கடத்தப்பட்ட சிங்கள இளைஞன் புதைகுழியிலிருந்து சடலமாக மீட்பு
[23 - December - 2007]
*சாளம்பைக்குளம் பகுதியில் சம்பவம் வவுனியா தாலிக்குளம் பகுதியில் கடந்த 19 ஆம் திகதி கடத்திச்செல்லப்பட்ட சிங்கள இளைஞன் ஒருவரது சடலம் நேற்று சனிக்கிழமை காலை சாளம்பைக்குளம் பகுதியில் புதை குழியொன்லிருந்து தோண்டியெடுக்கப்பட்டது.
கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் தோண்டியெடுக்கப்பட்ட சடலத்தில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுமுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
தாலிக்குளம் பகுதியில் கட்டிட ஒப்பந்த வேலையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய கண்டி வெல்லன்கொட பகுதியைச் சேர்ந்த வாசலகே சாரக நிரோஷன் தென்னக்கோன் (30 வயது) என்பவர் கடந்த 19 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வவுனியா - மன்னார் வீதியில் சாளம்பைக்குளம் யங்காவூரில் புதைகுழியில் இவரது சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக வவுனியா பொலிஸார் மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸாருடனும் கவசவாகனப் படையணி மற்றும் கண்ணிவெடி அகற்றும் பிரிவினருடன் நீதிபதி இளஞ்செழியன் நேற்றுக்காலை 9.30 மணியளவில் அங்கு சென்றார்.
இவர்களுடன் வவுனியா ஆஸ்பத்திரி சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சாறிகா சேனாரட்ணவும் சென்றிருந்தார்.
வயல்வெளி, நீரோடை மற்றும் காட்டுப் பகுதியை அண்டிய இடத்திலேய இளைஞனின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் கண்ணிவெடிகள் இருக்கின்றனவா எனச் சோதனையிட்ட பின்னர் புதைகுழி தோண்டப்பட்டது.
சுமார் இரண்டு அடி ஆழத்தில் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் சடலம் தலை குப்புறக் கிடந்தது. சடலம் தோண்டி எடுக்கப்பட்டதும் அதனை அவரது சகோதரர் ரஞ்சித் தென்னக்கோன் அடையாளம் காட்டினார்.
புதைகுழியிலிருந்து சுமார் ஐந்து அடி தூரத்தில் ரி.56 ரகத் துப்பாகிக்குரிய வெற்றுத் தோட்டா ஒன்றும் புதைகுழிக்குள் இருசப்பாத்துக்களும் கண்டெடுக்கப்பட்டன. இவையிரண்டையும் தடயப்பொருட்களாக எடுக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு பணித்தார்.
பிரேத பரிசோதனைக்காக சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறும் பிரேத பரிசோதனை முடிவடைந்ததும் சடலத்தை சகோதரனிடம் ஒப்படைக்குமாறும் நீதிபதி பணித்தார்.
புதைகுழி தோண்டும்போது ஒவ்வொரு கட்டத்தையும் பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோவில் பதிவுசெய்தனர். விசாரணைகள் அடுத்த மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடத்தப்பட்ட சிங்கள பொதுமகன் புதைகுழியிலிருந்து சடலமாக மீட்பு வீரகேசரி வாரவெளியீடு
வவுனியா சாலம்பைக்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை சிங்கள பொதுமகன் ஒரு வர் புதைகுழியிலிருந்து சடலமாக மீட்கப்பட் டுள்ளார். கண்டி வெல்லம்பொட என்ற இடத்தைச் சேர்ந்த வாசலகே சாரக நிறோசன் தென்னக் கோன் (வயது 30 ) என்பவரே இவ்வாறு சடல மாக மீட்கப்பட்டவராவார். கொழும்பிலியங்கும் அக்சஸ் என்ற கட்டட ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளரான இவர் முருங்கனிலுள்ள தனது கிளை அலுவலகத்திற்கு பணியின் நிமித்தம் சென்றிருந்தபோது கடந்த 19 ஆம் திகதி வவுனியா தாழிக்குளம் பகுதியில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வவுனியாவில் இருந்து 12 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சாலம்பைக்குளத்திற்கு அண்மையிலிருக்கும் ஜங்காவூர் என்ற இடத்திலுள்ள வயல்வெளியிலுள்ள புதைகுழியிலிருந்து இவரது சடலம் நேற்றுக்காலை 9 மணியளவில் மீட்கப்பட்டது. அப்பகுதியில் சடலம் ஒன்று புதைக்கப்பட் டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட இராணு வத்தினரும் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸாரும் கண்ணிவெடியகற்றும் பிரிவினரும் வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனுடனும் வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியுடனும் சடலம் புதைக் கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றனர். அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் உத்தரவின் பேரில் நீதிபதியின் முன்னிலையில் சடலம் புதைக்கப்பட்டிருந்த புதைகுழி தோண் டப்பட்டது. கைகள் இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட நிலையிலும் கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் சுமார் இரண்டு அடி ஆழத்தில் சடலம் புதைக்கப்பட்டிருந்தது. .
சடலத்தை அவரது சகோதரன் ரஞ்சித் தென்னக்கோன் அடையாளம் காட்டினார். இந்த புதைகுழியிலிருந்து சுமார் ஐந்து அடி தூரத்தில் ரி.56 ரக துப்பாக்கித் தோட்டா ஒன்றும் கிடந்தது. வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். மரண விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறும். வவுனியாவில் கடந்த 50 நாட்களின் பின்னர் இடம்பெற்ற படுகொலை இது என்று தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment