Saturday, 8 December 2007

ஈழச்செய்திகள் 07122007 - அவசரகாலச் சட்டம் நீடிப்பு

பிரபாகரன் இருக்கும்வரை தமிழர் பிரச்சினை தீராதென்கிறது இந்தியப் பத்திரிகை [06 - December - 2007]

ஸ்ரீலங்காவில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படமுடியாத நிலையில் இருக்கும் தமிழர் பிரச்சினையை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கும் வரை நியாயமான முறையில் தீர்க்க முடியாது என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் பிரபல இந்திய ஆங்கில நாளேடாகிய ஹிந்து பத்திரிகை கருத்து வெளியிட்டுள்ளது. வன்னிப் பிரதேசத்திலிருந்து பிரபாகரன் விடுத்த அறிக்கையில் ஸ்ரீலங்கா அரசின் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய வேண்டாமென்று சர்வதேச சமூகத்தைக் கேட்ட பிரபாகரன், இவ்வாறு அறிக்கை விடுத்த 14 மணி நேரத்துக்குள் ஈ.பி.டி.பி. எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தாவைத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மூலம் படுகொலை செய்ய முயன்றுள்ளதுடன் நுகேகொடையில் பிரபல புடவைக் கடைக்குள் குண்டுத் தாக்குதலை நடத்தி 19 உயிர்களைக் கொன்றுமுள்ளார்.
இவ்வாறு ஸ்ரீலங்கா அரசின் யுத்த அணுகுமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரபாகரன், தனது யுத்தக் கொள்கையை சர்வதேச சமூகத்துக்குக் காட்டியுள்ளார் என மேற்படி இந்தியப் பிரபல நாளேடு ஹிந்து கருத்துத் தெரிவித்துள்ளது.
மேலும், அதில் பிரபாகரன் பற்றிக் கூறப்பட்டிருக்கும் விமர்சனங்களுக்கேற்ப, வேலுப்பிள்ளை பிரபாகரன் கம்பூச்சியாவின் முன்னாள் ஆட்சியாளரும் ஆயிரக்கணக்கானோரைப் படுகொலை செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டவருமான பெல்பொட்டுக்குச் சமமானவர் எனவும் குறிப்பிட்டுள்ளது. பிரபாகரன் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ததையோ மற்றும் அவர் முன்னரும் அண்மையிலும் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றியோ எதனையும் தனது அறிக்கையில் கூறாமல் ஸ்ரீலங்கா அரசின் யுத்த நடவடிக்கைக்கு உதவ வேண்டாம் என்று சர்வதேச சமூகத்துக்குக் கூறியிருக்கிறார் என்றும் மேற்படி இந்தியப் பிரபல நாளேடு அதன் விமர்சனக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
திவயின:4/12/2007.

கைதானவர்களில் 1,000க்கும் அதிகமானோர் இன்னமும் பொலிஸ் நிலையங்களில் அடைப்பு
பூஸாவில் - 300 பேர்; வெலிக்கடையில் 500 பேர் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த வார இறுதியில் கைதுசெய்யப்பட்ட தமிழர்களில் ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் இன்னமும் பொலிஸ் நிலை யங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.வெலிக்கடையில் 500 பேரும், பூஸாவில் 300 பேரும் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர்.உண்மை அவ்வாறிருக்க 202 தமிழர்கள் மட்டுமே தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே சபையில் பட்டியல் போட்டுக் காட்டி பொய்யான தகவல்களை வெளியிட்டார்.இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் புட்டுக்காட்டினார் தி.மகேஸ்வரன்.இது குறித்து அவர் அங்கு கூறியதாவது:அப்பாவிப் பொதுமக்கள் கைது செய்யப்படுவதும், கடத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடருமேயானால் அனைத்துத் தமிழ்மக்களும் ஆயுதம் ஏந்தும் கட்டாயம் ஏற்படும்.நீங்கள் ஒரு பிரபாகரனை அழிப்பதாகக் கூறிக்கொண்டு அப்பாவித் தமிழ் மக்களை கொடுமைப்படுத்துவதால் பல்லாயிரம் பிரபாகரன்கள் உருவாகுவார்கள். அதற்கு அரசே வழிவகுக்கின்றது.இப்படி ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் நேற்று நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார்.பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இப்படிக் கூறினார்.மகேஸ்வரன் எம்.பி. தொடர்ந்து உரையாற்றும்போது மேலும் கூறியவை வருமாறு:இந்தச் சபையில் பல பொறுப்புகளை வகிக்கும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவரும் விடுதலை செயய்ப்பட்டு விட்டனர், 202 பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பட்டியல் போட்டுக் காட்டினார்.அவர் இந்தச் சபையில் பொய்யான தகவல்களைக் கூறி நாடாளுமன்றத்தை அவமானப்படுத்தியதோடு, நாட்டையும் நாட்டு மக்களையும் ஏமாற்றிவிட்டார்.ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கூறியவை அத்தனையும் பொய். இன்றுவரை எந்த ஒரு அப்பாவித் தமிழனும் விடுதலை செய்யப்படவில்லை. ஆக 87 மலையக இளைஞர், யுவதிகள் மட்டும் நீதிமன்றத்தின்முன் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கு நன்றி செலுத்துகின்றோம்.ஜெயராஜ் பெர்னாண்டோ புள்÷ள 1,800 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என இந்தச் சபையில் கூறினார். எவருமே விடுதலை செய்யப்படவில்லை. அமைச்சர் கூறுவதுபோல் விடுதலை செய்யப்பட்டிருந்தால் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் எங்கே போனார்கள்? என்று கேட்டார்.

அவசரகாலச் சட்டம் நீடிப்பு
வாக்கெடுப்பில் இ.தொ.கா., ம.ம.மு. பங்குபற்றவில்லை
126 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் 126 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.பிரேரணைக்கு ஆதரவாக 141 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் கிடைத்தன.வாக்கெடுப்பு நேரத்தில் இ.தொ.கா. மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் சபையில் இருக்காமல் தவிர்த்துக்கொண்டனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் மேலக மக்கள் முன்னணியின் உறுப்பினர் மனோ கணேசனும், ஐ.தே.கட்சியின் உறுப்பினர் தி.மகேஸ்வரனும் அவசரகால நீடிப்புப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து ஜே.வி.பியினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், இ.தொ.காவின் அதிருப்திக் குழு உறுப்பினரான புத்திர சிகாமணியும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதேவாக்கு எண்ணிக்கை யின் அடிப்படையிலேயே பாதுகாப்பு அமைச்சு, பொதுச்சபைப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளும் குழுநிலையில் நிறைவேற்றப்பட்டன.இந்த நிதி ஒதுக்கீட்டுக்கான குழுநிலை விவாதமும் அவசரகாலச் சட்ட நீடிப்புப்பிரேரணை விவாதத்தை ஒட்டி நேற்று நாடாளுமன்றத்தில் நடை பெற்றது.அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை போன்று இந்த நிதி ஒதுக்கீடும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் கோரினார். அதன்படி குரல் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அவசர காலச்சட்டத்தையும் பாதுகாப்பு அமைச் சுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள், மேலக மக்கள் முன்னணியின் மனேக ணேசன் ஐ.தேகட்சியின் தி. மகேஸ் வரன் ஆகியோர் எதிர்த்தனர்.மலையக மக்கள் முன்னணி மற்றும் ஏனைய ஐ.தே.கட்சி உறுப்பினர் கள் சபையில் இருக்கவில்லை.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய அரசு தரப்பு எம்பிக்களும் ஜே.வி.பியினரும் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஹெப்பிட்டிகொல்லாவவில் நேற்றிரவு கிளேமோரில் பஸ் சிக்கியதில் 15 பேர் பல; 23 பேர் படுகாயம் [06 - December - 2007]
டிட்டோகுகன்- ஹெப்பிட்டிகொல்லாவ பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு பயணிகள் பஸ்ஸொன்று, கிளேமோர் தாக்குதலுக்கிலக்கானதில் 3 பெண்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 23 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹெப்பிட்டிகொல்லாவ டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்றே நேற்றிரவு 8.15 மணியளவில் இந்தக் கிளேமோர் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரத்திலிருந்து பதவியாவின் ஜனகபுர பகுதி நோக்கி பெருமளவு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இ.போ.ச.பஸ்ஸே இந்தக் கிளேமோர் தாக்குதலில் சிக்கியதாக படைத்தரப்பு தெரிவித்தது.
வீதியோரத்தில் பொருத்தப்பட்டிருந்த கிளேமோர் குண்டொன்று, தூரஇருந்து இயக்கும் கருவி மூலம் இயக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது, 3 பெண்களும் 12 ஆண்களுமாக 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 23 பேர் படுகாயமடைந்ததாகவும், அனைவரும் பொது மக்களென்றும் இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக ஹெப்பிட்டிகொல்லாவ வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக கிடைத்த தகவல்களின் பிரகாரம், 3 பேர் ஹெப்பிட்டிகொல்லாவ வைத்தியசாலையிலும், 14 பேர் அனுராதபுரம் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனையவர்களுக்கு சிறு காயங்களே ஏற்பட்டிருந்தமையால் அவர்கள் சிகிச்சை பெற்று திரும்பி விட்டதாகவும் கூறப்பட்டது.
இச் சம்பவத்தை அடுத்து, அப் பகுதியில் படையினரும் பொலிஸாரும் இணைந்து, தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம், சம்பவத்தில் 2 கிளேமோர் குண்டுகள் வெடித்திருப்பதாகத் தகவலொன்று தெரிவித்த போதிலும், தங்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஒரு கிளேமோர் குண்டு மட்டுமே வெடித்திருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய அதிகாரியொருவர் கூறினார்.
விடுதலைப் புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்தது.

No comments: