Monday, 31 March 2008

ஈழச்செய்திகள்:310308

`வடக்கில் படையினர் எதிர்பார்த்ததை விட புலிகளின் எதிர்ப்பு மிகக் கடுமையாகவுள்ளது' [31 - March - 2008]
வடபகுதி மோதல்களில் அரசும் படையினரும் எதிர்பார்த்ததைவிட விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதல்கள் மிகக் கடுமையாக இருப்பதாக
இராஜதந்திரிகளும் ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். வடக்கின் நான்கு முனைகளில் கடந்த ஒரு வருடகாலத்திற்கும் மேலாக அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே பாரியளவிலான
மோதல்கள் இடம்பெற்றுவருகின்றது.
வவுனியா, மன்னார், மணலாறு, யாழ்.குடாநாடு ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக படையினர் பாரிய படை நகர்வுகளை
மேற்கொண்ட போதிலும் இதுவரை இப்பகுதிகளில் எந்தவொரு சிறு வெற்றியைக்கூட படையினரால் மேற்கொள்ள முடியவில்லையென்றே
சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதேநேரம், மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களான மடு, அடம்பன் ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்கு
கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக படையினர் தாக்குதல்களை மேற்கொண்ட போதிலும் பல மைல் தூரங்களுக்கு அப்பாலேயே உள்ளனர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
வன்னிக்கான களமுனையில் இலகுவாக வெற்றி பெறலாமென்று அரசும் படையினரும் முன்னர் கருதியதுடன் அது தொடர்பான தீவிர யுத்த
முன்னெடுப்புகளிலும் ஈடுபட்டது.
கடந்த சில மாதங்களாக யுத்தம் மிக மோசமாக தீவிரமடைந்திருந்தது. ஆனால், புலிகளும் மிகக் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டதால்
படைத்தரப்பினர் மத்தியிலும் பாரிய இழப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையேற்பட்டது என்று ராஜதந்திரிகளும் ஆய்வாளர்களும்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
வடக்கில் தினமும் பெருமளவு விடுதலைப் புலிகள் கொல்லப்படுவதாக அரசும் படையினரும் குறிப்பிட்டாலும் அதனை உறுதிப்படுத்தக்கூடிய
எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லையென்றும் இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கான இந்திய தூதரக பாதுகாப்பு அதிகாரி யாழ்.குடாவில் முன்னரங்க நிலைகளைப் பார்வை
[31 - March - 2008]
இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் படைத்துறைப் பிரிவு அதிகாரியான கப்டன் பிரதீப் சிங், யாழ்.குடாநாட்டிற்கு மூன்று நாள் பயணம் செய்து
அங்குள்ள படையினரின் முன்னரங்க நிலைகளைப் பார்வையிட்டதாகத் தெரியவருகிறது. இது தொடர்பாக `லக்பிம' பத்திரிகையின் பாதுகாப்புப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு;
வன்னியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மோதல்கள் தணிந்துள்ளன. கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக
தாழ்வான நிலப்பகுதிகள் வெள்ளத்தால் நிறைந்துள்ளதால் எல்லோரும் உயர் நிலப்பகுதியை நோக்கி நகரவேண்டிய நிலை தோன்றியுள்ளது.
அரச படையினரும், விடுதலைப் புலிகளும் பாதகமான காலநிலைக்கு ஒத்துழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பதுங்குகுழிகள் வெள்ளத்தால்
நிறைந்துள்ளன. காப்பரண்களும் மழையின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன. பொறிவெடிகள் மழை நீரினால் கழுவப்பட்டு வெள்ளத்தில் அடித்துச்
செல்லப்பட்டுள்ளன. கனரக கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகள் சதுப்பு நிலங்களில் செயற்திறன் அற்றதாக மாறியுள்ளன. படையினர் தற்போது உழவு இயந்திரங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும் இதில் மிகவும் மோசமானது என்னவெனில் இரு தரப்பும் புதைத்து வைத்த மிதிவெடிகளும், பொறிவெடிகளும் மழை வெள்ளத்தினால்
அடித்துச் செல்லப்பட்டும் இடம் மாறியுள்ளதாகும்.
பொதுவாக மிதிவெடிகள் மற்றும் பொறிவெடிகள் புதைக்கப்படும் போது அவை தொடர்பான வரைபடங்கள் பேணப்படுவதுண்டு. இது பின்னர் அவற்றை அகற்றுவதற்கு பயன்படும். தற்போது இந்த வரைபடம் குழம்பிப்போயுள்ளது.
இதனிடையே பருவமழை காலத்தில் விடுதலைப் புலிகள் பெருமெடுப்பிலான வலிந்த தாக்குதல்களை நடத்துவதுண்டு. அடைமழை, படையினரின்
கனரக வாகனங்களின் பயன்பாடுகளையும், பீரங்கி மற்றும் வான் தாக்குதலையும் மட்டுப்படுத்தலாம்.
எனினும் கடந்த வாரம் ஓரளவு மழை தணிந்துள்ள நிலையில் படையினர் தமது நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.
பறையனாலங்குளம் பகுதியில் நடைபெற்ற படைநடவடிக்கையில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக படை தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் படையினரின் தகவல்களை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டப்பட்ட விசேட பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் யாழ்.குடாநாட்டு மற்றும் வன்னிப்
பகுதி இராணுவத் தளபதிகள் உட்பட முப்படைத் தளபதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தற்போதைய படை நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளனர்.
இந்த விளக்கத்தின் போது வரைபடங்களும் காண்பிக்கப்பட்டதுடன், தற்போதைய வெற்றிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளும் ஆராயப்பட்டன.
படையினருக்கு இடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மற்றும் வான் தாக்குதல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. மேலும் பல
விடயங்கள் ஆராயப்பட்ட போதும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு அது தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ச, முப்படைத் தளபதிகள், யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்
சந்திரசிறீ, 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர்
சவீந்திர சில்வா, 59 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நந்தன உடுவத்த மற்றும் கடற்படையின் பிராந்திய கட்டளை தளபதிகள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த புதன்கிழமை மன்னாரில் உள்ள விடுதலைப்புலிகளின் இரு முன்னணி அரண்கள் மீது இரு எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் மூலம்
படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாலம்பிட்டியை கைப்பற்றி விடுதலைப் புலிகளின் விநியோக வழிகளை தடைசெய்து, மடுவை சுற்றிவழைத்து கைப்பற்றுவதே படையினரின்
உத்தியாகும். எனினும் கடந்த இரு வாரங்கள் (மார்ச் 7 ஆம் திகதியிலிருந்து 24 ஆம் திகதி வரையிலும்) நடைபெற்ற சமரில் 55 படையினர்
கொல்லப்பட்டதுடன் 223 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதனிடையே இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியான கப்டன் பிரதீப் சிங் யாழ்.குடாநாட்டிற்கு மூன்று நாள் பயணம்
செய்துள்ளார். இதன் போது அவர் பாதுகாப்புப் படையினரின் முன்னரங்க நிலைகளுக்கும் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`நாயாறு கடலில் கடற்படையினரின் டோராவை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் புலிகள் தாக்கியிருக்கலாம்' [31 - March - 2008]
விடுதலைப் புலிகளின் கடற் கரும்புலிகளால் கடந்த வாரம் மூழ்கடிக்கப்பட்ட டோராப் படகு நீர்மூழ்கிக் கப்பல் அல்லது அலையுடன் பயணிக்கும் கலம்
மூலம் தகர்க்கப்பட்டிருக்கலாமென்று கடற்படையின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக `சண்டே ரைம்ஸ்' பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு;
நாயாறு கடற்பகுதியில் கடந்த வாரம் மூழ்கடிக்கப்பட்ட டோரா பீரங்கிப் படகு தொடர்பான பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடந்த 22 ஆம் திகதி
நடைபெற்ற இத் தாக்குதலில் டோறா பீரங்கிப் படகு திடீரென வெடித்துச் சிதறி குறுகிய நேரத்தில் மூழ்கிப்போயுள்ளது. இத்தாக்குதலில் காணாமல்போன
10 கடற்படையினரில் மூன்று பேரின் சடலங்கள் இந்த வாரத்தின் முற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் 7 கடற்படையினர் தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவர்களில் சிலர் விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்பட்டிருக்கலாம்
என்று கடற்படைத் தலைமையகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
பெண் ஒருவரின் உடற்பகுதிகளைக் கடந்த வியாழக்கிழமை கடற்படையினர் பருத்தித்துறையை அண்டிய கடற்பகுதியில் கண்டெடுத்துள்ளனர். இச்
சடலம் டோரா மீது தாக்குதல் நடத்திய கரும்புலிகளில் ஒருவரினதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை கடற்படையினர் வெளியிட்டுள்ளனர்.
பி-437 இலக்கமுடைய டோராப் படகு கடல் கண்ணிவெடியில் சிக்கியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டபோதும், அது மனித `டோப்பிடோ' ரக வெடிகுண்டுத்
தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் தற்போது வலுத்துள்ளன. எனினும், மூன்று கரும்புலிகளால் இயக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் அல்லது
அலையுடன் பயணிக்கும் கலம் இத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் கடற்படையின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், இச் சம்பவத்தின்போது 45 நிமிட கடற்சமர் நடைபெற்றதாக விடுதலப் புலிகள் தெரிவித்துள்ளதாக தமிழ்நெற் இணையத்தளம்
தெரிவித்துள்ளது. ஆனால், இதன் மூலம் தமது புதிய உத்திகளை மறைப்பதற்கு விடுதலைப் புலிகள் முயற்சித்துள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூழ்கடிக்கப்பட்ட டோராவிலும் மற்றைய டோராப் படகிலுமிருந்த கடற்படையினர் அங்கு கடற்சமர் நடைபெறவில்லையெனவும் அது தொடர்பான இலத்திரனியல் தகவல்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. இத் தாக்குதல் நடைபெற்ற 24 மணி நேரத்தில் கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் திரியாய்க்கு ..... வடக்குப் புறமுள்ள கடற்பகுதியில் கடற்சமர்
நடைபெற்றுள்ளது.
வட,கிழக்கு கடற்பகுதிகளில் தற்போது மோதல்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்திய
கடற்படைத் தளங்கள் விழிப்பு நிலைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே மீண்டும் கிழக்கு மாகாணத்தில் படையினரின் பலத்தை அதிகரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. மாகாணசபைத் தேர்தலை
முன்னிட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும் அங்கு அண்மையில் நடைபெற்ற தாக்குதலும் பெரும் நெருக்கடிகளை
தோற்றுவித்துள்ளன.
கொக்கட்டிச்சோலைக்கு அருகில் கடந்த வாரம் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட
மூத்த பொலிஸ் அதிகாரி மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அப்பகுதியில் நடைபெற்று வரும் தமது திட்டங்கள் தொடர்பாக பார்வையிடச் சென்ற ஜப்பானிய பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸாரே
தாக்குதலில் சிக்கியுள்ளனர்.
மேலும் இஸ்ரேலுக்குச் சென்றுள்ள பிரதமர் ரணட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் அங்குள்ள
படைத்துறை ஆயுத உற்பத்தி நிறுவனத்திற்கும் சென்றுள்ளனர்.
இஸ்ரேல் `ஏரோஸ்பேஸ் இன்டஸ்றீஸ்' எனப்படும் இந்த நிறுவனம் டோரா அதிவேக, தாக்குதல் படகுகள் மற்றும் ஆளில்லாத உளவு விமானத்தை
தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கதென்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் உதயன்
Posted on : Mon Mar 31 9:00:00 2008
பாண் விலை 100 ரூபா ஆவதை யாரும் தடுக்கவே முடியாது!
நுகர்வோர் விவகார அமைச்சர் சொல்கிறார் ""கோதுமை மாவின் விலை எகிறிச் செல்கின்றது. அதை அரசினால் தடுக்க முடியாது. ""பாணும் விரைவில் ஓர் இறாத்தல் நூறு ரூபாவாக விலை உயரும். நான் முன்னர் ஆரூடம் கூறியமை போன்று அப்படி விலை அதிகரிப்பதை
யாராலும் தடுக்கவே முடியாது.''இப்படிக் கூறியிருப்பவர் யார் தெரியுமா?இலங்கை அரசின் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தனவே இவ்வாறு கூறியிருக்கின்றார்.பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மக்கள் கோதுமை மாவின் பாவனையைக் குறைத்து, அரிசிப் பாவனையைக் கூட்டிக்கொள்ளவேண்டும் என்றும் ஆலோசனை சொல்லியிருக்கின்றார்.மரக்கறி றொட்டி இரண்டை ஐம்பது ரூபாவுக்கு வாங்கி ஒருவர் சாப்பிடுவதிலும் பார்க்க, அறுபது முதல் எழுபது ரூபா செலவில் அரிசியை வாங்கி சோறு சமைத்து ஆறு அல்லது ஏழுபேர் சாப்பிடலாம் என்றும் தேங்காய்ச் சம்பலுடன் சேர்த்து அதைச் சாப்பிட்டால் ஒருவருக்கு ஆகக் கூடியது பதினைந்து ரூபா வரையே செலவாகும் என்றும் கணக்குக் காட்டியிருக்கின்றார் நுகர்வோர் விவகார அமைச்சர்.

வன்னிப் கூட்டுப்படைத்தளத்தில் சரத் பொன்சேகா
[சனிக்கிழமை, 29 மார்ச் 2008, 09:02 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]-புதினம் இணைய தளம்
வன்னி கூட்டுப்படைத்தளத்திற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று சனிக்கிழமை முற்பகல் பயணம் செய்துள்ளார். அங்கு வன்னிக் கள நிலவரங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றார்.
கொழும்பில் இருந்து வான்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தியில் வன்னி கூட்டுப்படைத்தளத்தைச் சென்றடைந்த லெப்.ஜெனரல் சரத்
பொன்சேகாவை வன்னி சிறிலங்கா இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய வரவேற்றார்.
அதனையடுத்து வன்னிக் கூட்டுப்படைத் தலைமையக்ததில் பாதுகாப்பு நிலவரங்களை ஆராயும் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் மன்னாரிலும், வவுனியாவிலும் நிறுத்தப்பட்டுள்ள 57, 58 ஆவது படையணிகளின் கட்டளைத்தளபதிகளும் பிரிகேடியர்களும் கலந்து
கொண்டனர்.
வன்னிக் களநிலவரம் குறித்த அறிக்கையை மேஜர் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய வெளியிட்டுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த மேலதிக அறிவுறுத்தல்களை சரத் பொன்சேகா வழங்கினார் என்று கூறப்படுகிறது.

வட போர்முனை தொடர்பாக மகிந்தவுக்கு படைத் தளபதிகள் விளக்கம் [சனிக்கிழமை, 29 மார்ச் 2008, 04:21 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்]
வட போர்முனை நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு முப்படைத் தளபதிகள் விளக்கமளித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கொழும்பில் அரச தலைவர் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை கூட்டப்பட்ட சிறப்பு பாதுகாப்புச் சபைக்கூட்டத்தில் யாழ். குடாநாட்டு மற்றும்
வன்னிப் பகுதி இராணுவத் தளபதிகள் உட்பட முப்படைத் தளபதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தற்போதைய படை நடவடிக்கைகள்
தொடர்பாக மகிந்த ராஜபக்சவிற்கு விளக்கமளித்துள்ளனர்.
சுமார் ஐந்து மணிநேரம் நடைபெற்ற இந்த மாநாட்டில் வவுனியா, மன்னார், மணலாறு, முகமாலைப் பகுதிகளில் நடைபெற்று வரும் படை
நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச,
முப்படைத் தளபதிகள்,
யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ,
57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ்,
58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவீந்திர சில்வா,
59 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நந்தன உடுவத்த,
மற்றும் கடற்படையின் பிராந்திய கட்டளைத் தளபதிகள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடும் மழையிலும் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தனக்கு திருப்தி தருவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு பிராந்திய கட்டளை அதிகாரிகள் அழைக்கப்படுவதில்லை.
எனினும் அவசரமான நேரங்களில் அவர்கள் அழைக்கப்படுவதுண்டு. 2000 ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டில் உள்ள படையினர் பெரும் நெருக்கடியை
சந்தித்த வேளை, அன்றைய யாழ். குடாநாட்டு கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு
அழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது என படைத்துறை அவதானிகள் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் இடம்பெயர்ந்த அவலப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் ஒத்துழைப்பதால் உற்சாகத்தில் போராளிகள்: தளபதி லக்ஸ்மன் பெருமிதம் [வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2008, 08:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

மன்னார் மாவட்ட மக்கள் எதிரியின் வல்வளைப்பால் இடம்பெயர்ந்து அவலப்படுகின்றபோதும் களத்தில் போரிடும் போராளிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது என்று தளபதி லக்ஸ்மன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மன்னார் களமுனையில் தளபதிகள் மற்றும் போராளிகளுக்கு தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனமும் மன்னார் மாவட்ட மீன்பிடிச்சங்கமும்
இணைந்து இன்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று உலர் உணவுப் பொருட்களை வழங்கின.
மன்னார் மீன்பிடிச் சங்கத் தொழிலாளர்கள் பெருமளவில் இதில் கலந்துகொண்டனர்.
தளபதி லக்ஸ்மனையும் போராளிகளையும் சந்தித்து உலர் உணவுப் பொருட்களை கையளித்தனர்.
அவர்கள் மத்தியில் தளபதி லக்ஸ்மன் பேசியதாவது:
எழுச்சி கொண்ட மக்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பின்னின்று உழைக்கும் போதுதான் நாம் எமது விடுதலையை வென்றெடுக்க முடியும்.
மன்னார் மாவட்டத்தில் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் போரில் எமது போராளிகள் எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
மன்னார் மாவட்ட மக்கள் எதிரியின் வல்வளைப்பால் இடம்பெயர்ந்து அவலப்படுகின்ற போதும் களத்தில் போரிடும் போராளிகளுக்கு ஒத்துழைப்பை
வழங்குவது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் எதிரி பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றான்.
அந்த இழப்புக்களை சிறிலங்கா அரசு மூடிமறைத்துக் கொண்டு வருகின்றது.
எழுச்சி கொண்ட மக்களின் செயற்பாடுகள் தான் தமிழீழத்தை வென்றெடுக்க உதவும் என்றார் தளபதி லக்ஸ்மன்.

இலங்கையில் உரிமைகள் மீறப்படுவதாக சர்வதேச சக்திகள் தவறான பிரசாரம் [29 - March - 2008]
* நிபந்தனை அடிப்படையில் உதவிக்கு அரசு அடிபணியாது; பேராசிரியர் பீரிஸ் சர்வதேச சக்திகள் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக தவறான பிரசாரத்தை மேற்கொள்வதாக கண்டித்திருக்கும் அரசாங்கம், உதவிகளை
நிபந்தனையாக விதிக்கும் மலினமான செயற்பாடுகளுக்கு ஒருபோதுமே அடிபணியப் போவதில்லையென சூளுரைத்துள்ளதுடன், வெளிநாட்டுக்
கொள்கைகள் பலாத்காரமாக திணிக்கப்படுவதை அனுமதிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில்
இதனைத் தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேலும் கூறியதாவது;
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் செய்துள்ள ( ஜீ.எஸ்.பீ- முன்னுரிமை அடிப்படையிலான சலுகை ) ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30
ஆம் திகதி முடிவடைகிறது.
ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் ஆகியனவற்றின் சிபார்சுகளின்
அடிப்படையிலேயே இச்சலுகை மேலும் 3 வருடங்களுக்கு நீடிக்கப்படும்.
சர்வதேச மட்டத்தில் இலங்கையில் பாரியளவில் மனித உரிமை மீறல்களும், வன்முறைகளும் நடைபெறுவதாக தவறான பிரசாரம்
மேற்கொள்ளப்படுகிறது. இத்தவறான பிரசாரங்களினால் ஐரோப்பிய ஒன்றியம் பிழையான தீர்மானங்களை மேற்கொண்டு சலுகையை ரத்துச்
செய்யாதென நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
எமது நாட்டில் செயலற்றிருக்கும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் சர்வதேச அமைப்புகளுக்கு இலங்கை பற்றிய தவறான அறிக்கைகளை
அனுப்புவதை மாத்திரமே வழக்கமாக்கிக் கொண்டுள்ளன.
இதேவேளை தவறான பிரசாரங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் தவறான தீர்மானங்களை மேற்கொள்ளுமாயின் அதனால் 30
இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புகளை எதிர் கொள்ளும் அபாயமுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான முன்னுரிமை அடிப்படையிலான சலுகை ரத்துச் செய்யப்படாமலிருப்பதற்காக எமது நாட்டின் இறைமை மற்றும்
ஒருமைப்பாட்டை எத்தகைய சக்திகளுக்கும் ஒருபோதும் தாரைவார்க்க முடியாது. உதவிகளை நிபந்தனையாக விதிக்கும் மலினமான
செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் ஒருபோதுமே அடிபணிந்து விடாது.
சர்வதேச சட்டவிதிகளை இலங்கை மதிப்பதில்லையென்ற குற்றச்சாடை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. மனித உரிமைகள் பலவழிகளில் உறுதி
செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டவிதிகளுக்கு கட்டுப்படும் வகையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ளதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி கோரியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நீதி மன்றம் இவ்வாறு
கூறியுள்ளது. இலங்கைக்கெதிராக சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பிரசாரத்தையடுத்தே ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை
கோரினார்.
வெளிநாட்டுக் கொள்கைகளை எமது நாட்டில் பலாத்காரமாக திணிப்பதனை அங்கீகரிப்பதற்கு அரசாங்கம் தயாரில்லையெனவும் அவர் மேலும்
தெரிவித்தார்.
இங்கு இலங்கை முதலீட்டுச் சபைத் தலைவர் தம்மிக்கவும் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.

பொதுமக்கள் படுகொலை விசாரணைகள் `ஒன்றரை வருடம் கடந்தும் எந்த வழக்கிற்கும் இதுவரை தீர்வில்லை' [28 - March - 2008]
இலங்கையில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் மூண்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற அதிகளவிலான பொதுமக்கள் படுகொலைகள் தொடர்பான சுயாதீன விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு 18 மாதங்கள் கடந்தும் இது வரை ஒரு வழக்கிற்குத் தானும் தீர்வு காணப் படவில்லை. அதே சமயம் இந்த
விசாரணைகளில் எவரும் ஒரு பதிலளிக்கும் கடப்பாடுடையவராகக் காணப்படும் நிலைமை ஏற்படப் போவதில்லையென்று மனித உரிமைக் குழுக்கள்
சிலவும் வழக்கறிஞர்களும் அஞ்சுகின்றனர். 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலைகள் உட்பட இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான நம்பகரமான விசாரணையானது அரசாங்கத்தின் உறுதியான
தீர்மானத்திற்கான பரீட்சையாகும். அத்துடன், இந்த விடயமானது ஐ.நா. மனித உரிமை கண்காணிப்புக் குழுவின் பிரசன்னத்தைத் தடுப்பதற்கான அரசின்
முயற்சிகளுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடிய வழக்குகளை முன்னெடுக்க வேண்டிய உறுதியான தீர்மானத்திற்கும் இந்த விவகாரம்
சோதனைக்களமாக அமைந்திருப்பதாக அசோசியேற்றட் பிரஸ் (ஏ.பி.) செய்திச் சேவை நேற்று வியாழக்கிழமை சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 16 சம்பவங்களை விசாரணை செய்வதற்கான பொறுப்பு விசாரணை
ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்தப் 16 சம்பவங்களில் இதுவரை 4 சம்பவங்கள் தொடர்பாகவே விசாரணை
மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இந்த விசாரணையைக் கண்காணித்த சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த
இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தாருஸ்மான் தெரிவித்துள்ளார்.
இதுவொரு திருப்திகரமான ஏற்பாடுகள் இல்லாத விசாரணைகளென்றும் அவை கணிசமான அளவுக்கு முன்னேற்றத்தைத் தரவில்லையென்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேவேளை, பாதுகாப்புப் படையினரின் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் சாட்சிகளைக் கடுமையான தொனியில் நிந்திப்பதாக மனித உரிமை
அமைப்புகளும் சர்வதேச புகழ் பெற்ற நிபுணர் குழு உறுப்பினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சித்ததாகவும் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பதுடன், பீதியான
சூழ்நிலை மற்றும் சாட்சிகள் பாதுகாப்புத் தொடர்பான திட்டத்தில் வினைத்திறனின்மை என்பனவற்றால் சாட்சிகள் பலர் சாட்சியமளிக்கத்
தயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு தன்னார்வ தொண்டர் நிறுவனமான பட்டினிக்கு எதிரான இயக்கத்தின் 17 பணியாளர்கள் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணி கே.எஸ்.இரட்ணவேல்
தெரிவிக்கையில்; பலர் முன்வந்து சாட்சியமளிக்க அஞ்சுவதாகக் கூறியிருக்கிறார்.
இந்தப் 17 பேர் படுகொலை தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சாட்டியிருந்தது. அரசாங்கம் விடுதலைப்
புலிகள் மீது குற்றச் சாட்டுத் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணையில் முதலாவது சாட்சி வியாழக்கிழமை (நேற்று) சாட்சியமளிக்கவிருந்தார். அவர்
பாதுகாப்புப் பீதியால் சாட்சியமளிக்க வர முடியாதென ஆணைக்குழுவுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
தனது மைத்துனரின் கொலை தொடர்பாகத் தனது குடும்பத்திற்கு எவ்வாறு அறியவந்தது என்பது பற்றி மற்றொரு சாட்சி கிட்டத்தட்ட சர்ச்சையில்லாத
முறையில் சாட்சியமளித்தார். ஆனால், தனது பெயரையோ புகைப்படத்தையோ பத்திரிகையாளர்கள் பிரசுரிக்கக் கூடாதென்ற நிபந்தனையின் பேரிலேயே இவற்றைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சாட்சிகளின் அச்சத்தைப் போக்கும் பாதுகாப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்குரிய பணிகளில்
அரசு ஈடுபட்டிருப்பதாகவும் வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோகண கூறியுள்ளார்.
`அரசே இந்த ஆணைக்குழுவை நியமித்தது. ஆதலால் இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் வெற்றி பெறுவதைப் பார்க்க வேண்டும் என்பதே அரசின்
ஆர்வமாகும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். 2006 இல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்திருந்தார். அத்துடன், இந்த
ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற நிபுணர்கள் 11 பேரை உள்ளடக்கிய சுயாதீனக் குழுவையும் ஜனாதிபதி
நியமித்திருந்தார். ஆனால், எந்தவொரு சம்பவம் தொடர்பான விசாரணையிலும் கடந்த 1 1/2 வருடங்களாக அதிகளவு முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த மாத முற்பகுதியில் சர்வதேச புகழ் வாய்ந்த சுயாதீன நிபுணர் குழு விரக்தியால் விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கான அரசியல் உறுதிப்பாடு அரசிடம் குறைவாக உள்ளதாகவும் விசாரணைகள் சர்வதேச
தரத்திற்கு அமைவானதாக இல்லையெனவும் அக்குழு குற்றச்சாட்டுத் தெரிவித்திருந்தது.
முக்கியமான சாட்சிகள் மத்தியில் காணப் படும் தயக்கத்தை அனுகூலமாகப் பாதுகாப்புப் படையினர் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் பிரயோசனமற்ற
சாட்சிகளை ஆஜராக்கி நேரத்தை வீணடிப்பதாகவும் படுகொலையுண்ட நிவாரணப் பணியாளர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி இரட்ணவேல்
கூறியுள்ளதுடன், இது விசாரணையின் முன்னேற்றத்தைத் தடுத்து விடுமெனவும் எவருமே பதிலளிக்கும் கடப்பாடுடையவர்களாக வரும் நிலைமையை
இல்லாமல் செய்து விடக் கூடுமென்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அத்துடன், அரசாங்கத்தினால் மூடி மறைப்பதற்காக திசை திருப்பப்படும் தந்திரோபாயங்களே இவையென்றும் அவர் கூறியுள்ளார்.
அதேசமயம் விசாரணைக்கான உள் சார் கட்டமைப்பை ஏற்படுத்த காலம் எடுத்ததாகவும் ஆனால், ஏற்பட்டிருக்கும் தாமதங்களால் நம்பகத் தன்மைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று தான் நம்பவில்லையென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் நிசங்க உடலகம கூறியுள்ளார்.
`காலம் எடுக்கும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளங்கிக் கொண்டோர் இந்த மாதிரியான கருத்தை தெரிவிக்க மாட்டார்கள்' என்று அவர்
கூறியுள்ளார்.
கடுமையான உழைப்பு, அரசின் முழுமையான ஆதரவு என்பனவற்றுடன் விசாரணையை சர்வதேச தரத்திற்குக் கொண்டு வந்து நம்பிக்கையானதொரு
முடிவுக்குக் கொண்டு வரமுடியுமென்று தெரிவித்துள்ள சர்வதேச புகழ்பெற்ற நிபுணர் குழுவின் உறுப்பினரான தாருஸ்மான், ஆனால், எங்களைப்
பொறுத்தவரை இதுவரை அந்த இலக்கிற்குக் குறைவான தன்மையே காணப்படுகிறது என்று ம் கூறியுள்ளார்.

Posted on : Sat Mar 29 8:40:00 2008
இந்தியா விரைந்தார் ரணில்; கிழக்கே பயணமானார் ஹக்கீம்
பாரதத் தூதுவரை ஒன்றாகச் சந்தித்த பின்னர் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் மும்முரமடைந்திருக்கும் இச்சமயத்தில் ஓரிரு நாள்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக்
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கொழும்புக்கான இந்தியத் தூதுவர் அலோக்
பிரசாத்தை கொழும்பில் ஒன்றாகக் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியிருக்கின்றனர் எனத் தெரிகின்றது. இந்தச் சந்திப்பை அடுத்து நேற்றுமுன்தினம் இரவு ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குப் பயணமானார். ரவூப் ஹக்கீம் தேர்தல் நடைபெறும் கிழக்கு
மாகாணத்துக்கு தமது உயர் மட்டத் தலைவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்.இதேசமயம், எதிரணியில் உருவாகும் புதிய கூட்டு மற்றும் அதற்கான அயல்நாட்டின் ஆதரவு போன்றவற்றை இலங்கை அரச உயர்பீடம் கிலேசத்துடன்
ஊன்றி அவதானித்து வருகின்றது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் இந்தியா புறப்பட முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, கனகசபை, பத்மநாதன் ஆகியோரையும் சந்தித்துப்
பேசியிருக்கின்றார்.ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய பிரதான எதிர்க்கட்சிகள் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை
ஒட்டி அமைக்கும் வியூகங்கள் அரசுத் தரப்பில் சிரத்தையையும் அதீத கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.இத்தகைய கூட்டு முயற்சி ஒன்று அரசுக்கு எதிராக உருவாகும் போது அதற்கு அயல்தரப்பின் ஆதரவும் இருக்குமானால் அது,தனக்குப் பெரும் பாதிப்பையும், பின்னடைவையும் அரசியல் ரீதியாக ஏற்படுவதாக அமைந்து விடும் என அரச உயர்பீடம் கருதுவதாகத்
தெரிகின்றது.இதன் காரணமாக நிலைமைகளை ஊன்றிக் கவனித்து வரும் அரச மேலிடம், தேவைப்பட்டால் பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி, கிழக்கு மாகாணத் தேர்தல்களைக் கடைசி நேரத்தில் தள்ளிப்போட்டு, ஒத்திவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அரச உயர் வட்டாரங்களுடன்
தொடர்புடைய தரப்புகள் தெரிவித்தன.ஹக்கீமும், ரணிலும் இந்தியத் தூதுவருடன் ஆராய்ந்த விடயங்கள் குறித்து அறிவதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய மூன்று கட்சிகள் மத்தியில் உருவாகும் இணக்கம் குறித்த
தகவல்களை மோந்து பிடிப்பதிலும் அரச உயர் வட்டாரங்கள் மிகக் கரிசனையுடனும் சிரத்தையுடனும் உள்ளன என்பதையும் அறிய முடிந்தது.

Posted on : Sat Mar 29 8:40:00 2008
தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் ஆயுதங்கள் நுவரெலியாவில் மீட்பு தோட்டம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தனவாம்.

நுவரெலியா, கந்தப்பொல பகுதியில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டி ருந்த தற்கொலைக் குண்டுதாரி அணியும் அங்கிகள் மற்றும் ஆயுதங்களை
மீட்டிருப் பதாக பொலிஸார் தெரிவித்திருக்கின் றனர்.தற்கொலைக் குண்டுதாரிகள் அணியும் நான்கு அங்கிகள், ஆறு கைக்குண்டுகள், மைக்ரோ ரக துப்பாக்கி ஒன்று, சி4 ரக அதிசக்தி வாய்ந்த 26 கிலோ
வெடிபொருள் கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவையே மீட்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட் டுள்ளது.லயன் அறை ஒன்றுக்கு அருகில் தேயிலைத் தோட்டம் ஒன்றில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் புத்தாண்டுக் களியாட்டங்களில் பங்கு பற்றுவதற்காக நுவரெலியா வரும் முக்கிய அரசியல் பிரமுகர்களை இலக்கு வைத்தே இவை மறைத்து
வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.இந்தச் சம்பவம் தொடர்பாக தோட்டத் தொழிலாளி ஒருவர் கைதாகி உள்ளார். பிரதான சூத்திரதாரியை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார்
ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரிசி ஏற்றுமதிக்கு வியட்நாம் கட்டுப்பாடு- பி.ஒ.கூ.தமிழ்
உலக அரிசி வணிகத்தில் அரிசியின் விலை உச்ச நிலையை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக வியட்நாம் தமது உள்ளூர் விநியோகத்தை உறுதி
செய்யும் வகையில், அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அரிசி ஏற்றுமதியில் அளவை ஐந்தில் ஒரு பங்கால் குறைத்துள்ள வியட்நாமிய அரசாங்கம், உள்ளூர் விநியோகத்தை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று கூறியுள்ளது.
ஆசியா எங்கிலும் ஒரு முக்கிய உணவாக இருக்கின்ற அரிசிக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள கிராக்கியை அடுத்து, சீனா, எகிப்து மற்றும் இந்தியா
போன்ற நாடுகள் ஏற்கனவே அதன் விலையின் மீதும், ஏற்றுமதி உடன்படிக்கைகளின் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளன.
1970 களுக்குப் பிறகு மிகவும் குறைவான அளவில் உலக அரிசிக் கையிருப்பு இருக்கும் நிலையில், அதன் விநியோகத்தில் ஏற்படக் கூடிய
எந்தவிதமான கடுமையான பின்னடைவும் சமூக அமைதியீனத்துக்கு வழி செய்யக் கூடும்.-(தமிழோசையின் கவலையைப் பாருங்கள்!)

போபால் விஷவாயுக் கசிவு: பாதிக்கப்பட்டவர்கள் தில்லியில் போராட்டம்
இந்தியாவின் போபால் நகரில் கடந்த 1984ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், 24
ஆண்டுகளாகியும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று போராடிவருகிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் இருந்து தலைநகர் புதுடெல்லிக்கு 800 கி.மீ. பாதயாத்திரை நடத்தி, இவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.
ஆனால் அப்போது பிரதமர் அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமையன்று புதுடெல்லி வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அவர்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் தன்னார்வ அமைப்பான போபால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச
பிரசாரக்குழுவின் பிரதிநிதியான ஜெனி டாலி தமிழோசைக்குத் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

இந்தியாவில் அரிசி ஏற்றுமதி விலை அதிகரிக்கப்பட்டுள்ளது
அரிசி ஏற்றுமதியை மறைமுகமாக தடுப்பதற்கும், உள்ளூர் உணவு விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காவும், இந்தியா பாசுமதி அல்லாத
அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அதிகரித்துள்ளது.
ஒரு டன்னுக்கான விலை 650 டாலர்களில் இருந்து ஆயிரம் டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பணவீக்கம் கடந்த 13 மாதத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக செய்திகள் வந்துள்ள வேளையில், அரசாங்கத்தின் இந்த
அறிவிப்பும் வந்துள்ளது.
பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு கடந்த ஒக்டோபரில் தடைவிதித்த இந்தியா, பின்னர் வணிகர்களிடம் இருந்து வந்த எதிர்ப்பை அடுத்து,
அதனை தணித்துக்கொண்டது.
தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் கடந்த வருடத்தில் அரிசியின் விலை 10 வீதத்தால், அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
இந்த விலையேற்றம் அரிசி ஏற்றுமதியாளர்களிடம் எவ்விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து மத்தியகிழக்கு மற்றும் ஐரோப்பாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் வணிகர் ஷேக் தாவூத் வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்

வர்த்தக நிலுவை பற்றாக்குறை இரண்டு மடங்காக அதிகரிப்பு
[28 - March - 2008]
* ஜனவரியில் 610.8 மில்லியன் டொலர் இலங்கையின் வர்த்தக நிலுவை பற்றாக்குறை இரண்டு மடங்காக கடந்த ஜனவரியில் அதிகரித்திருப்பதாக மத்திய வங்கி நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஆடை, தேயிலை ஏற்றுமதித்துறைகள் மூலம் அதிகமான அளவு அந்நியச் செலாவணியை பெற்ற போதும் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் கடந்த
ஜனவரியில் அதிகளவாக உயர்ந்ததால் வர்த்தக நிலுவை 610.8 மில்லியன்டொலராக அதிகரித்திருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் (2007) ஜனவரியில் 298.5 மில்லியன் டொலராக இருந்த வர்த்தக நிலுவைப் பற்றாக்குறை இந்த வருட ஜனவரியில் 104.6 சதவீதத்தால் அதிகரித்திருப்பதை மத்திய வங்கியின் புள்ளிவிபர அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரியில் 301.1 மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருட்களை இலங்கை இறக்குமதி செய்துள்ளது. கடந்த வருடம் 54.2 மில்லியன்
டொலர் பெறுமதியான எரிபொருட்களை இறக்குமதி செய்திருந்தது. மொத்த எரிபொருள் இறக்குமதி செலவினம் 49.2 சதவீதத்தால் 1.2 பில்லியன்
டொலர்களாக கடந்த ஜனவரியில் உயர்ந்துள்ளது.
ஆனால், ஏற்றுமதி மூலம் வருமானம் 15.4 சதவீதமே கூடியுள்ளது. ஆடை ஏற்றுமதி வருமானம் 4 சதவீதமே அதிகரித்திருக்கிறது. தேயிலை ஏற்றுமதி
46.0 சதவீதமாக 90.8 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
தேயிலைக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. 3.83 டொலர்களாக 1 கிலோ தேயிலை கடந்த ஜனவரியில் விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை, கடந்த ஜனவரியில் விவசாய இறக்குமதிகளுக்கு அதிகளவு தொகையை இலங்கை செலுத்தியுள்ளது. அரிசி, கோதுமை என்பனற்றின்
விலை அதிகளவுக்கு கடந்த வருடத்தை விட உயர்ந்துள்ளன.

No comments: