Saturday, 1 December 2007

ஈழச்செய்திகள்:01122007

முகமாலை, கிளாலியில் கடும் மோதல்கள்
[30 - November - 2007]

யாழ்.குடாநாட்டில் முகமாலை மற்றும் கிளாலிப் பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. அதிகாலை 1.10 மணியளவில் இராணுவ முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட புலிகள் மீது படையினர் கடும் பதில் தாக்குதல் நடத்தி அதனை முறியடித்ததாகப் படைத்தரப்பு தெரிவித்தது.
கிளாலி மற்றும் முகாமலைப் பகுதியில் இதனால் நீண்டநேரம் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த மோதலில் புலிகளின் மூன்று பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டதுடன் மூன்று புலிகள் கொல்லப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதேநேரம், அதிகாலை 5.30 மணியளவில் கிளாலிப் பகுதியில் மீண்டும் கடும் மோதல் நடைபெற்றுள்ளதாகவும் இதில் மேலும் 3 புலிகள் கொல்லப்பட்டதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.


வவுனியா ரயில் சேவை இடைநிறுத்தம் மதவாச்சி வரையே `யாழ்தேவி'
[30 - November - 2007]
வவுனியாவுக்கான ரயில் சேவை (யாழ்தேவி) நேற்று வியாழக்கிழமை நண்பகல் முதல் இடைநிறுத்தப்பட்டு மதவாச்சி வரையே சேவைகள் நடைபெறுகிறது. வவுனியாவுக்கான ரயில் சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக நேற்றுக் காலை வவுனியா புகையிரத நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மறு அறிவித்தல்வரை கொழும்புக்கும் மதவாச் சிக்குமிடையிலேயே ரயில் சேவை நடைபெறும். கொழும்பிலிருந்து மதவாச்சி வரும் ரயில்கள் அங்கிருந்தே கொழும்புக்குப் புறப்படும்.
நேற்று நண்பகல் முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளதுடன் பயணிகள் எவருக்கும் பயணச்சீட்டு வழங்கவேண்டாமென வவுனியா ரயில் நிலைய அதிபருக்கு புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
வவுனியாவிலிருந்து இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்களில் பயணம் செய்வோர் தகுந்த காரணமின்றி தெற்கே பயணிக்க அனுமதிக்கப்படாததுடன் பலத்த போக்குவரத்துக் கெடுபிடிகளுக்குள்ளாகி வரும் நிலையில் தற்போது வவுனியாவுக்கான ரயில் சேவையையும் அரசு இடைநிறுத்தியுள்ளது.
இதனால், கொழும்புக்குச் செல்வதற்காக வவுனியா ரயில் நிலையத்திற்கு நேற்றுச் சென்ற பெருமளவு பயணிகள் ஏமாற்றமடைந்ததுடன், வவுனியா செல்வதற்காக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குச் சென்றவர்களுக்கு மதவாச்சி வரைக்குமான பயணத்திற்கே பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.


ஓமந்தையூடான பயணிகள் போக்குவரத்துக்கு தடை
[30 - November - 2007]

வவுனியா ஓமந்தை ஊடான பயணிகள் போக்குவரத்துக்கு நேற்று வியாழக்கிழமை முதல் படையினர் தடை விதித்துள்ளனர். வன்னிக்கான பாதை வாரத்தில் ஐந்து நாட்கள் திறக்கப்பட்டு போக்குவரத்துக்கள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் நேற்றுக் காலை ஓமந்தை இராணுவச் சோதனை நிலையம் வழமைபோல் திறக்கப்பட்டபோதும் பொதுமக்கள் வன்னிக்குச் செல்லவோ அல்லது வன்னியிலிருந்து வவுனியா வரவோ அனுமதிக்கப்படவில்லை.
மறு அறிவித்தல் வரை இப்பாதையூடாக பொதுமக்களின் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படமாட்டாதென படையினர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு (ஐ.சி.ஆர்.சி.) அறிவித்துள்ளனர்.
இது குறித்து நேற்றுக் காலை ஐ.சி.ஆர்.சி.யினர் விடுதலைப் புலிகளின் வவுனியா அரசியல்துறையினருக்குத் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களதும் அம்புலன்ஸ்களினதும் போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்படுமெனவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நேற்றுக் காலை வவுனியாவிலிருந்து வன்னிக்குச் செல்வதற்காகச் சென்றவர்களும் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வருவதற்கு வந்தவர்களும் பெரும் ஏமாற்றமடைந்தனர்.


தமிழ் இளையோர் மீது நேற்று கொழும்பில் பொலிஸ் வேட்டை!
சந்தேகம் என்ற பேரில் 350 பேர் கைது தமிழர் அதிகம் வாழும் இடங்களில் பதற்றம் கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நேற்று பொலிஸார் நடத்திய திடீர்த் தேடுதல் வேட்டையில் 350இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் கைதுசெய்யப்பட்டனர்.வதிவிட, ஆள் அடையாளங்களை, சான்றுகளை வைத்திருந்தவர்களும் சந்தேகம் என்ற போர்வையில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.நேற்றுக்காலை நடத்தப்பட்ட திடீர்ச் சோதனைகளின்போது கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று வரை விடுவிக்கப்படாததால், இங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் பற்றம் ஏற்பட்டுள்ளது.இது விடயம் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோதிலும் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்று அறியப்படுகிறது.கொழும்பில் தமிழர்கள் வசிக்கும் பல பகுதிகளிலும் நேற்று அதிகாலை முதல் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட பொலிஸாரும், இராணுவத்தினரும் முற்பகல் 10 மணியளவில் திடீரென தமிழ் மக்களை சோதனையிட ஆரம்பித்தனர்.இச்சோதனைகளின்போது சந்தேகம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கில் தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் கைதுசெய்யப்பட்டு அங்கு தயாராக நின்ற வாகனங்களில் ஏற்றப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.கொழும்பு நகரின் மத்திய பகுதி மற்றும் கல்கிசை, தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, நாரகன்பிட்டி, பொரளை, கொட்டாஞ்சேனை போன்ற இடங்களிலேயே திடீர்த் தேடுதல் நடைபெற்றது.அப்பகுதிகளில் இருந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் விடுதிகளுக்குள் நுழைந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் அங்கு கடுமையான தேடுதல்களை நடத்தியதுடன் அங்கிருந்தவர்களையும் விசாரணைக்கு உட்படுத்தினர். போதிய அடையாளங்களை நிரூபித்த போதும் சந்தேகம் என்ற போர்வையில் இளைஞர்களும், யுவதிகளும் கைதுசெய்யப்பட்டனர்.ஒவ்வொரு இடத்திலும் இவ்வாறு கைதுசெய்த தமிழர்களை பல மணிநேரமாக வீதியிலேயே வெயிலில் தடுத்து வைத்திருந்தனர். அதனையடுத்து அங்கு வந்த பொலிஸாரின் வாகனங்களிலும், பேரூந்துகளிலும், போக்குவரத்து சபை பஸ்களிலும் அவர்களை பொலிஸார் கொண்டுசென்றனர்.தமிழர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்து மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் கொழும்பில் உள்ள ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் அவர்களால் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க முடியவில்லை.இதனையடுத்து, தமிழர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்து அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. எனினும் அவர் அதற்கு சாதகமான பதில் எதனையும் தெரிவிக்கவில்லை என்று தமிழ் அரசியல்வாதிகள் பலரும் தெரிவித்தனர்.ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் ஐம்பதுக்கும் குறையாதோர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிரபாவை அரசு பிடித்தால் இந்தியாவிடம் ஒப்படைக்குமாம் ஒப்பந்தம் இருப்பதாகத் தகவல்

பிரபாகரனை உயிரோடு பிடித்தால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்போம். சடலமாகவே அவர் சிக்கினால் அதனை இந்தியா ஏற்றுக்கொள்ள விரும்பினால் அதனையும் இந்தியாவிடம் ஒப்படைக்கத் தயார். என்று பாதுகாப்புப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல நேற்றுக் கூறினார்.""இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரணை இந்திய அரசிடம் ஒப்படைப்பதாக ஏற்கனவே உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் இப்பொழுது பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கும் வரை இராணுவ நடவடிக்கைகள் ஓயாது என்றும் கூறுகின்றீர்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படிச் செய்யப் போகின்றீர்கள்'' எனச் செய்தியாளர் ஒருவர் அமைச்சரிடம் கேட்டார்.நாம் இந்தியாவுக்கு அளித்த உறுதியை மீறமாட்டோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.அதேவேளை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம். இந்த நடவடிக்கையின்போது பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால் அவரை இந்திய அரசிடம் ஒப்படைப்போம். துரதிஷ்டவசமாக அவர் கொல்லப்பட்டால் இந்தியா அவரது சடலத்தைக் கேட்டால் அதையும் ஒப்படைக்கத் தயார் என அமைச்சர் பதிலளித்தார்.

விடுதலைப் புலிகள் மீது எந்நேரமும் தடை வரலாம் என்கிறார் அமைச்சர்

""புலிகள் இயக்கத்தை எந்த நேரத்திலும் தடைசெய்யலாம். இது வரை இலங்கை அரசு புலிகள் இயக்கத்தைத் தடைசெய்யாமல் இருப்பதற்கு விசேட காரணங்கள் ஏதும் இல்லை; அழுத்தங்களும் இல்லை. என்றாலும் அரசு தாராளத்தோடு புலிகளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளது. புலிகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கர வாதத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் எந்த நேரத்திலும் புலிகள் இயக்கத்தை தடைசெய்யத் தயங்கமாட்டோம்.'' பாதுகாப்புத் துறைப் பேச்சாளரும் அமைச்சருமான ஹெகெலிய ரம்புக்வெல இப்படி சூளுரைக்கின்றார்.தேசியப் பாதுகாப்பு ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இப்படிக் கூறினார்.""தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது. புலிகள் இயக்கத்திற்கு அது உதவுகின்றது என்ற காரணத்தை காட்டியே அதைத் தடை செய்துள்ளீர்கள். புலிகளுடன் தொடர்புடைய தொண்டர் அமைப்பை தடைசெய்த நீங்கள், பயங்கரவாத அமைப்பு என்று நீங்கள் கூறுகின்ற புலிகள் அமைப்பை ஏன் தடைசெய்ய வில்லை?'' என்று செய்தியாளர் ஒருவர் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பினர்.புலிகள் அமைப்பை தடைசெய்வது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை அரசு இன்னும் இழந்து விடவில்லை."பயங்கரவாத நடவடிக்கைகளைக் கைவிட்டு அரசியல் ரீதியான தீர்வு ஒன்றைக் காண்பதற்கு முன் வாருங்கள். பேசித் தீர்ப்போம்!' என பேச்சு மேசைக்கான கதவை அரசு திறந்தே வைத்துள்ளது. அதைப் புலிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இதையும் புலிகள் தவறவிட்டால் புலிகள் இயக்கத்தை தடை செய்வதற்கான கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுவோம்.இப்போது புலிகள் இயக்கத்தைத் தடை செய்யாமல் நாம் பார்த்திருக்கின்றோம் என்றால் அதற்குக் காரணம் அவர்களுக்கு நாம் வழங்கும் தாராளம்தான். என்று பதில் அளித்தார் அமைச்சர் ரம்புக்வெல.

இராணுவத்தில் புதிதாக 30, 000 பேர் தப்பியோடியபின் வந்தோர் 4, 894

கடந்த 11 மாதங்களில் 30 ஆயிரம் இளைஞர்கள் இராணுவத்தில் புதிதாக இணைந்துள்ளனர். அதேவேளை, கடந்த இருவாரங்களில், ஏற்கனவே படைகளில் இருந்து தப்பியோடிய 4 ஆயிரத்து 394 இராணுவத்தினர் மீண்டும் சரணடைந்துள்ளனர். இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார்.படைகளில் இருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் சரணடைவதற்கு 12 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது குறுகிய காலக்கெடுவில் இவ்வளவு பெருந்தொகையானவர்கள் சரணடைந்தது இதுவே முதற்தடவை சரணடைந்தவர்களுக்கு மீண்டும் குறுகியகாலப் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஏற்கனவே கடமையில் இருந்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.படைகளில் இருந்து தப்பியோடியவர்களும், இளைஞர்களும் இராணுவத்தில் ஆர்வத்துடன் இணைந்து கொள்வதற்கான காரணம் அண்மைகாலங்களாக நாம் ஈட்டிவரும் வெற்றிகளே என்றும் பிரிகேடியர் கூறினார்.

பயங்கரவாதிகளை அழிக்கும் வரை இராணுவ நடவடிக்கை தொடரும் சபையில் பிரதமர் அறிவிப்பு
வீரகேசரி நாளேடு
பயங்கரவாதிகளை அழிக்கும் வரை இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்கா சபையில் அறிவித்தார். இராணுவத்தினரின் தாக்குதல்கள் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. வழமையான தின பணிகள் முடிவடைந்ததும் வரவு செலவு திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான குழு நிலை விவாதம் ஆரம்பமாகியது. ஜனாதிபதி செலவினங்கள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றும் போதே பிரதமர் ரட்ண சிறி விக்கிர நாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
பாதுகாப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையானது. தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை தீவிரப்படுத்துவதற்காகவே என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவர் இரா சம்பந்தன் நேற்று (நேற்று முன்தினம்) சபையில் உரை நிகழ்த்தும் போதே கூறியதாக சுட்டிக் காட்டிய பிரதமர் ரட்ண சிறி விக்கிரம நாயக்க அதனை முற்றாக மறுத்ததாகவும் எடுத்துக் கூறினார்.
ஜனாதிபதி செலவினங்கள் தொடர்பாக எதிர்தரப்பு எம்.பி.க்கள் கூறியவற்றுக்கு பதிலளித்து உரை நிகழ்த்திய பிரதமர் ரட்ண சிறி விக்கிரம நாயக்க மேலும் தெரிவித்ததாவது:
பயங்கரவாதிகளை அழிக்கும் வரை யுத்தம் தொடரும் ஆனால் அந்த யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. யுத்தம் நடைபெறுகின்றது. தாக்குதல் இடம் பெறுகின்றன. அது உண்மைதான் யுத்த செலவினம் அதிகரிக்கப்பட்டுள்ளதுதான் அவையெல்லாம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவேயாகும்.
ஜனாதிபதி செலவினத்தின் மூலம் நாட்டு ????? ஏற்படும் அது ஒரு நோக்கத்தின் அடிப்படையில் தான் செலவிடப்படுகின்றது. ஜனாதிபதி செலவினம் தொடர்பாக இந்த சபையில் பேசுகின்ற உறுப்பினர்கள் அதன் மூலமாக வருகின்ற அபிவிருத்திகள் பற்றி எதுவுமே பேசவில்லை.
ஜனாதிபதியின் கீழ் செயற்படும் நிறுவனங்கள் ஜனாதிபதியின் தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக அல்ல. மக்களை கருத்தில் கொண்டே அந்த நிறுவனங்கள் செயற்படுகின்றன.

நாடளாவிய ரீதியில் 1000 பேருக்கு எயிட்ஸ் 1600 பேர் எலிக் காய்ச்சலால் பாதிப்பு
[23 - November - 2007]

*சுகாதார அமைச்சின் ஆய்வுகள் தெரிவிப்பு நாடளாவிய ரீதியில் எயிட்ஸ்நோய்க்கு 1000 பேரும், எலிக்காய்ச்சலுக்கு 1600 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
2007 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் இற்றைவரை மேற்கொண்ட ஆய்வின்போதே நாடளாவிய ரீதியில் ஆயிரம் எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறே புதிதாக இனம்காணப்பட்டுள்ள எலிக்காய்ச்சல் மூலம் ஆயிரத்து அறுநூறு நோயாளிகள் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதில் அதிகமான நோயாளிகள் மேல்மாகாணத்திலேயே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபற்றி விழிப்பூட்டும் நடவடிக்கைகளை சுகாதார திணைக்களம் அந்தந்த மாவட்ட, பிராந்திய, பிரதேச சுகாதார சேவைகள் வைத்திய பணிமனைகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.


பொதுநலவாய புதிய செயலாளர் நாயகமாக இந்திய இராஜதந்திரி
[25 - November - 2007]

பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகமாக இந்திய இராஜதந்திரி கமலேஷ் சர்மா தெரிவு செய்யப்பட்டுள்ளார். 66 வயதுடைய ஓய்வுபெற்ற இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான கமலேஷ் சர்மா தற்போது பிரிட்டனில் இந்திய உயர் ஸ்தானிகராக பதவி வகித்து வருகிறார்.
பொது நலவாயத்தின் செயலாளர் நாயகம் டொன் மக்கினொனின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் முடிவடைகிறது. அதன்பின் கமலேஷ் சர்மா புதிய பதவியை ஏற்பார். இரண்டு வருட காலம் அவர் செயலாளர் நாயகமாக பணியாற்றுவார்.
உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் தற்போது நடைபெற்றுவரும் உச்சி மாநாட்டின் போதே செயலாளர் நாயகமாக சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவின் ஐ.நா. நிரந்தரப் பிரதிநிதியாகவும் அங்ராட் பேச்சாளராகவும் பணியாற்றியிருக்கும் கமலேஷ் சர்மா, மில்லினியம் இலக்குகளை வடிவமைக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்பினை வழங்கியவர். அத்துடன், கிழக்குத்தீமோரின் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாகவும் கடமையாற்றியவராகும்.

No comments: