Thursday, 21 February 2008

தேசம் நெற் வெளியிட்ட 'பயங்கரமான' கேள்விகளின் பேட்டி!

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெப்ரவரி முற்பகுதியில் இந்திய இணைய இதழுக்கு*(?) வழங்கிய செவ்வியின் தமிழாக்கம்:தேசம் நெற்
கேள்வி: நீங்கள் பிரபாகரனை உயிருடனா அல்லது உயிரற்றவராகவா பிடிக்க விரும்புகிறீரகள்?
ம.ரா: உயிருடன். அவர் இழைத்த குற்றங்களுக்காக அவர் தண்டனை பெறவேண்டும். மேலும், இந்தியாவை மட்டுமல்ல இந்தப் பிரதேசம் முழுவதையும் மாற்றியமைத்திருக்கக் கூடிய ஒரு தலைவரை கொலை செய்த காரணத்திற்காக இந்தியாவிற்க்கு அனுப்பவும் விரும்புகிறேன்.
கேள்வி: எல்.ரி.ரீ.ஈ இற்கும் அரசிற்குமிடையிலான ஐந்து வருடப் பழமைவாய்ந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இறுதியில் முடிவுக்குக் கொண்டுவர ஏன் தீர்மானித்தீர்கள்?
ம.ரா: 2002 ம் ஆண்டு யுத்த நிறுத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்த முதலாவது ஆளாகவும் அதேவேளை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தேன். ஜனாதிபதியுடன் நான் புலிகளுடன் சமரசத்திற்கு வர முயற்சிப்பதாகவும், பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சமாதானத்திற்காகப் பேசுவதாகவும் கூறியிருந்தேன். ஆனால் அது சமாதான ஒப்பந்தத்தை நான் ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடாது.
ஆனால் புலிகள் தமது கொலை வெறியாட்டத்தைத் தொடர்ந்தனர். இராணுவ அதிகாரிகள், பாதுகாப்புச் செயலாளரான எனது சகோதரர் ஆகியோரைத் தாக்கியது மட்டுமல்லாது, பொதுமக்களையும் குழந்தைகளையும் கூடக் குறிவைத்தனர். மேலும் பாதுகாப்பு ஒப்பந்தமே நகைப்புக்கு இடமானதாகும் அளவிற்கு அதைப் பல தடவைகள் மீறியிருந்தனர். இதனால் நான் அதை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்தேன்.
கேள்வி: புலிகளுடனான இறுதி யுத்தத்திற்கு உங்களுக்கு அசாத்திய தன் நம்பிக்கையின் காரணம் என்ன?
ம.ரா: புலிகள் பயங்கர வாதத்தையும் ஆயுதங்களையும் கைவிட்டு அரசியல் தீர்வொன்றிற்கு வரவேண்டும் அல்லது நாங்கள் அவர்களது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசாங்கம் பயங்கர வாதிகளுக்கு மண்டியிட முடியாது. நான் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து கிழக்கு மேற்கு மாகாணங்களை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றியுள்ளோம். இப்போது அவர்கள் ஒன்றரை மாவட்டங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளார்கள். மேலிருந்து கீழ் வரையும் அரசிற்குப் பொறுப்புள்ளது. பாதுகாப்ப்புப் படைகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நேர்த்தியான தொடர்பானது எமது நோக்கத்திற்கு உதவியாக உள்ளது.
கேள்வி: புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தால் நீங்கள் பேசத் தயாரா?ம.ரா: ஆம் அவர்கள் ஆயுத்ங்களைக் கைவிட்டால் மட்டும் பேசத் தயார். அவர்களுக்கு ‘கேக்’கையும் கொடுத்து சாப்பிடவும் சொல்ல முடியாது. சமாதானம் அவர்களுக்குக் கால அவகாசத்தைக் கொடுக்கும். அவர்கள் தம்மை பலப்படுத்திக் கொண்டு எம்மைத் திருப்பித் தாக்க அனுமதியோம். எமக்கு இறுதித் தீர்வு வேண்டும்.
கேள்வி: புலிகள் உங்கள் வழிக்கு வராவிட்டால், அவர்களை இல்லாதொழிக்க எவ்வளவு காலம் பிடிக்கும்?
ம.ரா: அவர்களை மிகுதிப் பகுதிகளிலிருந்தும் இல்லாதொழித்திருப்போம். ஆனால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படாதிருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒன்றரை வருடங்களுக்குள் ஒழித்துவிடலாம் என்று சொல்லலாம்.
கேள்வி: புலிகளின் எதிர்த் தந்திரோபாயமென்பது பொதுமக்களைத் தாக்குவதாக இருக்கிறதே?
ம.ரா: சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் மேற்கொள்ளப்படும் விரக்தியடிப்படையிலான நடவடிகையே இதுவாகும். இதனால் அவர்கள் எதையும் அடைய முடியாது.
கேள்வி: பணவீக்கம் உச்சனிலையில் உள்ளது. போரின் விலையை மக்கள் தாங்கிக்கொள்வார்களென எண்ணுகிறீர்களா?
ம.ரா: மக்கள் புரிந்து கொள்வாரகள். எதிரணிப் பத்திரிகையொன்று அண்மையில் நடத்திய வாக்கெடுப்பு எனது அபிவிருத்தி வேலைகளை மக்கள் ஆதரிப்பதாகக் காட்டுகிறது.
கேள்வி: பாதுகாப்புச் செலவினத்தில் துண்டுவிழும் தொகை இருக்காதா?
ம.ரா: பாதுகாப்பிற்காக நாம் செலவிடும் தொகை அதிகமானதல்ல. மொத்த உள்ளூர் உறபத்தி வளர்ச்சியின் 3.5 வீதம் மட்டுமே. எந்த நாடும் அதன் பாதுகாப்புடன் சமரசம் செய்துகொள்ளமாட்டாது.
கேள்வி: 2005 ம் ஆண்டு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது இந்தியா நிறையப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்பதாகக் கூறியிருந்தீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு திருப்திகரமானதாக இருந்ததா?ம.ரா: இந்திதியாவின் அணுகுமுறை மிகவும் திருப்திகரமானதாகவும் ஊக்கம் தருவதாகவும் அமைந்திருக்கிறது. இந்திய - இலங்கை உறவுகள் அனேகமாக மிகச்சிறந்த நிலையிலுள்ளது.
கேள்வி: ஆனல் இந்தியா உங்களது அரசாங்கத்திற்கு புலிகளுக்கு எதிராகப் போராட அழிவுபயக்கும் ஆயுத்ங்களை விற்கத்தயாராக இல்லையே?
ம.ரா: ஆயுதங்களை எங்கிருந்தும் வாங்கலாம். ஆனால் ஒரு நல்ல நண்பனை வாங்க முடியாது. அதுதான் எங்களுக்கும் தேவை. இந்தியா பிரதேசத்தில் சக்திவாய்ந்த நாடாகும். அது மிகவும் பலம் பொருந்தியது. அயல் நாடுகளின் அபிவிருத்திக்கு நிறையச் செய்ய முடியும். இலங்கைக்கு மட்டுமல்ல மற்ற நாடுகளுக்கும் கூட. இந்தியா எங்களுடன் இருக்கிறது. அவர்கள் தமது ஆதரவைத் வழங்கியுள்ளார்கள்.
கேள்வி: போர் நடவடிக்கைகளின் போதான உங்கள் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை ஐரோப்பிய ஒன்றியமும் ஏனைய நாடுகளும் குற்றம் சுமத்தி உள்ளார்கள்:
ம.ரா: கிழக்கில் ஒரு சிறிதளவிலான மீறல்கள் நடந்திருப்பதற்கான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவ்வாறான எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் நாம் கருத்திற்கொண்டு விசாரணை செய்தோம். ஆனால் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய எந்த முறையீடும் யாராலும் பதிவு செய்யப்படவில்லை. எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்காக பொதுவான நபர்களைக் கொண்ட ஆணைக்குழு ஒன்றை நியமித்தோம். ஆனால் அவ்வாறான குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கு முறையீடு, சாட்சி, தடயங்கள் என்பன அவசியமானதாகும். நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
கேள்வி: அரசியல் தீர்வுக்கு வரும் போது, தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, அனைத்துக் கட்சிகளின் பிரதிதினிதிகள் குழுவானது 1987 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட, மாகாணங்களுக்கு அதிகாரத்தை வழங்குகின்ற அரசியலமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தை பிரயோகிகுமாறு ஒரு பொதியை விதந்துரைத்து உள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு விடயத்தை ஏன் இப்போது தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
ம.ரா: ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? இது முன் எப்போதுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. இலங்கை அரசும் - புலிகளும்இதை ஏற்றுக்கொண்டாலும், இரு தரப்பும் உடனடியாகவே தம்மை முறித்துக் கொண்டனர். இது சிறந்த ஆரம்பம் என்றே நான் நம்புகின்றேன். நடைமுறைச் சாத்தியமுள்ள ஒன்றை நாம் முதலில் ஆரம்பிக்க வேண்டும். இதைச் செய்வதற்கு எனக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை. எனவே இது ஒரு ஆரம்பம். சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு புதிய திட்டங்களைத் தரும் போது அவற்றைக் கருத்தில் எடுத்துக் கொள்ளலாம். ஆனல் நான் நடைமுறைச் சாத்தியமற்ற சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டுமான தீர்வுத் திட்டங்களில் எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அவை பேப்பர்களில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் பாராளுமன்றில் எரிக்கப்பட்டுவிடும். கலவரம் உருவாகும்.
கேள்வி: எவ்வளவு விரைவில் இந்தத் தீர்வுப்பொதி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கிறீர்கள்?
ம.ரா: நான் ஏற்கனவே பாராளுமன்ற ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளேன். அவர்களுடைய அறிக்கைக்காகக் காத்திருக்கிறேன். அது கிடைத்ததும் நடைமுறைப்படுத்தப்படும்.
கேள்வி: நீங்கள் ஏற்கனவே சொல்லியிருந்தீர்கள், தமிழர்களுக்கு 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக வழங்குவோம் என்று:
ம.ரா: முடிவெடுக்க எனது குழுவின் பரிந்துரைகளுக்காகக் காத்திருக்கிறேன். இடைக்காலத்தில், அரசு, புலிகள், ஏனைய தமிழ்க் கட்சிகள் போன்ற எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தும் ஒன்றை நடைமுறைப்படுத்துவோம். 1987 இல், இலங்கை - இந்திய ஒப்பந்ததின் அடிபடையில் ராஜீவ் காந்தியின் உதவியுடன் பெறப்பட்ட ஒன்று. தவிர, நிர்வாகத்துறையில் தமிழ் மொழியின் பிரயோகத்தையும் கற்றலையும் ஊக்கப்படுத்தலூடாக உத்தியோக மொழிக்கொள்கையினை நடைமுறைப்படுத்தலை உறுதி செய்வதற்கு நான் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து உள்ளேன். பொலிஸ் துறையில் தமிழர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். பயங்கர வாதத்திற்கெதிராக மட்டும் போர்செய்து கொண்டிருக்கிறோம் என நம்ப வேண்டாம்.
கேள்வி: இதை நடைமுறைப்படுத்த சிங்களக் கட்சிகளிடமிருந்து ஒப்புதல் கிடைக்குமென எதிர் பார்க்கிறீர்களா?
ம.ரா: 13 வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிறியதே ஐ.தே.க அரசு. அவர்கள் எப்படி நிராகரிக்க முடியும். ஜே.வி.பி ஒன்றுதான் பிரச்சனை. அனால் ஜே.வி.பி மேலதிக அதிகாரங்களை மாகாண சபைகளுக்குக் கோரியவர்கள் மட்டுமல்ல அதில் பங்கேற்றவர்களும் கூட என்பதை மறந்துவிடக்கூடாது.
கேள்வி: விடுதலை செய்யப்பட்ட பிரதேசமான கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடாத்தி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது போல் அவர்கள் வடக்குடன் இணைய விரும்புகிறார்களா என்பதை ஏன் தீர்மானிக்கக் கூடாது?
ம.ரா: ஏன் நான் அதைச் செய்ய வேண்டும்? இப்போது மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களுக்கு செல்வீர்களானால், அவர்கள் அதை எதிர்ப்பதையே காண்பீர்கள். நான் நாடு உடைந்து போவதை விரும்பவில்லை.
கேள்வி: இந்தியா போன்ற சுயாட்சிமுறை ஏன் கூடாது?
ம.ரா: அதைப்பற்றி இப்போ பேச வேண்டாம். சுயாட்சி முறை இப்போ இல்லை. வரலாற்றுரீதியாக இந்த சொல் சந்தேகத்திற்குரியதும் பிரிவினையோடு தொடர்புடையதுமாகும். ஒற்றை ஆட்சிக்குக் கீழ் அதிக பட்ச அதிகாரப் பரவலாக்கம் என்பதே எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம். அதையே நான் நடைமுறைப்படுத்தப் போகிறேன்.
கேள்வி: பாராளுமன்றத்தில் உங்கள் அரசிற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை. திட்டத்தை நடைமுறைப்படுத்த தேர்தல் ஒன்றிற்கு அழைப்பு விடுப்பீர்களா?
ம.ரா: முன் வைக்கப்பட்டவையை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எனக்குத் தேவையில்லை. அதற்கான தேவை ஏற்படும் போது அதைச் கட்டாயம் செய்வேன்.
நன்றி:தேசம் நெற்

1 comment:

appubalan said...

Coolaborators trying to achive a local council through begging.But they wanted to eliminate LTTE's leadership.The great joke is LTTE's leadership also wanted the regognition of the Mahinda's best friends