Monday, 3 December 2007

கிளிநொச்சியில் பா.நடேசனும் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகமும் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு

இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்கள்
இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் வெலிஓயா பிரதேசங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும்
இடையில் சனிக்கிழமை இடம்பெற்ற கடுமையான நேரடி மோதல்களில் குறைந்தது 60 விடுதலைப் புலிகளும் 6 இராணுவத்தினரும்
கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
வெலிஓயா பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதிகளில் இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்ட இராணுவத்தின்
முயற்சி தமது எதிர் தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் மாவட்டத்தில் அடம்பனுக்குத் தெற்கில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரையில்
இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதில் 28 விடுதலைப் புலிகளும் 5
இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது, இதில் 57 விடுதலைப் புலிகளும் 26
இராணுவத்தினரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது,
மன்னார் பெரியதம்பனை பகுதியில் விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன், 25 புலிகளும்,
9 இராணுவத்தினரும் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது,
இதற்கிடையில் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசனுக்கும் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம்
அவர்களுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை காலை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: