்டம் அமுலுக்கு வந்த பின்னர் அந்த வலயங்களுக்கு உட்பட்ட விமான நிலையங்களில் தனியார் விமான சேவைக்குச் சொந்தமான விமானங்கள் தங்கிச் செல்வது சம்பந்தப்பட்ட அனுமதி உள்ளூர் விமானசேவை அதிகாரியிடம் பெறப்பட வேண்டும் எனவும் அவ்வாறு அனுமதி பெற்ற தனியார் விமானசேவை விமானங்கள் மட்டுமே குறித்த ஆகாயப் பாதுகாப்பு வலயத்துக்குரிய வான்பரப்பில் பறப்பதற்கோ அல்லது அதற்குரிய விமான நிலையங்களில் தரை இறங்கவோ அனுமதிக்கப்படும் எனவும் மேலும் மேற்படி சிரேஷ்ட பாதுகாப்புத்துறை உத்தியோகத்தர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஷ்ரீலங்காவில் ஆகாய பாதுகாப்பு வலயம் இதற்கு முன்னர் நடைமுறைக்கு வந்ததில்லை எனவும் தற்போது புலிகள் இயக்கத்தினர் விமானத் தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதைத் தொடர்ந்தே இவ்வாறு ஆகாயப் பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்த வேண்டிய தேவை முதன் முதலாக ஷ்ரீலங்கா அரசுக்கு ஏற்பட்டிருப்பதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
திவயின:8-11-2007

No comments: