Sunday 23 December, 2007

அரசியல் தீர்வு நாடகம்

*மாகாணமட்ட அதிகாரப் பகிர்வுக்கு ஜனாதிபதி இணக்கம்
*மன்மோகன்சிங்கின் வருகைக்கு முன்பாக தீர்வுப் பொதி
வடக்கு கிழக்கு இடைக்கால நிர்வாகத்துக்கு தலைமைதாங்க விரும்புகிறார் டக்ளஸ்
உத்தேச அதிகாரப் பகிர்வு அலகாக மாகாண மட்டத்திலான முறைமைக்கு (தற்போது நடைமுறையிலுள்ள) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சொந்தக் கட்சியான ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாவட்டத்திலான அதிகாரப் பரவலாக்கல் யோசனையையே முன்வைத்திருந்தது.
மாகாணத்தை அதிகாரப் பகிர்வு அலகாக உருவாக்குவதற்கு ஜனாதிபதி இறங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வியாழக்கிழமை இரவு வெளிநாட்டு செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திச் சேவை தெரிவித்தது.
்தற்போதைய அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் முன்னேற்றகரமான அம்சங்களைக் கொண்டதாக புதிய அதிகாரப் பகிர்வுத் தீர்வுப் பொதி இரண்டு, மூன்று மாதங்களில் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் இந்த உத்தேச தீர்வுத் திட்டமானது எதிர்வரும் பெப்ரவரி 4 இல் சுதந்திரதின வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டு விடுமென்றும் தேவானந்தா கூறியுள்ளார்.
சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு மன்மோகன்சிங்கிற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்பு இன்னமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதிலும் பார்க்க தற்போது நடைமுறையிலுள்ள கூட்டமைப்பை படிப்படியாக சிறப்பானதாக மாற்றியமைப்பதன் மூலம் நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை மேற்கொள்ள முடியுமென்பது தொடர்பாக ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு தான் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதாயின் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் பாராளுமன்றத்தில் தேவைப்படும். அதனைப் பெற்றுக்கொள்ள முடியாது.
மாகாணசபைகள் சட்ட மூலத்தின் பிரகாரம் மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை அதிகளவில் விரிவுபடுத்துவதே தற்போது மேற்கொள்ளவேண்டிய தேவையாகும். அவற்றை கட்டம் கட்டமாக மேற்கொள்ளலாம்.
இதனை பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.ஏற்றுக்கொள்வதில் பிரச்சினை இல்லை. ஏனெனில் 13 ஆவது திருத்தத்தை உருவாக்கியதே ஐ.தே.க.அரசாங்கமாகும். சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் இதுதொடர்பாகக் கலந்துரையாடியுள்ளேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர். கடும் போக்குடைய ஜாதிகஹெல உறுமய, ஜே.வி.பி.போன்ற கட்சிகள் மாகாணசபை முறைமையை கடுமையாக எதிர்த்திருந்த போதும் இந்த முறைமை தொடர்வதற்கு தற்போது ஆதரவாகவுள்ளனர்.
பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவும் 13 ஆவது திருத்தத்துடன் மேலதிகமாக தீர்வுப்பொதியை தயாரிப்பதிலேயே ஈடுபட்டு வருகிறது என்றும் தேவானந்தா குறிப்பிட்டார்.
அத்துடன் வட,கிழக்கு மாகாணத்திலிருந்து இடைக்கால நிர்வாகமொன்றை அரசாங்கம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அந்த நிர்வாகம் அரசியல் மட்டத்தில் அமைந்திருப்பது அவசியம். ஏனெனில் அரசியல் நிர்வாகத்தாலேயே மக்களின் உணர்வுகளை நாடி பிடித்துப் பார்க்க முடியும். அத்துடன் இயல்பு நிலையை ஏற்படுத்தவும் அது உதவும்.
அத்தகைய நிர்வாகத்துக்கு தலைமைப் பொறுப்பை ஏற்க நான் விரும்புகிறேன். எனது தலைமைத்துவத்தின் கீழ் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் யோசனையை ஜனாதிபதிகள் சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு முன்வைத்திருந்தேன். ஆனால் அவர்கள் இருவரும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினர். நம்பிக்கையுடன் புலிகளுடன் பேசமுடியாது என்ற எனது எச்சரிக்கையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
சர்வாதிகாரமாக ஆட்சி நடத்த துண்டு நிலத்தை பிரபாகரன் விரும்புகிறார் . அவர் நெல்சன் மண்டேலாவோ அல்லது யாசிர் அரபாத்தோ அல்ல அவர் பொல்பொட் ஹிட்லர் போன்றவர் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்றால் பிரபாகரன் கொல்லப்படவேண்டும். இதய சுத்தியுடன் பிரபாகரன் பேச்சு வார்த்தை மேசைக்கு வந்தால் நான் அரசியலிருந்து விலகி விடுவேன். அவர் வரமாட்டார்,நான் போக மாட்டேன் என்பதே யதார்த்தம் என்றும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸின் யோசனையை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு நிராகரிப்பு
[23 - December - 2007]

வட-கிழக்கு மாகாணங்களில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டுமென ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்த யோசனையை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு நிராகரித்துள்ளது. மாகாணசபைகளை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டுமெனவும் வட,கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா யோசனை தெரிவித்திருந்தார்.
இடைக்கால நிர்வாகத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை தான் ஏற்கவிரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆயினும் இந்த யோசனையை சர்வகட்சிப்பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமைதாங்கும் விஞ்ஞான, தொழில்நுட்பத்துறை அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஏற்றுக் கொள்ளவில்லை.
சிறந்தவொரு முழுமையான அளவிலான அதிகாரப் பகிர்வு தீர்வுப் பொதியை எமது குழு முன்வைக்கவுள்ளதனால் ஈ.பி.டி.பி.யின் தலைவர் எமக்கு முன்வைத்த யோசனையை நிராகரிப்பதாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாம் இதுவரை 55 தடவைகள் கூடியுள்ளதுடன் எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் 5 தடவைகள் அமர்வுகளை மேற்கொண்டு இடைக்கால அறிக்கையை உறுதிசெய்யவுள்ளோமெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் பெப்ரவரி 4 இல் இடம்பெறவுள்ள சுதந்திரதின நிகழ்வில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்குபற்றவுள்ளதால் அதற்கு முன்னர் இடைக்கால அறிக்கையை உறுதிசெய்யுமாறு எமக்கு ஜனாதிபதி ஆலோசனைவழங்கி எதிர்பார்த்துள்ளார்.
அத்துடன் வடக்கு கிழக்கு மோதலுக்கு அரசியல் தீர்வினை எட்டுமாறு இந்தியா இலங்கையை வலியுறுத்துவதால் இந்திய பிரதமரின் விஜயத்துக்கு முன்னர் எமது இறுதி அறிக்கையை முன்வைக்கவுள்ளோமெனவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் அமைப்பின் 13 வது திருத்தச்சட்டம் நிறைவேறி 20 ஆண்டுகளின் பின்னால்.........மொழியுரிமையின் கதி?!

நேர்முகப்பரீட்சைக்கான கடிதங்கள் சிங்கள மொழியில் தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் பெரும் திண்டாட்டம்
[23 - December - 2007]

மாத்தளை மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பிரபல தனியார் நிறுவனங்களிலும் தொழில் வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கும்போது அவை தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்குக் கிட்டாத வகையில் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு செயல்படுவதாக தெரியவருகிறது. இத்தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்படும் கடிதங்கள் யாவும் சிங்கள மொழியில் மாத்திரமே உள்ளதால் மொழி தெரியாத ஏனையோர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
இந்த விளம்பரங்கள் யாவும் அரச திணைக்கள காரியாலயங்களாலும் தபால் நிலையம்,பொது பஸ் நிலைய தரிப்பிடம் போன்ற இடங்களில் பகிரங்கமாக ஒட்டப்படுகின்றபோதிலும் சிங்கள மொழியில் மட்டுமே அறிவிப்புகள் தயார்செய்யப்படுவதனால் சிங்கள இளைஞர், யுவதிகள் மட்டுமே இவற்றை வாசித்து அறிந்து கொள்கின்றனர்
தமிழ் மொழி இடம்பெறாமையால் தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் இவற்றை வாசித்துத் தெரிந்து கொள்ள முடியாமலிருக்கின்றனர்.
அண்மையில் மாத்தளை உதவித் தொழில் ஆணையாளர் காரியலாயத்தின் அனுசரணையுடனும் இளைஞர் சேவை மன்றத்தின் அனுசரணையுடனும் மாத்தளை மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுக்கவென சில பொது நேர்முகப் பரீட்சைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆனால், நேர்முகப் பரீட்சைகளுக்கு சமுகமளிக்கவென விடுக்கப்பட்ட அறிவிப்புகளை தனிச் சிங்கள மொழியில் மட்டுமே இடம் பெற்றிருந்தமையால் சிங்கள இளைஞர், யுவதிகள் மட்டுமே இந்த நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளித்திருந்தனர். தமிழ், முஸ்லிம், இளைஞர், யுவதிகள் ஒருவர் தானும் சமுகமளித்திருக்கவில்லை.
இது சம்பந்தமாக ஏற்பாட்டாளர்களிடம் வினவியபோது இவ்வாறான நேர்முகப்பரீட்சைகள் நடத்தப்படும்போது நாம் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதி ஒருவரும் தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகளையும் பங்குபற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் இல்லையேல் தமிழ் மொழியில் அறிவித்தல்களை தயாரித்துக் கொள்ள உதவியளிக்குமாறும் கோரிக்கைகள் விடுத்து வந்துள்ளோம். ஆனால் அவர்கள் செவிமடுப்பதாக இல்லை. இதன்காரணமாக இப்போது நாம் அவர்களுக்கு அறிவிப்பதை கைவிட்டுள்ளோம். நாம் (யாரையும்) எந்தவொரு சமூகத்தையம் புறக்கணிப்பதில்லை. வழங்கும் சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவதில்லை.
தற்போதும் சிறுபான்மை சமூக அரசியல் தலைமைத்துவங்கள் எமக்கு ஆதரவுநல்க முன்வர வேண்டும். நேர்முகப்பரீட்சைக்கான அறிவித்தல்களை தமிழ் மொழியிலும் தயாரித்து வெளியிட தயாராகவுள்ளோம் என்றார்.
ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட இவ்வாறான நேர்முகப்பரீட்சைக்கான அறிவித்தல்கள் மும்மொழிகளிலும் இடம்பெற்றிருப்பினும் தமிழ் மொழி நிறுத்தப்பட்டது. ஆங்கில மொழியும் நிறுத்தப்பட்டு தற்போது தனிச் சிங்கள மொழியில் மட்டுமே இவை தயார்படுத்தப்பட்டு வெளியிடப்படுகின்றது. எனவே, சிறுபான்மை சமூக அரசியல் தலைமைத்துவத்தில் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: