Monday 25 February, 2008

ஈழச்செய்திகள்:240208

Posted on : Sat Feb 23 9:05:00 2008
பிரபாவிடமிருந்து ஆறாயிரம் புலிகளை "மெளன யுத்தம்' மூலம் ரணில் பிரித்தார்! நாடாளுமன்றத்தில் கிரியெல்ல புகழாரம்
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவைப் பிரித்தெடுத்து, புலிகளிடையே பிளவை ஏற்படுத்தியவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில்
விக்கிரமசிங்கதான் என்று ஐ.தே.கட்சியின் எம்.பியான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றில் ரணிலுக்குப் புகழாரம் சூட்டினார்.ரணில் விக்கிரமசிங்கவின் இந்த "மௌன யுத்தம்' மூலம் ஆறாயிரம் புலி உறுப்பினர்களைப் பிரபாகரனிடமிருந்து பிரித்தெடுத்து, புலிகள் அமைப்பைப்
பலவீனப்படுத்தி, இரத்தம் சிந்தாத பணத்தை விரயம் செய்யாத வெற்றியொன்றை ஐ.தே.கட்சி அரசால் மிக இலகுவாகப் பெற முடிந்தது என்றும் அவர்
கூறினார்.இதுவொரு மௌனமான மிக முக்கியமான தந்திரோபாய வெற்றி என்பதால் இந்த இரகசியத்தை இதுவரை காலமும் வெளிப்படுத்தாது மறைத்து
வைத்திருந்தோம் என்றும் ரணிலின் இந்தத் தந்திரோபாய நடவடிக்கையின் காரணமாகவே அரசால் கிழக்கை மிக இலகுவாகக் கைப்பற்ற முடிந்தது என்றும் கிரியெல்ல மேலும்
கூறினார்.இப்போது நடத்துவது அர்த்தமற்ற யுத்தம்நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிதிச்சட்டம் ஒன்றின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கிரியெல்ல இத்தகவலைத்
தெரிவித்தார். அவர் மேலும் அங்கு கூறியவை வருமாறு:இலங்கையில் தற்போது அர்த்தமற்ற ஒரு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த யுத்தம் மூலம் மனிதவுயிர்கள் அநியாயமாக அழிகின்றன.இரத்தம் சிந்தாது, நல்லதொரு அரசியல் தீர்வின் ஊடாக இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வழிவகைகள் எவையும் இந்த அரசிற்குத் தெரியாது.தற்போது தொடர்கின்ற இந்த யுத்தம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் 8ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர்; மூன்றரை லட்சம்
பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.ஐ.தே.கட்சியின் ஆட்சியில் இவ்வாறான பெரும் எண்ணிக்கையில் உயிர்கள் பலியாகவில்லை. யாரும் இடம்பெயரவில்லை.ஒரு சில புலனாய்வு அதிகாரிகள் மாத்திரம்தான் கொல்லப்பட்டனர். அதனைப் பெரிய விடயமாக சிலர் காட்ட முயன்றனர். உயிரிழப்புத் தவிர்க்கப்பட்டதைப் பற்றி யாரும் நேர்மையாகப் பேசமுன்வரவில்லை.ஆனால், தற்போதைய அரசில் உயிர்கள் கணக்கின்றிப் போகின்றன. நாம் இரத்தம் சிந்தாமல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.கருணாவைப் புலிகளிடமிருந்து பிரித்தெடுத்து, அதன்மூலம் புலிகள் அமைப்பைப் பலவீனப்படுத்தி, இரத்தம் சிந்தாத வெற்றியைப் பெற்றார் எமது
தலைவர் ரணில் விக்கிரமசிங்க.கருணாவுடன் சேர்ந்து ஆறாயிரம் புலிகள் பிரிந்து சென்றனர். அதுவொரு மௌனமான இராஜந்திர யுத்தமாக இருந்தது.அதுவொரு ஆக்கபூர்வமான மௌனமான வெற்றி என்பதால் நாம் அந்த இரகசியத்தை இதுவரை வெளியிடாமல் மறைத்து வைத்தோம்.கருணாவை ரணில் பிரித்தெடுத்ததன் காரணமாகவே இந்த அரசால் கிழக்கை மிக இலகுவாகப் புலிகளிடமிருந்து மீட்க முடிந்தது. என்றார்.
2/22/2008 5:41:50 PM வீரகேசரி இணையம் -
சிங்களமொழியில் சட்டத்துறையினை பயில்வதற்கு தடைவிதிக்கப்படுகின்றது.
20 வருடங்களுக்கு முன்னர் இந்தச் சட்டம்
அமுல்படுத்தப்பட்டிருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டத்துறையினை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார் என்று ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும்
எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க கற்கை நிலையத்தில் இடம்பெற்ற தேசிய மொழி அதிகார சபையின் அறிக்கை வெளியீட்டு விழாவிலேயே விமல் வீரவன்ச
எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சர்வதேச தாய்மொழி தினமாக உலகம் முழுதும் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பங்களாதேஷின்
இலங்கைக்கான தூதுவர் சாதாத் ஹுசேன் கலந்து கொண்டிருந்ததுடன் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார கௌரவ அதிதியாகவும் கலந்து
கொண்டிருந்தார்.
இதன்போது தேசிய மொழி அதிகாரசபையின் அறிக்கையின் முதற்பிரதி தூதுவர் சதாத் ஹுசேனிடம் வழங்கப்பட்டது. இங்கு தொடர்ந்தும் விமல்
வீரவன்ச எம்.பி. மேலும் கூறியதாவது:எமது தாய்மொழி காப்பாற்றப்பட வேண்டும். மாறாக அது அற்றுப்போவதற்கு வழிவகுக்கக்கூடாது.
தேசப்பற்றுள்ளவர்கள் என்ற வகையில் எமது தாய்மொழியை நாம் நேசிக்கின்றோம். தமிழ் மக்களுக்கான தமிழ்மொழி இலங்கையில் மட்டுமல்லாமல்
உலகம் முழுவதும் வியாபித்திருக்கின்றது.
ஆனால், சிங்களமொழியானது இலங்கைக்குள் வரையறுக்கப்பட்டிருக்கின்றது. காரணம் இலங்கை வாழ் சிங்களவர்கள் மட்டுமே சிங்கள மொழியை
பேணி வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் சட்டத்துறையில் கற்பவர்களுக்கு சிங்களமொழி இல்லாமல்
செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.
இது உண்மையில் சிங்களமொழியை அற்றுப் போகச் செய்யும் செயலாகும். கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இந்த நடைமுறை
அமுல்படுத்தப்பட்டிருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சட்டத்துறையில் தேர்ச்சியடைந்திருக்க முடியாது. அவர் அதனை தேர்ந்தெடுத்திருக்கவும்
மாட்டார். எமது நாட்டில் சிங்களமொழியான தாய்மொழிக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே
தேசியமொழி அதிகாரசபையின் அறிக்கை வெளியிட்டு வைக்கப்படுகின்றது.


மேற்குலகை பகைக்காத வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்க அரசுக்கு ஐ.தே.க. வலியுறுத்தல் [23 - February - 2008]
* கொசோவோ தனிநாடானதை சுட்டிக்காட்டி எச்சரிக்கை
டிட்டோ குகன், ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்
மனித உரிமைகள் விடயத்தில் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைவாக செயற்படுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான
ஐ.தே.க., அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை பகைத்துக் கொண்டால் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் நாட்டின்
முதுகெலும்பு உடைந்துவிடும் என்று எச்சரித்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டமூலம் மீதான விவாதத்தில்
கலந்துகொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த கண்டி மாவட்ட ஐ.தே.க. எம்.பி லக்ஷ்மன் கிரியெல்ல, சேர்பியாவிலிருந்து கொசோவோ
தனிநாடாக பிரிந்தமைக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
"எந்த அரசாங்கமும் முதலீட்டாளர்களை கவர்ந்திழுப்பதற்காக வரிச் சலுகைகள் வழங்குவது வழமை. மகிந்த சிந்தனையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட
உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருக்கிறது. எதற்கும் மூலதனம் அவசியம். அந்த மூலதனம் எமக்கு வெளிநாடுகளின் உதவிகள் மூலமே கிடைக்கிறது.
எனவே, உதவி செய்யும் நாடுகளை பகைத்துக் கொள்வதால் எமக்கே பாதிப்பு.
இந்த அரசாங்கத்தை பொறுத்தவரையில், உதவி செய்யும் நாடுகள் இன்று தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எமது முக்கிய கைத்தொழிலான ஆடை
கைத்தொழில் உற்பத்திகளில் 50 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்கே செல்கிறது. எஞ்சிய பங்கு அமெரிக்காவுக்கு செல்கிறது.
நாம், மனித உரிமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இலங்கை கைச்சாத்திட்டுள்ள சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயற்படுமாறே சர்வதேச நாடுகள் கேட்கின்றன.
அவற்றின் பிரகாரம் அரசாங்கம் நடக்காவிட்டால், ஐரோப்பிய நாடுகளிலிருந்து எமது ஆடை உற்பத்திகளுக்கு கிடைக்கும் வரி சலுகைகள் இல்லாமல்
போகக்கூடும்.
சர்வதேச நாடுகளை தூற்றி அரசாங்கம் சர்வதேச ஒப்பந்தங்களை மீறி செயற்பட்டால் அது எமது பொருளாதாரத்துக்கே பெரும் பாதிப்பாகிவிடும்.
ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் நாம் சர்வதேச ஒப்பந்தங்களை மதித்து செயற்பட்டோம். அதன்போது அரசாங்கம் எப்போதுமே குற்றவாளி கூண்டில்
ஏறியதில்லை. ஆனால், இன்றோ அரசாங்கமும், புலிகளும் தராசின் இரு தட்டுகளிலும் வைத்துப் பார்க்கப்படுகின்றன. அரசாங்கமும் விடுதலைப்புலிகள்
போன்று செயற்படுவதாக விமர்சிக்கப்படுகிறது.
இந்த அரசாங்கம் ஆட்சி பீடமேறியதன் பின்னர் 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன், மூன்றரை இலட்சம் பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.
இதேநேரம், இன்று யுத்தம் குறித்து ஒன்றுக்கொன்று முரணான தகவல்கள் கூறப்படுகின்றன. எனவே, யுத்தத்தின் உண்மை நிலைமையை
அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்குள்ளது. அத்துடன், இந்த யுத்தத்துக்கு பணம் வழங்குவது இந்த பாராளுமன்றம் என்ற வகையில் எமக்கும் அந்த
உரிமை இருக்கிறது. எனவே, முன்னரங்க காவல் நிலைகளின் நிலைமைகளை நேரில் அவதானித்து அறிக்கையிட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட
வேண்டும்.
பயங்கரவாதத்தை ஒழிக்க யுத்தத்துக்கு ஆதரவு வழங்க நாமும் தயாராக இருக்கிறோம். ஏனெனில், நாட்டில் சமாதானம் இல்லாமல் அபிவிருத்தி
பணிகளை மேற்கொள்ள முடியாது. ஆனால், யுத்தமென்பது, முறையாக செய்யப்பட வேண்டும்.
ஐ.தே.க. காலத்தில் தற்போதைய அரசாங்கம் போல் யுத்தம் செய்யவில்லை. எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க மூலையைப் பாவித்து,செயற்பட்டதன்
மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரிக்க முடிந்ததுடன் பிளவுபட்ட கருணாவுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து 6
ஆயிரம் பேர் விலகிவந்தனர். ஆனால், நாம் அந்த வெற்றியை தற்போதைய அரசாங்கம் போல் ஆரவாரம் செய்து பெரிதுபடுத்திக் காட்டாமல்
அமைதியாக மேற்கொண்டோம்.
இதேநேரம், சேர்பியாவிலிருந்து கொசோவோ பிளவுபடாமலிருக்க ரஷ்யாவும் சீனாவும் பின்னணியிலிருந்து செயற்பட்டபோதும், அவர்களின் முயற்சிகள்
தோல்விகண்டன. எனினும், கொசோவோ பிரிந்து சென்று சுதந்திரப் பிரகடனம் செய்ய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஆதரவளித்தன.
அதன் பிரகாரமே அங்கு நடைபெற்றது.
எனவே, ஐரோப்பிய நாடுகளை தூற்றி அவர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில், எமது ஆடைக் கைத்தொழில்கள் 75 சதவீதம் ஐரோப்பிய
நாடுகளிலும் அமெரிக்காவிலுமே தங்கியிருக்கிறது. அவர்களை பகைத்துக்கொண்டால் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாது, அரசியல் ரீதியாகவும்
எமது நாட்டின் முதுகெலும்பு முறிந்துபோவதற்கு ஏதுவாக அமைந்துவிடும். எனவே, அரசாங்கம் அதனது வெளிநாட்டு கொள்கையை நாட்டின்
நலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து செயலாற்ற வேண்டும்" என்றார்.


கொசோவோவை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக நோர்வே வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு [23 - February - 2008

கொசோவோவைத் தனிநாடாக அங்கீகரிக்கவுள்ளதாக நோர்வே வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொசோவோவைத் தனிநாடாக நோர்வே அங்கீகரிப்பதற்கு பல காரணிகள் உள்ளதாக நோர்வே வெளியுறவு அமைச்சர் யூனாஸ் கார் ஸ்தோர்
தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தின் உறுதித்தன்மையைக் கருத்தில் கொண்டு, கொசோவோ விவகாரத்தில் சர்வதேச சமூகம் ஒருமித்த நிலைப்பாட்டினை வெளிப்படுத்த
வேண்டிய தேவையுள்ளது. ஸ்கன்டிநேவிய நாடுகள் உட்பட்ட பெரும்பான்மை ஐரோப்பிய நாடுகள் கொசோவோவை அங்கீகரிக்கவுள்ளன.
இத்தகைய புறநிலையில் நோர்வேயும் கொசோவோவை அங்கீகரிக்கவுள்ள சமிக்ஞையை வெளியிடுவது சரியான முடிவெனக் கருதுவதாக ஸ்தோர்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
அதாவது, 1999 காலப்பகுதியிலிருந்து சர்வதேச கண்காணிப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்ட கொசோவோ விவகாரம் ஏனைய இனச்சிக்கல்
விவகாரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதனை வலியுறுத்துகின்றோம்.
கடந்த ஆண்டு பின்லாந்தின் முன்னாள் அரசுத் தலைவர் மாத்தி ஆத்திசாரியினால் (ஐ.நா. தலைமையில்) முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தின்
அடிப்படையில் கொசோவோ தேசம் கட்டியெழுப்பப்படவுள்ளதென்ற கொசோவோ தலைவர்களின் நிலைப்பாட்டிற்கு நோர்வே அதிக முக்கியத்துவம்
கொடுக்கின்றது.
மனித உரிமைகள் மற்றும் சட்ட ஒழுங்கிற்கு மதிப்பளிக்கும் அதேவேளை, பல்லின கலாசார, ஜனநாயக வழியை நோக்கி கொசோவோ தேசத்தின்
அபிவிருத்தி அமைய வேண்டும். அத்தோடு பல்வேறு இனப்பின்னணியைக் கொண்ட மக்கள் குழுமங்களினது கலாசார மற்றும் மத உரிமைகளுக்கு
உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்டகடப்பாடுகளை கொசோவோ எவ்வாறு நிறைவேற்றுகின்றது என்பதில் கொசோவோவுடனான எமது எதிர்கால உறவு தங்கியுள்ளது
என்பதனையும் கோடிட்டுக் காட்டுகின்றோம்.
அனைத்துத் தரப்பினரும் (கொசோவோ - சேர்பியா) வன்முறை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டுமென்பதனை நோர்வே வலியுறுத்துகின்றது.
கொசோவோவிற்குள்ளும் அதற்கு வெளியிலும் அமைதியின்மை மற்றும் பதற்ற சூழல்கள் நிலவுமாயின் அது எதிர்மறையான விளைவுகளை
ஏற்படுத்துவதோடு, பிராந்தியத்தின் உறுதித் தன்மையையும் பாதிக்கச் செய்யும்.
கொசோவோவைத் தனிநாடாக அங்கீகரிப்பதன் மூலம், கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தை ஐரோப்பிய நிறுவனங்களுடன் படிப்படியாக இணைத்துக்
கொள்வதற்குரிய கதவுகளும் திறக்கப்படுகின்றன.
இத்தருணத்தில் சேர்பியா மற்றும் சேர்பியத் தலைவர்களுடனான நோர்வேயின் நெருங்கிய உறவினையும் சுட்டிக்காட்டுகின்றோம். பல ஆண்டுகளாக
சேர்பியாவுடன் நோர்வே பேணி வரும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் கூட்டுச் செயற்பாடுகளுக்கு நோர்வே தொடர்ந்தும் முக்கியத்துவம் கொடுக்கும்
என்பதனை உறுதிப்படுத்துவதாகவும் நோர்வே வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: