இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லை அகதியாக வந்த மாணவி
3/19/2008 8:42:20 PM வீரகேசரி இணையம்
இராணுவக் கட்டுப்பாட்டில் வசித்து வந்தாலும் பாதுகாப்பு இல்லாததால் பாடசாலைக்குச் செல்ல முடியவில்லை. நடமாடித் திரியும் இளம் பெண்கள் கடத்தப்படுகின்றனர். பின்னர் அவர்கள் உயிருடன் திரும்புவதும் இல்லை. இவ்வாறு தலைமன்னார் மற்றும் வவுனியா
பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் தனுஷ்கோடி வந்தடைந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 23 அகதிகளில் ஒருவரான விஜயதர்சினி (வயது 17)
தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இராணுவத்தினரால் கடத்தப்படும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால்
பாடசாலைக்குக் கூட செல்ல முடிவதில்லை. கடத்திச் செல்லப்படுவோர் உயிருடன் திரும்புவதும் இல்லை. வீட்டில் இருந்தாலும் விசாரணை என்ற
பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்படுகிறோம். தற்போது பரீட்சை முடிவடைந்த நிலையில் உயிருக்கு பயந்து பெற்றோருடன் அகதியாக வந்துள்ளோம் என்றார். மேலும் இவரது தாயாரான ஞானசுந்தரி (வயது 38) கூறுகையில் :
இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. ஒரு கிலோ அரிசி 80 ரூபாவிற்கும், காய்கறிகள் 60 ரூபாவிற்கும் ஒரு தேங்காய் 50
ரூபாவிற்கும் விற்கப்படுகின்றன. குழந்தைகளுக்குத் தேவையான பால்மா பொருட்கள் கிடைப்பதேயில்லை என்றார். மீனவர் ராஜசேகர் (வயது 28)
கூறியதாவது:
இலங்கைநெடுந்தீவு பகுதியில் கண்ணிவெடிகளை மிதக்கவிட்டிருப்பதாக கடற்படையினர் எச்சரித்துவருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் மீன்பிடிக்க செல்லமுடியாது. ஒரு லீற்றர் 93 ரூபா என்ற விலையில் ஒரு படகுக்கு 15 லீற்றர் மண்ணெண்ணெய் மட்டுமே கொடுக்க அரசு அனுமதிக்கிறது. அது
கடலுக்கு சென்று திரும்புவதற்கே போதுமானதாக இருப்பதில்லை. இந்நிலையில், இரவு நேரத்தில் மீன் பிடிக்கக் கூடாது என்று எமக்கு
கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நி்லவரம்; இராணுவத்தளபதி அமெரிக்கத்தூதுவருக்கு விளக்கமளிப்பு
[19 - March - 2008]
நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக,இலங்கைக்கான அமெரிக்க தூதர் ரொபேட் ஓ பிளாய்க்குக்கு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்
பொன்சேகா விளக்கமளித்துள்ளார். இராணுவத் தலைமையகத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் அமெரிக்கத் தூதுவரை அழைத்த இராணுவத் தளபதி,தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாகவும் இருதரப்பு இராணுவ விவகாரங்கள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசித்ததாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இராணுவ தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில்;
வன்னியில் விடுதலைப் புலிகளுக்கெதிராக படையினர் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கை மற்றும் அப் பகுதியிலிருந்து இடம் பெயரும்
மக்களின் நிலை குறித்தும் அமெரிக்க தூதுவர் கேள்வியெழுப்பினார்.
இது தொடர்பாகப் பதிலளித்த இராணுவத் தளபதி, கிழக்கில் இடம் பெறும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அங்கு சிவில் நிர்வாக நடவடிக்கையை
வழமை நிலைக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
இந்தச் சந்திப்பின் போது அமெரிக்க இராணுவத்தினரால் இலங்கை இராணுவத்தினருக்கும் ஏனைய படையணிகளுக்கும் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் குறித்து இலங்கைப் படையினருக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும்
ஜெனரல் சரத் பொன்சேகா விளக்கமளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2 இலட்சத்து 20 ஆயிரம் டொலர் பெறுமதியான பயங்கரவாதத்திற்கு எதிரான உபகரணங்கள்
* அமெரிக்கா இலங்கைக்கு அன்பளிப்பு
பயங்கரவாதச் செயல்களுக்கெதிரான நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை பொலிஸாருக்கு சுமார் 2,20,000 டொலர்
பெறுமதியான உபகரணங்களை வழங்கியுள்ளது.
ராஜதந்திர பாதுகாப்புக்கான அமெரிக்க ராஜாங்க திணைக்களமே பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக இந்த
உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே இலங்கைக்கான
அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஒ பிளாய்க் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவிடம் இவற்றைக் கையளித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைப் படையினர் முகம் கொடுப்பதற்காகவும் இவ்வாறான நடவடிக்கைகளில் அவர்களது
ஆற்றலை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த உபகரணங்கள் வழங்கப்படுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்புச் சம்பவங்களின் போது மேற்கொள்ளப்படும் எதிர்நடவடிக்கைக்கான மேலங்கி -3, குண்டு வெடிப்புக்கு பின்னரான விசாரணைக்கான
மேலங்கி - 2, பணயக்கைதிகளை மீட்கும் பேச்சுகளில் ஈடுபடுவோருக்கான மேலங்கி-2 என்பனவே பொலிஸாருக்கும் விஷேட அதிரடிப்படையினருக்கும்
வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பொலிஸ் மா அதிபருடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான போதி லியனகே, மகிந்த பாலசூரிய, நிமால் இலங்கக்கோன்
மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபரும் விஷேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியுமான நிமல் லிவுக்கே உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தள்ளாடி முகாம் மீது நீண்ட நேரம் தொடர்ந்து ஆட்லறி ஷெல் தாக்குதல்
[19 - March - 2008] * 15 படையினர் காயம் மன்னார் தள்ளாடி படைமுகாம் மீது நேற்று முன் தினம் திங்கட்கிழமை இரவு விடுதலைப்புலிகள் நடாத்திய ஆட்லறி ஷெல் தாக்குதலில் 15 க்கும்
மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஷெல் தாக்குதலையடுத்து தள்ளாடி இராணுவ முகாம் மற்றும் சவுத்பார் படை முகாம்களிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு
பகுதிகளை நோக்கி அகோர ஷெல் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
நேற்று முன் தினமிரவு 10.40மணியளவில் ஆரம்பமான இந்த ஷெல் தாக்குதல், நேற்று காலை 10 மணிவரை மிகக் கடுமையாக நீடித்துள்ளது.இதனால்
மன்னார் நகர் தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்தது.
முதலில் நேற்று முன்தினமிரவு 10.15 மணியளவில் புலிகள் தள்ளாடி இராணுவ முகாம் மீது கடும் ஷெல் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
இதையடுத்தே, படையினர் முதலில் தள்ளாடி படைத்தளத்திலிருந்தும் பின்னர் சவுத்பார் முகாமிலிருந்தும் இரவிரவாக அகோர ஷெல் தாக்குதலை
நடத்தினர்.
மிக நீண்ட நேரம் படை முகாம்களிலிருந்து பலத்த துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மன்னார் நகர மக்கள் பெரும் அச்சமும் பீதியும்
அடைந்திருந்தனர்.
புலிகளின் ஷெல் தாக்குதலில் படுகாயமடைந்த 15 க்கும் மேற்பட்ட படையினர் அதிகாலை 1.30 மணியளவில் மன்னார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு
வரப்பட்டு அவசர சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்ட பின்னர், காலை 10 மணியளவில் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் மற்றும் பதில் தாக்குதல் தொடர்பாக படைத்தரப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment